You are here
அஞ்சலி 

எல்லை தாண்டிய எழுத்து….

– சா. கந்தசாமி

mahaswethadevi-kathaigal1

2016, ஜூலை மாதத்தில் வங்க மொழியில் நூறு நாவல்கள், இருபது சிறுகதைத் தொகுப்பு௧ள், ஏராளமான அரசியல், சமூக ஆதி பழங்குடி மக்கள் வதைப்படுவது பற்றியும் எழுதி உள்ள மகாஸ்வேதா தேவிதன் தொன்னூறாவது வயதில் காலமானார். அவர் எழுத்தின் அடிப்படை கள ஆய்வு. எழுதுவதற்கு முன்னால் அது சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி அதன் வழியாகப் பெற்றவற்றைக் கொண்டு நாவல்கள் எழுதினார்.

ஒரு படைப்பிற்கு களஆய்வு அப்படி யொன்றும் அவசியம் இல்லை. மனம் எழுத்தைத் தன்னளவிற்கு கள ஆய்வு செய்து கொண்டுவிடுகிறது. மேலும் கள ஆய்வு என்பது படைப்பைக் கட்டையாக்கி பரிணாமத்தைக் குறைத்து விடுகிறது என்று சொல்லப்பட்டு வந்ததையெல்லாம் கவி மனம் கொண்ட மகாஸ்வேதா தேவி எழுதியே புறந்தள்ளினார். அவர் படைப்புக்களில் கவனம் பெற்றதும் இந்தியா முழுவதிலும் பல எழுத்தாளர்கள் கள ஆய்வு செய்து சிறுகதைகள், நாவல்கள் எழுதினார்கள்.

ஆனால் மகாஸ்வேதா தேவியின் படைப்பாளுமை இன்மையால் அவர் அடைந்த உச்சத்தை அடைய முடியவில்லை. அவர் வெற்றி வெறும் கள ஆய்வில்லை. அவரின் கவிமனத்தோடு கள ஆய்வு பிரிக்க முடியாத விதத்தில் இணைந்து சென்றது என்பதுதான்.

மகாஸ்வேதா தேவி வங்காளத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாடக, சினிமா கலைஞர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார். அவர் சித்தப்பா புகழ்பெற்ற சினிமா இயக்குநர் ரித்விக் கட்டக். மகாஸ்வேதா தேவி ஆங்கில இலக்கியம் படித்தார். கல்லூரி ஒன்றில் பணியில் சேர்ந்து கொண்டார். நாடகாசிரியரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் குடும்பம், பணி என்று அவரால் சம்பிரதாய வாழ்க்கை வாழ முடியவில்லை. சமூகத்தின் அவலங்கள் அவரை பாடாகப்படுத்தின. ஒடுக்கப்பட்ட, வன வாழ் பழங்குடி மக்கள் ஏமாற்றப்படுவதையும், வஞ்சிக்கப்படுவதையும் ஒரு படைப்பு எழுத்தாளர் என்ற முறையில் அசலாக எழுதுவது என்று முடிவு செய்து கொண்டார். அதற்காக அவர் நெடுந்தூரம் பயணித்தார். கள ஆய்வுகள் செய்தார்.

அவர் பிறப்பால் ஏழையோ, பழங்குடி மகளோ இல்லை. ஒரு கலைஞர் என்ற முறையில் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களின் சார்பாக உண்மையாகவே எழுதினார். அவர் பெண், ஆனால் பெண்ணியவாதி இல்லை. முற்போக்கான எண்ணங்கள் கொண்டவர். கம்யூனிஸ்டு கட்சியோடு நெருக்கமாக இருந்தார். ஆனால் அவர் கம்யூனிஸ்டு இல்லை. முரண்படவும் செய்தார்.

மனிதாபிமானம் என்பதுதான் அவர் எழுத்துக்களின் அடிநாதமாக இருந்தது. பேசத் தெரியாத மக்களின் குரலாகவும், எழுத முடியாதவர்கள் கையாகவும் இருந்து கொண்டு எழுதினார். அதுவே அவரை அசல் படைப்பு எழுத்தாளரின் முதல் வரிசைக்குக் கொண்டு வந்தது.

இந்தியாவில் கிராமங்களிலும், வனப்பகுதிகளிலும் வாழ்ந்த சுதந்திரமான மனப்போக்குக் கொண்ட ஆண்களையும், பெண்களையும் புறவாழ்க்கையின் ஊடாக சுக வாழ்க்கை பற்றியும், பிரிட்டிஷ் அரசு அவர்களை அடக்கி ஒடுக்கியது பற்றியும் தனித் தன்மை மிளிர எழுதினார். அதில் அரசுக்கு அடங்க மறுத்து கிளர்ச்சி செய்தவர்கள் முன்னிறுத்தப்பட்டார்கள்.

1871ஆம் ஆண்டில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களை அடக்கி ஆள்வதற்கென்று குற்றப்பரம்பரைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், வழிபறித் திருடர்களை அடக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்தக்கூடிய சட்டம் என்று சொல்லப்பட்டாலும் அது பிறப்பு என்பதையே குற்றமாக்கும் சட்டம். ஐரோப்பாவில் ஜிப்ஸிகளையும், வட அமெரிக்காவில் செவ்விந்தியர்களையும் அடக்கிய ஒரு சட்டம். அதனை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்கள். இந்தியா பெரும் நிலப்பரப்பையும், ஏராளமான மக்களையும் கொண்ட நாடாக இருந்த படியால், ஒவ்வொரு ராஜஸ்தானியும் சூழ்நிலைமைக்கு ஏற்ப குற்றப்பரம்பரைச் சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ளும் அதிகாரம் கொடுக்கப்பட்டது.

இந்தியாவின் வடமேற்கு ராஜஸ்தானிகளில் வாழ்ந்த பல பழங்குடி மக்கள் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. அவர்கள் வன உரிமைகள், வாழ்உரிமைகள் பறிக்கப்பட்டன. குற்றம் எதுவும் செய்யாமலேயே குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கோரமான பிடியில் சிக்கிக் கொண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பரிவுடன் மகாஸ்வேதா தேவி எழுதி பலரும் அறிய வைத்தார். குற்றப் பரம்பரையினர் பற்றி அதிகமாக எழுதியவரும் அவரே.

மகாஸ்வேதா தேவி என்பது சமஸ்கிருதம். அதற்கு பெரிய காளி அம்மன் என்பது பொருள். தமிழ்நாட்டு கோவில்களில் காளி அம்மனுக்கு வெளிபிரகாரத்தில் தான் இடம். திருவெண்காடு சிவன்கோவிலில் கருநிறம் கொண்ட காளி சிவப்புப் பட்டுடுத்தி நெற்றியில் செந்தூரம் வைத்துக் கொண்டு பெரிய விழிகளால் அகிலத்தை ரட்சித்துக் கொண்டிருக்கிறாள். மகாசுவேதா தேவி தன் படைப்புக்கள் வழியாக சமூகத்தின் மீது ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்.

ஒரு கலைப்படைப்பு என்பது தனிப்பட்ட கலைஞனின் ஆளுமையின் வெளிப்பாடு என்றாலும், அந்த ஆளுமையை உருவாக்குவதில் அரசியல், சமூகம், கலாசாரம், சித்தாந்தம் எல்லாம் காரணிகளாக அமைந்து விடுகின்றன. அதனை அறிந்து கொண்டுதான் எழுத வேண்டும் என்பதில்லை. சிலர் அறிந்து கொண்டும்; பலர் அறியாமலும் எழுதி இருக்கிறார்கள். எப்படி எழுதினாலும் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

மகாஸ்வேதா தேவி அறிவால் அறிந்து இதயத்தால் ஈரம் சுரக்க எழுதியுள்ளார். அதன் காரணமாக பிறந்த இடம், எழுதிய மொழி என்பதையெல்லாம் தாண்டி சர்வதேச படைப்பாளியாக இருக்கின்றார்.

Related posts

Leave a Comment