You are here
நூல் அறிமுகம் 

இயற்கையின் அற்புத உலகில் கமலாலயன்

மலையாள இலக்கிய உலகில் குழந்தைகளுக்காக அற்புதமான படைப்புகளை உருவாக்கி வழங்கும் படைப்பாளி பேரா.எஸ்.சிவதாஸ். ஏற்கெனவே இவருடைய ‘மாத்தன் மண்புழு வழக்கு’, புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியீடாக தமிழில் வந்துள்ளது.
குட்டிப்பாப்பா ஒருத்தி, தன்னையும், தன் வீட்டையும் சுற்றிலும் உள்ள இயற்கையின் அற்புதங்களையும் பார்த்து வியந்து போகிறாள். ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து, காரண காரியத் தொடர்புகளைக் கண்டுபிடிக்கிறாள். கறுப்போ, வெளுப்போ மனிதர்களின் உடல் நிறம் எதுவாயிருப்பினும் அவர்களின் சிரிப்பு வெள்ளைதானே என்பது பாப்பாவின் முதல் கண்டுபிடிப்பு.

புதிய ஓர் உண்மையைக் கண்டுபிடிப்பதில் பொங்குகிறது மகிழ்ச்சி. பால் வடியும் முல்லை மொட்டுச் சிரிப்புடன் முற்றத்தில் இறங்குகிறாள் குட்டிப் பாப்பா.

முல்லைக் கொடிகள் சிரிக்கும் முற்றத்திற்குப் போகிற பாப்பா, பறக்கும் வண்ணத்துப் பூச்சியைக் கண்டு பின் தொடர்ந்து போகிறாள். வண்ணத்துப் பூச்சியின் முட்டையைக் கண்டுபிடித்து அதன் தவம் எதற்காக என அறிகிறாள். ‘‘விருட்சங்களும், வண்ணத்துப் பூச்சிகளும் ஒன்றையொன்று சார்ந்துA வாழ்பவை. ஒன்றில்லாமல் மற்றொன்றினால் வாழ முடியாது’’ என்பதை உணர்கிறாள். குழியானையின் ரகசியத்தை, கட்டெறும்புகளின் விளையாட்டுகளை நேரடியாகக் கண்டறிகிறாள் குட்டிப்பாப்பா. காகத்தின் கூட்டில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் தந்திரத்தை குயில் ஏன், எப்படிக் கைக் கொள்கிறது என்று துருவி ஆராய்கிறாள். ஆட்டுக்குட்டி, தவளை, காகம் போன்ற உயிர்கள் இயற்கையன்னையின் அரவணைப்பில் எப்படியெல்லாம் உருவாகி, வளர்ந்து, வாழ்கின்றன என்பதைக் கண்ணாரக் கண்டும், காதாரக் கேட்டும் குட்டிப் பாப்பா தெரிந்து கொள்கிறாள். குட்டிப் பாப்பா காணும் கனவு பலிக்க வேண்டுமென்று படிக்கிற நம்முடைய மனங்கள் பதறும். இந்த அருமையான சிறுவர் நாவலைத் தமிழில் மொழி பெயர்த்துள்ள உதயசங்கர் தான் உள் வாங்கியதை எளிமையான, நெஞ்சையள்ளும் மொழியில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கையின் மீதான நேசத்தை சிறுவயது முதலே வளர்க்க வேண்டுமென குட்டிப் பாப்பாவின் கதை கவித்துவ அழகுடன் நமக்குச் சொல்லுகிறது.

Related posts

Leave a Comment