You are here
நிகழ்வு 

நான் படித்த புத்தகங்கள்…

 ரோஹிணி

நாம் வாசித்தால்தான் நமது குழந்தைகளும் புத்கத்தை விரும்பிப் படிப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்மைதான்…என் தந்தை மிகப் பெரிய அளவில் நூல்களை வாசிப்பவராக இருந்தார். எங்களையும் வாசிக்கத் தூண்டினார். மிக இளவயதில் நான் நடிக்கத் தொடங்கி விட்டேன். முறைப்படி பள்ளிக்கூடத்திற்கு அதிகம் செல்ல முடியாமல் போய்விட்டது. எனக்குத் தமிழ் தெரியவேண்டும் என்பதற்காகத் தனியே ஓர் ஆசிரியரை நியமித்திருந்தார் என் தந்தை. அவர் ஓர் அற்புதமான ஆசிரியர். நான் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிய பிறகும் எனக்குத் தமிழ் உச்சரிப்பும், எழுத்தும் திருத்தமாக வருகிறதா என்று பரிசோதிக்க வந்துவிடுவார். எங்கே ழ என்ற எழுத்தைச் சொல் என்பார். ஒரு முழு வாக்கியத்தை எழுதிக் காட்டு என்பார். இப்படியாக வளர்ந்தது என் தமிழ்ப் பாடம்.

ஆரம்ப முதலே பாரதிதான் என் ஆதர்சம்….பாரதியைத் தொடர்ந்து படிக்கையில், திரும்பத் திரும்ப வாசிக்கையில் ஒவ்வொரு முறையும் அதில் கிடைக்கும் அனுபவம் புதியது….

அண்மையில் ஐம்பூதங்கள் எனும் நிகழ்வுக்காக பாரதியைப் படிக்கையில், சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம் என்ற வரியை மீண்டும் மீண்டும் வாசிக்கையிலோ வேறு வேறு பொருள்கள் தட்டுப் பட்டன. ஒளி எப்படி தாளம் ஆகும்……இதோ, இந்தக் கைகளைத் தட்டி ஓசை எழுப்புகிறேன்…தாளம் பிறக்கிறது…இந்தத் தாளம் ஒளியாம்….அப்படி எனில், தாளம் பிறக்காத தருணம் இருளைக் குறிக்கிறதோ…கைகளைத் தட்டும்போது ஒளி பிறக்கிறது…விலக்குகையில் இருள் பரவுகிறது…இருள் ஒளி ..இருள்…ஒளி …சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்…என்ன வியக்கத் தக்க விவரிப்பு பாரதியிடம்.

அண்மையில் நாம் எதிர்கொண்ட பெருமழை வெள்ளத்தின் போது மனிதத்தை நாம் கண்டோம்…எந்த இளைஞர்கள் கணினியைத் தவிர, முக நூல் தவிர வேறு எதையும் அறியமாட்டார்கள் என்று சொல்லப்பட்டதோ அந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து அருமையான மீட்புப் பணியில் ஈடுபட்டுத் தங்கள் சக்தியை நிரூபித்தனர்.

படித்த புத்தகங்கள் எனில், தமிழில் படித்த புத்தகம், அகிரா குரோசேவா பற்றியது. உலக இயக்குனர்களில் முக்கியமானவர் அவர். பள்ளியில் ஒன்றும் தெரியாத மாணவராக அவமதிப்புக்குள்ளானவர் அகிரா. படிப்பே வராது என்று ஒதுக்கப்பட்டவர். ஆனால் அவரிடம் அற்புதமான ஓவியக் கலை இருந்தது. அதை ஓர் ஆசிரியர் அடையாளம் காண்கிறார். அவரை ஊக்குவித்து வரையச் சொல்லித் தூண்டுதல் செய்து வளர்த்தெடுக்கிறார்…அகிரா குரோசேவா அவர்களது உண்மைக் கதைதான் தாரே ஜமீன் பர் படமாக நமக்கு கிடைத்தது என்பதை இந்த நூல் வாசிப்பில் உணர்கிறோம் நாம்.

அகிரா குரோசேவா பிடிவாதமாக மிகுந்த சிரத்தையோடு படம் எடுப்பவராக இருந்தார். குறிப்பிட்ட காட்சிகள் எத்தனை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தாலும் அப்படித் தான் படப்பிடிப்பு இருக்க வேண்டும் என்று அமைப்பவர். அவரது படத்தில் இயற்கையின் உரையாடலை, ஒரு கதைப் பாத்திரமாக வெளிச்சமும், இருளும், மலையும், மரங்களும் வந்து போவதைப் பார்த்திருப்பீர்கள்… ஒருமுறை வேகமான மலைக்காற்று தழுவிச் செல்லும் காட்சி தேவைப்பட்டது. எந்தப் பருவத்தில் அப்படியான காற்று வீசும் என்பதைக் கண்டறிந்து தனது தயாரிப்பாளரிடம் இன்னும் ஆறு மாதங்கள் கழித்துத் தான் அந்தக் காட்சியை எடுக்கவேண்டும் என்று பொறுத்திருக்கச் சொல்லிவிட்டார். அவர் சொல்லக் கேட்கும் தயாரிப்பாளர் அவருக்குக் கிடைத்தார். ஆறு மாதம் கழித்து பல மைல்கள் கடந்து குறிப்பிட்ட மலைப்பகுதிக்கு மொத்த படப்பிடிப்புக் குழுவோடு சென்றிருந்தார். ஒரு நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என பத்து நாட்கள் கடக்கின்றன. காலை முதல் காத்திருந்தும் அவர் விரும்பிய வண்ணம் அடிக்கும் வேகமான காற்று வீசுவதே இல்லை…எல்லா ஏற்பாடும் செய்து காத்திருந்து அன்றாடம் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர். பதினோராம் நாள் அதிகாலை எழுந்து செல்கிறார் அகிரா…பிறகு வேகவேகமாக வந்து குழுவை அவசரமாக எழுப்பி அழைத்துச் செல்கிறார்…இரண்டே நாட்களில் தாம் விரும்பிய ஒட்டுமொத்தக் காட்சிகளையும் படமாக்கிக் கொண்டு திரும்புகிறார்….

அதேபோல், இராணுவத்தில் இருக்கும் பெண்களைக் குறித்த படம் ஒன்று. அதற்காக நடிகையரை இராணுவப் பயிற்சி எடுக்கும்படி வற்புறுத்துகிறார். நடிக்க எதற்கு இத்தனை உடற்பயிற்சி, பரேட் என்று தாங்க மாட்டாமல் கொதிக்கின்றனர் அவர்கள். ஆனால் யாருக்கும் அவரைக் கேட்கும் துணிச்சல் கிடையாது. வருத்தி எடுக்கிறார் அகிரா. ஒரு நாள் ஒரே ஒரு நடிகை மட்டும் துணிச்சலாக அவர் எதிரே சென்று கத்துகிறாள். தங்களால் இப்படி எல்லாம் கஷ்டப்பட முடியாது என்று. அவர் அமைதியாகக் கேட்டுக் கொள்கிறார்.ஆனாலும் படப் பிடிப்பு முடியும் வரை அவரது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும், கருணையும் இருப்பதில்லை. என்ன வேடிக்கை தெரியுமா, அந்தப் பெண்ணைத் தான் மனைவியாக ஏற்றுக் கொள்கிறார் அகிரா. இந்தக் காட்சிக்கு அப்பால் அவர்களுக்குள் பிறந்த அந்தக் காதலின் திரைக் கதை (screen play) எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்களேன்….

அசோகமித்திரன் அவர்களது 18வது அட்சக் கோடு புத்தகத்தை என் மகன் ரிஷிக்கு வாசிக்கக் கொடுத்தேன். நானும் வாசித்தேன். ஹைதராபாத் மாநகரைக் களமாகக் கொண்டு நிகழ்ந்த சுதந்திரப் போராட்டக் காலத்துக் கதை அது…நாம் அந்த நகரைக் குறித்து எவ்வளவு அறிந்து கொள்கிறோம் இந்த வாசிப்பில்…ஒரு பதினான்கு வயது சிறுவனின் பார்வையில் எழுதப் பட்டிருக்கும் கதை அது. தனது வயதின் பார்வை குறுக்கிடாது அப்படியான மொழியில் அசோகமித்திரன் எழுதி இருப்பார். ரிஷியால் அந்தக் கதையில் அவ்வளவு ஒன்ற முடியவில்லை…ஆனால் எனக்கோ அற்புதமான வாசிப்பு அனுபவம் அந்தக் கதை. மற்ற குழந்தைகளை வாசிக்கக் கேட்டால் ஒருவேளை சிறந்த அனுபவங்கள் கிடைக்கக் கூடும்.

அண்மையில், திருச்சி எஸ் ஆர் வி பள்ளியின் குழந்தைகள் எழுதிய கடிதங்களின் தொகுப்பை, தங்கள் பதிலை எதிர்பார்த்து வாசித்து அசந்து போனேன். வித்தியாசமான பரிசோதனைகளைச் செய்து வரும் பள்ளி அது. நமது எழுத்தாளர்கள் ஞாநி அவர்களும், ச தமிழ்ச்செல்வன் அவர்களும் அதில் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர். ஒரு மாணவர் சாக்கர் விளையாட்டில் விருப்பம் இருப்பவர். மீண்டும் அந்த விளையாட்டைக் கற்று உங்களோடு போட்டி போடுவேன் என்று சாக்கர் சாம்பியன் மெஸ்சிக்கு எழுதி இருக்கிறார்…என்ன துடிப்பான விஷயம்…அந்தக் கடிதம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது…யார் யாருக்கோ கடிதம் எழுதுகின்றனர் இந்தப் பள்ளியின் மாணவர்கள்…தன் அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதப் பட்டிருக்கிறது. நாம் கடிதங்கள் எழுதிய காலம் போய்விட்டது…என் தந்தை எங்களைக் கடிதம் எழுத ஊக்குவித்த நாட்களை மறக்க முடியாது.. அப்படியே பாதுகாத்து வைத்திருந்தார் அவற்றை.

இதைச் சொல்கையில், ஒரு கடிதத்தை இங்கே குறிப்பிட வேண்டும் என்று .கருதுகிறேன்.. என் மகன் ரிஷிக்கு அப்போது ஏழு வயது இருந்திருக்கும். எங்களது அபார்ட்மெண்ட் கீழ்ப் பகுதியில் எப்போதும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். தரைத்தளக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கண்ணாடி உடைந்ததும் அந்த வீட்டுப் பெண்மணி கோபத்தோடு வந்து சத்தம் போடுவார்…பெற்றோர் எவ்வளவோ சொல்லியும், அசோசியேஷன் தரப்பில் சொல்லியும் இவர்கள் கேட்க மாட்டார்கள்..விளையாடிக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை அந்தப் பெண்மணி காவல்துறைக்குப் புகார் அளித்துவிட்டார். ரிஷி ஓடோடி எங்கள் வீட்டுக்குள் ஓடிவந்தான்…ஒரே பதட்டம். பயம். என்னடா என்றால், ‘அம்மா! அந்த அம்மா போலீசை வரவழைத்து விட்டாள், எங்களைப் பிடித்துக் கொண்டு போகப் போகிறார்கள்’ என்றான்…எனக்கோ ஒரே சிரிப்பு. அப்படி எல்லாம் நடக்காது.. பெரிய பையன்களை மிரட்ட ஏதாவது சொல்லி இருப்பார்கள் என்று கீழே போய்ப் பார்க்கச் செல்ல நினைத்தேன்…வேண்டாம்…நீ வராதே என்று தடுத்தான். மேலும் சில வாண்டுகள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்…எல்லோரும் கூடிக் கூடிக் குசுகுசு என்று ஏதோ திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். என்ன என்று அருகே சென்று கேட்டேன்…உஷ்….ரகசியம்..சொல்ல மாட்டோம் என்றான் ரிஷி.. சரி, யாரிடமும் சொல்ல மாட்டேன்..சத்தியம் எனக்கு மட்டும் காட்டு என்றேன்…அவர்கள் தயாரித்திருந்த கடிதத்தைக் காட்டினான்.

ஒரு பெண்ணின் முகம் வரையப் பட்டிருந்தது மேலாக. அவர் வாயைப் பிளந்தால்தான் கடிதம் திறக்கும்..அப்படி கற்பனையில் வடிவமைத்திருந்தனர். உள்ளே என்ன எழுதி இருந்தது தெரியுமா…..
Dear Bad Word Caller
You don’t know what we can do
You don’t know who my parents are….
They are Rohini and Raghuvaran….

They can turn the whole country against you…
yours
XXXXXXX

அதாவது, எப்போதும் கெட்ட வார்த்தைகளால் குழந்தைகளை அர்ச்சிப்பவராம் அதனால் அந்தப் பெயர்..ஆனாலும் டியர் என்றே தொடங்கி இருந்தனர். அம்மாவையும், அப்பாவையும் பார்க்க நிறைய பேர் வருவதால், அவர்கள் நினைத்தால் இந்த நாட்டையே அந்தப் பெண்மணிக்கு எதிராகத் திருப்பி விடுவார்களாம்…எங்கள் பெயரைச் சொல்லிவிட்டு தனது பெயரை எழுதாமல் மிரட்டல் கடிதமாம்….

இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன் இந்தக் கடிதத்தை…குழந்தைகளுக்கு கடிதம் எழுத வாய்ப்பு கிடைத்தால் எத்தனையெத்தனை அருமையான செய்திகள் நமக்குக் கிடைக்கும்…தங்களது பதிலை எதிர்பார்த்து புத்தகத்தை வாசியுங்கள்…

வாசிக்க வைப்போம் குழந்தைகளை….வாசிப்பு நம்மையும் உயர்த்தட்டும்…

ஜனவரி 26, 2016 அன்று சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் பேசியதிலிருந்து…

தொகுப்பு: எஸ்.வி. வேணுகோபாலன்

Related posts

Leave a Comment