புத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்

வாசிப்பே அறிவின் ஒற்றை வாசல்… 

புத்தகமே திறவுகோல்.
– கொரிய பழமொழி

பள்ளிக்கூடங்களைத் திறந்து ஒரு மாதமாகிறது. தேர்ச்சி சதவிகித சர்ச்சைகளும் சப்தங்களும் இன்னமும் ஓயவில்லை. நமது கல்வியைப் பிடித்தாட்டும் பிசாசாக தேர்வுகள் இன்னமும் தொடர்கின்றன. எப்படியாவது காவியை கல்வியில் கலந்துவிட பலவகையில் சதித் திட்டங்களுடன் மோடிபரிவாரம் களத்தில் குதித்திருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் லேசான சந்து கிடைத்தால்கூட போதும் அவர்களுக்கு!

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹேட் கேவரின் நினைவுதினம் ஜூன் 21. அதை சர்வதேச யோகா தினமாக்கியது சமீபத்திய சாட்சி. பள்ளிக்கூடங்களுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மனதை ஒருநிலைப்படுத்துவது, யோகா என்பதில் சூட்சுமமான அரசியலின் கோர துவேஷம் அதன் நூற்றாண்டுகால இந்துத்துவா நெடியில் ஒளிந்திருக்கிறது என்றால் இல்லை விஞ்ஞான பூர்வமானது. அது இது.. என்று நவீன மூலாம் பூசிட இன்று எல்லாரும் தயார். குழந்தைகளுக்கு உடல்நலம் பேணல் என்பதைப் பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உலகில் இடியே விழுந்தாலும் கவனங்கொள்ளாமல் கவலைகொள்ளாமல் மனதை ஒரு நிலைப்படுத்து என்பதன் அரசியல் வேறு. குழந்தைகளுக்குத் தேவை அறிவை விசாலப்படுத்துதல், சமூகப் பார்வை மானுட நீதி, அறிவியல் எழுச்சி, நிமிர்ந்த ஞானம். அதற்கு அவர்களை வாசிப்பை நோக்கி ஈர்ப்பது அவசியம். அனைத்துவகையிலும் காவிமயத்தைத் தந்திரமாக நுழைக்கும் அந்த அரசியலுக்கான மாற்று புத்தகக் காட்சிகள். வாசிப்பு.. விவாதம்..

அறிவியல் சிந்தனை, சமூக விழிப்புணர்வு என்றே இருக்க முடியும். அதற்குத் தேவை பள்ளிக் கல்வியில் அதன் அங்கமாய் வாசிப்பு பாடவேளையில் சுதந்திரமாய் புத்தகங்களைத் தேர்வுசெய்து வாசிக்கும் அமைப்பு. பள்ளி வளாக புத்தகக் கண்காட்சிகளை கல்வி ஆண்டின் கட்டாயமாக்கிட பள்ளிக் கல்வித்துறை முன்வர வேண்டும். ஆண்டுதோறும் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை உறுதிசெய்வதோடு வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு பாடவேளையாவது மாணவர்கள் நூலகம் செல்வதை உறுதி செய்ய வேண்டும். பாரதி கனவு கண்ட, உறுதி கொண்ட நெஞ்சத்து மாமணிகளை நம் சமூகத்தில் உருவாக்க, வாசிப்பின் நேசத்தை இளம் மனங்களில் விதைப்பது, மதிப்பெண்ணிற்காக தயார்படுத்துவதைவிட முக்கியமாகும். அரசு யோசிக்குமா?

– ஆசிரியர் குழு