You are here
நேர்காணல் 

உண்மைக் குற்றவாளிகளின் தடத்தில்

ரானா அயுப்  – ஆசிரியர், குஜராத் ஃபைல்ஸ்.

ஆங்கிலத்தில்: ஸியா உஸ் சலாம். தமிழில்: கவிதா முரளிதரன்

2013ன் இறுதியிலும் 2014ன் ஆரம்பத்திலுமான காலகட்டம் அது. பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருந்த நரேந்திர மோடியைப் பற்றிய புத்தகங்களை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் போட்டிபோட்ட காலகட்டம். ஒரு வாரம் விட்டு மறு வாரம் மோடியைப் பற்றிய ஏதாவதொரு புத்தகம்-அவருடைய வாழ்க்கை வரலாறாக வேண்டும் என்கிற நோக்கத்தோடு – வெளி வந்துகொண்டிருந்தது. ஒரு பிரபல எழுத்தாளர் 1970களின் மத்தியில் நரேந்திர மோடி ஹிமாலயாவில் தங்கியிருந்ததைப் பற்றி எழுதினார். அந்த நேரத்தில் மோடி தில்லி பல்கலைக்கழகத்தில் அவருடைய பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இன்னொரு எழுத்தாளரோ மோடி எப்படி ஒரு முதலையுடன் மோதி வெல்லும் அளவுக்கு வீரனாக இருந்தார் என்று எழுதியிருந்தார். டீ விற்பவராக மோடி இருந்ததையும் அதிகாலைகளில் ரயில் நிலையம் நோக்கி அவர் நடையாய் நடந்ததையும் எல்லோருமே எழுதினார்கள்.

மோடி ஜுரம் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், அதை வைத்து எப்படி வியாபாரத்தை பெருக்கலாம் என்று பதிப்பாளர்கள் சிந்தித்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அவர்கள் பதிப்பிக்க விரும்பாத ஒரு புத்தகம் இருந்தது. 2002 குஜராத் வன்முறையில் மோடியின் பங்கு பற்றி அந்தப் புத்தகம் கேள்வி எழுப்பியது. என்கவுண்டர் கொலைகளில் அமித் ஷாவின் பங்களிப்பை வெளிக் கொண்டு வந்தது. பதிப்பாளர்கள் பதிப்பிக்க விரும்பிய மோடியின் அசுர வளர்ச்சி பற்றிய கதை அல்ல அது. அது ஒரு அசலான புலனாய்வுப் பணி. இந்திய அரசியலில் இருந்த சில பெருந்தலைகளின் நடவடிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் கேள்விக்குட்படுத்திய பணி. அது முன் வைத்த கேள்விகள் சங்கடமானவை. எதிர்பார்த்த பதில்களோ கசப்பானவை.
வாசகரின் கையை சேர்வதற்கு முன் அந்தப் புத்தகம் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சற்று தாமதமாகக் கூட அந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க எந்தப் பதிப்பாளரும் முன் வரவில்லை. அதனால் அந்த ஆசிரியர் அடுத்து என்ன செய்ய முடியுமோ அதை செய்தார். சொந்தமாக புத்தகத்தைப் பதிப்பித்தார். புலனாய்வுப் பத்திரிக்கையாளர் ரானா அயுப் ஒரு திரைப்பட இயக்குனராக மாறு வேடத்தில் சென்று 2002 வன்முறை பற்றியும், என்கவுண்டர் கொலைகள் பற்றியும் தனது புலனாய்வை முடித்தார். குஜராத் ஃபைல்ஸ்: மறைக்கப்பட்ட உண்மைகளின் பின்னணி (Gujarat Files – Anatomy Of A cover) சமீபத்தில் பிரசுரிக்கப்பட்டது.

சொல்லப்போனால் 2014க்கும் இப்போதிருக்கும் நிலைமைக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. அப்போது பதிப்பாளர்கள் பதிப்பிக்க முன்வரவில்லை, இப்போது அதன் வெளியீட்டு விழாவை பெரும்பாலான ஊடகங்கள் புறக்கணித்தன. அப்போது புத்தகத்தைப் பதிப்பிக்க பதிப்பாளர்களுக்கு தைரியம் இல்லை என்றால் இப்போது அதை விற்பனைக்கு வைப்பதற்கு பல புத்தகக் கடைகளுக்கு தைரியம் இல்லை. பெரும்பாலான புத்தகக் கடைகள், குறிப்பாக அகமதாபாதில் இருக்கும் கிட்டத்தட்ட எல்லா கடைகளும், புத்தகத்தை விற்பனைக்கு வைக்க மறுத்துவிட்டன. கடந்த ஒரு வாரத்தில் மும்பை, அகமதாபாதில் உள்ள பெரும்பாலான கடைகளையும் தொடர்பு கொண்டுவிட்டேன். அவர்களது பதில் உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக இல்லை என்கிறார் ராணா அயுப். பெரும்பாலானவர்கள் புத்தகத்தை வைத்திருக்க விரும்புவதாகவே சொல்கிறார்கள். புத்தகத்தை வேண்டும் ஒரு வாசகராக அழைத்ததால் பதிலில் எந்த குழப்பமும் இல்லை. அகமதாபாதில் உள்ள கடைகள், இது தாங்கள் வைத்திருக்கக் கூடிய வகையான புத்தகம் இல்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டன. அமேசானில் அதிக விற்பனை ஆன புத்தகம் என்பதால் வைத்துக் கொள்ள விருப்பமிருப்பதாகவும் ஆனால் அது ஆபத்தானது என்றும், மும்பை புத்தகக் கடைகளிடமிருந்து பதில் வந்தது. அமேசான் மூலம் புத்தகத்தை வாங்கிக்கொள்வது ஆபத்தில்லாதது என்று ஒருவர் அறிவுறுத்தினார்.

2010லிருந்துதான் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. அந்த வருடம் எட்டு மாத காலத்திற்கு தனது அடையாளத்தை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு 2001லிருந்து 2010 வரை குஜராத்தில் முக்கியமான பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளிடம் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி இருந்தார் ரானா அயுப். அதற்குமுன்பு பதிப்பிக்கப்படாத முக்கியமான உரையாடல்கள் புத்தகத்தில் இருக்கின்றன.

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், ரானா அயுப் தனது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். வெளியீட்டு விழாவுக்கு முன்பு ஃப்ரண்ட்லைனுக்கு பேட்டியளிக்க முன்வந்தார் ரானா. அவரது புலனாய்வுமுறையில் இருந்த சிக்கல்கள், அவர் சந்தித்த ஆபத்துகள், சின்ன சந்தேகத்தின் பேரில் கூட துப்பாக்கியை பயன்படுத்தப் பயப்படாத மனிதர்கள் என்று எல்லாவற்றையும் பற்றி அவர் உரையாடினார். எல்லாவற்றையும் தாண்டி அவர் சாதித்திருக்கிறார். தனியாகவும் பல பிரச்னைகளுக்கு மத்தியிலும் சாதித்திருக்கிறார்.

கே: இந்தப் புத்தகத்திற்காக நீங்கள் கடைபிடித்திருக்கும் புலனாய்வு முறை இந்திய இதழியலில் அரிதானது. இலக்கியத்தில் மேலும் அரிதானது. ரானா அயுப் என்கிற புலனாய்வு இதழாளர் எப்படி மைதிலி தியாகி என்கிற திரைப்பட இயக்குனராக மாறினார் என்று சொல்ல முடியுமா?

ப: ஊடகமும் ஊடகவியலாளர்களும் இதை நசுக்க முயன்றிருக்காவிட்டால் இந்த புத்தகம் இன்று இலக்கியமாகி இருக்காது. என்னைப் பொறுத்தவரையில் இது இப்போதும் ஒரு அதி தீவிரமான அரசியல்-குற்றவியல் புலனாய்வாக இருக்கிறது. ஸ்டிங் ஆபரேஷன் என்பதே அடிப்படையில் சர்ச்சைக்குரியதுதான். நாம் புனிதமானது என்று நம்புபவைக்கு எதிராக அது செல்கிறது. ஒரு போலி அடையாளத்தை சுமக்கவும் அனுமதியின்றி ஆவணப்படுத்தவும் அது செய்கிறது. இவை இரண்டும் ஊடக அறத்தின் அடிப்படையைத் தாக்குதலுக்குள்ளாக்கும் அம்சங்கள். போலி அடையாள இதழியல் அன்றாட இதழியலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா? நிச்சயமாக இல்லை. அரிதினும் அரிதான வழக்குகளில் வேறு வழியே இல்லாத போதுதான் அதைச் செய்ய வேண்டும்.

ஊடக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நெல்லி பிளை என்கிற புனைப்பெயரில் எழுதிய எலிசபத் கோச்ரன் தொடங்கி, போதை மருந்து டீலர்களுக்கும் தனியார் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இருந்த தொடர்பை வெளிப்படுத்திய ஐரிஷ் ஊடகவியலாளர் டொனால் மெக்லண்டைர் வரை பல உதாரணங்கள் இருக்கின்றன. மனநல மருத்துவமனை ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்டவராக போலி அடையாளத்தை சுமந்தார் எலிசபத் கோச்ரன். அந்த மருத்துவமனைக்குத் தண்டனை வழங்க அவரது புலனாய்வைப் பயன்படுத்திக்கொண்டது நீதிமன்றம்.
குஜராத் வன்முறை, போலி என்கவுண்டர், ஹரன் பாண்ட்யா கொலை என்று எல்லா விவகாரங்களிலும் உண்மையைக் கொண்டு வர ரானா அயுப் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்த பின்னரே மைதிலி தியாகி வருகிறார்.

சொராபுதின் மற்றும் துளசி பிரஜாபதியின் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளில் அமித் ஷாவின் பங்கு பற்றி நான் வெளிப்படுத்தியவுடன் அவர் 2010ல் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதன் பிறகு எனக்கு உதவியாக இருக்கவே மைதிலி தியாகி உருவானாள். மைதிலி என்னைப் போல அல்ல. அரசியல்வாதிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கு எனது படங்களோ பாலினமோ கூட தெரியாது. ஆனால் மைதிலி மிக எளிதாக எல்லோரிடமும் பழகக் கூடியவள். குஜராத்தின் மேன்மை பற்றி ஆவணப்படம் எடுக்கும் இந்திய-அமெரிக்க இயக்குனராக அவள் உருவாக்கப்பட்டாள். காயஸ்தா வகுப்பைச் சேர்ந்த பெண், குஜராத் திரைத்துறையின் முக்கியஸ்தர்களை எளிதில் நண்பர்களாக்கிக்கொண்டவள். அவளது அப்பா ஒரு சமஸ்கிருத ஆசிரியர். ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரும் கூட. பிரெஞ்ச் உதவியாளர் ஒருவரின் துணையுடன், ரானா அயுப் எந்தச் சிக்கலும் இன்றி சந்தேகத்திற்கு இடமில்லாமல் மைதிலி தியாகியாக மாறினார்.

ஊடகமும் ஊடகவியலாளர்களும் இதைத் தடுக்காமல் இருந்தால் இந்தப் புத்தகம் இலக்கியமாகி இருக்காது என்றீர்கள். விரிவாகச் சொல்ல முடியுமா?

புத்தகப் பதிப்பாளர்கள் முடியாது என்றவுடன் பல செய்திப் பதிப்பகங்களை அணுகியது பற்றிதான் சொல்கிறேன். செய்திச் சேனல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள் என்று எல்லாவற்றையும் பற்றியும்தான் சொல்கிறேன். தெஹல்காவைச் சேர்ந்த ஷோமா சவுத்ரியும் தருண் தேஜ்பாலும் ஆசிரியர் குழு முடிவுகள், அதிலுள்ள இடைவெளிகள் பற்றி பேசுகிறார்கள். இப்போது இந்தப் புத்தகம் நன்றாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. அது சொல்லும் செய்திக்காக பல நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. எல்லாவற்றையும் வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இதுமாதிரியான புலனாய்வில் எப்போதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் விஷயம்,எந்த நேரம் வேண்டுமானாலும் போலி அடையாளத்தில் இருக்கிறோம் என்பது கண்டுபிடிக்கப்படலாம். அது மாதிரியான தருணங்கள் ஏதாவது உங்களது புலனாய்வில் இருந்ததா? குறிப்பாக நீங்கள் அதிகாரம் மிகுந்த மனிதர்களுடன் அதை செய்து கொண்டிருந்தீர்கள்.

நிறைய தருணங்களில் மாட்டிக்கொண்டு விடுவோம் என்று நினைத்திருக்கிறேன். ஒரு முறை பி.சி.பாண்டே (குஜராத் முன்னாள் டிஜிபி) வழக்கறிஞராக இருக்கும் தனது நெருங்கிய இஸ்லாமிய நண்பர் ஒருவரை நான் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் எண்கவுண்டர் வழக்கில் பிரதிவாதிகளுக்காக வாதாடுபவர் என்பதால் என்னை நன்றாக அறிவார். பாண்டே திடீரென்று அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் ஒரு மாலை தேநீருக்கு ஏற்பாடு செய்துவிட்டார். வேறு வழி இல்லாமல் எனக்கு வயிற்றுப் போக்கு என்று சொல்லி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நான் பாத்ரூமிலேயே இருந்தேன். பிறகு திருமதி பாண்டேவிடம் அவர்களது பெட்ரூமில் ஓய்வு எடுத்துக்கொள்ள அனுமதி பெற்றேன். மாட்டாமல் இருக்க வேறு வழியில்லை.

இன்னொரு முறை, ஒரு அதிகாரி தெஹல்கா புலனாய்வை அடிப்படையாக கொண்ட No One Killed Jessica திரைப்படத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார். படம் பார்க்கும் போது அவர் தெஹல்காவைத் திட்டி தீர்த்தார். ஆனால் என்னைப் பயமுறுத்தியது வேறு விஷயம். தியேட்டரில் இருந்த மெட்டல் ஸ்கேனர் குர்தாவில் தைக்கப்பட்டிருந்த கேமராவைக் காட்டிக்கொடுத்துவிடும் என்று பயந்தேன். ஆனால் உஷா ராடா எஸ்.பி என்பதால் அவருக்கும் அவரோடு சென்ற எனக்கும் பாதுகாப்பு பரிசோதனைகளை நடத்தவில்லை.

மோடியின் 2012 வளர்ச்சிக்குப் பிறகு பல பதிப்பாளர்கள் இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க மறுத்துவிட்டார்கள் இல்லையா? அது பற்றி கொஞ்சம் பேசுவோம். பிறகு பதிப்பித்தவுடன், சமூக ஊடகங்களில் உங்களைத் துன்புறுத்தியவர்கள் பற்றியும்.

அது மிகுந்த சங்கடமான காலகட்டம். ஒரு ஊடகவியலாளராக எனது பலங்கள் மீது எனக்கே சந்தேகம் வந்தது. எனது தன்னம்பிக்கை குறைந்தது. ஒரு பதிப்பாளரால் நிராகரிக்கப்படுவது என்பது ஒன்று. ஆனால் கிட்டத்தட்ட ஒரு டஜன் பதிப்பாளர்களாலும், முக்கியமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்களாலும் நிராகரிக்கப்படுவதென்பது வேறு. ஒரு பத்திரிக்கையாளராக எனது திறமைகள் மீது எனக்கு சந்தேகம் வந்தது. ஒருவேளை இது சாதாரணமான, பதிப்பிக்கத் தகுதியற்ற உளறல்களாக இருக்கலாம். இதை நிராகரித்த எனது ஆசிரியர்கள் சொன்னதுபோல வெறும் காபி டேபிள் உரையாடல்களாக இருக்கலாம். இதனால் ஏற்பட்ட மனவுளைச்சல் சாதாரணமானது அல்ல. நான் ஒரு உளவியல் மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்தது. இந்த மனவுளைச்சல் எனது உடல்நிலையை கடுமையாக பாதித்தது. சுயமாக பதிப்பிக்க வேண்டும் என்று எடுத்த முடிவு சுயநலன் காரணமாகவே எடுக்கப்பட்டது. என்னால் என் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியவில்லை. எனது மருத்துவரிடம் நான் கதறி அழுதேன். அடிக்கடி அழத் தொடங்கினேன். புத்தகம் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அதிலிருந்து சில பகுதிகளை வெளியிடுவதாகச் சொன்ன இரண்டு ஊடகங்கள் பின்வாங்கிவிட்டன. “நான் என்னதான் தவறு செய்தேன்” என்று வழக்கறிஞராக இருந்த ஒரு நண்பரை அழைத்துக் கதறினேன்.

சமூக ஊடகங்களில் தொல்லைக கொடுத்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்.

அவர்களை உண்மையிலேயே எப்படி கையாள்வது? எந்தவிதமான விமர்சனங்களிலிருந்தும் அரசைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு மட்டும் டிவிட்டரில் பல கணக்குகள் இருக்கின்றன. இதற்காக பணம் கொடுக்கப்படுகிறது. எல்லா கணக்குகளும் ஒன்றிணைந்து இந்த வேலையை செய்கின்றன. வசைகள் வழியாக, தனி நபர் தாக்குதல்கள் வழியாக இதை செய்கிறார்கள். பணத்திற்காக இந்த வேலையை செய்கிறார்கள் என்று நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு என்னோடு எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை. அதனால் நான் அது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. பெரும்பாலும் ஒரு சாதாரண நாளில் நன்றாக பொழுதுபோகும் அளவுக்கு முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள்..

பெரும்பாலும் நமது நாட்டில் சுயமாக பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களுக்கு மதிப்பு இருப்பதில்லை. உங்களது அசாத்தியமான பணியின் மதிப்பை அது குறைத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

’பாதுகாப்பான’ புத்தகங்களை மட்டுமே பதிப்பிக்க விரும்பும் வெகுஜன பதிப்பகங்களின் சுய தணிக்கையை யாராவது உடைத்திருக்க வேண்டும். திருவிழாக்களில் இலக்கியத்தின் மகத்துவம் பற்றிப் பேசிவிட்டு அதை செயலில் காட்ட மறுக்கும் பதிப்பாளர்களின் முகத்தில் விழுந்த அறைதான் புத்தகத்தை சுயமாக பதிப்பிக்கும் முடிவு. இன்னும் இந்தியாவில் சுய பதிப்பு என்பது பெரிய விஷயம் இல்லை. அதற்குரிய சாதக பாதகங்கள் இருக்கின்றன. புத்தகங்களை வினியோகிக்க ஆசிரியருக்கு அதிக வழிகள் இல்லை. புத்தக வெளியீடு அன்று இரவு, பிரதிகளில் அமேசானின் ஸ்டிக்கரை ஒட்டுவதும் புத்தகங்களை வைக்க இடம் தேடுவதுமாய் இருந்தேன். ஆனால் சுய பதிப்பு ஒரு எழுத்தாளருக்குத் தரும் எழுத்து சுதந்திரத்தைப் பார்க்கும்போது இதெல்லாம் சின்ன விஷயங்கள். சுய பதிப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். நல்ல இலக்கியம், நல்ல இதழியல் சாதாரண மக்களை சென்றடைய இதுவே வழி. தணிக்கையை வென்றாக வேண்டும்.

குஜராத் வன்முறை பற்றிய உண்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியே வரவில்லை. உங்களது அனுபவத்தில் எது குஜராத் உண்மை? அரசுக்கு இருக்கும் தொடர்பா அல்லது வெறுப்பு வன்முறையை அரசு தூண்டிவிட்டதா? அல்லது வெறும் அரசு கையாலாகத்தனமா?

உண்மையில் நான் இதுகுறித்து எந்தத் தீர்ப்பும் வழங்க விரும்பவில்லை. இதில் எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. நான் டேப்களிலிருந்து அப்படியே எழுதியிருக்கிறேன். வாசகர்கள் முடிவு செய்யட்டும். இனி ஒரு சுதந்திரமான அமைப்பு முன்வந்து டேப்களின் உண்மைத்தன்மையை சோதித்து நீதியை நிலை நாட்ட வேண்டும். ஒரு ஊடகவியலாளராக நான் எனது பணியை செய்து முடித்துவிட்டேன். நான் கண்டுபிடித்திருப்பவற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று சொன்னால் எனக்கும் அரசியல்வாதிக்கும் வேறுபாடு இருக்காது. விசாரணைக் கமிஷன்கள் இந்த டேப்புகளை தீர ஆராய வேண்டும். தெஹல்கா நிர்வாகத்திடம் கேட்டு அதன் அசல்களைப் பெற வேண்டும். அவர்கள் கேட்கும் எந்த உதவியையும் தர நான் தயாராகவே இருக்கிறேன்.

குல்பர்க் சொஸைடி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார் ஸாகியா ஜாஃப்ரி. குல்பர்க் சொஸைடி கொலைக்குப் பின்னால் யார் உண்மையில் இருந்தது? ஒரு பெரிய பிரச்னை உருவாகும் என்கிற நிலையில் முதல்வர் அலுவலகத்திற்கு நிறைய அழைப்புகள் சென்றதாக செய்திகள் இருக்கின்றன.

தண்டனைகள் பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. மிக தாமதமானது மிக குறைவானது என்று மட்டும் சொல்வேன். புத்தகத்தில் சொல்லியிருப்பது போல எப்போதும் பணியை மேற்கொள்பவர்கள் மட்டும் மாட்டிக்கொள்கிறார்கள். அதைத் திட்டமிடுபவர்கள் தப்பித்துவிடுகிறார்கள்.

பிப்ரவரி 27 – 2002 சந்திப்பில் சஞ்சீவ் பட் பங்கு பெறவில்லை என்று சொல்கிறீர்கள்? அசோக் நாராயண் போல அங்கிருந்தவர்கள் பற்றி என்ன முடிவுக்கு வர வேண்டும்? எதிர்ப்பாளராக பட் எப்போது உருவாகத் தொடங்குகிறார்?

சஞ்சீவ் பட் பற்றியும், அவரது அறிக்கையின் உண்மைத்தன்மை பற்றியும் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்ல முடியும். டேப்பில் சிக்கிய பெரும்பாலான அதிகாரிகள், வன்முறை, எண்கவுண்டர் கொலைகளில் மோடி, அமித் ஷா பங்கு பற்றிய சிபிஐயின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்திய அதிகாரிகள், சஞ்சீவ் பட்டின் வரவை சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள். அது ஒரு அரசியல் திட்டத்தின் பகுதியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் விசாரணை அமைப்புகள்தான் இது பற்றிய உண்மையை வெளிக்கொணர முடியும். நான் அதிகாரிகள் சொன்ன எல்லாவற்றையும் சேர்த்திருக்கிறேன். சஞ்சீவ் பட் விஷயத்தையும் சேர்த்து எல்லாவற்றையும் சொல்வது முக்கியம் என்று நினைத்தேன்.

ஒரு சாதாரண நபரைப் பொறுத்தவரை குஜராத்தின் மிக மோசமான கொலைகளையும் குற்றங்களையும் ஏவியது பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானி போன்றவர்கள். ஆனால் அவர்கள் வெறும் வன்முறையின் முகம் மட்டுமே, அவர்களது தலைவர்கள் இன்னமும் கூட பெயர் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?

அதையேதான் புத்தகத்தில் சொல்லவும் செய்கிறேன். மாயா கொட்னானியும் பாபு பஜ்ரங்கியும் சொன்ன வேலையைச் செய்த ஏவலாட்கள். இந்தப் புத்தகம் பின்னணியில் இருந்தவர்கள் பற்றி பேசுகிறது. கொடுங் கொலைகளால் வகுக்கப்பட்ட ரத்தம் தோய்ந்த பாதையில் குஜராத்திலிருந்து தில்லி சென்றிருக்கும் அசல் குற்றவாளிகளைக் கண்டறிய இந்தப் புத்தகம் உதவுகிறது.

கௌசர் பீயின் நடத்தை பற்றி மோசமான சில குறிப்புகள் இருக்கின்றன. அது எப்படி அந்த என்கவுண்டர் கொலையை நியாயப்படுத்தும்?

கௌசர் பீயின் கொலையை எதுவும் நியாயப்படுத்தாது. ஒரு வாதத்திற்கு துளசி பிரஜாபதியும் சொராபுதினும் குற்றவாளிகள் என்றே வைத்துக் கொள்வோம். கௌசர் பீயின் நடத்தை மீது எதற்கு களங்கம் கற்பிக்க வேண்டும்? சட்டத்துக்குப் புறம்பான கொலைகளில் ஈடுபட்ட அதிகாரிகளால் கௌசர் பீ பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, மயக்க மருந்து தரப்பட்டுக் கொல்லப்பட்டதாக சொல்கிறது சிபிஐ குற்றப்பத்திரிக்கை. கீதா ஜோஹிரி போன்ற பெண் உயர் அதிகாரி உள்ளிட்ட சில அதிகாரிகள் அந்தச் கொலையை நியாயப்படுத்துவதையும் அவரது நடத்தைமீது களங்கம் கற்பிப்பதையும் பார்க்கும் போது வெறுப்பாக இருக்கிறது.

ஹரன் பாண்டயா வழக்கு விசாரணையில் அவரது மனைவி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். எப்போதாவது உண்மை வெளிவருமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?

ஜாக்ருதி பென்னை சில காலமாக அறிவேன். தனது கணவரின் கொலைக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் காரணம் என்று அவர் நிறைய முறை சொல்லிவிட்டார். டேப்பில் சிக்கிய விசாரணை அதிகாரியும் அதையே உணர்த்துகிறார். இனி இதை நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் இந்த தேசத்தின் கூட்டு மனசாட்சியும்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக உங்களது புலனாய்வு முறையில் அறம் சார்ந்த சில கேள்விகளும் எழுகின்றன.

விசாரணையில் இருக்கும் தெளிவின்மையை வெளிக்கொண்டுவருவதுதான் இந்தக் புத்தகத்தின் நோக்கம். நீதிமன்றங்களில் சாட்சிகளாக ஸ்டிங் ஆப்ரேஷன் கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இஷரத் ஜஹானை கொன்ற அதிகாரி ஜி.எல்.ஷிங்கால் கூட உள்துறை அமைச்சர், கூடுதல் அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட குஜராத்தின் மூத்த அதிகாரிகள்மீது ஸ்டிங் நடத்தியிருக்கிறார். இஷரத் ஜஹான் வழக்கில் விசாரணைக் குழுவின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்காக அதை செய்தார். அது நீதிமன்றத்தில் சாட்சியாக வைக்கப்பட்டது. நீதிமன்றத்தின் மீது எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. அரசியல்வாதி-காவல்துறை கூட்டில் உள்ள ஆபத்து பற்றியும் ஒரு சார்பான குற்ற விசாரணைகள் பற்றியும், அதற்குக் கிடைக்கும் அரசியல் ஆதரவு பற்றியும் வெளிக்கொண்டு வருவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதன் நோக்கம் என்னவோ அதை இந்த ஊடகப் பணி சரியாக செய்திருப்பதாகவே நினைக்கிறேன்.
(நன்றி: ஃபிரண்ட்லைன், விஜயசங்கர்)

Related posts

One thought on “உண்மைக் குற்றவாளிகளின் தடத்தில்

  1. அரி.வே.விசுவேசுவரன்

    மக்களாட்சி இந்தியாவில் தறிகெட்டுத் தவறான் பாதையில் செல்கிறது. உண்மைகளை மக்களுக்குச் சொல்லவேண்டிய அச்சு, ஒலி, ஔி ஊடகங்கள் தங்கள் கடமையில் தவறிவிட்டன. தவறான ஆட்சியாளரைத் தூக்கி நிறுத்துகின்றன.வாக்களித்து ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் வாக்காளர்கள் இருளில் வைக்கப்பட்டு உள்ளனர். மக்களாட்சியின் மாண்பு குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில் உண்மை வெளிவர தனிமனித முயற்சியாக வெளிவந்த இந்த நூல் நமது மக்களாட்சி பற்றிய சரித்திர ஆவணம். அதைத் தமிழில் கொணர்ந்த பதிப்கத்தாருக்கு பொதுமக்கள் கடமைப்பட்டுள்ளனர். குஜராத் தவறுகள். நீதிமன்த்தால் தண்டிக்கும் நாள் வருமா? இதுபோன்ற நூல்கள்வழி உண்மை உணரும் மக்கள் ஆட்சிமாற்றம் கொடுப்பார்களா ? தெரியாது. இந்தநூல் அதன் சேவையை நாட்டுக்குச் செய்துவிட்டது என்பதே உண்மை. இதை மக்கள் படித்துப் புரிந்து மனம் மாறவேணடும்.

Leave a Comment