You are here
நிகழ்வு 

புதிய புத்தகங்களின் அணிவகுப்பில் ​13வது திருப்பூர் புத்தகத் திருவிழா!

திருப்பூரின் அடையாளங்களில் ஒன்றாக பெயர் பெற்றுவிட்ட 13வது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜனவரி 29 ஆம் தேதி கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் கோலாகலமாகத் தொடங்கியது.
சமூக முன்னேற்றத்திற்காக வாசிப்புப் பழக்கத்தை இளைய தலைமுறையிடம் பரவலாக வலுப்படுத்தும் வகையில் பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு இந்த புத்தகத் திருவிழா திருப்பூர் மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் இக்கண்காட்சியில் இடம் பெற விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவதே இதற்குச் சான்று.
திருப்பூர் வாசிக்கிறது
இந்த புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே ‘திருப்பூர் வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. “மனிதன் மகத்தானவன்” என்ற புத்தகம் 15 ஆயிரம் பிரதிகள் திருப்பூர் வட்டாரக் கல்விநிறுவனங்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு பல்லாயிரம் பேர் வாசித்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக, நோபல் விருது பெற்ற தமிழ்நாட்டு விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் நினைவு தினத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி அறிவியல் சிந்தனையை மாணவர்கள் நெஞ்சங்களில் ஆழமாக வித்திட்டது.
சேமிப்பும், புத்தகமும்
திருப்பூர் மாநகர் முழுவதும் பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு உண்டியல் வழங்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு வழங்கப்பட்ட அந்த உண்டியலில் பணம் சேமித்து புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்க ஊக்குவிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு சேமிப்புப் பழக்கமும், புத்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கமும் உருவாகும். எதிர்காலத் தலைமுறையை ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுக்கும் ஒரு பண்பாட்டு நிகழ்வாக இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் இந்நிகழ்ச்சி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடங்கியது திருவிழா
இந்த ஆண்டு 10 நாட்கள் கண்காட்சியை மாநகர துணை மேயர் சு.குணசேகரன் தொடங்கி வைத்தார். திருப்பூர் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல் தலைமை ஏற்றார். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் என 84 நிறுவனங்கள் சார்பில் 115 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக, தமிழ் இந்து, தினமணி, தினத்தந்தி, தினமலர், தீக்கதிர் நாளிதழ்களுக்கு என ஐந்து அரங்குகள் தனியாக வழங்கப்பட்டுள்ளன.
ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புதிய புத்தகங்கள் அறிமுகமாகும். ஆனால் சென்னை வெள்ளம் காரணமாக அங்கு கண்காட்சி நடத்த இயலாத சூழலில் அங்கு அறிமுகமாக இருந்த புதிய புத்தகங்கள் திருப்பூர் கண்காட்சியில் விற்பனைக்கு வருகின்றன.
சாகித்ய அகாடமி, விகடன், காலச்சுவடு, கௌரா, புதிய தலைமுறை, விஜயா, தமிழினி, உயிர்மை, என்சிபிஎச், கண்ணதாசன், பெரியார், எதிர், புக்ஸ் பார் சில்ரன், பாரதி, பின்னல், கிழக்கு உள்பட முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன.
பார்வையாளர்கள்
திருப்பூர் புத்தகத் திருவிழாவில் குழந்தைகள், பெண்கள் பங்கேற்பு எப்போதும் அதிகமாக இருக்கும். இம்முறையும் அவர்கள் வருகை கூடுதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை கண்காட்சியில் ரூ.1000 அளவுக்கு புத்தகங்கள் வாங்குவோருக்கு ‘நூல் ஆர்வலர்’சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றதன.
திருப்பூர் தொழில் நகரம் என்ற முறையில் அனைத்து தொழில் உற்பத்தியாளர் அமைப்புகளும் தங்கள் சங்க உறுப்பினர் நிறுவனங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களை இக்கண்காட்சியைக் காண ஏற்பாடு செய்யுமாறு வரவேற்புக்குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அனைத்து உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் கடிதம் எழுதப்படும் என்றும் தெரிவித்தனர். கடந்த காலங்களில் கண்காட்சியைக் காண பனியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கியது, புத்தகங்கள் வாங்கிய ரசீதைக் கொடுத்தால் நிறுவனமே அதற்குரிய தொகையை வழங்குவது, உரிமையாளரே நேரடியாக தொழிலாளர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. இம்முறையும் தொழிலாளர்களை கூடுதலாக இதில் பங்கேற்கச் செய்யலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியை கண்டு புத்தகங்கள் வாங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்திமாலைப் பொழுதுகளில்…
வழக்கம் போல் தினமும் அந்தி மாலைப் பொழுதுகளில் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகள் இந்த திருவிழாவுக்கு வலிமை சேர்த்து வருகின்றன.
இந்த ஆண்டு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.பாஸ்கரன், பேராசிரியர் அப்துல்காதர், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நாவலாசிரியர் சு.வெங்கடேசன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், பத்திரிகையாளர் ஞானி, கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன், க.திருநாவுக்கரசு ஐபிஎஸ்., பழ.கருப்பையா, முனைவர் சா.நீலகண்டன், முனைவர் ச.குருஞானாம்பிகா, புலவர் இரா.மாது, கவிதா ஜவஹர், கே.கனகராஜ், மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் மாலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
வெற்றி பெற்றோருக்குப் பாராட்டு
இளைய தலைமுறையின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவது மட்டுமில்லாமல், படைப்புத் திறனை வெளிக்கொண்டு வரவும் திருப்பூர் புத்தகத் திருவிழா முனைப்போடு வாய்ப்பளித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி திருப்பூர் மாநகரில் குமார்நகர், பாண்டியன்நகர், இடுவம்பாளையம் பள்ளிகள் உள்பட மாவட்டத்தில் 9 இடங்களில் மாணாக்கர்களுக்கான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 10 ஆயிரம் மாணாக்கர்கள் பங்கேற்றனர். இந்த திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
10 நாள் நிகழ்வில் ஒரு நாள் திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது வழங்கும் விழாவாக நடைபெறும். இந்த ஆண்டும் படைப்பாளிகளுக்குப் பெருமை சேர்க்கும் திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது விழா பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
பிப்ரவரி 6 ஆம் தேதி அரசியல் அறம் என்ற தலைப்பில் பழ. கருப்பையா சொற்பொழிவாற்றுகிறார். பிப்ரவரி 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பேராசிரியர் அப்துல் காதர் நடுவராக திகழ, புத்தகங்கள் வாசித்து மகிழவா? நேசித்து வாழவா? என்ற தலைப்பில் சிந்தனைப் பட்டிமன்றத்தோடு புத்தகத் திருவிழா நிறைவு பெறுகிறது.
குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் மிகச்சிறப்பான பண்பாட்டு பொழுதுபோக்குத் திருவிழாவாகவும் இது திகழும். அரசு, கல்வித்துறையின் கூடுதல் ஒத்துழைப்புக் கிடைக்கும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர் எண்ணிக்கையும், புத்தக விற்பனையும் கூடும் ​ என எதிர்பார்ப்பதாக வரவேற்புக்குழுத் தலைவர் எம்பரர் வி.பொன்னுசாமி, பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார் அகமது ஆகியோர் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment