You are here
அஞ்சலி 

கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி நின்றதுபோல் நின்றாய்…

ச.தமிழ்ச்செல்வன்

ஒரு வலியைத்
திரும்பத் திரும்பத் தொடும் வலியில்
அப்படி என்ன சுகம்?
உன் துருப்பிடித்த சைக்கிளின்
செம்மண் தடங்களை
தார்ச்சாலைகள்மூடிவிட்டன.
நீ நடந்து சென்ற
மார்கழியின் வீதிகளும்
மாக்கோலமும் காலப்புழுதியில்
கலைந்துவிட்டன.
உன் நூலில் பறந்த
பொன்வண்டுகள்
பெயர் தெரியா காட்டுக்குள்
தொலைந்துபோன முற்பகலும்
தூக்கம் இல்லா பின்னிரவும்
மறந்ததா மடநெஞ்சம்?
என் ப்ரிய நண்பா…
பிணத்தை எரித்துவிட்டு
சுடுகாட்டிலிருந்து
கிளம்புபவர்களிடம்
சொல்வதைப்போல சொல்கிறேன்:
திரும்பிப் பார்க்காமல்
முன்னே நடந்து போ’
– நா.முத்துக்குமார்

முத்துக்குமாரைப் புதைத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் போக முடியவில்லை. ஏலகிரி மலையில் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கான ஓர் பயிலரங்கில் நான் பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் மகன் சித்தார்த்திடமிருந்து வந்த தொலைபேசிச் செய்தி முத்துக்குமாரின் முடிவைச் சொன்னபோது நாவறட்சி ஏற்பட்டது. நம்பமுடியவில்லை. மனம் அப்படியே உறைந்ததுபோலானேன். சித்தார்த்துக்கும் முத்துக்குமாருக்கும் இடையிலான நட்பையும் ‘சித்து…’ என்று அழைக்கும் முத்துக்குமாரின் ஒற்றை வார்த்தைக்குள் உறைந்திருக்கும் அளவற்ற அன்பையும் நெருக்கத்தையும் பின்னாலிருந்து பார்த்துப் பெருமையுடன் என் கண்களைப் பலமுறை துடைத்திருக்கிறேன்.

அண்ணே.. என்கிற ஒரு விளிப்பில் மனதின் அத்தனை அன்பையும் கொட்டிவிட அவனால் எப்படி முடிகிறது என வியந்திருக்கிறேன். எங்களோடு மட்டுமல்ல. எல்லோருடனும் இப்படியான ஒரு நெருக்கமும் நெகிழ்ச்சியுமான உறவு கொண்டிருந்தவன் அன்புத்தம்பியும் தோழனுமான நா.முத்துக்குமார்.

“என் அப்பா
ஒரு மூட்டைப் புத்தகம்
கிடைப்பதாக இருந்தால்
என்னையும் விற்று விடுவார்”
என்று அவனுடைய அப்பா அமரர் நாகராஜனைப்பற்றிக் கவிதை எழுதிய முத்துக்குமாரின் வெற்றிக்குப் பின்னால் அவனுடைய அப்பாவும் அப்பாவின் நினைவுகளுமே இருந்தன. ஒருமுறை முத்துக்குமாரை அவ்ருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய அப்பாவின் கையெழுத்தில் எழுதப்பட்ட பெரிய கனத்த நோட்டுப்புத்தகத்தை எடுத்துக் காண்பித்தார். அப்பா எழுதி வைத்த கவிதை வரிகள், நாட்டுப்புறப் பாடல் வரிகள், அவருக்குப் பிடித்த பல எழுத்தாளர்களின் வார்த்தைகள் என ததும்பத் ததும்ப இருந்த அந்த நோட்டுப்புத்தகம்தான் தன் பாடல்களுக்கெல்லாம் ஆதார சுருதி என்றார். அந்த நோட்டுப்புத்தகத்தின் வழியே அவருடைய அப்பா அவரோடு அன்றாடம் உரையாடிக்கொண்டும் முதுகில் தட்டி உற்சாகப்படுத்திக்கொண்டும் இருந்தார். எல்.கே.ஜி படிக்கும்போது அவருக்கு மதிய உணவாகக் கீரை சாதத்தைக் கட்டிக் கொடுத்துவிட்டு மாலை திரும்பி வரும்போது பிணமாகக் கிடந்த தன் தாயைப்பற்றி அவர் சொல்லும்போது நமக்குக் கண்கள் கலங்கி விடும். “ஞாபக அடுக்குகளின் ஆழ் கிடங்கில் உனக்கும் எனக்குமான சம்பவங்கள் ஒன்றிரண்டே மிச்சம் உள்ளன. கலைடாஸ்கோப்பின் வளையல் சித்திரமாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய்!” என்று தன் அம்மாவைப்பற்றி எழுதினார்.

‘மரணவீட்டில் கீரையும் சாதமும்தான் போடுவார்களப்பா. உன் அம்மா அதனால்தான் உனக்கு அன்று கீரைசாதம் கொடுத்தனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னபோது ‘அப்படியாண்ணே…’ என்று இன்னும் சோகம் கவிந்த முகத்துடன் என்னைப்பார்த்த அந்த முகம் இப்பவும் என் நினைவில் பதிந்திருக்கிறது.சின்ன வயசில் அம்மாவை இழந்த பிள்ளைகளின் முகத்தில் எப்பவும் ஓர் லேசான இருள் படிந்திருக்கும் என்பது என் சிறுவயது நம்பிக்கை. அந்த லேசான இருட்டை எப்போதும் நான் முத்துக்குமாரின் முகத்தில் பார்த்துக்கொண்டே இருந்தேன். கு.அழகிரிசாமியின் ’இருவர் கண்ட ஒரே கனவு’ கதையில் வரும் ஒரு குழந்தையைப்போலத்தான் நா.முத்துக்குமார் என்கிற தாயில்லாப்பிள்ளை வாழ்ந்திருக்கிறான்.

மகனுக்கு அப்பாவின் பெயரைச் சூட்டினான். தன் மகன், தன் அப்பாவைப்போலவே புத்தகப் பைத்தியமாக இருப்பதைப்பார்த்து “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” என்கிற மௌனியின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிகிறதாக எழுதினான். ஆனால் அம்மாவின் நிழலாக செல்ல மகள் பிறந்த சில மாதங்களில் அவளின் கொஞ்சு மொழி கேட்குமுன்னே காலமாகி நிற்கிறான். கொடுமையடா இந்த வாழ்க்கை.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு கலை இரவில் மேடையில் முத்துக்குமாரை ஒரு நேர்காணல் செய்தேன். திரைப்படத்துறையில் பரவியிருக்கும் குடிக்கலாச்சாரம் பற்றி ஒரு கேள்வி கேட்டேன். ‘எல்லாத்துறையினரும்தான் குடிக்கிறார்கள். சினிமாத்துறை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் துறை என்பதால் உங்களுக்கு அது பெரிசாகத் தெரிகிறது’ என்றார். நீங்கள் யாருடைய வாரிசாக உணர்கிறீர்கள் கண்ணதாசனுக்கா பட்டுக்கோட்டைக்கா? என்று கேட்டேன்.இருவரின் கால்தடத்திலும் நடக்கவே ஆசைப்படுகிறேன் என்று பதிலளித்தார்.பல்லாயிரக்கணக்கான இந்த மக்கள் முன்னால் நீங்கள் ஒரு சத்தியம் செய்து தர வேண்டும் என்று பீடிகை போட்டு சொன்னேன். நாளை நிச்சயம் நீங்கள் புகழின் உச்சிக்குச் செல்வீர்கள். அப்போதும் சரி எப்போதும் சரி பெண்களை வெறும் உடம்பாகச் சித்தரித்தோ தரம் குைறத்தோ எழுத மாட்டேன் உழைப்பாளி மக்களை போற்றியே எழுதுவேன் என்று இந்த மக்கள் மன்றத்தில் சத்தியம் செய்து தாருங்கள் என்றேன். அந்த மேடையில் என் கைகளில் அறைந்து சொன்னான். “நான் என் தந்தையால் அப்படித்தான் வார்க்கப்பட்டிருக்கிறேன். இறுதிவரை அப்படித்தான் வாழ்வேன்”. பின்னர் பல சமயங்களில் நான் இப்படி மேடையில் சத்தியம் வாங்கியதெல்லாம் ரொம்ப ஓவர் என்று உணர்ந்து கூச்சப்பட்டிருக்கிறேன். ஆனாலும் அந்தச் சொல்படி கடைசிவரை வாழ்ந்து எழுதிச்சென்ற கவிஞனாகவே முத்துக்குமார் நிமிர்ந்து நிற்கிறார்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
என்கிற தொனியில்தான் அவரது காதல் கவிதைகள் அமைந்தன. இந்த எல்லையை அவரது வரிகள் மீறியதில்லை.

என்னுடைய ’வெயிலோடுபோய்’ கதையை சசி திரைப்படமாக ஆக்கியபோது அப்படத்துக்கும் முத்துக்குமார் பாடல்கள் எழுதினார். அதில் ‘ஆவாரம்பூ’ எனத்தொடங்கும் பாடலை முதல் தடவை கேட்டபோது நான் உண்மையில் கதறி அழுதுவிட்டேன். என் கதையின் சாரத்தை, அதன் உணர்வை, உட்கிடக்கையை அப்படியே அப்பாடலில் கொண்டு வந்திருந்தார். அப்பாடலை முத்துக்குமார் சொல்லச் சொல்ல இயக்குநர் சசியும் மேசையில் தலை கவிழ்த்து அழுதுவிட்டார் அண்ணே என்று பின்னர் முத்துக்குமார் சொன்னார்.

“ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு”
தமுஎகசவுடன் துவக்கம் முதல் இறுதிவரை நட்பும் தோழமையும் கொண்டிருந்தவர். மாநாடு மற்றும் நிகழ்வுகளுக்கு மகிழ்ச்சியுடன் நிதி நல்கை செய்து வந்தவர். அழைத்தபோதெல்லாம் நிகழ்வுகளில் வந்து கலந்துகொண்டு பங்காற்றியவர்.

பட்டாம்பூச்சிகள் விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, கண்பேசும் வார்த்தைகள் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். சில மரணங்கள் நினைக்குந்தோறும் நம் மனதை உருக்குபவையாக மாறிவிடும். என் அம்மா, என் தங்கை, தொ.மு.சி ரகுநாதன்,சுந்தரராமசாமி என்கிற அந்த என் வரிசையில் இப்போது முத்துக்குமார். மரணம் இயற்கையானதுதான் என்கிற போதிலும் சில இழப்புகள் ஈடு செய்ய முடியாத பள்ளத்தை நம் மனங்களில் ஏற்படுத்தி விடுகின்றன.

சாதாரணமாக என் மூன்றரை வயதுப் பேத்தி தமிழ்மதி எப்போதும் பாடும் ஒரு பாடல் இப்போது அவள் பாடும்போது அவள் குரலில் முத்துக்குமாரைக் கேட்கிறபோது மனம் கனத்துப் பெருமூச்சாய்க் கரைகிறேன். பேத்தி பாடிக்கொண்டிருக்கிறாள் இது பற்றி ஏதும் அறியாத குழந்தைமையுடன்…

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு
கமதனிச ரிரிச
கமதனிச கரிச

Related posts

Leave a Comment