You are here
நூல் அறிமுகம் 

ராணா அய்யூபின் ‘குஜராத் கோப்புகள்’

அ.மார்க்ஸ்

குஜராத் தொடர்பாக குறைந்தபட்சம் இரண்டு ஸ்டிங் ஆபரேஷன்களை (sting operation) டெஹல்கா செய்தது. ஆசிரியர் குழுவில் இருந்த அஷிஷ் கேதன் இந்துத்துவச் சார்பான ஆய்வாளர் போலச் சென்று அந்தப் படுகொலைகளைச் செய்த பஜ்ரங் தள் தலைவன்கள், கொலை செய்த பழங்குடி அடியாட்கள் எனப் பலரையும் சந்தித்துப் பின் அந்த உரையாடல்கள், அவற்றில் பல நம் இரத்தத்தை உறைய வைப்பவை, டெஹல்காவில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. வெளிவந்த ஒரு வாரத்தில் அதன் முக்கியப் பகுதிகளை மொழியாக்கினேன். “குஜராத் 2002: டெஹல்கா அம்பலம்” எனும் தலைப்பில் 140 பக்கங்கலில் விரிவான முன்னுரைப்புகளுடன் நண்பர் விஜயானந்த் (பயணி வெளியீட்டகம்) அதை வெளியிட்டார்.

டெஹல்கா செய்த இன்னொரு ஆபரேஷன்தான் இது. இந்த ஆபரேஷனில் இந்தக் கொலைகள் நடந்தபோது (2002) உயர்பதவிகளில் இருந்த காவல் அதிகாரிகள், அரசுச் செயலர்கள், உளவுத்துறைப் பெருந்தலைகள், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பின் இந்தக் கொலைகளில் அவருக்குரிய பாத்திரம் வெளிப்படுத்தப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் மாயாகோட்னானி முதலியவர்களை ஏமாற்றி, நட்பாகி, பின் அவர்களைப் பேச வைத்து, உண்மைகளைக் கறந்து வடிக்கப்பட்டதுதான் குஜராத் கோப்புகள். ஆனால் எல்லாம் முடிந்தபின் இறுதியில் டெஹல்கா இதை வெளியிட மறுக்க, இப்போது ராணாவே வெளியிட்டுள்ளார்.

ராணா அய்யூப் ஒரு “முஸ்லிம் இளம் பெண்”. இதில் ஒவ்வொரு சொல்லும் முக்கியம். ஒரு பெண், அதுவும் இளம் பெண், அதுவும் முஸ்லிம் இளம்பெண் இத்தனை துணிச்சலாய் இதைச் செய்துள்ளது நம்ப இயலாத ஒன்று. ராணா இதைச் செய்தபோது அவருக்கு வயது சுமார் 26 தான்.. அவர் 1984ல், அதாவது டில்லியில் இந்திரா கொலையை ஒட்டி சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொடு வன்முறைகளின் காலத்தில் பிறந்தவர். குஜராத்தில் இந்தக் கொடு வன்முறைகள் அரங்கேறியபோது அவருக்கு வயது 18. அதற்கு எட்டாண்டுகளுக்குப் பின் இந்த ஸ்டிங் ஆபரேஷனைச் செய்துள்ளார்.

ராணாவின் தந்தையும் ஒருபோதில் பத்திரிகையாளராக இருந்தவர். உருது மொழியில் சில கவிதைகளையும் எழுதியவர். அவருடைய அன்னை பாசம் மிக்க எல்லா அன்னையரையும் போல ஒரு அன்னை. அவர்கள் இதன் ஆபத்துகளை அறிந்தனரோ இல்லையோ தடையேதும் செய்யவில்லை. ராணா சோர்ந்து depression க்கு ஆட்பட்ட தருணங்களில் அவருக்கு ஆறுதல் அளித்தவர்கள். என்ன அற்புதமான மனிதர்கள்.

ஆம், இது மிகவும் ரிஸ்க் ஆன செயல்தான். ராணா அப்படி ஒன்றும் குஜராத்துக்கு அறிமுகம் ஆகாதவரும் அல்ல.. இந்த ‘ஆபரேஷனுக்கு’ம் கொஞ்சம் முன்னர் அவர், ஷொராபுதீன், கவுசர் பீவி, பிரஜாபதி ஆகியோரின் போலி என்கவுன்டர் என்பது அன்றைய குஜராத்தின் உள்துறை அமைச்சரும் நரேந்திர மோடியின் மிக மிக மிக நெருக்கமான அந்தரங்க நண்பருமான அமித்ஷா உத்தரவின் பேரில் எடுபிடி ஐ.பி.எஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் என்பதை அமித்ஷாவின் அந்த தொலைலைபேசி உரையாடல்களின் மூலம் வெளிக் கொணர்ந்து அமபலப்படுத்தியவர்தான் ராணா. இந்தியாவிலேயே காவல்துறைக்குப் பொறுப்பான ஒரு உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனைக்குக் காரணமாக இருந்தவர்தான் அந்த முஸ்லிம் இளம் பெண் ராணா.

இப்படி எல்லோருக்கும் அறிமுகமான அந்த முகம், அந்த அழகிய முகம், அந்த அறக் கோபம் மிக்க இளம் முகம்தான் சற்றே தன்னை மாற்றிக் கொண்டு, இல்லை முற்றிலும் மாற்றிக் கொண்டு, மைதிலி தியாகி எனும் உயர்சாதி (காயஸ்தர்) அடையாளத்துடன் களம் புகுந்தது.

ராணா அய்யூப் மைதிலி தியாகி ஆன கதை
காயஸ்தர் வகுப்பைச் சேந்த மைதிலி தியாகியின் தந்தை சம்ஸ்கிருதப் புலமை உள்ளவர்; இந்துப் பண்பாட்டில் பற்றுள்ளவர். மகளுக்கு சீதாப் பிராட்டியின் திருப்பெயர்களில் ஒன்றை இட்டவர். அந்தக் குடும்பம் இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளது. மைதிலி ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளர். குஜராத்தின் வளர்ச்சி குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்காக அகமதாபாத் வந்துள்ளார். மைதிலிக்கு ஒரு உதவியாளன். மைக் எனும் ஒரு ஃப்ரெஞ்சுக்காரன். அவன் ஒரு சுவையான இளைஞன். முழுமையாக மைதிலியுடன் ஒத்துழைக்கிறான்.

இப்படி ஒரு கதையை உருவாக்கினால் மட்டும் போதுமா? அதற்குத் தக ஓரளவு உருவத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அமெரிக்க accent உடன் ஆங்கிலம் பேச வேண்டும். அவசரத்தில் நம் இந்தியன் இங்கிலீஷைப் பேசிவிடக் கூடாது. உடலெங்கும் இரகசியக் கேமராக்களைப் பொருத்திக் கொண்டு ‘மெடல் டிடெக்டர்களை’ ஏமாற்றி உள்நுழைந்து வேலை தொடங்குகையில் கேமராவின் பொத்தான்களை மறக்காமல் இயக்கி, அப்போது அது உமிழும் சிவப்பு வெளிச்சத்தை மேலங்கியால் லாவகமாக மறைத்து, அதே நேரத்தில் காமிராக்கள் சரியாக அவற்றின் பணியைச் செய்து கொண்டுள்ளனவா என கவனிக்க அவ்வப்போது ஏதாவது ஒரு பொருளைக் கீழே தவறவிட்டுப் பின் குனிந்து அதை எடுப்பது போல காமிராவை நோட்டம் விட்டு அப்பப்பா, தெரிந்தால் என்ன ஆகும்?

எதுவும் ஆகலாம். அவர்களில் பலர் ஏகப்பட்ட என்கவுன்டர்களைச் செய்து புகழ் பெற்றவர்கள். சிங்கால் எனும் அந்த அதிகாரி இஷ்ரத் ஜெஹான் எனும் 19 வயதுப் பெண்ணை இதர மூன்று இளைஞர்களுடன் பிடித்துச் சென்று தீர்த்துக் கட்டிய குழுவில் இருந்தவன். இப்படியான தீர்த்துக்கட்டல்களில், தீர்த்துக் கட்டினால் மட்டும் போதாது. தீர்த்துக்கட்டப்பட்டவர்கள் மீது அவதூறுகள் பொழிய வேண்டும். ஆனால் அது எளிது. அவதூறுகளைச் சொன்னாலே போதும். அவற்றை நிறுவ வேண்டியதில்லை. அவை நிரூபிக்கப்பட்டவையாகவே ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் நம்புவீர்கள். பத்திரிகைகள் நம்பும். ஏன், நீதிமன்றங்களே நம்பும். இஷ்ரத் ஜெஹான் எனும் அந்த 19 வயதுப் பெண் லக்ஷர் ஏ தொய்பா எனச் சொல்லி ஒரு நாயைப்போலச் சுட்டுக்கொல்லப்பட்டது போல இந்த 26 வயதுப் பெண்ணை அவர்கள் சுட்டுக் கொல்ல முடியாதா?

அதுவும் ராணா விஷயத்தில் இது இன்னும் எளிது. பெயரை மாற்றி, அடையாளத்தை மாற்றி சிம்கார்டு வாங்கியவள், பொய்ப் பெயரில் அகமதாபாத்தில் பல இடங்களில் தங்கியவள், முஸ்லிம்… இவை போதாதா கதை கட்ட… கதை முடிக்க.

ராணாவின், பின் புகழ் பெற்ற டெஹல்கா இதழ் இருந்தது உண்மைதான். இப்படி அவர் கொல்லப்பட்டிருந்தால் அது உரத்தக் குரல் எழுப்பும் என்பது உண்மைதான். நாமெல்லோரும் கண்டித்து ஸ்டேடஸ் போடுவோம் என்பதும் உண்மைதான். கொஞ்சநாள் இது பேச்சாகும். ஆனால் ராணா எனும் அந்த இளம் பெண்ணின் கதை… முடிந்தது முடிந்ததுதானே.

ஒவ்வொரு ‘ரிஸ்க்கை’யும் டெஹல்காவின் ஷோமா சவுத்ரியையோ தருண் தாஜ்பாலையோ தொடர்பு கொண்டு கேட்டு முடிவெடுக்க இயலாது. அந்தக் கணத்தில் முடிவெடுத்தாக வேண்டும். ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் விளைவைச் சுமக்க வேண்டும். எது நடந்தாலும் அதற்கு அவரே பொறுப்பு. அந்தச் சிலமாதங்கள் அந்தப் பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்? இடையில் depression ஏற்பட்டு மருத்துவர்களையும் சந்திக்க நேர்கிறது.

அப்படித்தான் ஒருமுறை உஷா என்றொரு உயர் போலீஸ் அதிகாரி. அவர் மைதிலியை முழுமையாக நம்பியவர்களில் ஒருவர். அவர் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு உடன் வரச் சொல்லி போன் செய்கிறார். எப்படி இருக்கும். ஒரு வேளை போகாவிட்டால் அந்தத் தொடர்பு அற்றுப் போகலாம். கொண்ட பணிக்கு அது ஒவ்வாது. போய்த்தான் ஆக வேண்டும். போகிறார். அதுவும் அவர் வரச் சொன்னது ஒரு மாதிரியான இடம். ஆட்டோகாரரே எரிச்சல் உறுகிறார். இறுதியில் விஷயம் சாதாரணமானதுதான். ஒரு திரைப்படத்திற்குப் போகலாம் என்கிறார். அதுவும் இதுபோல ஒரு அரசியல் படந்தான்.
இன்னொரு முறை, ஒரு அதிகாரியுடன் மைதிலி போகும்போது ‘மெடல் டிடெக்டர்’க்கு ஆட்படவேண்டிய நிலை. இவர் உடம்பெங்கும் துடுக்குடன் கண்சிட்டிக் கொண்டிருக்கும் அந்த உளவுக் காமிராக்கள்… இன்றோடு கதை முடிந்தது என அவர் தடுமாறிய தருணம் ஒரு கீழ் மட்ட அதிகாரி ஓடி வந்து இவர்களுக்கு ‘சல்யூட்’ செய்து உள்ளே அழைத்துப் போகிறார்.

2002ல் அந்தப் பெருங் கொடுமை நடந்ததோடு அங்கு எல்லாம் ஓய்ந்து விடவில்லை. இப்படியான பெருங் கொடுமைகளைத் தொடர்ந்து நியாயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேர்கிறது. அதற்கு இன்னும் சில கொலைகளைச் செய்தாக வேண்டும். இபோது மேற்கொள்ளப்பட்டவை நேரடியான அரச கொலைகள். இதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள் உயர் காவல்துறை அதிகாரிகள். அவர்களுக்கான ஆணை நேரடியாக அன்றைய உள் துறை அமைச்சர் அமித் ஷா விடமிருந்து செல்கிறது.

இணையாக நரேந்திரமோடியின் உயிருக்கு ஆபத்து; லக்ஷர் போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன என கதைகள் கட்டப்படுகின்றன. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், ஜி.சி. சிங்கால், அமின் ஆகிய உயர் அதிகாரிகள் களத்தில் இறக்கப்படுகின்றனர். இவை எதுவும் நமக்குத் தெரியாதவை அல்ல. பின் எந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது? இந்த ஸ்டிங் ஆபரேஷன் அளிக்கும் thrill நம்மை வளைத்துப் போடுகிறதா?

அது மட்டுமல்ல. சில நுணுக்கமான விவரங்கள் (microscopic details) இந்நூலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றில் இரண்டொன்றைப் பார்ப்போம்.

தலித் உயர் அதிகாரிகளின் குமுறல்…
சற்று முன் நான் சொன்ன இந்த உயர் காவல்துறை அதிகாரிகள் பலரும் தலித் மற்றும் மிகவும் அடிநிலையில் உள்ள சாதியினர். இவர்கள் அனைவரும் தாங்கள் ஆதிக்க சாதி உணர்வுகளால் எப்படியெல்லாம் சமுகத்தில் இழிவு படுத்தப்படுகிறோம் என்கிற பிரக்ஞையுடன் உள்ளனர். மைதிலியிடம் அவர்கள் இதை வெளிப்படுத்தத் தயங்கவில்லை. தாங்கள் தலித் என்பதாலேயே இத்தகைய என்கவுன்டர் கொலைகளுக்கு ஏவப்படுகிறோம், தாங்கள் ஓய்வு பெற்ற பின்னும் கூட ஏன் ஒரு நல்ல நகர்ப்புறத்தில் வீடுகட்ட இயல்வில்லை, இன்னும் தாங்கள் கிராமங்களுக்குப் போனால் எப்படி அலட்சியப்படுத்தப்படுகிறோம், மதிப்பிழந்து நிற்கிறோம் என்பதை ஒரு வாக்குமூலம் போல இந்த அதிகாரிகள் சொல்லிக் குமுறுகின்றனர்.

2002ல் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (ATS) தலைமை அதிகாரியாக இருந்த (DG) ராஜன் பிரியதர்ஷி சொல்வார்:

“நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒரு தலித் அதிகாரியைப் பச்சைப் படுகொலையைச் செய்ய உத்தரவிட முடியும். ஏனெனில் அவருக்குச் சுயமரியாதை கிடையாது; உயர் குறிக்கோள்கள் கிடையாது (எனக் கருதப்படுகின்றனர்). குஜராத் காவல் துறையில் உள்ள உயர்சாதியினர் தான் (எல்லோரது) நன் மதிப்பையும் பெற்றவர்களாக உள்ளனர்…”

மைதிலி சந்தித்த எல்லா தலித் உயர் அதிகாரிகளும் இதே தொனியில்தான் பேசுகின்றனர்.

ஆனால் இப்படி முஸ்லிம்களின் மீதான வன்முறையைப் பற்றிப் பேசும்போது இந்த அதிகாரிகளில் பலர் முஸ்லிம்கள் குறித்து இந்துத்துவம் பரப்பியுள்ள கருத்துக்களை உள்வாங்கியவர்களாகவே உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 2002 வன்முறையைப் பொருத்த மட்டில் முஸ்லிம்களுக்கு இழப்புகள் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் இதற்கு முந்திய வன்முறைகள் அப்படி அல்ல என்று இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்.

“முஸ்லிம்களுக்கு இப்படி ஒரு பாடம் தேவைதான் என்கிற தொனி இவர்களிடம் வெளிபடுகிறது”

2002 வன்முறைகளுக்குப் பின் உடனடியாக இது தொடர்பாக வெளி வந்த EPW சிறப்பிதழ் கட்டுரைகளை மொழியாக்கி எனது சில கட்டுரைகளையும் இணைத்து அப்போது வெளியிடப்பட்ட ‘குஜராத் 2002 : அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும்’ எனும் நூல் (அடையாளம் வெளியீடு, 2002, பக் 244) மிக முக்கியமானது. குஜராத் 2002 ஐப் புரிந்து கொள்ள ஒரு முக்கியமான ஆவணம் அது. அதிலுள்ள அத்தனை கட்டுரைகளும் படிக்க வேண்டியவை என்ற போதிலும் டாக்டர் பாலகோபால், உபேந்திர பக்ஷி, தனிகா சர்க்கார், நிவேதிதா மேனன் ஆகியோரின் கட்டுரைகள் மிக முக்கியமானவை. அதிலுள்ள “இந்து ராஷ்டிரத்தின் குஜராத் பிரதேஷ் : சில சிந்தனைகள்” எனும் பாலகோபாலின் கட்டுரை முஸ்லிம்களின் மீதான இந்த வன்முறையில் அடித்தள மக்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த ஒரு ஆழமான ஆய்வுரை. இன்று ராணா அய்யூப் முன் வைக்கும் கருத்துக்கள் இத்துடன் ஒப்பு நோக்கத் தக்கவை.

“அடித்தள மக்கள் முற்போக்குச் சிந்தனைகளுக்கு ஆதரவானவர்களாகவே இருப்பர்” என்கிற political correctness தொடர்பான பிரச்சினையை பாலகோபால் இதில் விவாதப் பொருளாக்கி இருப்பார். அடித்தள மக்கள் முற்போக்குச் சிந்தனைகளுக்கு ஆதரவாக நிற்பர் என்பது கொள்கை அடிப்படையில் உண்மைதான். ஆனால் அது தானாக நிகழ்வதில்லை. அந்தச் சிந்தனைகளைச் சமூகத்தில் நிகழும், நிலவும் பல்வேறு எதிர்நம்பிக்கைகளும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்களும் மூடித் திரையிடுகின்றன. அத்தோடு சங்கப் பரிவாரங்கள் நம்மைப் போல சோம்பிக் கிடப்பதில்லை. அவர்கள் பழங்குடியினர், அடித்தள மக்கள் ஆகியோர் மத்தியில் தீவிரமாகச் செயல்படுகின்றனர். அடித்தள மக்கள் முற்போக்குச் சிந்தனைகளின் பால் ஈர்க்கப்படுவது தானாக நடக்கக் கூடிய ஒன்றல்ல என்பது இடதுசாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

இன்னொரு பக்கம், தலித் அரசியல் தலைவர்களும் பல நேரங்களில் இந்துத்துவத்தை நியாயப்படுத்தி விடுகின்றனர். 2002 க்குப் பிறகு நடந்த குஜராத் மாநிலத் தேர்தலில் மாயாவதி நரேந்திரமோடிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்திற்குப் போனார்.

‘கரசேவகர்கள்’ போன்ற இந்துத்துவச் சொல்லாடல்களுடன் அவரது பேச்சு அமைந்தது. 2002 க்குப் பின்னும் பா.ஜ.க வுடன் மாயாவதி உ.பி யில் கூட்டணி அமைத்ததும் குறிப்பிடத் தக்கது.

இன்று உனா வில் மாட்டுக்கறிப் பிரச்சினையில் குஜராத் தலித்கள் இந்துத்துவத்திற்கு எதிராகத் திரண்டிருப்பது ஒரு அற்புதமான திருப்பம். “தலித் முஸ்லிம் ஒற்றுமை” எனும் முழக்கமும் இன்று உருவாகியுள்ளது.

பி.சி. பாண்டே 2002 ல் அதிக அளவில் கலவரங்கள் நடைபெற்ற அகமதாபாத் நகர கமிஷனராக இருந்தவர். நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த விசுவாசத்திற்குப் பரிசாகப் பின்னர் DGP ஆகப் பதவி உயர்த்தவும் பட்டவர். முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்துவதில் அவரும் சளைத்தவரில்லை என்பது உரையாடலில் வெளிப்படுகிறது. முதன் முதலில் மைதிலி அவரைப் பார்க்கச் செல்லும்போது அந்தச் சந்திப்பு இப்படித்தான் நடக்கிறது. அவரது விசாலமான பங்களாவில் அவர்து வயதான தாயை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிச் சென்றவாறே இவருடன் பேசிக் கொண்டு வருவார், ராஜன் பிரியதர்ஷி,, சிறப்புக் காவல் படைத் தலைவர் ஜி.எஸ். சிங்கால் 2002 ல் உள்துறைச் செயலராக இருந்த அசோக் நாராயணன், ஏன் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற மாயா கோட்னானி உட்பட இவர்கள் அனைவரும் மிக்க அன்புடனும் கண்ணியத்துடனும் பழகுகின்றனர். இவர்களில் சிலர் இந்த மைதிலி எனும் இந்துப்பெண்ணை மகளே போல நேசிக்கவும் வீட்டில் விருந்து பரிமாறவும் செய்கின்றனர். அன்பான குடும்பத் தலைவர்களாய் மனைவி மகக்ளை நேசிப்பவர்களாய் இருக்கின்றனர். சிங்கால் பின்னர் வழக்குகலில் சிக்கி அலைக்கழிய இருக்கும் நேரத்தில் அவரது மகன் தற்கொலை செய்து கொள்கிறான். இது அவரைப் பெரிதும் பாதிக்கிறது.

வன்சாராவை மைதிலி சந்திக்கவில்லை. ஆனால் அவரும் கூட பிரச்சினை என வரும்போது மோடி உட்பட்ட மேலே உள்ளவர்கள் இவர்களைக் கைவிடும் நிலையில் சோர்ந்து போய்த் தாம் ஏமாற்றப்பட்டதை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்ததையும் நாம் பார்த்தோம். நரேந்திர மோடியும் சங்கப் பரிவாரங்களும் அப்படி ஒன்றும் நம்பிக்கைத் துரோகமாக இந்த அதிகாரிகள், குறிப்பாக தலித் அதிகாரிகளிடம் நடந்து கொண்டனர் என்பதில்லை. கூடியவரை அவர்களைக் காப்பாற்றவே முனைகின்றனர்.
ஆனால் நிலைமை கைவிட்டுச் செல்லும்போது அவர்கள் இவர்களைப் பலி கொடுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. ராஜதர்மம் என்பது அதுதானே.

இந்தக் கண்ணியமிகு ்அதிகாரிகள், அமெரிக்காவிலிருந்து ஆவணப் படம் எடுக்க வந்துள்ள ஒரு இந்துப் பெண்ணிடம் மகளே போல அன்பு காட்டும் இவர்கள், முஸ்லிம்கள் என வரும்போது கொட்டும் வெறுப்புதான் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

மாயா கோட்னானியை முதல் முறையாக மைதிலி சந்திக்கும்போது அவரது பெயரைக் கேட்டு மாயா புளகித்துப் போகிறார். ஸ்ரீராமனின் மனைவியின் பெயரல்லவா. மைதிலியும் தன் தந்தையின் இந்துப் பண்பாட்டுப் பற்றை வெளிப்படுத்துகிறார். சில தருணங்களில் சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி அசத்தவும் அவர் தயங்குவதில்லை. வெளி நாடொன்றில் ‘செட்டில்’ ஆகியுள்ள ஒரு இந்துப் பெண்ணிடம் வெளிப்படும் இந்த பாரம்பரியப் பற்றில் அவர்கள் மனம் நெகிழ்கின்றனர். இவை அனைத்தும் மிக மிக இயல்பான ஒன்று, மிகவும் அனுதாபத்துடன் பார்க்க வேண்டிய ஒன்றும் கூட.

ஆனால் இதன் இன்னொரு பக்கம், அப்பா.. எத்தனை அச்சத்திற்குரியதாக உள்ளது…. ஒருமுறை மாயா மைதிலியிடம் சொல்வார்…”பார், நமது (அதாவது இந்து) குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தருகிறோம். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு செய்யக் கூடாது என்றுதானே சொல்லித் தருகிறோம். ஆனால் பார் இந்த முஸ்லிம்களை அவர்கள் முதலில் சொல்லிக் கொடுப்பதே ‘கொல்’ எனும் சொல்லைத்தான். அவர்களின் மதரசாக்களில் இதைத்தானே சொல்லித் தருகிறார்கள்..” – இப்படிச் செல்கிறது அந்த உரையாடல்.

இதற்கு என்ன விளக்கம் சொல்வது. ஒரு படித்த, பொதுவாழ்வில் உள்ள, தினந்தோறும் தன் கிளினிக்கில் பலதரப்பட்ட மக்களையும் சந்திக்கிற ஒரு டாக்டர் மனதில் இத்தனை அறியாமை, இத்தனை வன்மம் எப்படிப் புகுந்தது.

திருக்குரானை ஓதி விட்டு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொல்லப் போகும் தாடி வைத்த முஸ்லிம்களைத் திரையில் காட்டும்போது அதன் விளைவுகளை எண்ணி அஞ்சி நடுக்குற்று எதிர்வினை ஆற்றும் முஸ்லிம்களை கருத்துரிமைக்கு எதிரான காட்டுமிராண்டிகளாய்ச் சித்திரிக்கும் நம் அறிவுஜீவிகள் சிந்திக்க வேண்டிய புள்ளி இது.

ஜனநாயக முறைக்குள் செயல்படும் ஒரு அரசு மக்களுக்கு எதிரான இப்படியான வன்முறை அரசாக மாறுவதன் சாத்தியங்கள், பிரச்சினைகள் ஆகியவை பற்றிய சில சிந்தனை உசுப்பல்களுக்கும் ராணா அய்யூப்பின் இந்நூல் பயன்படும்.

சஞ்சீவ் பட் எனும் ஒரு அய்.பி.எஸ் அதிகாரி 2011ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். 2002 ஜன 27 அன்று அதாவது கோத்ரா நிகழ்ந்த அன்று நரேந்திர மோடி உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதில் அடுத்த இரண்டு நாட்கள் குஜராத்தில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்க வேண்டும் எனக் கூறியதாக அம்மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். 2002 ல் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா இப்படியான ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அவர் 2003ல் கொல்லப்பட்டார். அவரது கொலையில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மும்பையின் மிகப் பெரிய என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் ஒருமுறை இதுபற்றி “இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கொலை” எனவும் இதில் குற்றவாளிகள் சி.பி.ஐயால் தப்புவிக்கப்பட்டனர் என்றும் கூறியது குறிப்பிடத் தக்கது.
இது ஒரு பக்கம். இன்று ராணா அய்யூப் வெளியிட்டுள்ள அவரது ஸ்டிங் ஆபரேஷனை உறுதி செய்வதற்கு ஆதாரம் (corroboratory evidence) இல்லை. முன்னதாக ஹரேன் பாண்ட்யாமுன் வைத்த குற்றச்சாட்டிலும் அந்த ஜன 27, 2002 இரவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளின் பட்டியலில் சஞ்சீவ் பட் பெயர் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சஞ்சீவ் பட் போன்றோர் மோடி அரசால் தாம் பழிவாங்கப்பட்ட கோபத்தில் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மைகள் மிகைப்படுத்தப்படும்போது அவர்களின் நோக்கமே பாழாகிறது. நமது முற்போக்கு நண்பர்களும் கூட தாங்கள் ஆதரவற்றவர்களின் பக்கலில் நிற்கும் உற்சாகத்தில் இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட குற்றசாட்டுகளை வைக்கும்போது பிரச்சினைகள் எழுகின்றன. முஸ்லிம்கள், தலித்கள், இன்னும் ஒடுக்கப்பட்டோர் பாதிக்கப்படும்போது உண்மைகளே நமக்குப் போதுமானவை . மிகைப்படுத்தட்ட செயல்கள் அறமற்றவை என்பது மட்டுமல்ல அவை அழிவிற்கே இட்டுச் செல்லும்.

அதிகாரிகளின் கூற்றுகளைக் கூர்ந்து பார்த்தோமானால் ஒன்று தெரிகிறது. நரேந்திர மோடி அப்படியான ஒரு சைகையை தனக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு இட்டார் என்பதும், அவ்வாறே அது முழுமையாக அடுத்த நாட்களில் கடைபிடிக்கப்பட்டது என்பதும் ஊரறிந்த உண்மை. ஆனால் சஞ்சீவ் பட் சொன்னது போல அதிகாரிகள் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதில் ஒரு முதலமைச்சர் இப்படி ஆணையிடுவார் என்பது இன்றைய ஆட்சி முறையில் சாத்தியமில்லை.

இன்றைய ஜனநாயகத்தில் ஏராளமாகக் குறைகள் உள்ளன என்பதிலும் நரேந்திர மோடி போன்றவர்கள் இதை வளைத்துத் தங்களின் மத வெறுப்பைச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும் என்ற போதிலும் முற்றிலும் இங்கே ஜனநாயச் சட்டகம் உடைந்து நொறுங்கி விடவில்லை. ஒரு 25 முக்கிய அதிகாரிகளைக் கூட்டி இப்படி ஒரு ஆணையை அழுத்தம் திருத்தமாக ஒரு முதலமைச்சரோ பிரதமரோ இட்டுவிட முடியாது. ஒரு ஐந்து அதிகாரிகள் நேமையாகவோ இல்லை மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தால் அது பிரச்சினைதான். இன்றளவும் ராணா அய்யூப் பின் இநூல் போன்றவை வெளியிடப்பட்டுச் சர்ச்சைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருந்து கொண்டுதான் உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாம் என்ன கிழித்தோம் என்கிற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை ஆனாலும் முற்றாக அனைத்தையும் மறுத்துவிட இயலாது.

Related posts

Leave a Comment