You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

உண்மைகளை போல புனைவுகளால் நம்மை அச்சுறுத்திவிட முடியாது

கரன் கார்க்கி

கேள்விகள்: பேரா. ரவிக்குமார்

சென்னையை பிறப்பிடமாக கொண்டவர். 2000ம் வருடத்தில் எழுதிய முதல் புதினமான ‘அறுபடும் விலங்கு’ 2009ல் வெளியானது. அதே ஆண்டில் ‘கறுப்பு விதைகள்’ என்கிற இரண்டாவது புதினமும் வெளியானது. 2001ல் “கறுப்பர் நகரம்’புதினம் பாரதி புத்தகாலாயத்தில் வெளியானது. திரைப்படங்களில் உரையாடல் எழுதுபவராகவும், உதவி இயக்குனராகவும் பணிபுரிகிறார். வரும் காலங்களில் சிறந்த சினிமாவொன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அறுபடும் நாவல் தொடங்கி வருகிறார்கள் வரையிலான உங்கள் இலக்கிய அனுபவங்களை பகிர முடியுமா?
ஓ.. தாராளமாக பத்தாம் வகுப்பு முடியும் முன்பே சில கவிதைகள் எழுதியிருந்ததுடன், கோடை விடுமுறையில் விட்டல் என்கிற தலைப்பிட்டு துப்பறியும் நாவலொன்றை எழுத தொடங்கியிருந்தேன். நான் எழுதிய கவிதைகளும், சிறுகதைகளும் வார இதழ்களால் நிராகரிக்கப்பட்டு திரும்பியபடியே இருந்தன. நானோ எழுத்தாளனாகும் கனவின் உச்சத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். நிறைய வாசிப்பு, தோன்றுவதை எழுதுவது என காலங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

கறுப்பு விதைகள் நாவலை என்.சி.பி.எச். பதிப்பகத்தார் 2009ல் வெளியிட, அதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே ‘’அறுபடும் விலங்கு’’ நாவலை முரண் களரி பதிப்பகம் வெளியிட்டது. அதற்கிடையில் மற்ற இரண்டு கையெழுத்து பிரதிகளான, ‘‘வெந்து தணிந்தது காடு’’ ‘’துறவிகளின் தோட்டம்’’ ஏறக்குறைய 1200 பக்கம் செல்லரித்து நாசமடைந்துவிட்டது. அதனால் என்ன? தோழர் யாழினி முனுசாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் “கறுப்பர் நகரம்” நாவலை தடாகம் இணையத்தில் தொடர் போல எழுத தொடங்கி முழு நாவலானதும் பாரதி புத்தகாலயத்தில் 2011ல் வெளியிட்டார்கள். இந்த மூன்று நாவல்களும் என் பதின் வயதில் நான் கண்ட காட்சிகளும் சென்னை குறித்த எனது உளப்பதிவுகளும் தான். அவற்றிலிருந்து மாறி தற்கால அரசியலையும் அதை எதிர் கொள்ளும் இளைஞர்களையும் பற்றி ஒன்றை திட்டமிட்டிருந்தேன். அது தான் ‘’வருகிறார்கள்’’ நாவல்.

தற்கால தலைமுறையினரின் அரசியல் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு ‘‘வருகிறார்கள்’’ நாவல் படைக்கப்பட்டது போல் தோன்றுகிறது. இன்றைய இளைஞர்கள் உண்மையிலேயே அரசியல்படுத்தப்பட்டுள்ளனரா?

கடந்த மூன்று புதினங்களைப் போலில்லாமல் நிகழ்காலத்தை பதியும் நோக்குடன் எழுத முயற்சித்துள்ளேன். 2011 கால கட்டத்தில் நிலவிய அரசியல் சூழல் குறிப்பாக அண்ணா ஹசாரே உணணா நோன்பு கால கட்டம் அதை எதிர் கொண்ட இளைஞர்கள், அவர்கள் வாழ்வியல் சூழல். அதற்கு எதிர்நிலையில் அரசியலை முன்வைத்த பல இளைஞர்களோடு நேரிடையாக விவாதித்தவன் என்கிற முறையில், இன்றைய இளைஞர்கள் குறிப்பிட தகுந்த அளவு அரசியல் படுத்தப்படவில்லை என்பதுதான் என் கருத்து. வருகிறார்கள்’’ புதினத்தில் வரும் சித்தார்த் படிப்பும், வேலையும் அதனால் கிடைக்கும் பணமும் எல்லாவற்றையும் சீர் செய்யும் என நம்புகிறவன். ஆனால் அவன் எதிர்கொள்ளும் சம்பவங்களால் அரசியல் அறிவு பெற்று நம் சமூக அமைப்பை புரிந்து கொள்வதுபோல. நம் இளைஞர்கள் முழுமையாக அரசியல்படுத்தப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.

தங்கள் நாவலில் வரும் இளவேனில் பெண் கதாபாத்திரத்தை எப்படி புரிந்து கொள்வது அவர் சமூகத்தின் யதார்த்தப் படைப்பா? உங்கள் லட்சிய படைப்பா?
இளவேனில் ஒரு கற்பனைக் கதாபாத்திரமல்ல. ஒரு உண்மையான உருவத்துக்கு குறைவான அலங்காரத்தை செய்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய சமூக இறுக்கத்தை பிற்போக்கான கட்டமைப்பை உடைத் தெறியும் மனநிலையிலுள்ள பல பெண்களை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அவர்களின் புறச் சூழல் அவர்களை இளவேனிலளவு நகர்த்தும் சூழலை ஏற்படுத்தத் தவறுகிறது, என்பதையும் நாம் உணர்ந்திருந்தால் இளவேனில் வெறும் புனைவு அல்ல என்பது புரியும். பல இளவேனில்கள் நம்மிடையே இருக்கிறார்கள். நான் இளவேனில் கதாபாத்திரத்தையே அசலான ஒருவரிடமிருந்து தான் பெற்றேன். சொந்த அனுபவத்தில் சில தோழிகள் மிக வீச்சுடன் இருக்கிறார்கள். ஆனாலும் யதார்த்த சூழலை விடவும் கூடுதலான இலட்சியம் கொண்டவளாக இளவேனில் இருப்பது என் லட்சிய கனவினாலானது தான். ஆனாலும் இளவேனில்கள் நம்மிடையே இருக்கிறார்கள் மேலும் வருவார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களை கடுமையாக விமர்சித்து, சரியான அரசியலை முன் வைத்துள்ளது இந்த நாவல். ஆனால் யதார்த்தத்தால் கார்பரேட் வலைகளில் சிக்குவது தானே இன்றைய இளைஞர்களின் இலக்காக உள்ளது.

இல்லை இளைஞர்களை குற்றம் சொல்வதென்பது தட்டையானதொரு பார்வையென்றே நான் கருதுகிறேன். அவர்களை அந்த வலைகளுக்குள் போய் விழு விழு என நாம் பிடித்து தள்ளுகிறோம். அப்படி மாட்டிக்கொண்டவனை புத்திசாலியென்று புகழ்ந்து தள்ளுகிறோம். சமூகம், சூழல் எல்லாமே அதை ஆதரிக்கிறது. இளைஞர்களை மயக்கும் கார்ப்பரேட்டுகள் அவர்களை இனிப்புகளால் குளிப்பாட்டுகிறது. அவர்களின் மனசாட்சியை இயல்பற்றதாக்கி குரங்கினுடையதுபோல தாவ அனுமதிக்கிறது. பிறகு அவர்கள் மிக குறுகிய காலத்திலேயே மன உளச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 75% இளைஞர்களின் வாக்குமூலம் இதுவாகத் தானிருக்கிறது என்பது உண்மையென்றாலும் வலையில் சிக்காமல் சமூக பார்வை கொண்ட ஆரோக்கியமான …. இளவேனில் போன்ற இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சிக்கியபின் தெளியும் சித்தார்த் போன்ற இளைஞர்களையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களாலானதுதான் வருகிறார்கள்.

ஆண், பெண் உறவை மிக கண்ணியமான முறையிலே சித்தரிக்கிறீர்களே?
எந்த ஒரு படைப்பிலக்கியத்திலும் ஆண், பெண் இரு பாலற்று கதாபாத்திரங்களமைவது அரிதே. அப்படி புனையப்படும் பாத்திரங்களில் தேவையான தருணங்களில் அவர்கள் உண்பதும், குடிப்பதும் போல. அவர்களின் உடல் வேட்கை சார்ந்து நிகழும் எந்த ஒரு நிகழ்வையும் விவரிக்க வேண்டியதிருந்தால் அதை காட்சிபடுத்துவதை அநாகரீகம் என்று நான் கருதமாட்டேன். ஆனால் இதுவரையிலான எனது கதாப்பாத்திரங்களுக்கு பாலியல் உறவை காட்சிப்படுத்தி எழுத வேண்டிய தேவை ஏற்படவில்லை என்பதுடன், வாசகனின் உடலை கிளர்ச்சியூட்டி கதாபாத்திரங்களை மனதில் பதிய வைக்கும் மலிவான தந்திரத்தை நான் பயன்படுத்த விரும்பவில்லை.

வலுகட்டாயமாக ஆண், பெண் உறவை சித்தரிப்பது என்பது இலக்கியத்தின் பேரில் வாசகன் மேல் நிகழ்த்தப்படும் வன்முறை என்பது என் கருத்து. கறுப்பர் நகரத்தில் ஆராயி, செங்கேணியின் உறவு, முனியம்மா, பேய் காளி உறவு என புதினம் முழுக்க நிகழ்ந்தபடியே தானிருக்கிறது. அதை நீர் பரப்பின் மேல் தத்தியோட வீசப்பட்ட கல்லை போலவே கடந்து போக முயல்கிறேன். உண்மையில் வெளிப்படையாக எழுதுவதை விடவும், உணர்வு ரீதியாக அது பல வளையங்களை வாசகனின் உள்ளத்தில் உருவாக்கும் என்பது என் கருத்து.

இடது சாரி பழனி என்கிற கதாபாத்திரம் மூலம் தக்காளி விற்பவனுக்கும் அரசியலை புரிய வைக்கும் முயற்சி நாவலில் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான, குறிப்பாக அறிவு ஜீவிகள் கூட இதை புரிந்துக் கொண்டதாக தெரியவில்லையே.

என்னை அந்த அரசியலுக்கு அழைத்துச் சென்றவர் ஒரு மீன் பாடி ரிக்க்ஷா ஓட்டுநர். இன்றும் கூட அவர் உறுதியாக அந்த அரசியலில் இருக்கிறார். அரசியலில் உடனடி பலன்களிலிருந்து விடுபட்டு நீண்ட நெடிய நிரந்தர பலன் தரும் அரசியலை புரிந்துக் கொள்ளும் பொதுமைப் பண்பு அரசியலை கண்டு சுரண்டல் மனங்கள் சுருங்குகிறது. ஆனால் உழைக்கும் எளிய மக்களுக்கு புரிய வைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுள்ளவன் என்பதால் யதார்த்தத்தில் அது சாத்தியம் என்பதால் தக்காளி பழனியின் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

மக்கள் கடந்த கால வளர்ச்சி செயல் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அரசியலை அணுகும் அரசியலற்று, சின்னங்களின் மீதான மயக்கங்களிலிருந்து விடுபடாதவர்களாக இருக்கிறார்கள். அதோடு அவர்களை மயக்கத்திலிருந்து மீட்க மிகப் பெரிய போராட்டத்தை நிகழ்த்த வேண்டியிருக்கும். அறிவு ஜீவிகளை விடவும் தக்காளி விற்கும் பழனிகள் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.

முகுந்தன், சாய்ராபானு, சித்தார்த் இளவேனில் மகிழன், மல்லிகா இந்த கதை மாந்தர்களை உங்கள் அன்றாட வாழ்வில் சந்தித்துள்ளீர்களா?
நிச்சயமாக பெரும்பாலான கதாபாத்திரங்களோடு தான் நான் வாழ்கிறேன். புனைவு குறைவுதான். இளவேனிலின் பாட்டனார் கூட நான் பார்த்தறியாத கேட்டறிந்த ஒரு மனிதரே, நம்மிடமுள்ள உண்மைகளை போல புனைவுகளால் நம்மை அச்சுறித்திவிட முடியாது. ஏறக்குறைய இதே பெயர்களில் அவர்கள் என்னை சுற்றி வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறார்கள். முகுந்தன் லண்டனிலிருந்து வருகிறான் என்பது புனைவு ஆனால் உண்மையில் அவர் சிங்கப் பூரிலிருந்து அத்தை பெண்ணுக்காக வந்தவனென்றால் அது நிசமாகி விடும்.

தங்கள் கதை மாந்தர்களின் பெயர்கள் வடமொழி பெயர்களை தவிர்த்து பெரும்பாலும் தமிழ் பெயர்களை சூட்டியுள்ளதின் நோக்கம் தமிழ் தேசிய அரசியல் நோக்கிய உங்கள் பார்வையால் நிகழ்ந்ததாக நான் கருதலாமா.?

அடிப்படையில் நான் தமிழை விரும்புகிறவன். அதன் தொன்மை இலக்கணம் மொழியென வியப்பூட்டுகிற ஒன்று. என்பதுடன் உங்கள் அரசியல் சரியான புரிதலுடன் இருக்கும் நிலையில் தாய் மொழியில் பெயர் என்பது சரியானது. அதுவும் தமிழல் நீங்கள் அழகிய நவீன தன்மையுடன் பெயர்களை தேர்ந்தெடுக்கவும், புதிதாக உருவாக்கவும் முடியும். அதோடு தமிழ் தேசியம் என்பது ஒரு கெட்ட சொல்லாக நான் உணரவில்லை. தமிழ் தேசியம் அவசியமான ஒன்றெனக் கூட நான் கருதுவேன். ‘’வருகிறார்’’ நாவலில் வரும் பெயர்கள் மிக முக்கியமானதொரு பங்களிப்பை செய்வதாக நான் கருதுகிறேன். குறிப்பாக இளவேனில் அவளது பெற்றோர் வைத்தப் பெயர் விஷாலினி. ஆனால் அவள் தன்னை இளவேனில் என அழைக்கப்படுவதை விரும்புகிறாள். நாவல் முழுக்க அவளது பெயர் குறித்த விசாரணைகள் நடந்தபடியே இருக்கிறது. சித்தார்த் கூட அப்படி தான். பெயர்கள் மிக முக்கியமானவை. வித்யா கதாபாத்திரத்திற்க்கு கனிமொழியென பெயர் சூட்ட முடியாது.

வருகிறார்கள் நாவலின் போக்கில் இஸ்லாமிய வாழ்க்கையையும் அதன் சச்சரவான அதே நேரம் முற்போக்கு அம்சங்களையும் பேசியுள்ளீர்கள். இந்துத்துவத்திற்கு எதிரான கலகமாக சாதி மறுப்பு திருமணங்களை நீங்கள் ஆதரிப்பதாக புரிந்து கொள்ளலாமா?

அப்படி தான் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்குள் வந்த எல்லா மதங்களும் இந்து மத தாக்கத்தால் மேல், கீழ் பாகுபாட்டுணர்வை சுமந்து நகர்பவையாகி விட்டதை நம்மால் உணர முடியும். சாய்ராபானுவுக்கு திருமணமாவதில் ஏற்படும் சிக்கல், அதை தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் மரணமடையும் மணமகன், முகுந்தனுக்கும் சாய்ராபானுவுக்குமான திருமணம் இது “வருகிறார்கள்” நாவலில் இயல்பாகவே நடந்தேறியது. தகுதியுள்ள ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். பிறகு இணைகிறார்கள். இதில் கலப்பு என்பதோ, சாதி மறுப்பு என்பதோ வெறும் வார்த்தைகள் தான். இதை இந்துத்துவாவிற்கு எதிரானது என்று நீங்கள் கருதினால் அந்த எதிர்ப்பை செய்வது தான் என் இலக்கிய பணியென்று உறுதியாக சொல்வேன்.

இலக்கியத்தில் நாவல் என்ற வகையை நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம், எழுத்தாளர்கள் பற்றி சொல்ல முடியுமா?

நான் பல காலமாய் எழுதி முயன்று பார்த்ததில் நெடிய புதினம் என் பண்புக்கு ஏற்றது என்கிற முடிவுக்கு வர காரணம் இலக்கிய வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தவைகள் புதினங்களே. சார்லஸ் டிக்கனஸின் ‘‘இரு பெரும் நகரங்கள்’’ போன்ற நாவல்கள். புதிய உலகத்தையும், புதிய கலாச்சாரத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியதுடன் மிக விறுவிறுப்பூட்டுபவையாக இருந்தன. அந்த கால கட்டங்களில் நான் ஒரு தீவிர வாசகனாய் புரியாத பெயர்களாலான பெரிய பெரிய மொழி பெயர்ப்பு நூல்களில் திளைத்து திரிந்த நாட்களில் என் கைகளுக்கு வந்து சேர்ந்தது மக்ஸிம் கார்க்கியின் மூவர் அர்த்தமோனோவ்கள் அந்த புதினங்களை நான் திரும்ப திரும்ப படித்தேன். அதில் நான் குறுக்கும் நெருக்குமாக நடந்து திரிந்தேன். அதில் வரும் பையன்களில் என்னையே உணருமளவு மிக நெருக்கமாக இருந்தது. அதை தொடர்ந்து ‘’தாய்’’ நாவல் எனக்கு தேவையான அரசியலை உட்புகுத்தியது. அந்த காலம் முதல் இன்று வரை மக்ஸிம் கார்க்கியின் கரங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ருஷ்ய இலக்கியங்கள் என்னை புரட்டியெடுத்தன. தமிழ் படைப்பாளிகளின் உலகத்தில் நுழைந்தேன். அங்கு வா.ரா.வின் சுந்தரியும், கே.டானியேலின் புதினங்களும் என்னை உலுக்கின. கடல் கடந்து போனாலும் விடாது வெள்ளையென தொடரும் சாதியம் புரியத் தொடங்கியது. தமிழ் படைப்புகளில் அதே தீவிர வாசிப்பு நிகழ்ந்தாலும் என்னை விட்டு அகலாத மக்ஸிம் கார்க்கியின் கரங்களை நான் விடவேயில்லை. காலமும், ஓட்டமும், சுதந்திரமும், கருவும் புதினத்தின் வெளியில் என்னை தள்ளியபடியே இருக்கிறது. அது தான் எனக்கு பொருத்தமானது.

என்னை எழுத உந்தி தள்ளியவர் மக்ஸிம் கார்க்கி, கே.தானியேல். தாகூரின் கீதாஞ்சலி எனும் கவிதை நூலை விடவும் ‘‘கோரா’’ என்கிற புதினம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

varukirarkal

வருகிறார்கள்
கரன் கார்க்கி | பாரதி புத்தகாலயம் பக்.400 | ரூ.295

Related posts

Leave a Comment