You are here

இஸ்மத் சுக்தாய் கதைகளும் திரை விலகி வெளிப்படும் குரல்களும்

முபீன் சாதிகா

இஸ்மத் சுக்தாய் எழுதிய கதைகளின் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டு பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக விரைவில் வரவிருக்கிறது. இஸ்மத் சுக்தாய் உருது மொழி பெண் இலக்கியவாதிகளில் முதன்மையானவர். மிகவும் துணிச்சலான சர்ச்சைக்குரிய எழுத்தாளர். 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உத்தரப்பிரதேசம் பதௌனில் தன் பெற்றோருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர். இவருடைய தந்தை மேஜிஸ்ட்ரேட்டாக இருந்தவர். இஸ்மத்துடன் பிறந்தவர்கள் பத்து பேர். நான்கு அக்காக்களும் நான்கு அண்ணன்களும் ஒரு தம்பியும் இவருக்கு இருந்தனர். தனது அண்ணன்மார்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியதால் நேரடியாகவும் துணிவுடனும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் முடிந்தது என்று இஸ்மத் கூறியிருக்கிறார். இஸ்மத் சுக்தாய் பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும், சினிமாவுக்கான திரைக்கதைகளையும் எழுதியிருக்கிறார். சிறுகதைகள்தான் அவருடைய படைப்பாக்கத்தைச் செம்மையாக வெளிப்படுத்தும் இலக்கிய வடிவங்களாக இருந்தன. உருது மொழியின் அடர்ந்த பண்பை தனது படைப்புகளில் செறிவுற்ற வகையில் கொண்டு வந்தது அவரது தனித்தன்மையாக இருந்தது. இளங்கலைப் பட்டப்படிப்பிலும் ஆசிரியர் கல்வியில் இளங்கலையிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இளம் வயதிலிருந்தே அவர் தேவையற்ற விதிகளை எதிர்த்து வந்தவர். புரட்சி மனநிலையில் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார். முற்போக்குச் சிந்தனை எழுத்தாளர்களின் அணியில் கல்லூரியில் படிக்கும் போதே இணைந்துவிட்டிருக்கிறார். பெண்ணியச் சிந்தனை குறித்த அறிமுகம் இந்தியச் சூழலில் ஏற்படுவதற்கு முன்பே தன் படைப்புகளில் பெண்ணுக்குரிய தனி இடத்தை உருவாக்கியவர் இஸ்மத் சுக்தாய். கல்விக்கும் எழுத்துக்கும் பல எதிர்ப்புகள் ஏற்பட்ட போதும் அவற்றைத் திறம்படக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய சுயசரிதையில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல தடைகளைப் பற்றி வெளிப்படையாக விவாதித்திருக்கிறார். அவர் ‘ரஜாய்’ கதை எழுதிய பின் ஆபாச எழுத்தாளராகப் பார்க்கப்பட்டது அவரைப் பெரிதும் வருத்தியிருக்கிறது. இளம் வாசகர்கள் அவரைப் புரிந்துகொண்டதை வரவேற்றிருக்கிறார். இஸ்மத் சுக்தாய்க்கு, சோவியத் நாட்டு நேரு விருது கிடைத்திருக்கிறது. அதைத் தவிர காலிப் விருதும், இராஜஸ்தான் உருது அகாடமியின் இக்பால் சம்மான் விருதும் கிடைத்திருக்கின்றன. இஸ்மத்தின் அண்ணன் ஆஜிம் பேக் சுக்தாயும் ஓர் எழுத்தாளர். இவருடைய கணவர் ஷாயித் லதீஃப் திரைப்பட இயக்குநர். இவருக்கு சீமா என்றொரு மகள் இருக்கிறார். இஸ்மத் ஒரு பரந்த மனப்பான்மையுள்ள முஸ்லீம். இவரது மகள் இந்து மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்திருக்கிறார். இஸ்மத் சுக்தாய் 1991ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் இஸ்லாமிய மதச் சடங்கிற்கு எதிராக புதைப்பதற்குப் பதிலாக அவரது கோரிக்கையின் படி எரியூட்டப்பட்டது.
இஸ்மத் சுக்தாய் நவீன எழுத்தாளர்களான எமிலி ஜோலா, மாப்பாஸாண்ட், தாஸ்தாவ்ஸ்கி, ஆண்டன் செக்காவ், மார்க்ஸிம் கார்க்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்திருக்கிறார். அந்த எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து நவீனத்துவத்தின் தாக்கத்தைப் பெற்றிருக்கிறார். இஸ்மத்தின் படைப்புகளில் நவீனத்துவச் சிந்தனைகளைக் காண முடிகிறது. 1940களிலிருந்து எழுதத் தொடங்கிய இஸ்மத் சுக்தாய் தனக்கு முன்பு எழுதிய உருது எழுத்தாளர்களான ஹிஜப் இம்தியாஸ் அலி, குர்தலீன் ஹைதர் போன்றவர்களின் மாதிரியைப் பின்பற்றி தனது படைப்பாக்கத்தை உருவாக்கினார். தனக்கான சுய எழுத்து அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார். அதற்குக் காரணம் நவீனத்துவத்தின் மீது அவர் கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கை.
காலனிய காலத்தில் பெண்ணியக் கோட்பாடுகள் அழுத்தமாக உருவாகாத நிலையிலும் பெண்ணுக்கு எனத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், பாலியல் சார்ந்த தேர்வுகள், விடுதலை உணர்வு இருப்பதை வெளிப்படுத்திய கதைகளாக இஸ்மத் சுக்தாயின் கதைகள் இருந்தன. பாலியல் தேர்வு குறித்து அவர் எழுதிய ‘ரஜாய்’ கதை அவருக்கு ஆபாச எழுத்தாளர் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. பெண் தனக்கான எதிர்ப்புணர்வை உருவாக்க வேண்டிய தேவையை அவரது கதைகள் காட்டுகின்றன.
அகவயமான சிந்தனைத் தன்மையையும், ஒடுக்கப்பட்ட உணர்வையும் சுதந்திரத்தின் ஏக்கத்தையும் வெளிப்படுத்தக்கூடிய பெண் குரலை இந்தக் கதைகள் கொடுத்தன. பெண்மை என்ற பாலினச் சார்பை ஏற்ற சமூகவயமாக்கல் இருந்ததால் இந்த வகையான பெண் ஒடுக்குமுறை மற்றும் பெண்ணின் தனிப்பட்ட உலகம் சார்ந்த படைப்புகள்தான் அந்தக் காலகட்டத்தின் படைப்புகளாக இருந்தன. எல்லாப் பாலினங்களும் சமூகவயமாக்கல் மூலம் திரட்டப்படுவதான விழிப்புணர்வு ஏற்படாத காலகட்டம் என்பதால் பெண்ணுக்கான சிக்கல்களைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் படைப்பாளர்களிடம் ஏற்பட்டது. அதைத்தான் இஸ்மத் சுக்தாயின் கதைகளும் பேசுகின்றன.
இஸ்மத் சுக்தாய் பெண்ணியக் கோட்பாட்டின் முதன்மை அம்சமான விடுதலைப் பாலியல் பற்றி சில கதைகளில் எழுதியிருக்கிறார். 1940களில் இது போன்ற உணர்வுகளைப் பதியவைத்தது பெரும் அவப்பெயரை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இருந்தும் அது போன்ற கதைகள் பிற்காலத்தில் வந்த வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. பெண்ணின் விருப்பம் சார்ந்த, பாதுகாப்பு சார்ந்த, குடும்ப அமைப்பைக் கோருகின்ற இந்தக் கதைகள். பெண்ணுக்கு எதிரான குடும்ப அமைப்பை விமர்சிக்கவும் செய்கின்றன. சிறுவயதிலிருந்தே பெண் குடும்ப அமைப்பை உருவாக்கும் முனைப்பில் இருப்பதைப் பல கதைகள் சுட்டிக்காட்டுகின்றன.
பெண் என்ற தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கவும் சமூகத்தில் பெண் என்ற அடையாளத்தில் கலந்துவிட்ட மாசுகளைத் தூய்மைப்படுத்தவும் பெண் எழுத்துகள் முயற்சிக்கின்றன. அந்த வகையில் இஸ்மத்தின் பல கதைகள் பெண் எனும் அடையாளம் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.
இஸ்மத் சுக்தாயின் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளை வாசிக்கும் வகைமையைக் குறித்து பார்க்கலாம். இதில் இடம்பெற்றுள்ள சில கதைகள் சில நம்பிக்கைகளைத் தகர்ப்பதாகவும், சில கதைகள் வெளிப்படுத்தாத பொருளைத் தேடிக் கண்டடைய வேண்டியதாகவும் சில கதைகளின் கதை சொல்லிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் காணவேண்டியதாகவும் சில கதைகள் ஒரே புள்ளியின் இரு வேறு வடிவங்களாகவும் இருக்கின்றன.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற ‘ரஜாய்’ கதையை மட்டும் இங்கு ஒரு சிறிய வாசிப்பு செய்து பார்க்கலாம். இந்தக் கதை ஒரு சிறுமியின் பார்வையில் சொல்லப்படுகிறது. அம்மா ஊருக்குப் போகும் காரணத்தால் இந்தச் சிறுமியின் அம்மாவுடைய தூரத்துச் சகோதரியான பேகம் ஜான் என்ற பெண் பாத்திரத்தின் அரண்மனையில் விட்டுச் செல்லப்படுகிறாள். நவாப் இளைஞர்களின் உறவை நாடிச் செல்வதால் பேகம் ஜானைக் கவனிப்பதில்லை. அதனால் பேகம் ஜான் பெரிதும் துயருற்று தன்னுடைய பணியாளான ரப்புவைத் துணையாக வைத்துக் கொள்கிறாள். ரப்பு ஊருக்குப் போகவேண்டியிருப்பதால் இந்தச் சிறுமி, பேகம் ஜானுக்குத் துணையாக இருக்கிறாள். பேகம் ஜானின் உடலை நீவிவிடும் வேலையையும் செய்கிறாள். பேகம் ஜானும் சிறுமியின் உடலை நீவுகிறாள். அது எல்லை மீறுகையில் சிறுமி அச்சம் கொள்கிறாள். நடு இரவில் முழிக்கும் சிறுமி ‘ரஜாய்’ சுவரில் ஏற்படுத்தும் அசைவுகளைக் கண்டு பயந்து விளக்கை எரிய வைக்கையில் ‘ரஜாய்’ நகர்ந்து அந்தக் காட்சியைக் கண்டு அஞ்சி தூங்கிப் போகிறாள்.
நவாபுக்கும் பேகம் ஜானுக்கும் குடும்ப உறவு இல்லை என்பது சிறுமியால் புரிந்துகொள்ளப்படவில்லை. சிறுமி பெரியவளான பின் அதைப் புரிந்து கதை எழுதப்படுகிறது. நவாப் பாத்திரம் ஓரினச்சேர்க்கைத் தேர்வு கொண்டது என்பதற்குச் சமமாக, பேகம் ஜான் பாத்திரமும் அத்தகைய ஓர் உறவைத் தேர்ந்தெடுப்பதற்குத் தள்ளப்படுகிறது என்பது கதையின் அடிநாதமாக இருக்கும் முடிச்சு. இந்தக் கதை ஆபாசம் எனக் குற்றம் சாட்டப்பட்டபோது பெண்களுக்கு இடையேயான உறவைப் பேசியதால்தான் அத்தகைய ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பேகம் ஜான் பாத்திரத்திற்கும் ரப்பு பாத்திரத்திற்கும் இடையிலான உறவை மறைமுகமான வர்ணிப்பால் கதை உணர்த்துகிறது. இரவில் வரும் ஒலிகளையும் ‘ரஜாய்’ அசைவதால் ஏற்படும் விபரீதமான நிழல் உருவங்களையும் கண்டு அஞ்சும் சிறுமியின் பார்வையாக அது வெளிப்படுகிறது. இந்த ஒலிகளையும் நிழல் உருவங்களையும் பற்றிய ஊகத்தை வாசகர்கள் ஏற்படுத்திக் கொள்ள கதை வழி ஏற்படுத்திவிட்டிருக்கிறது. இந்த ஊகம் ஆபாசத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இது போன்ற எளிமையான வர்ணனையில் சிக்கலான சிந்தனைகளைத் தெளிவாக எழுதியிருக்கும் கதைகளாக இஸ்மத் சுக்தாய் கதைகள் உள்ளன. மேலும் பெண்ணியத்தின் வாசகமாக பெண் சார்ந்த கதைகளை எழுதிப் பார்ப்பதில் முயற்சி எடுக்கும் கதைகளாக இவை புலப்படுகின்றன.

Related posts

Leave a Comment