You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

நவீன உலகத்தில் புழங்கும் கிராம மனிதன்

கேள்விகள் : எஸ்.செந்தில் குமார்
சரவணன் சந்திரன்

ஐந்து முதலைகளின் கதை

ஐந்து முதலைகளின் கதை, ரோலக்ஸ்வாட்ச் ஆகிய இருநாவல்கள் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். பத்திரிகையிலும் ஊடகத்திலும் பணி புரிகிறார்.

நேரிடையாக நாவல் எழுத வரும் நாவலாசிரியரிடம் காணக் கூடிய பொதுவான பிரச்சினை கதை சொல்லச் சிரமப்படுவது. ஆனால் நீங்கள் சரளமான மொழியில் கதையை நகர்த்துகிறீர்கள். இது எப்படிச் சாத்தியமானது?

முதல்விஷயம் இதற்குக் காரணம் பரவலான வாசிப்புதான். அடிப்படையில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் பயின்றவன் என்பதால் சங்க
இலக்கியம் துவங்கி தற்கால இலக்கியம் வரைமுழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்குப் படித்திருக்கிறேன் என்பது அடிப்படையான காரணம். இரண்டாவது
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக மக்களின் வதைகளை நேரிடையாக அவர்கள் வாய்வழியாகவே கேட்கும் வாய்ப்பைப் பெற்றதும் அதற்குக் காரணம். மனிதர்கள் சார்ந்த வாழ்வியல் கதைகளோடு மட்டுமே நேரிடையாகக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் காதுகளைத் திறந்து வைத்துப் பயணித்திருக்கிறேன். இதுவரை குறைந்தது ஒரு ஐயாயிரம் பேரிடமாவது நேரிடையாக ஏற்ற இறக்கங்களுடன் அவர்களது வாழ்க்கைக் கதைகளைக் கேட்டிருக்கிறேன். தவிர, நமக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற தெளிவு மூன்றாவது காரணம். அவர்களைப் போல எழுதுவதற்கு நாம் எதற்கு?

கடந்தகால வாழ்க்கையையும் தன்னைப் பாதித்த நபரின் வீழ்ச்சி வெற்றியும் தன்னை பாதித்த குடும்பம் மற்றும் வம்சத்தின் வீழ்ச்சியையும் பெரும்பாலான மூத்த படைப்பாளர்கள் முதல் நாவல்களமாக எழுதியிருக்கிறார்கள்.நீங்கள் முதல் இரண்டு நாவல்களிலும் கடந்தகாலம் என்பதைப் புறக்கணித்துவிட்டு, நிகழ்காலம் சமகால அரசியல்தனிமனி தன் வெளிப்படுத்தும் குரூரமான ஆசைகளை முன்வைத்துப் பேசுகிறீர்கள். இது திட்டமிட்டு எழுதப்பட்டதா?

தமிழ் நாவலுலகம் என்றாலே ஒரு டெம்ப்ளட் இருக்கிறது. நாவலுக்கான பாடுபொருள் என்று யோசிக்கும் போதே அந்த டெம்ப்ளட் வந்து முன்னால் வந்து விழுந்துவிடும். விவசாயம், மில் தொழில், சாயப்பட்டறை என சொல்லிக்கொண்டேபோகலாம். அந்த டெம்ப்ளட்டைத் தாண்டி பரந்துபட்ட உலகத்திற்குள் நுழைந்து விரிய வேண்டும் என நினைத்தேன். என்னிடமும் கரிசல் வாழ்க்கை இருக்கிறது. ஆனால் என்னுடைய முன்னோர்கள்அதைத் திகட்டத் திகட்டச் சொல்லி முடித்து விட்டார்கள். அதைத்தாண்டி என்னால் என்ன சொல்லிவிட முடியும் என்கிற கேள்வி எழுகிறது. அதேசமயம்

முற்றாக நான் கடந்த காலத்தையும் கிராமிய வாழ்வையும் புறக்கணித்து விட்டதாகவும் சொல்லமுடியாது. உலகில் எங்கோ ஒரு மூலையில்இருக்கும் தைமூர் நாட்டில், பாண்டி முனி அய்யாவை என்னுடைய முதல் நாவலில் ஏற்றிவைத்திருக்கிறேன். இரண்டாவது நாவலான ரோலக்ஸ்வாட்ச் நாவலை எடுத்துக்கொண்டீர்களானால், ஒரு நவீன உலகத்தில் புழங்கும் ஒரு கிராமத்தானின் கதைதானே அது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் ஒரு அம்மாவின் மகனது கதைதானே அது? அந்த நாவல் முழுக்க ஒரு கிராமத்திலிருந்து வந்த ஒரு இளைஞனின் மனநிலையில்தானே பயணித்திருக்கிறேன். எதைச் செய்தாலும் புதியதாகச் செய்யவேண்டும் என்கிற உந்துதல்தான் அதற்குக் காரணம். அதேசமயம் அந்த முயற்சி தோற்றுப் போகவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் உணர்ந்தே எழுதினேன். அது வெற்றி பெற்றதைத் தற் செயலானதாகத்தான் கருதுகிறேன்.

உங்களுக்குப் பிடித்த நாவலாசிரியர்…
ஜி.நாகராஜன்
ஜி. நாகராஜனை படித்த போது உங்களது மனநிலை எப்படியிருந்தது?
ஒழுக்கவியல் விதிகளைப் பேணும் பெருங்கதையாடல் சார்ந்த நாயக பிம்பங்களை மட்டுமே படித்து ஒரு இலட்சியவாதத்தை வளர்த்துக் கொண்டிருந்த சூழலில் ஜி.நாகராஜனின் நாயக பிம்பம் என்னைக் குலைத்துப் போட்டது. உலகத்தை கருப்பு-வெள்ளை, நல்லது-கெட்டது எனக் கோடு போட்டுப் பிரித்துப் பார்ப்பது எப்போதுமே எனக்கு உவப்பானதாக இருக்கவில்லை. அது அவரது எழுத்துக்களைப் படிக்கும் போது மேலும் உறுதிப்பட்டது. சாம்பல் நிற உலகத்திலுள்ள ஆட்களிடமும் அவர்கள் சார்ந்த உலகம் குறித்த நியாய-தர்மப் புரிதல்கள் இருக்கின்றன என்பதாலேயே என்னுடைய இரண்டு நாவல்களிலும் அத்தகைய உலகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து எழுதலாம் என்கிற துணிவு வந்தது. அந்தத் துணிவைத் தந்தது ஜி.நாகராஜனின் எழுத்துக்கள்.

பிறருடையை எடிட்டிங் உங்களுது மொத்த படைப்பு மனநிலை குலைத்து அவர்களுது பார்வை சார்ந்த படைப்பாகி மாறிவிடும் ஆபத்து இருக்கிறது.

எடிட்டிங் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பவர்களுக்கு இப்படித் தோன்றலாம். எடிட்டிங் என்பது ஒரு படைப்பை மாற்றி எழுதுவதல்ல. மாறாக மெருகூட்டுவது என்கிற புரிதல் வந்துவிட்டால் பிரச்சினையில்லை என்று தோன்றுகிறது.

உங்களதுநாவலை பிறர் படித்து எடிட்டிங் செய்யவிரும்புகிறீர்களா? எடிட்டிங் பொதுவாகத் தேவையா?

என்னுடைய இரண்டு நாவல்களையும் நண்பர்களும் என்னுடைய முன்னோடிகளும் எடிட் செய்து தந்தார்கள். எடிட்டிங் கண்டிப்பாகத் தேவை.எடிட்டிங் விஷயத்தில் தொட்டால் சிணுங்கி மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நகரத்தை மையமாக வைத்து நிறைய நாவல் சிறுகதை வருகிறது. அத்தகைய கதைகளை எழுதுபவர்கள் கிராமத்திலிருந்து வேலைக்கென வந்தவர்கள். நீங்கள் உள்பட. ஏன் உங்களது ஆதாரவாழ் நிலமான பூர்வீகமான கிராமத்தையும் கிராம மனிதர்களையும் எழுதுவதில்லை?

கிராமம் சார்ந்த வாழ்க்கைதான் ஒருநாவலுக்கான அடிப்படைவிதியா என்ன? அப்படி நினைத்திருந்தால் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலும் வந்திருக்காது. ஐந்து முதலைகளின் கதை நாவலும் வந்திருக்காது. ஐந்து முதலைகளின்கதை, ரோலக்ஸ்வாட்ச் இரண்டு நாவல்களிலும் ஒருகிராமத்து இளைஞனின் மனநிலை பின்புலமாக அழுத்தமாக ஓடுவதை உங்களால் உணரமுடியும். நிகழ்காலத்தில் அழுத்தமாகக் காலூன்றி கடந்தகாலத்தை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில்பார்க்கும் ஒருபாணிஎழுத்து முறையைப் பின்பற்றுகிறேன். அதேசமயம் அது அடிப்படையான மனித விழுமியங்கள் குறித்த கேள்விகளைத்தான் எழுப்புகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அண்டர் கிரவுண்ட் பீப்பிள் பற்றி எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவர்களின் கதையை அவர்களில் ஒருவர் எழுத ஆளில்லை. இப்போது எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் எழுதுகிறார்கள். இது எந்தளவிற்கு எதார்த்தமாக இருக்கும்?

எல்லோரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மட்டுமே எழுதவேண்டும் என்கிற நிர்பந்தம் வந்தால் ஒன்றிரண்டில் முடிந்துபோகும். தவிர அண்டர் கிரவுண்ட் என்கிற புரிதலே தவறானது. இவர்களும் நம்மையொட்டி இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான். நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை அல்லது நெருங்கிப் பார்க்கவில்லை என்பதாலேயே அதை அண்டர்

கிரவுண்ட் என்று முத்திரை குத்திவிடமுடியாது. நெருங்கிப் போய்ப் பார்த்தால் எல்லா உலகமும் நம்முடைய கையடக்கமானதுதான் என்கிற புரிதல் வந்துவிடும் என்று தோன்றுகிறது.

தொலைக்காட்சியில் பணிபுரிகிறார்கள். டிவி சீரியல் இப்போது பெரும்பாலான தமிழ் நேரத்தைக் கொல்கிறது.சீரியல்களில் தமிழ் எழுத்தாளர்கள் படையெடுத்துப்போய் விழுந்து எழுதுகிறார்கள். உங்களது அனுபவம் என்ன?

நானும் கடந்த பத்தாண்டுகளாகப் பல்வேறு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வருகிறேன்.அது என்னுடைய படைப்பு மனநிலையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றுதான் உணர்கிறேன்.நேர நெருக்கடி இருக்கலாம். அதற்காகப் படைப்பு மனநிலையை அது காவுவாங்குகிறது என்பது போலப் புரிந்துகொள்ளவேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. மற்ற துறைகளைப்போல அதுவும் ஒருவேலை என்றளவில் எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை என்றுதான் நினைக்கிறேன். இதை என்னளவில் மட்டுமே சொல்கிறேன். அது ஆளுக்கு ஆள்மாறுபடலாம்.

உங்களது அடுத்த படைப்புபற்றி…
இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வாழ்வியல் கதைகள் என்று ஒரு புத்தகம் வருகிறது. அஜ்வா என்கிற தலைப்பில் அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். அஜ்வா என்பது நபிகள் நாயகம் சாப்பிட்ட பேரிச்சம்பழம். விதை எல்லோருக்கும் சொந்தம் என்கிற புரிதலோடு பரந்துபட்ட நிலங்களின் வழியாக அந்த நாவல் பயணம் செய்கிறது. கருவேலங் காட்டில் பால்யத்தைத் தொலைத்தவன் ஒருத்தன் பசுமையை நோக்கி நகரும் படியான நாவல் அது. நவீன விவசாயத்தை அதில் அழுத்தமாகப் பேசலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய திட்டம் அதுதான். ஆனாலும் அது எந்தத் திசையில் அழைத்துப் போகிறது என்பது நம்முடைய கையில் இல்லைதானே?

ஐந்து முதலைகளின் கதை
சரவணன் சந்திரன் உயிர்மை பதிப்பகம் | ரூ.150/-

Related posts

Leave a Comment