You are here
நேர்காணல் 

அச்சுறுத்தும் புதிய நோய், பரிணாமம், ஆரோக்கியம்

டேனியல் இ லிபர்மேன்

17544

மானுடப் பரிணாம உயிரியல் பேராசிரியர் டேனியல் இ லிபர்மேன் ஹார்வார்ட் பல்கலையில் பணியாற்றுகிறார். மனித உடல் தற்போது நாம் காண்பதைப் போல இருப்பதன் காரணத்தையும், அது இப்போது செயல்படுகிற விதத்தில் செயல்படுவதன் காரணத்தையும் குறித்து நிறைய ஆய்வுகளை வெளியிட்டிருக்கிறார். தற்போது அவர் செய்து வரும் ஆய்வு, காலணிகள் இன்றி ஓடுவதன் சாதகங்கள் பற்றியது. எனவே அவருக்கு ‘வெறுங்கால் பேராசிரியர்’ என்று பட்டப்பெயரும் உண்டு.

2013ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட டேனியல் லிபர்மேனின் The Story of Human Body: Evolution, Health and Disease என்ற நூல் (அண்மையில் இந்நூலை, மனித உடலின் கதை: பரிணாமம், ஆரோக்கியம், நோய் என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டிருக்கிறது.) குறித்து இயன் டக்கர் நூலாசிரியருடன் உரையாடியதிலிருந்து:

[ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு] மக்கள் படித்தறிந்து, தங்களின் நடத்தையை ஒழுங்கு செய்துகொள்ளத்தக்க நிறைய விஷயங்கள் உங்களின் நூலில் இருக்கின்றன.

ஆம், அதுதான் எனது நோக்கம். நாம் இன்றைக்கு எதிர்கொள்ளும் ஆரோக்கிய நெருக்கடிகள் பற்றி நிறைய நல்ல நூல்கள் வந்திருக்கின்றன. இருந்தாலும் உணவு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தைப் பற்றி பரிணாம ரீதியான பார்வையிலிருந்து விளக்குகிற நல்ல நூல் இல்லை என்று நான் உணர்ந்தேன். [நம்முடைய உடலுக்குக்] கடந்த காலத்தில் நிகழ்ந்தது, இன்றைக்கு நாம் வாழுகிற விதத்துக்கு ஏன், எப்படிப் பொருந்தும் என்பதை ஒருங்கிணைத்துப் பார்ப்பதில் மக்களுக்குக் கடினமிருப்பதாக நான் நினைக்கிறேன். இப்படிப் பார்ப்பது, நாம் நோயுறும் விதத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமின்றி அந்நோய்களைத் தடுக்கிற வழிகளை அடையாளம் காண்பதற்கும் உதவுகிறது.

உங்கள் நூலிலிருந்து மக்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மூன்று முக்கியமான யோசனைகள் என நீங்கள் எவற்றைச் சொல்வீர்கள்?

முதலாவது, நெடிய, சிக்கலான காலப் பகுதியில் குவிந்து வந்த தகவமைவுகளின் கலவைதான் நமது உடல். அந்தத் தகவமைவுகள் நம்மை ஆரோக்கியமாக வாழவைப்பதற்கு மட்டுமின்றிக் கூடவே நம் முன்னோர்கள் நிறைய வாரிசுகளைக் கொண்டிருப்பதற்காகவும் பரிணமித்தன. இதன் ஒரு விளைவு: நாம் இன்றைக்கு வாழுகிற நிலைமைகளில் நம்முடைய உடல்கள் சரியான விஷயங்களைச் செய்வதில்லை.

இரண்டாவது விஷயம்: உடல் பரிணமித்திருக்கிறது என்றாலும் பண்பாட்டுப் பரிணாமமும் இயற்கைத் தெரிவும் உருவாக்கிய தாக்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. இதன் விளைவு: ஒரு பொருத்தமின்மை; வழக்கமாக நமக்கு வராத புதிய பல வித நோய்கள் நம்மைப் பீடிக்கின்றன.

மூன்றாவது விஷயம்?
இறுதி விஷயம் என்னவெனில், நாம் நோய் பீடித்திருக்கையில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனியே சிகிச்சையளிக்க முயற்சிப்பது இயல்பு – இது சரியானது, முறையானது. ஆனால், நமது உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான இந்த மோசமான பொருத்தத்தினால் ஏற்படும் ஒரு பொருத்தமின்மை நோய் நமக்கு இருக்கிறபோது, நாம் அதன் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கிறோம். ஒரு பக்கத்தில் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர், மனித வரலாற்றில் முன்னெப்போதையும் விட ஆரோக்கியத்துடன் உள்ளனர்; கூடவே நமது பொருளாதாரத்தைக் காலி செய்கிற புதிய வழிகளில் நாம் அவதிப்படுகிறோம். தடுக்கத்தக்க நீண்டகால தொற்றாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கச் செலவு செய்வதில் அமெரிக்கா மிக மோசமான உதாரணம், பிரிட்டனும் கூட வெகுவாகப் பின் தங்கியில்லை. இதய நோய்களைத் தடுக்கலாம், தட்டைப் பாதங்களைத் தடுக்கலாம், கிட்டப்பார்வையைத் தடுக்கலாம்; ஆனால், நமது பரிணாமத்தைக் கருத்தில் கொண்டால் மட்டுமே இதுவெல்லாம் சாத்தியம்.

21ஆம் நூற்றாண்டுக்கு மனிதர்கள் தகவமைவதில் உள்ள பிரச்சனைகள் என்பது பற்றிப் பேசுவோமா?

பெரிய பிரச்சனை உடல் பருமன். அவசியமான இடத்திலெல்லாம் கொழுப்பைச் சேர்த்துக்கொள்ள நாம் பரிணமித்திருக்கிறோம்; மனித வரலாற்றில் இது ஒரு நல்ல விஷயம். அண்மைக் காலம் வரையிலும் ஆகப்பெரும்பாலான மக்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது; கூடவே ஆற்றல் சமநிலையின் விளிம்பில் வாழ்ந்தனர். மேலும், கொழுப்பில் இன்னும் கொஞ்சம் ஆற்றலைச் சேமித்து வைத்திருப்பதென்பதன் பொருள், நீங்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் உங்கள் குழந்தை பிழைத்திருக்கும் வாய்ப்பு அதிகம் என்பதும்தான். கொழுப்பு மிகவும் சக்திவாய்ந்த ஒரு பொருள்; இல்லையா? இப்பொழுது நாம் ஒரு நம்பவியலாத நிலைமையில் இருக்கிறோம். கோடிக் கணக்கான ஆண்டுகள் பரிணாமத்தில் முதன் முறையாக வரம்பின்றி ஆற்றல் கிடைக்கிற ஒரு உயிரி உலகில் இருக்கிறது [அதாவது, நாம் இருக்கிறோம்].

எடை அதிகமுள்ளவர்கள் எடையைக் குறைப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி அமெரிக்காவில் வெளிவந்த அளவுக்குக் கட்டுரைகள் பிரிட்டனிலும் இருக்கின்றன என்பது நிச்சயம். பட்டினி கிடப்பது ஒவ்வொருவருக்கும் உண்மையிலேயே ஒரு பேரழிவு. எடையைக் குறைப்பதற்கு மனித ஆற்றலுக்கு மேம்பட்ட முயற்சிகள் அவசியம். அதைச் செய்யலாம் என்றாலும் அவ்வளவு எளிதல்ல. இதற்குக் காரணம், நாம் எடை கூடுவதற்கு மட்டுமின்றி அதை அப்படியே வைத்திருக்கவும் பரிணமித்திருக்கிறோம் என்பதுதான். எனவே அதிக எடையுள்ள ஒருவர் பட்டினி கிடப்பது என்பது எடை குறைவாக இருப்பவர் பட்டினி கிடப்பதைப் போலக் கடினமானது. பட்டினி கிடந்தால் நீங்கள் உங்கள் உடலின் ஆற்றல் சமநிலைக்குக் கீழே சென்றுவிடுகிறீர்கள். எடை இழப்பதற்கான முயற்சியைத் தோற்கடிக்க நமது உடல் முழுவதும் ஆற்றலை மாற்றிப் போடுவதற்கு பொறியமைவுகள் அனைத்தும் செயல்படத் தொடங்கி உங்களை மந்தமாக்கி விடுகிறது. எனவே உள்ளபடியே உடல்பருமன் நம்முடைய முதல் சிக்கல்.

ஒவ்வாமைகளை இன்னொரு பொருத்தமின்மை நோயாக நீங்கள் கூறுகிறீர்கள்.

ஒவ்வாமைகளின் நோயியல்பை உண்மையில் எவருமே புரிந்துகொள்வதில்லை. ஆனால், அவை வெகுவிரைந்து அதிகரித்து வருவது அது ஒரு பொருத்தமின்மை நோய் என்பதற்கான அடையாளமாகும். நமது சுற்றுச்சூழல் முழுவதையும் பாதித்து நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிற ஒரேயொரு விஷயம் என்று இல்லை; தெளிவாகவே ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நுண்ணுயிரெதிரிகள் (antibiotics) தொடர்பான ஏதோ இருக்கிறது என்பது சிறந்த கருதுகோளாகும். மீண்டும் இது நல்லது-கெட்டது இரண்டும் இருக்கும் ஒருநிலைதான். எல்லா நுண்ணுயிரெதிரிகளும் தீமை என்பதல்ல. நாம் அவற்றைத் தடை செய்ய வேண்டியதில்லை; ஆனால் நாம் அவற்றை அளவுமீறிப் பயன்படுத்துகிறோம் – இது பற்றி எவரும் கருத்து மாறுபாடு கொள்வதில்லை என்று நினைக்கிறேன். வேண்டுமானால் நான் பந்தயம் கட்டுகிறேன். அதை நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரமில்லை; இருப்பினும், நுண்ணுயிரெதிரிகளைப் பயன்படுத்துகிற நேர்வுகளைக் குறைத்துக் கொண்டு பயன்படுத்துகிற விதங்களை மாற்றிக் கொண்டால் ஒவ்வாமைகள் முதல் குழிக்குடல் நோய் அல்லது குரோன் நோய், ஏன் ஆட்டிசம் உட்பட தொடரும் நோய்களின் பட்டியலை – தடுக்கத்தக்க நோய்களை நாம் குறைக்கலாம் என்கிறேன்.

இதிலிருந்து பெறப்படும் முடிவாக, நாம் வேட்டை-உணவு சேகரிப்பு வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றவேண்டும் என்று சிலர் வாதம் செய்யலாம் இல்லையா?

பழைய தொன்மையான உணவுமுறையைக் கடைப்பிடிக்கலாம். ஓரளவு அதில் உண்மை இருக்கிறது. தொன்மையான உணவில் உள்ள சிக்கல் என்னவெனில், அதில் ஒரு உகந்த பயனளவு – சரிவிகித உணவு என்ற ஒன்றிருக்கிறது; அதற்கு நாம் தகவமைத்திருந்தால் நாம் மேலும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். இது நான் கூறப்போகும் வாதத்தின் அடிப்படையில் அமைந்தது – வேட்டை உணவு சேகரிப்பவரைப் போல வாழ்வதற்கு நாம் தகவமைத்திருக்கிறோம்; அவரைப் போல வாழ்ந்தால் மேலும் ஆரோக்கியத்துடன் இருப்போம் என்பதுதான். ஆனால், வேட்டை-உணவு சேகரிப்பவர்கள் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கவில்லை. அவர்களின் உடல்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்காக அன்றி, நிறையக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தகவமைந்தது.

வேட்டை-உணவு சேகரிக்கிற ஒருவரின் எதிர்பார்க்கப்படும் ஆயுள் எத்தனை ஆண்டுகள்?
[அவர்களிடத்தில்] குழந்தை இறப்பு வீதம் அசாதாரண அளவுக்கு அதிகமிருந்தது என்றாலும் ஆய்வு செய்வதற்கு வேட்டை-உணவு சேகரிப்போர் மிகக் குறைவாகவே இருப்பதால் கிடைக்கிற சான்று வரம்புக்குட்பட்டது. குழந்தைப் பருவத்தைத் தாக்குப்பிடித்து வாழ்ந்துவிட்டால் அவர்கள் மிக நீண்ட காலம், 70, 80 ஆண்டுகள், அல்லது 90 ஆண்டுகள் கூட வாழ்வார்கள்.

கழிவுநீர்ச் சாக்கடைகள், கழிப்பிடங்கள், நுண்ணுயிரெதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக வேட்டை-உணவு சேகரிப்பவர்களைக் கொன்ற தொற்றுநோய்கள் தற்போது நம்மிடம் இல்லை. ஆகவே, நாம் எதற்குத் தகவமைத்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதில் சில ஆதாயம் இருக்கிறது. ஆனால், தொன்மையான உணவு உண்கிற சிலர் பால் மற்றும் பால் பொருட்களை, பயறு வகைகளை, தானியங்களை உண்ணமாட்டார்கள். இதைக் கொஞ்சம் வரம்பு மீறியதாக நினைக்கிறேன். ஏனெனில், அ) உலக மக்கள் அனைவருக்கும் புல் உண்ணும் மாடுகளின் இறைச்சியை நாம் வழங்கவியலாது, இது நடக்கப்போவதில்லை, மன்னிக்கவும்; ஆ) உங்களால் இயன்ற அளவு அதிக இறைச்சி உண்பதைப் பற்றி இன்னும் சில ஐயப்பாடுகளும் வினாக்களும் உள்ளன.

மத்தியத் தரைக்கடல் பகுதி விவசாயிகளும் மரபார்ந்த மீனவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தொன்மையான உணவு அருந்துவதில்லை என்றாலும் அசாதாரண அளவுக்கு நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். ஆரோக்கியத்துடன் இருப்பதற்காக நீங்கள் ஒரு தொன்மையான உணவைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது வெளிப்படை. பெரும்பங்கு உலகிற்கு அது நடைமுறைக்கு ஒத்துவராது; உண்மையில் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

வேட்டை-உணவு சேகரிக்கிற ஒருவர் நவீன கால லண்டன் நகரத்தில் எப்படி வாழ்வார்?
கலஹரி பாலைவனத்தில் உள்ள ஒருவரை நீங்கள் பெயர்த்தெடுத்து லண்டனில் வைத்தால் அவர் சுரங்க ரயில், மின்தூக்கி, சிறந்த உணவுகள் என லண்டனின் அற்புத விஷயங்கள் அனைத்தையும் அனுபவிப்பார் என்பதோடு, நமக்கிருக்கிற அதே சிக்கல்கள் அனைத்தும் அவருக்கும் வரும். கலஹரியில் உள்ள மக்கள் தினந்தோறும் 9 முதல் 15 கி.மீ தூரம் கால்நடையாய் அலைவது அவர்களது விருப்பத்தின் காரணமாக அல்ல. அவர்கள் எவரும் காலையில் எழுந்து, வாருங்கள் கலஹரியைச் சுற்றி ஒரு மெல்லோட்ட உலா போகலாம் என்று சொல்வதில்லை. அதை அவர்கள் செய்வதற்குக் காரணம், அது அவர்களின் வாழ்வாதாரம்; அவர்களின் சுற்றுச்சூழலால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

ஆனால் தற்போது நம்முடைய சுற்றுச்சூழல், எதிர்ப்பு குறைந்த வழியில் செல்லுமாறு நம்மை நிர்ப்பந்திக்கிறதா?

திடீரென்று நம்மிடம் இந்த இயந்திரங்கள் அனைத்தும் இருக்கின்றன; சுற்றிலும் நம்மை நகர்த்திச் செல்கிற, உடற்பயிற்சி இன்றி நம்மை வாழ அனுமதிக்கிற இந்த மந்திரப் பொத்தான்கள் அனைத்தையும் நாம் அழுத்தலாம். மேலும், அந்த முடிவுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை நாம் எளிதாகப் பெற்றிருக்க வில்லை. எனது கட்டிடத்துக்குள் செல்லுகிற ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நான் ஐந்தாவது மாடியில் இருக்கிறேன்; மின்தூக்கியைப் (lift) பயன்படுத்தாதிருக்க ஒவ்வொரு நாளும் நான் போராடுகிறேன். நான் மின்தூக்கியைப் பயன்படுத்தாதிருக்க ஒரு காரணம், போலித்தனமுள்ளவன் என்று கூறப்படுவதை நான் விரும்பாததுதான். இது பலம் வாய்ந்த ஒரு ஊக்கியாகும். விஷயத்தின் சாரம் இதுதான்: இந்தத் தொற்றுப்பழக்கத்தை பயனுள்ளவகையில் எதிர்க்கப் போகிறோமென்றால் சரியான விஷயத்தைச் செய்வதற்கு ஒருவரை ஒருவர் மரியாதையுடன் நிர்ப்பந்திப்பதற்கான வழிகளை நாம் காண வேண்டும்; காரணம், சொந்தமாக நாமே அதைச் செய்யப் போவதில்லை. உடற்பயிற்சி செய்கிற, அறிவுப்பூர்வமான ஒரு உணவை உண்ணுகிற நீங்கள் அறிந்த ஒவ்வொருவரும் பயனுள்ள விதத்திலான சுய நிர்ப்பந்திப்பு வடிவங்களைக் கண்டுவைத்திருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் மனிதர்கள் தோற்றத்தில் எவ்வாறு இருப்பார்கள்?

எதிர்காலத்தைச் சொல்லும் படிகப் பந்தை இப்போது பார்ப்பது, என்னில் நன்னம்பிக்கையை விதைக்கவில்லை. Wall-E திரைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களா? நாம் அந்த வழியில் போய்க்கொண்டிருக்கிறோம். நாம் ஏதேனும் செய்யாத வரையிலும் விஷயங்கள் வெகுவாக மாறவிருப்பதற்கு மிகக் குறைந்த சான்றையே நான் காண்கிறேன். ஒருக்கால், பிரச்சனைகள் சமனாகலாம். இப்படியாக உதாரணத்திற்கு அமெரிக்காவில் குழந்தைப் பருவ உடல்பருமன் வீதங்கள் சமனடைந்திருக்கின்றன. இதற்காக ஒவ்வொருவரும் தம்மைத்தாமே தட்டிக்கொடுத்துக் கொள்கின்றனர். மெய் நடப்பில், ஏற்கவியலாத வீதங்களுக்கு அவை சமன்பட்டிருப்பதோடு அதிக எடையுள்ள அல்லது உடற்பருமனுள்ள அந்தக் குழந்தைகளில் பெரும்பாலோர் பல்வேறு நோய்களால் துயருறுவதற்கு மிக அதிக சாத்தியங்கள் இருக்கின்றன. சீனாவில் இரண்டாவது வகை (Type-2) நீரிழிவு நோய், ஒரு பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. நீரிழிவு நோய் மற்றும் உடற்பருமன் விஷயத்தில் இந்தியா, ஒரு நேரம் குறித்த வெடிகுண்டாகும். இந்தப் பட்டியல் நீளுகிறது – அமெரிக்காவை விட மெக்ஸிகோ அதிகம் உடல்பருமன் பிரச்சனையைக் கொண்டிருக்கிறது. எனவே நமது பூமிப்பந்தின் எதிர்காலம் என்பது, ஒருபோதும் எளிதில் சிகிச்சை அளிக்கமுடியாத அதிகச் செலவாகிற நீண்டகால நோய்கள் பீடித்த, அதிக எடையுள்ள மக்களை நிறைய கொண்டிருக்கும். எனவே, மக்கள் அவர்களின் உணவுகளை மாற்றிக் கொள்வதற்கும், உடல் தகுதியோடு இருப்பதற்கும் உதவி செய்ய உண்மையிலேயே உறுதிகொண்டாலொழிய இந்தச் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்துப் பொருளாதாரப் பிரச்சனைகளையும் பெரும் துயரையும் ஏற்படுத்தும். இது மன அழுத்தம் தருவதால்தான் நான் அந்த நூலை எழுதினேன்.

Related posts

Leave a Comment