You are here

கூடலில் மனிதக் கூடல்

ச. தமிழ்ச்செல்வன்

வெள்ளம் சூழ்ந்த மனநிலையிலிருந்து விடுபட முடியாததாகவே சென்ற மாதம் கடந்து போனது.எதையும் வாசிக்கிற மனநிலையும் வாய்க்கவில்லை.முதல் மழைக்கும் இரண்டாவது மழைக்கும் நடுவில் ஒருநாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு சிறப்பு மாநாட்டை மதுரையில் நடத்தி முடித்தோம். மயிரிழையில் தப்பியதுபோல ஆனது. மாநாடுகளின் சம்பிரதாய நடவடிக்கைகளுக்கு அப்பால் பலரையும் ஓரிடத்தில் ஒரே நாளில் சந்திக்கும் மகிழ்ச்சியும் குதூகலமும் மாநாடுகளின் மிக முக்கியமான உபவிளைவாகும்.

1975-ல் தமுஎசவின் முதல் மாநாடு நடைபெற்ற அதே மதுரை தமுக்கம் கலை அரங்கில் இம்மாநாடு நடந்தது.மாநகராட்சிக்குச் சொந்தமான அக்கலையரங்கம் அழுது வடிந்து கொண்டிருந்தது.ஒரு பொது நிறுவனம் பராமரிக்கப்படாமலும் தற்காலப்படுத்தப்படாமலும் இருப்பது நம் சமூகத்தின் அழுகிய மனநிலையின் ஒரு பகுதி. பிரபஞ்சன் இரண்டுநாள் எங்களோடு இருந்தார். ஆனால்,நான் ஒருநாள்தான் அவரோடு இருக்க முடிந்தது. வண்ணதாசன் கலை இரவின் கடைசி நிகழ்ச்சி முடியும்வரை இருந்து தோழர்களை உற்சாகப்படுத்திச் சென்றார்.ரோகிணி தோழர்களோடு தோழராக மாநாட்டில் முழுதாகப் பங்கேற்றார்.இந்தச் சந்திப்புகள் நம்மை முன்னேற்றம் செய்தன எனலாம்.

முதல் நாள் இரவே எங்கோ ஒரு மாவட்டத்தில் போராடிவிட்டு எங்களோடு வந்து கலந்தார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ்.அவர் என்னோடும்
எஸ்.ராமச்சந்திரனோடும் சேர்ந்து ஒரு பொதுப்பணித்துறை அறையில் தங்கினார். எனக்கு எப்போதும் சக்தி தரும் தோழராக சாமுவேல்ராஜ் இருக்கிறார். தமிழகம் முழுவதும் அறிவொளி இயக்கம் கொடிகட்டிப் பறந்த நாட்களில் டாக்டர் ஆத்ரேயா,பேராசிரியர் ச.மாடசாமியின் தளபதிகளாகச் செயல்பட்டவர்கள் நாங்கள். சாமு விருதுநகரிலும் நான் நெல்லையிலுமென.அக்காலத்தில் சாதி மறுத்துச் சமயம் மறுத்து நடந்த எண்ணற்ற அறிவொளித் திருமணங்களில் சாமுவேல்-சுகந்தி திருமணம் தனிச்சிறப்பு வாய்ந்தது.அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்பது திருமணங்களுக்கு மிகப்பொருந்தும் வாசகம்.இன்று சாமு ஒரு போராடும் அமைப்பின் தளபதி என்றால், சுகந்தி மாதர்சங்கத்தின் மாநிலச்செயலாளராகக் களத்தில் நிற்கிறார். ஒருவருக்கொருவர் சளைக்காத போராளிகள்.இருவருமே சாதிய சக்திகளின் கொலை மிரட்டலுக்கு ஆளாகியிருப்பவர்கள்.இரண்டு பெண் குழந்தைகளும் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.குடும்பம் என நம் பொதுப்புத்தியில் ஏறியிருக்கும் பிம்பத்தோடு பொருந்தவே முடியாத குடும்ப வாழ்வு அவர்களுக்கு.தொலைபேசியின் தொடர்பு எல்லைக்குள் ஜீவித்திருக்கும் நம்முடைய இயக்கத்தின் பல குடும்பங்களில் ஒன்று அவர்களுடையது.அன்று இரவு நாங்கள் பலதும் கதைத்துக்கொண்டிருந்தோம்.மறுநாள் காலையில் மாநாடும் என் பிறந்த நாளுமாக விடிந்தது.முகநூலில் முதல் வாழ்த்து சாமுவின் வாழ்த்து.பிறந்த நாளெல்லாம் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.முகநூலும் செல்பேசியும் வந்து இந்த அலப்பறைகளைத் துவக்கி வைத்துவிட்டன.சாமுவின் வாழ்த்துடன் துவங்கிய இந்தப் பிறந்த நாளின் இனிப்பு இன்னும் என் நாவுக்கடியில் இனித்துக்கொண்டிருக்கிறது.

‘ரொம்பகாலத்துக்கப்புறம் இன்றுதான் வாய்விட்டுச் சிரிக்கிறேன் தமிழ்’ என்கிற வண்ணதாசனின் வார்த்தைகள் மனசில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன.முன்னர் ஒருமுறை பகிர்ந்துகொண்ட அவர் மனதின் சோகங்கள் எனக்கு அந்தச் சிரிப்பின் கனத்தை என் மனதில் இன்னும் அழுத்தமாகப் பதிவேற்றம் செய்தன.ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்குமல்லவா.அந்தச் சிரிப்பின் தருணத்தைப் படம்பிடித்த அன்புத்தம்பி தோழர் ச.சுப்பாராவின் மெல்லிய சிரித்த முகமும் கூடவே வந்துகொண்டிருக்கிறது.அம்பாசமுத்திரத்தில் 80களின் துவக்கத்தில் நானும் வண்ணதாசனும் அடுத்தடுத்த கட்டிடங்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தோம்.இருவரின் அலுவலகங்களுக்கு அருகில் பொதுவாக ஒரு டீக்கடை.அதில்தான் இருவரும் தேநீருக்குச் செல்வோம்.தேநீர் அதற்குள் தீர்ந்துவிட்டதே என்றிருக்கும்.அப்போது கதைப்பித்தன் அங்கே எங்களையெல்லாம் இணைத்து பொதிகை திரைப்படச்சங்கத்தை நடத்தி வந்தார்.(திரைப்படச்சங்கம் நட்த்துவதில் கதைப்பித்தன் அப்படி ஒரு கிறுக்காக இருந்தார் அந்த நாட்களில்)நானும் வண்ணதாசனும் சேர்ந்தே பல உலகத்திரைப்படங்களை அங்கு பார்த்தோம்.தார்க்கோவ்ஸ்கியின் ஆண்ட்ரூ ருபிலியோவ் பார்த்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டே நடந்து,திடீரெனப் பஸ் வர, நான் பத்துமணி பஸ்ஸை ஓடிப்பிடித்த இரவு நேற்றிரவுபோல்தான் இருக்கிறது.நான் இன்னும் அந்த பஸ்ஸைப் பின் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கிறேன்-வண்ணதாசன் பின்னால் நின்று நான் ஓடுவதை இன்னும் பார்த்துக்கொண்டிருக்க.

மதுரை மாநாட்டில் கறுப்புச் சட்டையுடன் அன்றலர்ந்த மலர்போலப் பிரசன்னமாகி எங்களைத் தன் சிரிப்பாலும் பேச்சாலும் திணறடித்தார் வேல.ராமமூர்த்தி என்கிற எங்கள் வேலா.முந்தின நாள்வரை பரபரப்பாக படப்பிடிப்பில்(இப்போ பாஸ் ஸ்டார் ஆகிக் கலக்கிட்டிருக்காருல்ல)இருந்துவிட்டு மிகுந்த பொறுப்புணர்வுடன் மாநாட்டுக்கு வந்துவிட்டார்.கருவக்காட்டு எழுத்து என்கிற பிரகடனத்துடன் வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்து வாழ்க்கையைச் சொல்லி வரும் அவரைப் பின் தொடர்ந்து அந்நிலப்பரப்பிலிருந்து இன்னும் பல படைப்பாளிகள் வரவேண்டும்.இளமை பொங்கும் வேலா
1975-ல் தமுஎசவைத் துவக்கிய முன்னோடிகள் 32 பேரில் ஒருவர் என்று சொன்னால் யாரும் லேசில் நம்ப மறுக்கிறார்கள்.1975 முதல் 2005 வரை 30 ஆண்டுகள் சங்கத்தின் பொருளாளராக இருந்த தோழர் தி.வரதராசன் கூட்டத்தில் எங்கோ கரைந்திருந்தார்.ஒருபோதும் முன்னரங்குக்கு வராத தன்னடக்கம் அவருடையது.நமக்கெல்லாம் அது வரலை.

மதுரை மண்ணில் தமுஎசவை வேர் பிடிக்கச்செய்த எங்கள் முன்னோடி தோழர் ப.ரத்தினம் அவர்கள் மேடையில் எங்களோடு நின்று எங்களுக்கெல்லாம் கைகொடுத்தார்.அவரைப்பற்றி களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் தொடரில் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையுடன் கூடிய வண்ணக்கதிரை நூற்றுக்கணக்கான பிரதிகள் வாங்கி மதுரைத்தோழர்கள் மக்களுக்கு விநியோகித்துக்கொண்டிருந்தார்கள்.இலக்கியக் குறும்புகள் பல செய்த 1969-ல் துவக்கப்பட்ட மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் நிரந்தரச் செயலாளராகச் செயல்பட்ட தோழர் சிகரம் ச.செந்தில்நாதனும், அடுத்த நாவல் விவசாய வாழ்வைப்பற்றியது தஞ்சாவூர் பற்றிய உன் சேகரிப்புகளை எனக்கு நகலெடுத்துத் தா என்று இந்த வயதிலும் என்னைத் துரத்திக்கொண்டிருக்கும் தோழர் டி.செல்வராஜ், முன்னே போல எழுதவும் படிக்கவுமான மனநிலையே இப்போ இல்லை என்று சொல்லி எங்களை அதிர்ச்சிக்குள் அமிழ்த்திய தோழர் அருணன் என எம் முன்னோடிகள் எல்லோரும் எங்களோடு மேடையில் இருந்த நிமிடங்கள் எனக்கு மிகுந்த உணர்ச்சிகரமான நிமிடங்களாக இருந்தன.உடல்நலக்குறைவால் மாநாட்டுக்கு வர முடியாமல் போன தோழர்கள் கு.சின்னப்பபாரதி,மேலாண்மை பொன்னுச்சாமி,காஸ்யபன் ஆகியோரது நினைவுகள் தாக்கியபடி இருந்தன.நம்ம கதை எத்தனை நாளைக்கோ என்று ஒரு வரி மனத்திரையின் கீழே செய்திபோல ஓடிக்கொண்டேயிருந்தது. யாரோடெல்லாம் அடிக்கடி சண்டை போடுகிறோமோ அவர்கள்தான் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள் என்பது என் வாழ்வில் எனக்கு தொடர்ந்து கிடைக்கும் வரமாகும்.அதிகச் சண்டை போட்டது தோழர்.கே.முத்தையாவுடனும் மாநாட்டுக்கு வராத இந்த மூன்று பேருடனும்தான்.இவர்களைத்தான் மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற ஆசை வருகிறது.என் மனதின் இந்த வினோதம் எனக்கே பிடிபடவில்லை.

இயக்கத்தின் இந்த முன்னோடிகள் எம்மிடம் கையளித்த கொடியைத் தளரவிடாமல் உயர்த்திப்பிடிக்க மனதுக்குள் உண்ர்ச்சிகரமாகச் சபதம் செய்துகொண்டேயிருந்தேன் -மேடையில் பிற வேலைகளில் ஈடுபட்டபடி.கேலியும் கிண்டலுமாக இயக்கப்பணிகளில் ஈடுபட்டாலும் இதுபோன்ற மாநாடுகளில் எப்போதும் உணர்ச்சிகரமான மனநிலையுடனேதான் இருந்து வருகிறேன்.பல சமயம் பகுத்தறிவே மங்கிவிடுமளவுக்கு உணர்ச்சிவசமாகிவிடுவதும் உண்டு.(இன்னும் சொல்வதானால், மார்க்சிஸ்ட் கட்சி மாநாடுகளில் தியாகிகள் ஜோதி எடுத்து வரும் அந்த நிமிடத்தில் மனம் கதறி அழுது அப்புறம்தான் முஷ்டிகளை என்னால் உயர்த்த முடிந்திருக்கிறது.ஒவ்வொரு மாநாட்டிலும் இதுதான் கதை.)
எல்லோருடனும் ஒரு செல்லச் சண்டையைப் போட்டபடி ஓடிக்கொண்டிருக்கும் தோழன் ஸ்ரீரசா ஓவியங்களாலும் தமுஎகச வரலாற்றுக் கண்காட்சியாலும் மாநாட்டையே நிறைத்திருந்தான்.வேலை என்று வந்து விட்டால் அவன் ஒரு பேய்தான்.ஓவியன் வெண்புறா இன்னொரு ராப்பிசாசு.தமிழின் நம்பர் ஒன் ஓவியனாக உயர்ந்திருக்க வேண்டிய வெண்புறாவை தட்டிபோர்டுக் கலைக்கு மேலாக உயரவிடாமல் நாம்தான் கெடுத்துவிட்டோம் என்று குற்ற உணர்வுடன் சு.வெங்கடேசன் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘பட்டிக்காடா பட்டணமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் நடித்திருக்கிறேன்.டைட்டில்லே கூட என் பேர் வரும்.மற்றும் பலர் என்று..’ என்று எல்லோரையும் சிரிக்க வைத்து வேலை வாங்கும் சாந்தாராமும் எப்போதும் தம் மீது எந்த வெளிச்சமும் படாவிட்டாலும் இயக்கத்துக்காக உழைத்துக்கொண்டே இருக்கும் ஸ்ரீதரும் வேலாயுதமும் என ஆளுக்கொரு கைகொடுத்துக் கம்பீரமாகத் தூக்கி நிறுத்தினார்கள் மாநாட்டை.

‘அப்பா… எனக்கான புத்தகத்தைக் கொண்டு வந்தீர்களா’ என்று கேட்டபடி என் பிறந்தநாளுக்கான பழத்துண்டுகளோடு அருகில் வந்து சிரித்துக்கொண்டிருந்த வளரும் இலக்கியவாதியான தோழர் ஜீவலட்சுமியும் சேலத்துக் கலையரசனும் அய்யனாரும் கார்த்தியும் எங்கள் எதிர்கால நம்பிக்கைகள்.

மாநாட்டில் என்னவெல்லாம் நடந்தது என்பதை எழுத வேறு இடங்கள் எனக்குக் கிடைக்கும்.ஆனால் இந்த மனிதர்களையும் இந்த உறவுகளையும் இயக்கத்துக்கு உள்ளும் புறமுமாக என் மனதோடு பின்னிக்கிடக்கும் இவர்களின் அன்பையும் நெருக்கத்தையும் மகத்துவத்தையும் போற்றிச் சில மேன்மையான வார்த்தைகளை இங்கே எழுதிவிட வேண்டும் என ஆசைப்பட்டேன்.

2
சேலத்தில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டின் கருத்தரங்கில் பேச அழைத்திருந்தார்கள். கருஞ்சட்டை வீரர்களால் நிரம்பியிருந்த அம்மாநாடு நம்பிக்கையளிப்பதாக இருந்தது. இந்து மதவாதம் என்கிற வார்த்தையைத் தவிர்த்துப் ’பார்ப்பன மதவாத’ என்று போட வேண்டிய நிலைமை இன்று உருவாகிவிட்டது. பெருவாரியான மக்கள் தம்மை இந்துக்கள் என்று அழுத்தமாக நம்பும் யதார்த்த நிலை சங் பரிவாரங்களுக்குச் சாதகமான நிலையாக நீடித்து வளர்ந்துவிட்டது. ஒருவகையில் இது பார்ப்பனியத்தின் வெற்றிதான். சேலம் போகும் பயணத்தில் ‘சங்கப்பாடல்களில் சாதி,தீண்டாமை இன்ன பிற’ என்கிற நூலை வாசித்தேன். முனைவர் வீ.எஸ்.ராஜம் எழுதி,மணற்கேணி வெளியீடாக வந்துள்ள நூல் அது. முன் முடிவுகள் இல்லாமல் இத்திசையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முக்கியமான முயற்சி இது. இக்கோணத்தில் சங்க காலத்தையும் கொஞ்சம் சங்கம் மருவிய காலத்தையும் இவர் ஆய்வு செய்திருக்கிறார். வறுமையும் ஏற்றத்தாழ்வும் இருந்தபோதும் சாதி,தீண்டாமை போன்றவை சங்க காலத்தில் இல்லை என்கிறார்.

சிலப்பதிகாரத்தில் மதுரையில் கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற கோவலனின் முன் வந்த பொற்கொல்லனை ‘விலங்குநடைச் செலவின்..கொல்லன்’ என்று இளங்கோ குறிக்கின்றார்.விலங்கு நடை என்பதற்கு அடியார்க்கு நல்லார் உரை ‘இழிகுலத்தோனாதலின் உயர்ந்தோர் வந்தவிடமெங்கும் விலங்கி நடத்தல்’ என்றும் உ.வே.சா. உரை ‘மேன்மக்களைக் கண்டு ஒதுங்கி நடத்தல்’ என்றும் வருகிறது. இந்த உரைகளில்தான் குலத்தாழ்ச்சி,தீண்டாமை என்கிற கோட்பாடுகள் முதன் முதலாக ஊடுருவுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.மிகுந்த சுவாரஸ்யமான பல செய்திகளோடு அமைந்த இந்த ஆய்வுநூல், பொருட்படுத்தி வாசித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரு நூல்.

வழக்கமான வேகத்தில் வாசிக்க முடியாத மழை,வெள்ள மாதமாக இம்மாதம் கடந்து போனது.
(தொடரும்)

Related posts

Leave a Comment