You are here

‘புதிய கல்விக் கொள்கை’ – எதிர்ப்பு ஆசிரியர் தினம்!

காலங்காலமாக ஆசிரியர்கள் சமூகத்தின் மாற்றங்களை கிரியா ஊக்கியாய் இருந்து சாதித்து வருகிறார்கள். அவர்களைக் கொண்டாடும் ஆசிரியர் தினத்தை குரு உஸ்தவ் ஆக்கி, அதில் காவி பூசிய அரசியல் மிகவும் ஆபத்தானது. முப்பதே சதவிகித ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்துத்வாவாதிகள் இன்று மற்றொரு ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கையிலெடுத்து இருக்கிறார்கள். ‘புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் கார்பரேட் தனியார் மய கொள்ளையர்களோடு கைகோர்த்து கல்வியை இந்துமத குருகுலமயமாக்கிட பெருஞ்சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாட்டிறைச்சி அரசியலும், பல்கலைக் கழகங்களை சாமியார் மயமாக்கும் முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால், அடுத்து கல்வியைக் கையிலெடுத்திருக்கும் இந்த அரசு, தலித்துகள், உழைக்கும் அடித்தள மக்கள் மத்தியில் கடும் சுரண்டலை ஏறக்குறைய குலக்கல்வி முறையை முன்மொழிந்து நூற்றாண்டுகாலப் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. தாய்மொழிக் கல்வி, உலகளாவிய அறிவியல் கல்வி, என யாவற்றையும் புறந்தள்ளி சமஸ்கிருத மொழிப் பாடத்தை முன்மொழிந்துள்ளதன் மூலம் தனது சுய ரூபத்தின் முகத்திரையை தானே கிழித்துக் கொண்டுள்ளது. நான்காம் வகுப்பிலிருந்தே மாணவர்களில் வெற்றியாளர்களை சலித்தெடுக்கும் பாஸ் பெயில் முறை உட்பட யாவற்றையுமே எதிர்த்து பெரும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஆசிரியர்கள்மீது இந்த அரசு திணித்துவிட்டது. ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக்கும் நான்கு ஷரத்துக்கள் இந்த புதிய கல்விக் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளன. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பணியைத் தரப்படுத்துதல், திறன்மேம்பாடு எனும் பெயரில் பல தேர்வுகளை அடுத்தடுத்து எதிர்கொள்தல், பயிற்சி என்கிற பெயரில்
குருகுலச – சாமியார்கள் ஆதல் என்பன காலங்காலமாக நாம் கட்டிக்காத்த மதச்சார்பின்மை, சகோதரத்துவம் மற்றும் யாவற்றுக்கும் முடிவு கட்டும் சதியாகும். உயர்கல்வியில் முழு தனியார் சர்வதேச அமைப்புகளுக்கு கதவு திறந்தவர்கள் பள்ளிக் கல்வியின் ஆதார நிலைகளைத் தகர்க்கும் விதமாக குழந்தைகளின் உரிமைக்கு எதிரான ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். இந்த ஆசிரியர் தினத்தில் இந்திய சமூகத்திற்கே எதிரான இந்த புதிய கல்விக்கொள்கையை முறியடிப்போம் என சூளுைரத்து களம் புகுவோம்… இந்தியத் தாய்த்திருநாட்டின் இறையாண்மையைக் காப்போம். ேதசபக்தியும் புரட்சிகர எழுச்சியும் கொண்ட பெருஞ்சேனையாய் கிளர்ந்தெழுவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
– ஆசிரியர்குழு.

Related posts

Leave a Comment