You are here

மக்கள் வாசிப்பு – புதிய நம்பிக்கை

நமது சமூகத்தின் நெருக்கடிகள் புரையோடி ஆழமாய் பதிந்து மக்கள் கொந்தளிப்புகளாய் வெடிக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை எப்படியாவது நெரித்து ஜனநாயகப் படுகொலைகளைத் தொடர்ந்திட ஆளும் இந்துத்துவ சங்க பரிவாரங்கள் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு நாட்டையே பிளவுபடுத்தி ரத்தம் குடிக்க துடிக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் முதல் பூனே திரைபடக் கல்லூரிவரை எங்கெங்கும் மாணவர் போராட்டங்கள் மற்றும் புகழ்பெற்ற மாபெரும் அறிஞர்களின் எதிர்ப்புகளையும் மீறி, தகுதியற்ற இந்து வெறியர்கள் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தமிழகத்தில் ரயில் நிலையங்களில் பட்டப் பகலில் கூட பெண்கள் பத்திரமாக வேலைக்குப் போகும் பாதுகாப்பு தர வக்கற்ற காவல்துறை, சுவாதி கொலையை அரசியல் ஆக்கி சாதிக்கான நீதியாய் பரிகசிக்க வைத்திருக்கிறது. எந்த நெருக்கடி வந்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்கு இதுவே உதாரணம். சாராய விற்பனை, தேர்தலுக்குப் பிறகு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு கஜானா அறிவித்துள்ளது. எங்கோ மது ஆலை முதலாளிகள் கைகொட்டிச் சிரிப்பது நமது ரத்த நாளங்களை சூடேற்றுகிறது. வெறும் அபினுக்கு சீனதேசம் ஆயிரம் ஆண்டு அடிமையாய் கிடந்ததுபோல நம் தமிழ்நாடு போதையிலிருந்து மீளத் திராணியற்று மெல்ல மடிந்து வரும் அவலம் ஓலமாக வீதியெங்கும் இப்போது கேட்கிறது. குடிகாரர்கள் (குடிமக்களல்ல) ஓட்டில் ஜெயித்தோம் என ஆளும் கட்சி வெட்கமின்றி சொல்லித் திரியும் இந்த நாட்களில், நமது நம்பிக்கையாய் தமிழகத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் காட்சிகளை நடத்தி, நமது தோழமை நெஞ்சங்கள் பெரிய எழுச்சியை நோக்கி நடைபோட சமூகத்திற்கு வழி வகுத்துள்ளார்கள். எந்த சமூகம் புத்தகங்களை நோக்கி தனது கவனத்தைத் திருப்புகிறதோ அங்கே அறிவுப் புரட்சி துளிர்விடும் எனும் சேகுவாராவின் வீர வாசகத்தை இந்த புத்தகக் காட்சிகள் நிரூபித்துள்ளன. கூட்டம் கூட்டமாய் ஜனங்கள் ஓசையின்றி படையெடுக்கிறார்கள். நோய் பிடித்து உடல் நைந்து புலம்பிக்கொணடிருக்கும் சமூகத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் இந்த புத்தகக் கண்காட்சிகள் தொடர வேண்டும். சத்தமின்றி நடக்கும் மக்கள் மனவள, அரசியல்ஞான பயிற்சி பட்டறைகளாய் நாம் இவற்றைக் காணலாம். உடுமலை பின்னல் புக் டிரஸ்ட், கோவை கொடீசியா, மேட்டுப் பாளையம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு தோழர் ஸ்டாலின் குணசேகரன் குழு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எஸ்.கே. முருகன் மற்றும் தோழமை உள்ளங்கள், ஓசூர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் அரியலூர் தோழர் பேரா. ராமசாமி என இந்த ஆத்மார்த்த பட்டியல் நீள்கிறது. தனது கடும் உழைப்பை வாசிப்பு இயக்கமாக மாற்றிய ஏனைய ஊர்களின் புத்தகக் காட்சி அமைப்பாளர்களையும் சேர்த்து தோழமையோடு பாராட்டிக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர்குழு உணர்ந்துள்ளது. அந்த உண்மையான எழுச்சித் தளபதிகளுக்கு ஒரு சல்யூட். மக்கள் வாசிப்பு தொடரட்டும் புதிய நம்பிக்கை பிறக்கட்டும்.

Related posts

Leave a Comment