You are here

பெண்கள் நிலையங்களின் தேவை

ச. தமிழ்ச்செல்வன்

மார்ச் மாதம் எப்போதும் மகளிர் தினக் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கானதுமாகக் கடந்துபோகும். அப்படித்தான் துவங்கியது இந்த ஆண்டும். ஆனாலும் ஆண்கள் பங்கேற்காத மகளிர் தினக்கூட்டங்கள் பெரிய பலன்களைத் தந்துவிடப்போவதில்லை. ஆண்களோடுதான் நாம் நிறையப் பேசவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது.ஒடுக்கும் சாதிகளிடம் பேசாமல் ஒடுக்கப்படும் சாதி மக்களிடம் மட்டுமே பேசி முழுமையான மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியாது அல்லவா? பெண்களிடமும் ஒடுக்கப்பட்ட மக்களிடமும் பேசுவது தேவை. அதற்கான விளைவுகள் இருக்கும் என்பது வேறு விஷயம்.

இக்கூட்டங்களுக்காகப் போவதை ஒட்டிப் புத்தகங்களை வாசிப்பது கட்டாயமாகிவிடும். பைபிள் வாசிப்பதுமாதிரி மகளிர்தினக் கூட்டங்களில் பேசுவதற்காக; வாசிக்க என்று சில பைபிள்கள் என்னிடம் உண்டு. சிமான் டி பூவாவின் இரண்டாம் பாலினம் (The Second Sex), ராதா குமாரின் The story of the History of Doing, It Desn’t have to be like This (WOMEN AND THE STRUGGLE FOR SOCIALISM) by Christine Thomas இவற்றோடு சமீபத்தில் வந்த ப்ரியா தம்பியின் பேசாத பேச்செல்லாம், என்னுடைய பெண்மை என்றொரு கற்பிதம், போன்றவற்றையும் ஒரு புரட்டு புரட்டிக்கொள்வது வழக்கம். ஏங்கெல்ஸின், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், வ.கீதாவின் Patrarchy Feminism (இந்நூல் தமிழில் பாரதி புத்தகாலய வெளியீடாக பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும் என்கிற பேரில் வந்துள்ளது), தந்தை பெரியாரின் எழுத்துகள் போன்றவை நான் அடிக்கடி வாசித்துக்கொள்பவை.

பெண்விடுதலை தொடர்பான புத்தகங்கள் நிறையச் சேர்த்துச் சேர்த்து வைத்துக்கொண்டே இருப்பேன். அவற்றில் சில புத்தகங்கள் மட்டுமே கையில் வாங்கி வாசித்ததும் முதல் வாசிப்பிலேயே பல புதிய திறப்புகளை ஏற்படுத்துபவையாக அமைந்து விடும். அத்தகைய புத்தகங்களை நாம் திரும்பத்திரும்ப வாசிப்போம். மேற்சொன்ன புத்தகங்கள் எல்லாமே அத்தகைய தன்மை உடைத்தவை. Sacrificing Ourselves for Love (by Jane Wegscheider Hyman and Esther R.Rome) என்றொரு புத்தகம் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்த புத்தகம். அது களப்பணி அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம். தங்கள் சொந்த உடல் நலத்தையும் சுய மரியாதையையும் பெண்கள் ஏன் விட்டுக்கொடுக்கிறார்கள் என்பதுகுறித்த கள ஆய்வுகளைத் தொகுத்த நூல் அது. அன்பின் பெயராலும், காதலின் பெயராலும் பெண்கள் எதையெல்லாம் விட்டுக்கொடுக்கிறார்கள் என்கிற பட்டியலை வாசிக்கும்போது ஓர் ஆண் என்பதால் எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வும் மன உளைச்சலும் சொல்லி முடித்துவிட முடியாதவை. இப்போதும் அப்புத்தகத்தைக் கையில் எடுக்கும் போதெல்லாம் ஒரு வித நடுக்கம் உண்டாகும்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் அ.செல்வராசுவின் ஆய்வு நூல்கள் தமிழக வரலாற்றில் பெண்ணடிமைத்தனம் தோன்றிய வரலாற்றைத் துல்லியமாகப் படம் பிடிப்பவை. அவருடைய ஆண் ஆளுமையில் பெண் கற்பு என்கிற புத்தகம் ஆண் தலைமையிலான சமூகமும் கற்புக்கோட்பாடும் அரசும் உருவானது முல்லை நிலத்தில்தான் என்று நிறுவுகிறது. குடும்ப அமைப்பை விளக்கும் பாடல்களும் கற்பை வலியுறுத்தும் பாடல்களும் முல்லைத்திணையில்தான் மிகுதியாக இடம்பெற்றுள்ளன என அவர் விளக்கி நிறுவும் பாங்கு நமக்குப் புதிய வெளிச்சம் தருவதாகும்.

சமீபகாலமாக என் தலையில் ஏறிவிட்ட ஒரு கருத்து போராட்டங்கள் எல்லாமே கல்வி முறையிலிருந்துதான் துவக்கப்பட வேண்டும் என்பது.பெண்விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, சனநாயகத்துக்கான போராட்டம் எல்லாமே பள்ளிக்கல்வியிலிருந்து ஆரம்பம் ஆக வேண்டும். என்று எல்லாக்கூட்டங்களிலும் பேசிக்கொண்டு திரிகிறேன். சமீபத்தில் அக்கருத்தின் மீது ஒரு சின்ன ஆப்பைப் பெரியார் வைத்துவிட்டார். இம்மாதம் மகளிர்தினக் கூட்டங்களுக்கான வாசிப்பில் தந்தை பெரியாரின் கட்டுரைகளைக் கையில் எடுத்திருந்தேன்.ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருந்தது:

மேல்நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் முதலிய குணங்களுக்கும் நம் நாட்டு ஆண்மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் ஆகிய குணங்களுக்கும் உள்ள வித்தியாசங்களுக்கு முக்கியக் காரணம் என்னவென்றால், மேல்நாட்டு ஆண்மக்கள் அடிமையாய் வைத்து இழிவாய் நடத்தப்படாத பெண்மணிகளால், உலக அனுபவமும் கல்வி, அறிவு, சுதந்திர உணர்ச்சியும் உள்ள பெண்மணிகளால் பெற்று வளர்க்கப்படுகிறார்கள். நம் நாட்டு ஆண்மக்கள் என்பவர்கள் அடிமையாகவும் இழிவாகவும் நடத்தப்படும் பெண் யந்திரங்களால் கல்வி, அறிவு, சுதந்திரம் ஆகியவை அடியோடு அற்ற பெண் உருவங்களால் பெற்று வளர்க்கப்படுகிறார்கள்.இந்த தாரதம்மியமானது பெண்களை அடிமை கொண்டு நடத்துவதால் ஆண்களுக்கு எவ்வளவு லாபமும் சுயநலமும் இருந்தாலும் அவற்றிற்கெல்லாம் எத்தனையோ பங்கு அதிகமாய், நஷ்டமும் கெடுதியும் உண்டாகி வருகின்றது

பெரியார் எப்போதும் வாழ்வனுபவத்திலிருந்து அறிவுத்தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்பவர்.

An Organic Intellectual!. மிக முக்கியமான ஒரு புள்ளியில் நம்மை நிறுத்திவிட்டார்.
என் அம்மாவைக் கைது பண்ணியாச்சா? என்கிற கவுசல்யாவின் குரல் இப்போது இன்னும் கூர்மையான பன்முகப்பட்ட அர்த்தத்துடன் நமக்குக் கேட்கிறது. சாதிய சமூகத்தால் தனித்து விடப்பட்டுள்ள கவுசல்யா.ஆம். இந்த மார்ச் மாதம் வார்த்தைகளில் வடித்துவிட முடியாத இன்னொரு துயரச்சம்பவத்தைச் சந்தித்து நிற்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் 81ஆவது சாதி ஆணவக்கொலையால் உடுமலைப்பேட்டை பஸ் நிலயத்துக்கு எதிரே பட்டப்பகலில் கொலைசெய்யப்பட்ட இளம் பொறியாளர் சங்கரின் காதல் மனைவி கவுசல்யா.கோவை அரசு மருத்துவமனையில் வெட்டுக்காயங்களோடு உயிர்தப்பிப் போராடிக்கொண்டிருக்கும் கவுசல்யா தன் கணவரைக் கொன்ற கொலையாளியாகத் தப்ப விடக்கூடாத குற்றவாளியாகத் தன் தாய் அன்னலட்சுமியின் பெயரை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

கவுசல்யா இன்று தன் கணவனைக் கண்முன்னால் சாகக்கொடுத்துவிட்டு, பாதுகாப்புக் காரணங்களால் புகுந்தவீட்டுக்கும் போகமுடியாமல் கொலையாளிகளின் கூடாரமான தன் பிறந்த வீட்டுக்கும் போகமுடியாமல் சமூகத்தின்முன் நிற்கிறாள். சாதிகாக்கும் அரசும், சாதிகாக்கும் காவல்துறையும் அவளை எப்படிக்காக்கும்? இளவரசனை மணம் முடித்த திவ்யாவின் கதை என்னவென்றே தெரியாத அளவுக்குச் சாதியச் சமூகம் அவளை நம் கண்களிலிருந்து மறைத்துவிட்டது.தஞ்சையில் கொல்லப்பட்ட மாரிமுத்துவின் இணையரான அபிராமி தன் குழந்தையுடன் வாழ்வுக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இத்தகைய பெண்களுக்கான ஆதரவுக் கரமாக அரவணைக்கிறது.

மீண்டும் பெரியாரிடம் வருவோம்.பெண்கள் நிலையங்கள் அமைப்பது பற்றி நாற்பதுகளில், பெரியார் காலத்தில், விவாதங்கள் நடந்துள்ளன. அவருடைய பல்வேறு பணிகள் காரணமாக அதை அவரால் முன்னெடுக்க முடியாமல் இருந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பத்திரிகைப் பொறுப்பும், பிரச்சார காரியமும், எதிரிகளோடு மாரடிக்க வேண்டிய தொல்லை, விஷமப் பிரச்சாரத்துக்கு மார்பைக் கொடுக்க வேண்டிய கஷ்டமும், பகுத்தறிவு நூற்பதிப்பு மேல்பார்வையும் ஆகிய காரியங்கள் போதுமானதாகவே இருந்து வருகின்றது…..தமிழ்நாட்டுப் பெண்கள் நிலையத்தின் முக்கியப்பொறுப்பை யாராவது ஏற்று நிர்வகிப்பதாக இருந்தால் மற்றபடி என்னால் கூடிய உதவியைச் செய்யத் தயாராய் இருக்கிறேன்.

அப்படிப்பட்ட பெண்கள் நிலையம் என்னென்ன செய்யலாம் என்றும் பெரியார் கனவுகளை விரித்திருக்கிறார். வயது சென்ற பல விதவைப்பெண்கள் அந்நிலையத்து மேற்பார்வைக்கு வரவேண்டும். பெரும் குடும்பங்களில் அவஸ்தைப்படும் விதவைப்பெண்களைக் கூட்டிக்கொண்டு வர வேண்டும்.அவர்களுக்குக் கல்வி,தொழில் முதலியவைகளைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.கலியாணம் வேண்டியவர்களுக்குக் கலியாணம் செய்துவைக்க வேண்டும். கல்யாணம் வேண்டாதவர்களைப் பிரச்சாரத்துக்குப் பழக்கிப் பிரச்சாரம் செய்யச் செய்ய வேண்டும். இந்தக் காரியங்கள் சுயமரியாதைக்காரர்கள் செய்தால்தான் உண்டு. மற்றவர்கள் செய்யவே மாட்டார்கள்.ஆதனால் கூடுமானவரை செய்வதற்கு உடனே முயற்சிக்க வேண்டும் என்று 1935 ஏப்ரல் 19 அன்று காரைக்குடியில் பேசியிருக்கிறார்.

நிறைவேறாதுபோன பெரியாரின் எண்ணற்ற கனவுகளின் பட்டியலில் இந்தப் பெண்கள் நிலையமும் சேர்ந்துவிட்டது. அத்தகைய அறிவியல் பார்வையுடன் நடத்தப்படும் பெண்கள் நிலையங்கள் மாவட்டத்துக்கு ஒன்றாவது இன்று தேவை. சாதி ஆணவக்கொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள். பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கையர்கள் என வீதியில் நிற்கும் பெண்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.குடும்பங்கள் இவர்களை ஏற்கும் விதமாக மாற்றப்படுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.ஆனாலும் இடைக்கால ஏற்பாடாகவேனும் பெண்கள் நிலையங்கள் அவசியம்தான். மாதர் அமைப்புகள்,பொறுப்புள்ள தொழிற்சங்கங்கள் இன்றாவது இக்காரியத்தை முன்னெடுக்க வேண்டும்.
(தொடரும்)

Related posts

Leave a Comment