You are here
நூல் அறிமுகம் 

நிலவில் கால் வைத்தவன்…

தே. இலட்சுமணன்veedilla-puthakagal-92965

“தி இந்து” தமிழ் நாளிதழில் “வீடில்லாப் புத்தகங்கள்” என்ற தலைப்பில் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான

எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் எழுதி, அது இப்போது 58 உபதலைப்புகளோடு, 192 பக்கங்களைக் கொண்ட நூலாக “தி இந்து” நிர்வாகம் (கஸ்தூரி அண்டு சன்ஸ் லிமிடெட்) வெளியிட்டுள்ளது.

வாரா வாரம் தொடர்ந்து அக்கட்டுரைகளைப் படிக்க முடியாது போனவர்களும், அவை நூலாக வெளியிடப்பட்டுள்ளதால் முழுமையாகப் படிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எழுத்தாளர்

எஸ்.ராமகிருஷ்ணன் தமிழக மக்களுக்குச் சுவையோடு கூடிய இலக்கிய விருந்தை இந்நூல்மூலம் படைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

ஓர் எழுத்தாளர் மற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, உணர்வுகளை, கிடைத்த தகவல்களை அப்படியே எழுத்துமூலமாக வாசகர்களுக்குப் படைப்பது ஓர் ஒப்பற்ற சேவையாகும்; போற்றும் தொண்டாகும் என்றுகூட சொல்லலாம். எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படிப்பட்ட பெருந்தன்மை உண்டு என்று சொல்லமுடியாது. தற்பெருமை, தன் அனுபவத்தைத்தான் சொல்வார்களேதவிர, பிற எழுத்தாளர்களைப் போற்றுவது முயற்கொம்பே.

எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அரிய புத்தகங்களைத் தேடித் தேடி அலைந்து பெற்று அதை ஆர்வத்தோடு படித்து, அந்தப் புத்தகங்களின் பெருமையை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை விடாப்பிடியாக ஆற்றிவருகிறார். அந்தப் பழக்கத்தில் ஒன்றுதான் அவர் வீடில்லாப் புத்தகங்கள் கட்டுரையிலும் அனுபவக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சாலையோர பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்களைத் தேடி வாங்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அப்போது சில நேரங்களில் சில அரிய புத்தகங்களும் அவருக்குக் கிடைப்பதுண்டு.அப்படிப்பட்ட நேரங்களில் அவர் அடைந்த மகிழ்ச்சியை வாசகர்களிடம் சொல்லும் விதம் அலாதியானது.

“அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தை விடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன்” என்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளாகப் பழைய புத்தகக் கடைகளைத் தேடித்தேடி அலைந்ததால் தனக்கு சுவாச ஒவ்வாமை வந்துவிட்டதாகவே கூறுகிறார். அது உண்மைதான். ஆனாலும் புத்தகம் தரும் மகிழ்ச்சிக்கு இணையாக எனக்கு வேறு எதுவுமில்லை என்கிறார். அதற்கும் ஓர் ஒப்புமை தருகிறார்.

“ராமபாணம் என்றொரு பூச்சி புத்தகத்துக்குள் உயிர் வாழும் என்பார்களே, ஒருவேளை நானும் ஒரு ராமபாணம் தானோ என்னவோ” என்கிறார். புத்தகப் பகிர்வு எவ்வளவு முக்கியமானதொரு சாளரம் என்பதை விளக்க ஆஸ்திரேலியாவில், அமெரிக்காவில் ஈழ எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள்

noolagam.org என்ற இணையதளம் மூலம் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளப்படுவதை, “மதுரை திட்டம்” என்ற இணையதளம், “குட்டன்பெர்க்” என்ற ஆங்கில இணையதளம் மூலம் புத்தகப் பகிர்வு நடைபெறுவதையும் விளக்குகிறார்.

கடற்கரையில் நடைபெற்ற ஒரு புத்தகப் பரிமாற்றத்தில் இவருக்குக் கிடைத்த “மெம்மரிஸ் ஆஃப் மெட்ராஸ்” சர். சார்லஸ்லாசன் என்பவர் எழுதிய அரிய புத்தகம் (1905-ம் ஆண்டு லண்டனில் வெளியான புத்தகம்) ஒன்று பற்றியும் சொல்கிறார். அந்தப் புத்தகத்தில் அவர் படித்துத் தெரிந்துகொண்ட ஆச்சரியமான விஷயங்களை நமக்குத் தருகிறார்.

சென்னையில் ஆங்கிலேயர்கள் நடத்திய இரண்டு ஆங்கிலப் பத்திரிக்கைகள் (தி ஸ்பெக்டேட்டர், தி மெட்ராஸ் டைம்ஸ்) பிறகு “மெட்ராஸ் மெயில்” நடத்தப்பட்டது பற்றியும், சென்னைப் பட்டினத்தை பிரான்ஸிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்கிற இருவர் 1639-ல் விலைக்கு வாங்கி கோட்டையுடன் கூடிய புதிய நகரை உருவாக்கத் தொடங்கினார்கள் என்பது பற்றியும் குறிப்பிடுகிறார்.

1787ல் சென்னைக்கு வந்த ஆங்கிலேயன் ஆண்ட்ரூ பெல் எக்மோரில் செயல்பட்ட அனாதைகள் காப்பகத்தில் கல்விப் பணியாற்றியபோது, தான் கற்றுக் கொண்ட கல்விமுறையை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று “மெட்ராஸ் சிஸ்டம்” என்று அறிமுகம் செய்து பிரபலமாக்கியுள்ளார். அதாவது “மெட்ராஸ் சிஸ்டம்” என்பது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதாகும் என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, ஆனால் இன்று நாம் ஆங்கிலேயர் கல்வியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலக் கொடுமையையும் குறிப்பிடுகிறார்.

இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் ஆச்சரியமான விஷயங்கள் பலவற்றை ஏராளமான விவரங்களோடு தருகிறார். புத்தகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உறவு எத்தகையது என்பதை விளக்க அவர் சொல்லுவது – புத்தகம் சிலருக்குத் தோழமை, சிலருக்கு வழிகாட்டி, சிலருக்கு அது ஒரு சிகிச்சை, இன்னும் சிலருக்கு புத்தகம் மட்டும்தான் உலகம். புறஉலகை விடப் புத்தக உலகினுள் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகிறார்கள் என்று கூறிவிட்டு, ஒருவேளை இந்த உலகில் புத்தகம் படிப்பது தடை செய்யப்பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதைக் கேள்வியாகக் கேட்டுவிட்டு “பாரன்ஹீட் 451” என்ற நாவலை (ரே பிராட்பரி என்பவர் எழுதியது) நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அதோடு, எவ்வளவு காலத்திற்கு இலக்கியம் வாசிக்கப்படும் என்ற கேள்விக்கு, பிரபல ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி கார்டியன் இதழில் எழுதியுள்ள விவரத்தைத் தருகிறார். எழுத்தாளர்

எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிப்பட்ட ஏராளமான விவரங்களை அவர் தேடித் தேடிப் படித்த நிறைய நூல்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். நமது மனதை உருக வைக்கும் சம்பவங்களை எடுத்துக் காட்டுகிறார்.

ஒரு பழைய புத்தகக் கடையில் ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ என்ற பழைய இதழ்களின் பைண்ட் வால்யூம் ஒன்றை வாங்கினார். அதுபற்றிய பழைய நினைவுகள் அவருக்கு வருகின்றன. அவர் தாத்தா அந்தக் காலத்தில் விரும்பிப் படிக்கும் வீக்லி மற்றும் அவரின் ஆசிரியர் ஞானசுந்தரம் அந்த வீக்லியைப் பற்றிக் கூறும் போது அது “காலேஜ் படிக்கும் பெண்ணைப் போல கவர்ச்சியானது, படிக்கவும், பார்க்கவும் சுவையூட்டுவது” என்பாராம். அந்த வீக்லியின் பழைய வால்யூமில் யாரோ ஒருவர் கருப்பு மை பேனாவால் அமிர்தா பிரீதம் கவிதையின் அடியில், இதை அகிலாவை வாசிக்கச் சொல்ல வேண்டும் என்று எழுதியிருந்ததை நினைவுகூரும் எஸ்.ராமகிருஷ்ணன், மன உந்துதலால் யார் அந்த அகிலா எனத் தெரியவில்லை. ஒருவேளை, இல்லஸ்ட்ரேடட் வீக்லி வாங்கியவரின் காதலியா, மனைவியா அவர் இந்தக் கவிதையை படித்தாரா? என யூகிக்க வைக்கிறது என்கிறார்.

“பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பவை வெறும் புத்தகங்கள் அல்ல. யாரோ சிலரின் நினைவுகள் நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. காலம் இரக்கமற்றது. அதற்கு விருப்பமான மனிதர்கள் என்றோ, விருப்பமான புத்தகங்கள் என்றோ பேதமில்லை. இரண்டும் பயனற்றவையாக தூக்கி எறியப்படுகின்றன.

ஆனால் எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. யாரோ ஒருவருக்கு அது வாசித்து முடித்த பழைய புத்தகம். இன்னொருவருக்கு அது இப்போதுதான் வாங்கியுள்ள படிக்காத புத்தகம். உறவுகளும் அப்படித்தான் தொடர்கின்றன” என நெகிழ்வோடு எழுதுகிறார்.
அவர் எழுதிய ‘வீடில்லாப் புத்தகங்கள்’ என்ற நூல், “புயலின்கண்” என்ற தலைப்பில் ஆரம்பமாகி “மௌனி” பேசுகிறார் என்ற தலைப்பில் முடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகங்கள் முதற்கொண்டு தற்கால புத்தகங்கள் வரை அறிமுகப்படுத்துகிறார். இப்படிக் கிட்டத்தட்ட 187 புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். நேரில் சந்தித்த சிலரை – சாலையோர புத்தக வியாபாரிகளை, நூலகத்தில், புத்தகக் கடைகளில் சொற்பொழிவு ஆற்றச் சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டோரை, ரயில் பயணத்தில் அறிமுகமானோரை இப்படி அவர்களிடம் புத்தக வாசிப்பு சம்பந்தமாக அவர்களிடம் காணப்பட்ட, அறியப்பட்ட விஷயங்களையும் ஞாபகத்தோடு சேர்த்துத் தந்துள்ளார்.

இந்நூலைப் படித்த வாசகர்களுக்கு தாங்கள் இதுவரை இவர் குறிப்பிடும் புத்தகங்களைப் படிக்கவில்லையே, கேள்விப்படவில்லையே, அப்படிப்பட்ட புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என எண்ணியோர், ஏங்கியோர் நிச்சயம் ஏராளமானோர் இருப்பார்கள்.
வீடில்லாப் புத்தகங்கள் என்ற நூலைப் படிப்போர், வாசிப்புப் பழக்கம் மனிதனுக்கு எவ்வளவு தேவை என்பதையும் உணர்வார்கள். வாசிக்கவும் தொடர்வார்கள். இந்தப் புத்தகத்தின் வெற்றியும் அதுதானே!

Related posts

Leave a Comment