You are here
நேர்காணல் 

குறுகத் தெரித்த குரல் – பெருகத் தெறித்த சிந்தனைகள்

எடுவர்டோ கலியானோ உடன் ஒரு பேட்டி

ஜோனா ரஸ்கின்

 

 

தென் அமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள பராகுவே நாட்டில் 1940ஆம் ஆண்டு பிறந்த எடுவர்டோ கலியானோவின் எழுத்துக்கள் மிகுந்த வீரியம் கொண்டவை. அவரது லத்தீன் அமெரிக்காவின் ரத்த நாளங்கள் என்ற நூல் தென் அமெரிக்காவின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை நம் கண் முன்னால் கொண்டு வரும் ஓர் ஆவணமாகும். வெனிசுவேலாவின் அன்றைய அதிபர் ஹூகோ சாவேஸ் ஏப்ரல் 2009இல் நடைபெற்ற அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு கலியானோவின் ரத்த நாளங்கள் புத்தகத்தை பரிசாக அளித்த நிகழ்வு உலகப் புகழ் பெற்றதாகும். ஐந்து நூற்றாண்டுகளாக லத்தீன் அமெரிக்காவின் இயற்கை வளங்களை உறிஞ்சி உரம்பெற்ற அமெரிக்காவின் செயல்களை நமது ரத்த நாளங்கள் கொதிக்குமளவிற்கு மிகுந்த உஷ்ணத்துடன் வெளிப்படுத்துவதாக அவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன.

மிகக் குறுகிய வார்த்தைகளிலேயே பலவகைப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்படைத்த கலியானோ லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவரான ஜோனா ரஸ்கின் அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் மொழியில் வழங்கிய பேட்டியை ஜோனாவின் சகோதரர் ஆடம் ரஸ்கின் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மன்த்லி ரிவ்யூ இதழில் வெளியானது. இப்பேட்டின் தமிழ் வடிவம் இங்கே முழுமையாக தரப்படுகிறது. 2015 ஏப்ரல் 13ஆம் நாள் தனது 74வது வயதில் மறைந்த கலியானோவின் குறுகத் தெரித்த வார்த்தைகளின் வீரியத்தை இந்தப் பேட்டியின் மூலம் நம்மால் மிகச் சிறப்பாக உணர முடியும்.

ஜோனா ரஸ்கின்: லத்தீன் அமெரிக்காவை ஒரு பெண்ணாக உருவகித்து உங்கள் செவியில் ரகசியமாக கூறிவருவதாகச் சொல்லியிருந்தீர்கள். அவ்வாறு உங்கள் செவிகளில் ஒலித்தது உங்கள் தாயின் குரலா?
எடுவர்டோ கலியானோ: இல்லை. நான் கேட்பது என் தாயின் குரல் அல்ல; என் செவிகளுக்குள் கிசுகிசுப்பவள் என் காதலி.

ஜோனா: வாழ்க்கையில் இழந்து விட்டதாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

கலியானோ: எனது தோல்விகளின் மொத்த உருவமே நான். இளம் வயதில் ஒரு கால்பந்தாட்ட வீரனாக ஆக வேண்டும் என்று விரும்பினேன். என்னிடம் இருந்ததோ நெளிவுசுளிவற்ற மரத்தைப் போன்ற செயலற்ற கால்கள். பின்பு ஒரு துறவியாக ஆக வேண்டும் என விரும்பினேன். பாவச் செயல்களை எப்போது வேண்டுமானாலும் செய்யத் துணியும் போக்குள்ள என்னால் அதையும் கூட செய்ய முடியவில்லை. பின்பு ஒரு ஓவியனாக வேண்டும் என விரும்பினேன். மாறாக இப்போது நான் வார்த்தைகளைக் கொண்டு சித்திரம் தீட்டி வருகிறேன்.

ஜோனா: ஒரு பெண்ணைப் போல எழுதுகிறீர்கள் என்று நாவலாசியர் சண்ட்ரா சினெரோஸ் கூறியதை முதன்முதலில் படித்தபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

கலியானோ: நான் அதைப்பார்த்து சிரிக்கவுமில்லை; உறுமவுமில்லை. ஒரு பாராட்டாகத்தான் நான் அதை எடுத்துக் கொண்டேன்.

ஜோனா: ஓர் ஆணைப் போல அல்லது ஒரு லத்தீன் அமெரிக்கனைப் போல எழுதுவது என்று ஏதாவது உண்டா என்ன?

கலியானோ: எழுத்தில் முக்கியமான விஷயம் என்பது நேர்மையாக எழுதுவது என்பதுதான். நாம் ஒருவரோடு ஒருவர் பேசுகிற வார்த்தைகள் மூலம்தான் மற்றவர்களை அறிந்து கொள்கிறோம். எனது வார்த்தைகளே நான். எனது வார்த்தைகளை உங்களிடம் தரும்போது நான் என்னையே தருகிறேன்.

ஜோனா: நாம் வாழும் காலத்தைப் பிரதிபலிப்பதாக, அதன் உயிரோட்டத்தை வெளிப்படுத்துவதாக இன்றைய எழுத்து இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

கலியானோ: உலகமானது இன்று துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருக்கும் ஓர் இடத்தில் தட்டுத் தடுமாறிச் செல்லும் ஒரு குருடனைப் போலத்தான் இருக்கிறது.

ஜோனா: பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியுமாகத்தான் நான் வரலாற்றைக் காண்கிறேன். வேறுவிதமான பார்வை எதுவும் உங்களுக்குத் தோன்றுகிறதா?

கலியானோ: வரலாற்றின் மிகச் சிறந்த சில கதைகள் மகிழ்ச்சியோடு முடிவடைவதில்லை என்பது உண்மைதான். வரலாறு என்பதே எப்போது முடிவுறாத ஒரு கதைதான். அது ஒவ்வொரு நாளும் புதிதாக எழுகிறது; அது நமக்கு விடைகொடுப்பதாகவே நாம் நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் அது “மீண்டும் பார்க்கலாம்” என்று சொல்லிச் செல்கிறது.

ஜோனா: எனது தலைமுறை 1968ஆம் ஆண்டை மிக முக்கியமானதொரு ஆண்டாகக் கருதுகிறது. உங்களுக்கென்று முக்கியமான ஆண்டு ஏதாவது இருக்கிறதா? அல்லது அது நமக்கு நாமே சொல்லிக் கொள்கிற அருமையானதொரு கதையா?

கலியானோ: தன்னை அளக்க முனைபவர்களைக் கண்டு காலம் சிரிக்கிறது. என்றாலும் தேதிகளுடன் நமது நினைவுகளை சேர்த்து வைப்பதற்கான தேவையை காலம் உணர்ந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். எனவேதான் காற்றில் மறைந்துபோகும் மணல் மேடுகளைப் போல் அவை மறைவதில்லை.

ஜோனா: மாய எதார்த்தவாதம் என்பது வெறுமனே ஓர் இலக்கிய வகையோ அல்லது முறையோ அல்ல; மாறாக இந்த உலகத்தில் நாம் இருக்கிறோம் என்பதற்கான முழுமையானதொரு வழி என்றுதான் கலைஞர்களும் எழுத்தாளர்களும் என்னிடம் கூறி வந்திருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலியானோ: யதார்த்தம் அனைத்துமே, அது தெற்கானாலும், வடக்கானாலும், கிழக்கானாலும், மேற்கானாலும் சரி, இந்த உலகம் முழுவதிலுமே யதார்த்தம் என்பது மாய மயமான ஒன்றுதான். வியப்பையும் மறைபொருளையும் கொண்டதாகத்தான் யதார்த்தம் எப்போதுமே இருக்கிறது. பெரும்பாலும் நாம்தான் அதைக் காண, கேட்க இயலாதவர்களாக இருக்கிறோம். அதன் முழுத்தன்மையை ஓரளவிற்கு வெளிப்படுத்த எழுத்தினால் மட்டும்தான் உதவ முடியும் என்றே நினைக்கிறேன்.

ஜோனா: கீழ்த்திசை வாதம், கலாச்சாரமும் ஏகாதிபத்தியமும் போன்ற மிகச் சிறந்த நூல்களின் ஆசியரும் இலக்கிய விமர்சகருமான எட்வர்ட் சேட் வரலாற்றின் வேறு எந்த காலப்பகுதியை விட இன்றைய காலப்பகுதியானது தாய் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுவோர், அகதிகள், வசிக்குமிடங்களிலிருந்து விரட்டப்பட்டவர்கள் ஆகியவர்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது என்று நம்பி வந்தார். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கலியானோ: இன்றைய உலகத்தின் மேலாதிக்கமான கலாச்சாரமானது நம்மைத் தவிர மற்றவர்கள் என்பவர்களே ஓர் அச்சுறுத்தல்தான் என்றும் நமது சக மனிதர்கள் என்பவர்கள் நமக்கு அபாயமானவர்கள்தான் என்றும்தான் நமக்குக் கற்றுத் தருகிறது. உலகம் என்பது ஒரு பந்தயக் களம் அல்லது யுத்த களம் என்ற முன்மாதிரியை நாம் தொடர்ந்து ஏற்போமேயானால் ஏதாவதொரு வகையில் நாம் அனைவரும் தொடர்ந்து அகதிகளாகவே இருப்போம். நமது சொந்த நாட்டிலிருந்து வேறு இடங்களில், வேறு காலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் கூட பல்வேறு விதமான மக்களையும் நமது சகநாட்டவர்களாக கருதலாம் என்றே நான் நம்புகிறேன்.

ஜோனா: உலகத்தின் மையம் என்று ஏதாவது இருக்கிறதா? அதன் ஓரம் என்று ஏதாவது இருக்கிறதா?

கலியானோ: எந்தவொரு இடமும் மற்ற இடத்தைவிட முக்கியமானதல்ல; எந்தவொரு நபரும் மற்றவரை விட முக்கியமானவரல்ல என்று எடுத்துக் காட்டுவதற்காகவே நான் பல நூல்களை, குறிப்பாக எனது சமீபத்திய நூலான கண்ணாடிகள் என்ற நூலை எழுதி வந்திருக்கிறேன். நமது ஒட்டுமொத்த நினைவானது உலகத்தை ஆட்டுவிப்பவர்களால் சிதைக்கப்பட்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் நமது இன்றைய யதார்த்தத்தையும் அவர்கள் சிதைத்துக் கொண்டுதான் வருகிறார்கள். “தலைமை” என்ற வார்த்தைக்கு பதிலாக “நட்பு” என்ற வார்த்தையை எப்படி போடுவது என்று மேலாதிக்கம் செலுத்தும் நாடுகள் கற்றுக் கொள்ளத் துவங்க வேண்டும்.

ஜோனா: சே வின் உருவப்படம் பொறித்த டீ-ஷர்ட்டுகள், திரைப்படங்கள், பிரம்மாண்டமான வாழ்க்கை வரலாற்று நூல்கள் இவைகளுக்குப் பிறகும் கூட, லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள மக்கள் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை, பிரமிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும் கூட இந்த நேரத்தில் திரும்பிப் பார்க்கும்போது அவரை நீங்கள் இப்போது எவ்வாறு காண்கிறீர்கள்?

கலியானோ: சே தொடர்ந்து சே வாகத்தான் இருந்து வருகிறார். மிகவும் பிடிவாத குணம் நிறைந்த அவர் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்; மரித்துப் போக மறுக்கிறார். ஏனென்றால் அவர் மிக மிக வித்தியாசமான ஒரு மனிதர். என்ன செய்வேன் என்று சொன்னாரோ, அதைத்தான் அவர் செய்தார்; தான் நினைத்ததையே அவர் செய்தார். அது மிகவும் வழக்கத்திற்கு முற்றிலும் மாறான ஒன்றுதான். வார்த்தைகளிலும் செயல்களிலும் ஒத்திசைவு கொண்ட ஒருவரை நமது உலகத்தில் பார்ப்பதென்பது மிகவும் அரிதான ஒன்றாகும். அத்தகைய ஒரு நபரை எதிர்கொள்ளும்போதோ நாம் அவர்களை மிக அரிதாகவே புரிந்து கொள்கிறோம் அல்லது மரியாதை செலுத்துகிறோம்..

ஜோனா: எந்த வகையில் மார்க்சியம் உங்களது எழுத்துக்கு உதவியாக அல்லது தடையாக இருந்தது?

கலியானோ: கத்தோலிக்க குழந்தைப்பருவமும், மார்க்சிய இளமைப் பருவமும் எனக்கு வாய்த்திருந்தது. மூலதனம், பைபிள் (வேதாகமம்) ஆகிய இரண்டிலுமே மூழ்கிய ஒரு சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன். மனித இன ஆராய்ச்சிக்கான அருங்காட்சியகத்தில் என்னையும் ஒரு காட்சிப் பொருளாக வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டின் தாக்கமும் இன்னமும் எனக்குள் நீடித்திருக்கின்றன; என்றாலும் அவை என்னை ஆட்கொண்டு விடவில்லை என்பதையும் கூற வேண்டும்.

ஜோனா: புனைவு அல்லாத எழுத்துக்களை விட புனைவுகளில் உண்மையைச் சொல்வது மிகவும் எளிது என்று தற்காலத்திய எழுத்தாளர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள். இக்கூற்றை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

கலியானோ: பயங்கரம், அழகு, பேதமை ஆகிய அனைத்திற்காகவும் அனைத்து கவிஞர்களையும் பார்த்து யதார்த்தமானது எக்காளமிடுகிறது என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.

ஜோனா: மிக உன்னதமான ஒரு கலாச்சாரம் என்று நீங்கள் நினைக்கும்படியான இடம் எதையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மிக முன்னேறிய, குறைந்த அளவே முன்னேறிய கலாச்சாரம் என்று ஏதாவது உண்டா?

கலியானோ: அனைத்து கலாச்சாரங்களின் தரமும் நமக்குத் தெரிந்தே இருக்கிறது. அனைத்துக் குரல்களும் நம்மால் கேட்கப்பட்டே வருகிறது. விடுதலைக்கான இறையியலைப் பின்பற்றும் எனதருமை நண்பர்கள் அடிக்கடி கூறி வரும் “குரலற்றவர்களின் குரலாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்” என்ற கருத்துடன் நான் உடன்படுவதில்லை. இல்லை. இல்லவே இல்லை. நம் அனைவருக்குமே குரல் இருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய, அல்லது மன்னிக்கப்பட வேண்டிய ஏதோ ஒன்றை அடுத்தவரிடம் சொல்வதற்கு நம்மிடம் ஏதோ இருக்கிறது. என்றாலும் மனித இனத்தின் பெரும்பகுதியினரின் குரல்கள் நசுக்கப்படுகின்றன; அவர்கள் பேசுவதற்கும் கூட தடை விதிக்கப்படுகிறது.

ஜோனா: நவீன தொழில்நுட்பம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கலியானோ: அதற்கு நாம் இயந்திரங்களை குறை சொல்ல முடியாது. நமது இயந்திரங்களின் வேலையாட்களாக நாம்தான் மாறியிருக்கிறோம். நமது இயந்திரங்களுக்கு வேலை செய்யும் இயந்திரங்களாக நாம் இருக்கிறோம். சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயமாக தகவல் தொடர்பிற்கான புதிய கண்டுபிடிப்புகள் நமக்கு சேவை செய்வதாக – அதற்கு நேர் மாறாக அல்ல – இருக்குமேயானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஊர்திகள்தான் நம்மை இயக்குகின்றன; கணினிகள் நம்மை ஒரு வரையறைக்குள் வைக்கின்றன; பெரும் அங்காடிகள் நம்மை விலைக்கு வாங்குகின்றன என்பதே யதார்த்தம்.

ஜோனா: உங்கள் வாழ்க்கையில் பெரும்பகுதியை ஒரு பத்திரிக்கையாளராகவே நீங்கள் கழித்திருக்கிறீர்கள். ஒரு நிறுவனமாக, நாளிதழானது காலாவதியாகி விட்டது என்று கூறப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலியானோ: இதழியல் என் மீது ஆழமானதொரு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. கட்டுரைகளுக்குப் பதிலாக நூல்களை இப்போது எழுதிக் கொண்டிருந்தாலும் கூட, நான் இதழியலின் ஒரு குழந்தைதான். அச்சியந்திர காலத்தைச் சேர்ந்தவன் நான் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒரு கட்டுரையையோ அல்லது ஒரு புத்தகத்தையோ என்னால் திரையில் படிக்க இயலாது. என்னை தொடுகின்ற ஒரு காகிதத்தைத் தொட்டுப் படிப்பதையே நான் விரும்புகிறேன்.

ஜோனா: இப்போது உங்களுக்கு வயதாகி விட்ட நிலையில் இளைஞராக இருந்த காலத்தை விட மனித வாழ்வில் உடற்கூறு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கருதுகிறீர்களா?

கலியானோ: இளமையோடு எவ்வாறு இருப்பது என்பதைத் தெரிந்து கொள்ள நீண்ட நாட்கள் ஆகிவிடுகிறது என்று ஐன்ஸ்டைன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.

நன்றி: மன்த்லி ரிவ்யூ தமிழில்: வீ. பா. கணேசன்

Related posts

Leave a Comment