You are here
அஞ்சலி 

கலைஞர்கள் காலங்களில் வாழ்கிறார்கள்.

 சி. தெட்சிணாமூர்த்தி (1943 – 2016)

வேலூருக்கு அருகிலுள்ள குடியாத்தம் நகரில் 1943 ஆம் ஆண்டு பிறந்தவரான தெட்சிணாமூர்த்தி, 1966 ஆம் ஆண்டில் சென்னை ஒவியக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்காலராக க்ராய்டன் காலேஜ் ஆப் டிசைன் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் பிரிண்ட் மேக்கிங் கற்றார்.

சிற்பி தெட்சிணாமூர்த்தியின்மா ணவரான ஓவியர் க. நடராசன் அவரைப் பற்றி தி இந்து தமிழ் கட்டுரையில் இவ்வாறு நினைவுகூர்கிறார்: “சென்னை ஓவியக் கல்லூரிக்குள் இந்தியக் கலை மரபு குறித்த தத்துவார்த்த விவாதங்கள் நடந்துகொண்டிருந்த 1950-60களின் காலப் பொழுதில்தான் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். அவர்களுள் தட்சிணாமூர்த்தி முக்கியமானவர். பின் புலமற்ற சாமானியர்களின் முதலாம் தலைமுறையின் படைப்புகளைச் சமூகம் எந்தக் கேள்வியுமின்றி உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற தேவையும் அதன் அடிப்படை நியாயங்களும் இவர்களுக்கு ஒரு ஊக்கத்தைத் தந்திருக்க வேண்டும். இங்கிருந்துதான் நாட்டார் கலை மரபு
நவீன ஓவியத்தின் மீது ஆளுமை செய்யத் தொடங்கியது” என்று குறிப்பிடுகிறார்.

மனிதர்கள், பறவைகள், செடிகொடிகள்தான் அவருடைய சிற்பங்களை அலங்கரித்த கருப்பொருள்களாக இருந்தன. தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நேசித்த கலைஞராகவே இருந்தார் என்பதை அவரது மனித முகங்கள், உருவங்களின் சிற்ப வெளிப்பாடுகளில் இருந்து அறியலாம். அம்மனித முகங்களில் கருணையும், அன்பும், ஆசையும், காதலும் துயரமும், கவலையும் பெருக்கெடுக்கின்றன. கிராமத்து அய்யனார் சுடுமண் சிற்பங்கள், ஆப்பிரிக்க சிற்பங்களில் இருந்து தனக்கான சிற்ப உலகத்திற்கான ஊக்கம் பெற்றவர் தெட்சிணாமூர்த்தி. அதன் பாதிப்பில் கருங்கல், செராமிக்ஸ், செம்பு என கச்சாப்பொருள்களில் அவரது சிற்பங்கள் தனித்த கலைமொழியைப் பேசுகின்றன.

தன் முதல் கண்காட்சியை லண்டன் க்ராய்டன் கல்லூரியில் படிக்கும்போது 1978ஆம் ஆண்டு நடத்தினார். சென்னை, மும்பை, டெல்லி, பியூனஸ் ஏர்ஸ் போன்ற நகரங்களில் அவருடைய கலைப்படைப்புகள் காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை ஓவியக் கல்லூரியில் சுடுமண் சிற்பத்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றார்.

தேசிய விருது (1986), மைசூர் தசரா விருது (1972), மாநில விருதுகள் (1963,1965) என தெட்சிணாமூர்த்தின் கலைத்திறன் அனைவராலும் அடையாளம் காணப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு கலைஞன் வாழும் காலத்திலேயே பாராட்டப்படுவதும் விருதளித்து கெளரவம் செய்யப்படுவதும் தமிழ்ச் சூழலில் அரிய நிகழ்வாக இருந்துவருகிறது. தெட்சிணாமூர்த்தியின் கலைவாழ்வு அந்த அரிதிலும் அரிதை சாதித்திருக்கிறது. அவருடைய சிற்பங்கள் காற்றின் திசையெங்கும் கலைச் செழுமை பேசிக்கொண்டே இருக்கும். கலைஞர்கள் காலங்களில் வாழ்கிறார்கள்.
– சுந்தரபுத்தன்

Related posts

Leave a Comment