You are here
கடந்து சென்ற காற்று 

வாசிப்பின் வசியம்…

ச.தமிழ்ச்செல்வன்

சடங்குகள்மீது நமக்கு வெறுப்பில்லை.ஆனால் அது நம் கழுத்தை நெறிப்பதாக இருக்கக்கூடாது.சமத்துவத்தை நிலைகுலையச் செய்வதாக இருக்கக்கூடாது. சாதியத்தை நிலைநிறுத்த உதவும் கருவியாக இருக்கக்கூடாது. காலத்திற்கேற்ற மாற்றங்களை உள்வாங்கிக்கொள்வதாகவும் சமகாலத்தோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் சாத்தியமுள்ளதாகவும் இருக்க வேண்டும். உணர்வின் வெளிப்பாடாக நடத்தப்படும் நினைவேந்தல் கூட்டங்கள் அங்கு நிகழ்த்தப்பெறும் சம்பிரதாயமான உரைகளால் சடங்குத்தன்மை பெற்று இறுகிப்போவதையும், ஓரிருவர் ஆற்றும் நெகிழ்ச்சியான உரைகளால் காலம் உயிர்பெற்று எழுவதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடும்போது யாரை அழைக்கலாம் என்று முடிவு செய்வதும் அவர்கள் மறுக்காமல் வந்துசேர்வதும் உயிரூட்டும் அடிப்படைகள். அப்படி சமீபத்தில் அமைந்த ஓர் உயிர்ப்பான நிகழ்வு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடைபெற்றது.தமுஎகச கிளை நடத்திய உலகப்புத்தக தின விழா.

நானறிந்தவரை வேலூரில் வசிக்கும் தோழர் லிங்கம் சிறந்த வாசகர் விருது பெறத்தகுதியானவர்.அவர் மூத்த தலைமுறையில் என்றால் இளம் தலைமுறை(அவரோடு ஒப்பிடுகையில்) வாசகர்களில் முதலிடம் பெறுபவர் சந்தேகமில்லாமல் எழுத்தாளர் ச.சுப்பாராவ்தான். மணிமாறனுக்கு அவருக்கு அடுத்த இடம் தரலாம். 2015 ஆம் ஆண்டில் சுப்பாராவ் வாசித்த பக்கங்கள் 15000. கண்டதையும் படிப்பவரல்ல சுப்பாராவ் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

அச்சிட்ட புத்தகங்களை மட்டுமின்றி இ-புக் எனப்படும் மின் புத்தகங்களையும் பல்லாயிரம் பக்கங்கள் பதிவிறக்கம் செய்து வாசிக்கிறார். KINDLE எனப்படும் ஒரு மின்சாதனத்தைக் கையில் வைத்துக்கொண்டே திரிகிறார். அண்டாகாகசம் என்று அதைத் திறந்து பார்த்தால் அதில் 1000 புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு புத்தகத்தை நாம் வாசிக்க வாசிக்க, இன்னும் எத்தனை பக்கங்கள் பாக்கி.நம்முடைய வாசிப்பின் வேகம், அந்த வேகத்தின் அடிப்படையில் இன்னும் எத்தனை நிமிடங்களில் நாம் அப்புத்தகத்தை வாசித்து முடிப்போம் என்பன போன்ற தகவல்களெல்லாம் தொடுதிரையின் கீழே நம் வாசிப்புக்கு இடையூறு இல்லாத வண்ணம் வந்துகொண்டே இருக்கிறன.வாசிப்பின் நவீன வடிவங்கள் உட்பட எல்லாக்கதவுகள் வழியாகவும் பாய்கிற சுப்பாராவ் பிரமிக்க வைக்கிறார். ஆயிரம் புத்தகங்களை எந்நேரமும் கூடவே தூக்கித்திரியும் அவரை நினைத்தால் பொறாமையில் எரிகிறது மனம். ஒரு உலகப்புத்தக தின விழாவுக்கு சிறப்புரை ஆற்ற அவரை விடப் பொருத்தமானவர் யாருமில்லை.அவரை அழைத்த இராஜபாளையம் கிளையின் செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட தோழர்களை ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். அன்று சுப்பாராவின் உரை எவ்விதப் பூச்சும் வாசனையும் தடவாத எளிய வார்த்தைகளால் ததும்பி நிறைந்தது. எங்கள் மனங்களை நிறைத்தது. இந்த உரை எழுதப்பட்டு அப்படியே ஒரு சிறு நூலாக வந்தால் நன்றாக இருக்குமே என்றேன். “ஏற்கனவே எழுதி பாரதி புத்தகாலயத்துக்கு அனுப்பிட்டுத்தான் கூட்டத்துக்கு வந்தேன்” என்று என்னிடம் சுப்பாராவ் பதில் சொன்னபோது அவருக்கு ஒரு சல்யூட் வைத்தேன்.அதுதான் சுப்பாராவின் வேகம்.அவரைத்தொடர்ந்து மணிமாறன் பேசினார். அவரையும் அழைத்திருந்தார்கள். இந்திய வரலாற்றின் ஈடு இணையற்ற வாசகரான அண்ணல் அம்பேத்கரின் படத்திறப்பு பொருத்தமாக அந்நிகழ்வில் சேர்க்கப்பட்டிருந்தது.

இதையெல்லாம் விட முக்கியமாக இராஜபாளையத்திலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ள புனல்வேலி என்கிற கிராமத்திலிருந்து திருமதி சரோஜினி அம்மாவை அவ்விழாவுக்கு அழைத்து வந்திருந்தார்கள். அவருடைய இணையரான பேராசிரியர் மாரிமுத்து அவர்களின் மறைவுக்குப் பிறகு சரோஜினி அம்மா அவருடைய நினைவாக அக்கிராமத்தில் நூலகம் ஒன்றைக் கட்டியிருக்கிறார்.சங்க இலக்கியம் துவங்கி நவீன இலக்கியம் வரை அறிவியல்,வரலாறு என அனைத்துத் துறை சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்களையும் வாங்கி முறையாகப் பராமரித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இந்நூலகத்தை அரசிடம் ஒப்படைத்து விட்டார். வரும் வரும் தலைமுறைக்கான அறிவுச் சொத்தாக, அந்த வட்டாரத்தின் குழந்தைகளுக்காக,தன் இனிய இணையரின் நினைவாக உயிருள்ள நினைவுச்சின்னமாக 15 லட்சம் ரூபாய் செலவில் அக்கட்டிடம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.கிராமப்புறங்களில் நடக்கும் இத்தகைய எளிய மனுஷிகளின் முயற்சிகள் கொண்டாடப்பட வேண்டும். பரவலாக அறியச் செய்யப்பட வேண்டும்.இராஜபாளையம் விழாவில் பங்கேற்று அவர் எம்மைச் சிறப்பித்தார்.

இது மட்டும்தானா அந்நிகழ்வில் எம் மனங்கள் நெகிழ்ந்துபோகக் காரணம்.? அங்கிருந்து 16 கிமீ தொலைவிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து சத்தியவீணா என்கிற பெண்மணி தன் குழந்தையைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தார். வெளியே எங்கும் பயணிக்க முடியாத ஒரு கிராமத்துக் குடும்ப வாழ்விலிருந்து புறப்பட்டு பஸ் ஏறி அந்த விழாவில் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு கவிதையும் வாசித்தார். அறிவொளி இயக்க நாட்களில் இப்படித்தான் கிராமப்புறத்துப் பெண்கள் கிளம்பி வந்து எங்களைத் திக்குமுக்காட வைப்பார்கள். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஜெகன் தம்பதி சிவகாசியிலிருந்து பைக்கிலேயே வந்து விழா ஏற்பாடுகளில் உற்சாகமாகப் பங்கேற்றது நம்பிக்கையூட்டியது.

இப்படி எளிய மனிதர்கள் தங்களைப் புத்தகங்களோடு உணர்வுப் பூர்வமாக இணைத்துக்கொண்ட அந்நிகழ்வு மிகுந்த மன மகிழ்வையும் நிறைவையும் நெகிழ்வையும் தந்தது.

* * *
இன்னொரு முக்கியமான புத்தக வெளியீட்டு நிகழ்வு சென்னையில் ரோஜா முத்தையா நூலகத்தில் நடைபெற்றது.திரு.கே.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.அவர்களின் நூலான “சிந்து வெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” வெளியீட்டு விழா அறிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்பில் நிரம்பி வழிந்தது.

சிந்துவெளி நாகரிகம் 1924இல் ஜான் மார்ஷல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதலாக அந்நாகரிகம் ஒரு திராவிட நாகரிகமாக இருந்திருக்கலாம் என்கிற விவாதமும் துவங்கி விட்டது. சுமார் ஒரு நூற்றாண்டாகத் தொடரும் இவ்விவாதம் இன்றுவரை ஆகக்கூடுதலான சாத்தியமுள்ள ஒரு கருதுகோள் என்கிற அளவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.முடிந்த முடிவாக அக்கருதுகோள் ஏற்கப்படவில்லை. சிந்து வெளியின் வரி வடிவங்களை இன்றுவரை யாராலும் வாசித்தறிய முடியவில்லை.சிந்துவெளி மக்களின் மொழி என்னவாக இருந்திருக்கும் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.யாராலும் வாசிக்கப்படாத மொழியின் வரிகளோடு காத்திருக்கிறது மொகஞ்சோதராவும் ஹரப்பாவும்.

சிந்துவெளிப்பண்பாட்டின் ஆக்கத்தில் திராவிடர்களில் பங்களிப்பு பற்றிய தமிழறிஞர் கமில் சுவலபிள் அவர்களின் கருத்தோட்டம் மற்றும்
The Indus Script: Texts, Concordance and Tables (1977)
Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003) ஆகிய நூல்களின் வழி அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் சிந்து வெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளக் கருதுகோளுக்கு வலுச் சேர்த்துள்ளன.
ஹரப்பா பண்பாட்டின் மொழியைக் கண்டறியும் முயற்சியில் அப்பகுதியில் உள்ள இடப்பெயர்கள் உதவக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை தமிழறிஞர் அஸ்கர் பர்போலாவும் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது திராவிட மொழிகள் பேசப்படும் நிலப்பரப்புக்கும் சிந்துவெளிப்பகுதிக்கும் இடையிலான 2000 கிமீ தூரமும் சிந்துவெளிப்பண்பாடு நலிந்து அழிந்த காலத்துக்கும் தொன்மையான சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட காலத்துக்கும் இடையிலான 1500 ஆண்டுகள் என்கிற கால இடைவெளியும் ஆய்வுகளின் முக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப்பின்னணியை முழுதாக உள்வாங்கி இடப்பெயர் ஆய்வின் வழியாக சிந்துவெளி நாகரிகத்தின் அடித்தளத்தைக் கண்டறியும் முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக திரு.கே.பாலகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார்.அந்த ஆய்வின் திசையை நாம் அறிந்துகொள்ள உதவும் விதமாக இந்நூல் வெளிவந்துள்ளது.அவ்விழாவில் ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பங்கேற்றதும்,தனக்கு ஒரு வாரிசு உருவாகிவிட்டார் என நண்பர்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதும் தன்னுடைய திராவிடச்சிவப்பு என்கிற தலைப்பிலான உரையின்போது, திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் இங்கிருப்பது மொழிக்குடும்பங்களேயன்றி இனக்குடும்பங்கள் அல்ல என்றும் இந்து-சரஸ்வதி என்கிற கற்பிதத்தை தான் ஏற்கவில்லை என அழுத்தமாகக் குறிப்பிட்டதும் எனக்கு மிகுந்த மனநிறைவளித்த அம்சங்கள்.இப்புத்தகத்தை பாரதி புத்தகாலயம் அழகாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
தொடரும்

Related posts

Leave a Comment