You are here
நேர்காணல் 

திராவிட இயக்கம்: தேவையை உணர்கிறேன்… தலைமையை நிராகரிக்கிறேன்…

நேர்காணல்: ப.திருமாவேலன்

கேள்விகள்: பூ.கொ.சரவணன்

பெரியோர்களே, தாய்மார்களே’ நூல் சமகால அரசியலை கடந்த காலத்தின் கண்ணாடி கொண்டு விரிவாக அணுகுகிறது. அரசியல் சார்ந்த தீவிரமான கருத்துக்களைச் சொல்ல மேடைப் பேச்சு நடையை க்கையாண்டு இருப்பதாக உணர முடிகிறது. இது திட்டமிடப்பட்டதா?

ஆமாம்! எனது எழுத்துக்களில் புரியாத சொற்கள், அறியாத சொற்கள், குழப்பமான சொற்கள் இருக்கக்கூடாது என்பதில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன். புரியாத, அறியாத, குழப்பமான சொற்களைப் பயன்படுத்துவது என்பது எதற்காக எழுதுகிறோமோ, யாருக்காக எழுதுகிறோமோ அந்த நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது. எழுதுவதன் நோக்கம், ‘நான் அறிந்தவன்’ என்று கூவுவது அல்ல. நான் அறிந்ததைக் கூவுவது.

இதற்கு மேடைப்பேச்சு நடையைக் கையாண்டதற்கு இரண்டு காரணங்கள்… மேடையால் வளர்ந்ததே தமிழக அரசியல். முழக்கங்களால் வளர்க்கப்பட்டதே தமிழக அரசியல். எத்தனை நவீன ஊடகங்கள் வந்தாலும் இன்றும் மேடையைக் கலைக்காமல் தான் உள்ளது தமிழக அரசியல். அதனால் தான் மேடைத்தமிழ் இதற்கு இயல்பாகப் பொருந்திப் போனது.

இரண்டாவது… இந்தக் கட்டுரைகள் ஜூனியர் விகடன் இதழில் வெளியான தினமே, யு டியூப், சவுண்ட் க்ளொவ்ட் ஆகிய இணையத்தளங்களில் ஒலி வடிவிலும் வழங்கப்பட்டது. இப்போதும் அந்த தளங்களில் 88 கட்டுரைகளும் ஒலி வடிவில் இருக்கின்றன. எனது குரலில் அவை ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இன்று ஊடகம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுள்ளது. அனைத்து வடிவங்களையும் பயன்படுத்தினால்தான் மக்களைச் சென்றடைய முடியும். அந்த நோக்கமும் இந்த தொடர் மூலம் நிறைவேறியது. வெகுஜன ஊடகத்தில் ஒரு தொடர் அச்சிலும், ஒலிவடிவிலும் வந்தது. இந்த வசதிக்காகவும் அந்த தொடர் மேடைத்தமிழாக அமைந்தது.

எதுவாக இருந்தாலும் மக்களை அடைதல். அந்த நோக்கத்துக்கு வாய்ப்பானது மேடைத்தமிழ்.

உ.வே..சாவின் ‘என் சரித்திரம்’ பல்வேறு தமிழக ஊர்களின் கதைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும். உங்களின் நூலில் சென்னையின் வரலாறு அப்படியே விரவிக் கிடக்கிறது. ‘கோட்டையின் கதை’ என்று சென்னையின் வரலாற்றை ஏற்கனவே பதிவு செய்தவர் நீங்கள். சென்னை இந்த நெடும் வரலாற்றில் இழந்திருக்கக் கூடாத ஒன்று என்று எதைச் சொல்வீர்கள். இன்னமும் அது அரசியல் புலத்தில் தக்கவைத்துக் கொண்டிருப்பதாக எதைப் பார்ப்பீர்கள்?

சென்னை, சுதந்திரப்போராட்டக் காலத்தில் தென்னிந்தியாவின் தலைவிதியைத் தீர்மானித்த ஊர். அதற்கும் முன்னால் இந்தியாவின் தலையாக இருந்த மூன்று மாநகரங்களில்( மற்ற இரண்டு கல்கத்தா, பம்பாய்! ) ஒன்று. அதற்கும் முன்னால், பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாக அடித்தளம் அமைக்கப்பட்ட முதல் ஊர். அதற்கும் முன்னால், கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகத்துக்கான புதுக்கணக்கு தொடங்கப்பட்ட இடம். இந்த நானூறு ஆண்டுகால வரலாற்றுக்கு முன்னாலும் இந்தப் பட்டணம் இருந்தது. பட்டணமாகவே இருந்தது. இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் இன்று அதற்கான எந்தப் புகழையும் அடையாளப்படுத்தும் புறக்குறியீடுகள் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், தமிழர்களின் வரலாற்று அக்கறை இன்மையே!

1960க்குப் பிறகு உருவான சென்னைப் பகுதிகள் நீங்கலாக மற்ற பகுதிகள், தெருக்கள், கட்டிடங்கள் அனைத்துக்குமே செறிவான வரலாறு உண்டு. ஆனால் அது நம்மவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அந்த அக்கறை இல்லை. சென்னை பழமையானது என்று சொல்வதற்கான ஒரே சாட்சி… இங்கே இருக்கும் கடற்கரை மட்டும் தான். இந்தக் கடற்கரை இல்லாவிட்டால் இது பழமையான நகரம் என்ற சிந்தனையே நம்மவர்களுக்கு இருக்காது. அதனால் தான், அரசியல் நிகழ்வுகளைச் சொல்ல வந்த நான், அதனூடாக அந்த நிகழ்வுகள் நடந்த இடங்களின் வரலாறுகளையும் சேர்த்துச் சொல்ல நினைத்தேன்.

சென்னையின் இடவரலாறு பேசுபவர்கள் அரசியலையும் சமூக நிலைமைகளையும் சேர்த்துச் சொல்ல ஆரம்பித்தால் மட்டுமே ‘சென்னை தினத்தை’ சென்னைவாசிகள் அனைவரும் கொண்டாடுவார்கள். அதைச் செய்யாவிட்டால், ‘சென்னை தினம்’ கார்பரேட் பிராண்டாக மற்றும் மாறிவிடும். மாற்றப்பட்டு விடும்!”
இந்த நூல் முன், பின்னாகப் பயணிக்கிறதே?”

“இந்தப் புத்தகம் எழுதப்பட்டதே அரசியல் அக்கறை, வரலாற்றுப் புரிதல், சமூக நோக்கம் அற்ற இளைஞர்களுக்குச் சில புரிதல்களை ஏற்படுத்தலாம் என்பதற்காகத்தான். இந்தப் புத்தகத்தின் முன்னுரையிலேயே நான் சொல்லி இருக்கிறேன், “நான் எந்த புதிய தகவலையும் முதன்முதலாகக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை”’ என்று. இவை ஏற்கனவே பல்வேறு ஆய்வாளர்களால், ஆளுமைகளால் எழுதப்பட்ட தரவுகள்தான். அவை அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறேன். பல நூற்றுக்கணக்கான புத்தகங்களில் இருந்து திரட்டப்பட்டவை இவை. இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் அரசியல் ஆர்வம், சமூக நோக்கம் கொண்டவராக இருந்தால் கூட படித்து முடிப்பது கடினம். எனவே சுருக்கமாக, ஆனால் மொத்தமாகத் தொகுத்தேன். என்னைப் பொருத்தவரை இது தொகுப்பு நூல். இது காலவரிசை நூல் அல்ல. சொல்ல வேண்டியவை மட்டும் சொல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளின் ஊடாக பயணிக்கும் நூல்.

அரசியலற்று தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இருப்பதை இடித்து உரைக்கிறீர்கள். இந்த அரசியல் பார்வை அற்றவர்கள் பெருகுவதற்கு என்ன காரணம்? எப்படி இந்தச் சீர்கேட்டை தமிழ்ச் சமூகம் பல்வேறு தளங்களில் எப்படி எதிர்கொள்வது?

“இன்றைய இளைஞர்களுக்கு மிகச்சிறுகச் சிறுக நல்ல தரவுகளைப் புகட்டித்தான் உள்ளே இழுத்து வரவேண்டும். ஜி.சுப்ரமணிய ஐயர், அயோத்திதாசர், வ.உ.சி., திரு.வி.க. என்று நான்கைந்து பக்கத்தில் தெரிந்துகொண்டால்தான் அதன்பிறகு விரிவான தகவல்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அந்த நோக்கத்துக்காக இது எழுதப்பட்டது. அரசியல் அற்று இளைஞர்கள் இருப்பதற்குக் காரணம், அவர்கள் பார்க்கும் அரசியல் மோசமானதாக இருப்பது. கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் பார்க்கும் இளைஞன் அரசியல் தலைவர்கள் என்றால் இவர்கள்தான் என்று நினைக்கிறான். அவனுக்கு ஓமந்தூராரையும் பி.எஸ்.குமாரசாமி ராஜாவையும் தெரியப்படுத்தினால் தான் அரசியல் ஈடுபாடு வரும். அரசியல் என்பது தேர்தலில் வெற்றிபெறுவது மட்டும் அல்ல, கொள்கையை வென்றெடுப்பது என்று சொல்ல வேண்டும். இன்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு காலத்தில் கொள்கை பேசிய கூட்டம்தான் என்றும் சொல்லவேண்டும். கொள்கை மோதல்கள், தர்க்க விவாதங்களை நோக்கி தமிழக அரசியலைத் திருப்பினால்தான் அரசியல் மேம்படும். அரசியலை நோக்கி இளைஞர்களும் வருவார்கள்!”

ஜி.சுப்ரமணிய ஐயர் தேசிய சமூக மாநாட்டில் ஆற்றிய மகத்தான பங்களிப்பு பிபன் சந்திராவின் ‘இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு’ நூலில் கூடக் காணப்படவில்லை. வின்சென்ட் ஸ்மித், ‘ இந்தியாவின் வரலாறு தென்னகத்தில் இருந்தே துவங்க வேண்டும்’ என்று சொன்னதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். தமிழர்கள் தங்களுடைய வரலாற்றை எழுத வேண்டிய தேவையை இவை உணர்த்துகிறதா? எப்படிப்பட்ட வரலாற்று நூல்கள் தமிழகத்தின் இப்போதைய தேவை?

வட இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள் தமிழகத்தின் அரசியல், சமூக மறுமலர்ச்சிப் போராட்ட நிகழ்வுகளை குறிப்பிடத்தக்க அளவுக்கு பதிவு செய்யவில்லை. பிபின் சந்திராவுக்கும் இது பொருந்தும். ராமச்சந்திர குஹாவுக்கும் இது பொருந்தும். இவர்கள் வேண்டுமென்றே செய்தார்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் கவனிக்கும் அளவுக்கு தமிழக அரசியல், சமூக வரலாறுகள் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை. ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலேயே முழுமையான அரசியல் போராட்ட வரலாறுகள் இல்லை. அப்படியே இருந்தாலும் சார்பு நிலை, போதாமை அதிகம் உள்ளது. திராவிட வரலாற்று ஆசிரியர்கள் பொதுவுடைமை இயக்க நிகழ்வுகளை சொல்லாமல் போவதும், கம்யூனிஸ்ட் வரலாற்று ஆசிரியர்கள் திராவிட இயக்க ப்பங்களிப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல் போனதும், தேசிய இயக்கம் பற்றி எழுதுவதற்கு எவருமே இல்லாமல் போனதும் தமிழக அறிவுச்சூழலில் ஏற்பட்ட தேக்கம். இந்த தேக்கம் உடைக்கப்பட்டு, ஒப்பீட்டு வரலாறுகளை இந்த இயக்கம்சார் ஆய்வாளர்கள் விமர்சனங்களோடு சேர்த்தே எழுத வேண்டும்.

ஆக்ஸ்போர்டு செய்வதைப் போல, தமிழக வரலாற்று வரிசையை எழுதுவதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டு 25 ஆண்டுகாலத் திட்டமிடுதலுடன் அந்தப் பணி தொடங்கப்பட்டால் மட்டுமே தமிழகக் கடந்தகாலம் மீட்டெடுக்கப்படும்!”

6. இந்த தொடர் வெளிவந்த காலத்தில் வந்த முக்கியமான விமர்சனங்கள் என்ன?
“இரண்டு மிக முக்கியமான விமர்சனங்களை மட்டும் சொல்கிறேன்….

ஹோம்ரூல் இயக்கத்தை விமர்சிக்க வந்த நீதிக்கட்சித்தலைவர் டி.எம்.நாயர், அன்னிபெசன்டை ஒரு பெண் என்ற நோக்கத்துடன் இருபொருள் தரும்படி விமர்சனம் செய்ததைக் கண்டித்து இருந்தேன். அது வெளியான வாரத்தில் தான் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொச்சையான விமர்சனம் வந்து இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டதை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கடுமையாக கண்டித்து இருந்தார். டி.எம்.நாயரைக் கொச்சைப்படுத்திவிட்டதாகச் சொல்லி இருந்தார். நாயரின் பங்களிப்பு எதையும் நான் மறைக்கவில்லை. ஆங்கில மாதுக்கள் காரியம் சாதிக்க எப்படி எல்லாம் நடந்துகொள்வார்கள் என்ற நாயரின் கிண்டலைத்தான் கண்டித்து இருந்தேன்.

திராவிட இயக்கம் (தி.மு.க., அ.தி.மு.க.) இன்று அரசியல் சீரழிவின் முற்றிய நிலையில் இருந்தாலும் தொடக்க காலத்தில் இருந்து திராவிட இயக்கம் நடத்திக் காட்டிய சாதனைகளைச் சொல்லும் கட்டுரைக்கு தோழர் பெ. மணியரசன் எதிர்வினை ஆற்றி இருந்தார். மறைமலையடிகள், ம.பொ.சி, தியாகி சங்கரலிங்கனார் ஆகியோர் குறித்த எனது கட்டுரைகளை பெ.ம. வாசித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். மொழிவாரி மாகாணம், 1965 இந்தி எதிர்ப்பு ப்போராட்ட நிலைப்பாடுகளில் பெரியார் வழுக்கியும் நழுவியும் சென்றது குறித்து நான் எழுதியதையும் பெ.ம. வாசிக்கவில்லை என்றும் நினைக்கிறேன். இவை இரண்டுமே மிக முக்கியமான எதிர்வினைகள்.

மற்றபடி வெகுஜன பத்திரிக்கையில் வரும் கட்டுரையை விமர்சிப்பது தங்கள் தகுதிக்குக் குறைவானது என்று நினைக்கும் அறிவுஜீவிகள் இருக்கும் தமிழகத்தில் விமர்சனங்கள் வராதது ஆச்சர்யப்படக்கூடியது அல்ல!”

பெண்கள்மீது பல்வேறு தளங்களில் உளவியல், உடல்ரீதியான வன்முறைகள் பெருகியிருக்கும் சூழலில் அன்னிபெசன்ட் காலத்தில் இருந்து இன்று வரை பெண்கள் மீதான நாகரீகமற்ற தாக்குதல்களைச் சுட்டிக் காட்டுகிறீர்கள். ஆடையில் இருக்கிறது கலாசாரம் என்கிறவர்களைத் தமிழ் இலக்கியங்கள் வழியாக எதிர்கொள்கிறீர்கள். பெண்கள்மீதான அரச வன்முறையைச் சாடுகிறீர்கள். பெண்ணுரிமையில் பெரியார் அளவுக்குப் பேசியவர் யாருமில்லை என்று வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா விதந்தோதிய சிறப்புடைய நம் தமிழகத்தின் தற்போதைய இந்த வீழ்ச்சியை எப்படி எதிர்கொள்வது? எங்கே சிக்கல்?

“சாதியைக் கூட ஒழித்துவிடலாம், ஆனால் சாதிப் பெருமையை ஒழிக்க முடியாது’ என்று சொன்ன பெரியார், ‘ஆணாதிக்கம் ஒழிய வேண்டுமானால் ஆண்மை ஒழியவேண்டும்’ என்றார். உருவமற்ற, ஆண்மை’ என்ற கெத்தை ஒழிப்பது சிரமம் ஆனது என்று சொன்னவர் அவர். ‘காதலிக்கும் முன் பெண்ணின் அடிமையாக இருக்கச் சம்மதிக்கும் ஆண், கல்யாணம் முடிந்ததும் எஜமானன் ஆகிறான்’ என்று சொன்னவரும் பெரியார்தான். பெரியார் சொன்னதை திராவிட இயக்கங்களும் பாரதி வழிகாட்டியதை தேசிய இயக்கமும் கவனத்தில் கொண்டு செயல்பட்டு இருந்தால் இத்தகைய கலாச்சாரச் சீர்கேடு நடந்திருக்காது. வெறும் தேர்தல் அரசியலை மட்டும் இந்த இயக்கங்கள் பேசியதால் தான் இந்தச் சிக்கல் வந்தது. ஐம்பது ஆண்டுகளாக திராவிட இயக்கம் ஆள்கிறது தமிழ்நாட்டை. உண்மையாக அது திராவிட இயக்க சித்தாந்த ஆட்சியாக இருந்தால் இது இந்திய எல்லைக்கு உட்பட்ட திராவிட நாடாகத்தானே மலர்ந்திருக்க வேண்டும்? அப்படியும் ஆகாமல் சாதிவன்மமும், மத மாச்சர்யமும், ஆணாதிக்கமும் கொண்ட மேட்டுக்குடி- அடித்தட்டுக் குழிச் சமூகமாக மாறியதற்குக் காரணம் இங்கே அரசியல் எல்லாம் தேர்தல் அரசியல், கூட்டணி அரசியலாக மட்டும் மாறிப்போனதுதான். அரசியல் என்பது தேர்தல் நேரத்தில் தேர்தல் அரசியலாகவும் தேர்தல் அற்ற நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தாந்தங்களின் அரசியலாகவும் மாற வேண்டும். இன்னும் சொன்னால், தேர்தலில் பங்கெடுக்காத, சட்டமன்ற நாடாளுமன்றச் சுவைபார்க்க விரும்பாத அரசியல்கட்சிகள் தமிழ்நாட்டில் அதிகம் உருவாக வேண்டும்.அப்போதுதான் அரசியல் கட்சிகள் திருந்தும். பேசக்கூச்சப்படும் விஷயங்களைப் பேசும்.”

இந்த நூலை திரு. வி.க., நாகம்மாள் ஆகியோருக்கு அர்ப்பணித்து உள்ளீர்கள். என்ன காரணம்?

திரு,வி.க.வை எனக்கு அறிமுகம் செய்தவர் எனது தந்தையார் புலவர் மு.படிக்கராமு. ஒரு மனிதன், ஒரு தலைவன், ஒரு பத்திரிக்கையாளன், ஒரு எழுத்தாளன், ஒரு பேச்சாளன், ஒரு தொழிற்சங்கத் தலைவன், ஒரு ஆன்மிகவாதி, ஒரு பெண்ணுரிமைவாதி… எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழுமுதல் உதாரணம் என்றால் அது திரு.வி.க.தான். அவரது, ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ நூல் ஒன்று போதும். அதை வாசிக்கவாசிக்க நம் மன அழுக்கு துடைக்கப்பட்டே வரும். தமிழகத்தில் தேசிய, திராவிட, பொதுவுடைமை ஆகிய மூன்று இயக்க வரலாற்றிலும் ஒரு மனிதன் இடம் பிடிப்பார் என்றால் அது திரு.வி.க.தான். அதனால்தான் அவரை நினைத்தேன்.

நாகம்மாள் இல்லாமல் பெரியார் இல்லை. நாகம்மாள் இல்லாமல் சுயமரியாதை இயக்கம் இல்லை. ஒரு இயக்கம் குடும்ப பாசத்துடன் இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அவர். நாகம்மாள் பெரியாரின் மனைவி மட்டும் அல்ல. பெரியாரிய இயக்கங்களின் தாய். அவர் மறைவுக்கு பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கை, உலக அஞ்சலிக் கட்டுரைகளின் வரிசையில் கொண்டுபோய் நிறுத்த வேண்டியது.

ஈரோடு சுயமரியாதை இயக்க மாநாட்டில் பேசிய திரு.வி.க., ‘சுயமரியாதை இயக்கத்தின் தந்தை ஈ.வெ.ரா. என்றால் தாய் நான்தான்’ என்று திரு.வி.க. சொன்னார். நாகம்மை இறந்தபோது அவரது படத்தைத் திறந்து வைக்கும் தகுதியை திரு.வி.க.வுக்குத்தான் தந்தார் பெரியார்.

என்னைப் பொறுத்தவரை திரு.வி.க. போல் ஒரு தலைவன், நாகம்மை போல் ஒரு தலைவி வேண்டும் என்பது வேண்டுதல்!

தமிழகத்தின் தடை செய்யப்பட்ட நூல்கள் குறித்துக் காத்திரமான வரலாற்றுப் பதிவுகளைக் கட்டமைத்த நீங்கள் மறக்கப்பட்ட மகத்தான ஆளுமைகள் குறித்து ஒரு தனி நூலை நீங்கள் எழுத வேண்டும் என்று விரும்புகிறோம். யாரெல்லாம் அதில் அவசியம் இடம்பெற வேண்டும் என்று கருதுவீர்கள்?

அந்தப் பட்டியல் மிகமிக விரிவானது. பல நூறு ஆளுமைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக அதில், பேராசிரியர் லட்சுமிநரசு, எஸ்.முத்தைய முதலியார், மண்டையம் சீனிவாசாச்சாரியார், மதுரைபிள்ளை, எல்.சி.குருசாமி, ஏ.ராமசாமி முதலியார், சர்க்கரைச் செட்டியார், ஆர்.கே.சண்முகம், ஜான் ரத்தினம், பெருமாள் பீட்டர், கோவை அய்யாமுத்து, கருமுத்து தியாகராயர், பா.வெ.மாணிக்கவேலு, ஜெ.சிவசண்முகம் பிள்ளை, ஏ.டி.பன்னீர்செல்வம், கே.முருகேசன், முருகேச பாகவதர், அப்பு, சீராளன், தமிழரசன்… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தமிழக வரலாறே ஆளுமைகள் நிறைந்தது. விளம்பர வெளிச்சத்தில் வெளியில் தெரிந்தவர்கள் சிலர் மட்டும் தான்!

திராவிட இயக்கத்தின் தூண்களைக் கொண்டாடுகிறீர்கள், தேசிய இயக்கத்தின் ஈடில்லா பணிகளை விரித்துச் சொல்கிறீர்கள், இடதுசாரிகளின் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலின் மகத்தான தலைவர்களை முன்னிறுத்துவதும் காண முடிகிறது. திராவிட இயக்கப் பின்புலம் கொண்ட நீங்கள் இந்தச் சவாலான பணியை எப்படிப் பார்க்கிறீர்கள்? அரசியல் சரித்தன்மை பார்ப்பது எவ்வளவு தூரம் உகந்தது?

அரசியலையும் அறவியலையும் இணைத்துப் பார்க்கும் எவருக்கும் இது ஏற்படும். இரண்டும் இணைந்து பயணிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது இணைந்து இருப்பது இல்லை. யாரும் இருக்கவிடுவதும் இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பது அரசியல். இப்படித்தான் வெற்றி பெற வேண்டும் என்பது அறவியல். இந்த இரண்டையும் அளவுகோலாகக் கொண்டு தான் அனைத்தையும் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தேவையை உணர்கிறேன். அதேநேரத்தில் இன்றைய திராவிட இயக்கத் தலைமைகளை நிராகரிக்கிறேன். இரண்டுக்கும் முரண்பாடு இல்லை. அதுவே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இந்தப் புத்தகமே அரசியலையும் அறவியலையும் இணைத்துப் பேசுவதற்காகவே, செயல்படுத்துவதற்காகவே எழுதப்பட்டது. இரண்டும் இணைந்து பயணிக்கும் போதுமட்டும்தான் அது மக்கள் அரசியலாக மலரும். மலர வேண்டும். விரைவில் மலரும்!

Related posts

Leave a Comment