You are here

வாருங்கள் சென்னை நோக்கி

வாருங்கள் சென்னை நோக்கி
கல்லூரிப்படிப்பு வரை முடிக்கும் நம் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒரு நூறு பேர்கள் கூட வாசிப்பு எனும் அவசியமான பழக்கத்திற்குள் நுழைவது இல்லை என்பது கசப்பான உண்மை ஆகும். புத்தக வாசிப்பை தனது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொண்டவர்கள் இடையே சாமியாரிடம் ஏமாறுவது, ஆணவக் கொலைக்கு துணைப்போவது உட்பட பல சமூக விரோத பகுத்தறிவுக்கு எதிரான மனித நேயமற்ற செயல்பாடுகள் மிக குறைவு. பண்பட்ட சமூகவியலாளர்களாக உயர்ந்து நிற்கும் யாரையாவது நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால் கேட்டுப்பாருங்கள். அவரிடம் பிரதானமாக புத்தக வாசிப்பும் ஒரு அன்றாட பழக்கமாக இருக்கும். தற்போதைய நிலவரம் வரை எந்தெந்த நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை அவரால் சொல்ல முடியும். ஒரு சமூகத்தின் ஆன்மா அங்கு வெளியாகும் வாசிக்கப்படும் புத்தகங்களில்தான் உள்ளது. தமது குழந்தைகளுக்கு விதவிதமான மின் அணு சாதனங்களை வாங்கிக் குவிக்கும் பெற்றோர்களை இன்று பார்க்கிறோம். இவை பெரும்பாலும் குழந்தைகளின் மனதை விசாலப்படுத்தாமல் சிறைப்படுத்துபவை என்றே சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். தொலைக்காட்சி, கணினி, ஸ்மார்ட் போன், ஐ.பாட் எல்லாமே ஒவ்வொரு விதத்திலும் குழந்தைகளின் சிந்தனை போக்கை வளரவிடாமல் மந்தமாக்குவதை பல உதாரணங்கள் மூலம் இன்று உளவியலாளர்கள் நிரூபித்துள்ளார்கள். ஜப்பானில் பள்ளிக்கூடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கட்டாயப் புத்தக வாசிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல என்பதும் அது விமர்சனப் பூர்வ அறிவு வளர்ச்சியின் ஒரே வழி என்பதும் இன்று ஏற்கப்பட்ட அறிவியல் உண்மையாகும். தமிழை பொறுத்தவரை சமூகம் வாசிப்பை தனது இயல்பான வாழ்வின் ஒரு அங்கமாக்கும் அவசியங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை பல அறிஞர்களை சாரும். தோழர் சிங்காரவேலர் உ.வே.சா, தந்தை பெரியார், ஜீவா, அண்ணா என வளர்ந்த அந்த பிரமாண்ட அறிஞர் கூட்டம் விட்டுச் சென்ற பாரம்பரியம் எவ்வளவு ஆரோக்கியமானது. ஜி.டி. நாயுடுவும், மு.வ.வும், புத்தக வாசிப்பிற்கே முன் உதாரணமாகிய வரலாறு நமக்குண்டு. லட்சிய வேர்களை மண்ணில் ஊன்றச் செய்ய நாம் வாசிப்பை ஒவ்வொரு தமிழ் இலக்கியத்திலும் விதைக்க வேண்டியிருக்கிறது என்றார்,

திரு.வி.க. தமிழ்வாசிப்பு ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்காகத்தான் இன்று புத்தக கண்காட்சிகளை பல்வேறு சோதனைகளை சந்தித்தும் நாம் மனமுவந்து போராட்டங்களுக்கு மத்தியில் நடத்தி வருகிறோம். பாரதி புத்தகாலயம் இவ்விஷயத்தில் பட்டி தொட்டிகளில் எல்லாம் புத்தக கண்காட்சியை விடாமல் ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்கிறது. வாசிப்பை சுவாசிக்கும் ஒரு சமூகமே ஆரோக்கியமானதாக சீர்திருத்தங்களின் சீர்மிகு எடுத்துக் காட்டாக சமூக விடுதலை, மனித நேயம் துளிர்க்கும் மண்ணாக, சகோதரத்துவம் பேணும் எழுச்சிகளின் ஊற்றாக மாற முடியும். புத்தக கண்காட்சியை அதற்கான மைல் கல்லாக்கி… புதிய தொடக்கத்தை வரலாற்றில் எழுதுவோம். வாருங்கள் சென்னையை நோக்கி.
ஆசிரியர் குழு.

Related posts

Leave a Comment