You are here

மீண்டெழும் மறுவாசிப்புகள் 10 : ஹஸ்தினாபுரத்தின் காற்றுகள்

ச.சுப்பாராவ்

    இதுவரை எழுதப்பட்ட மறுவாசிப்புகள் பெரும்பாலும் பாரதத்தின் முக்கிய மாந்தர்களின் பார்வையில்தான் எழுதப்படுகின்றன. அதுவும் பெண் பாத்திரத்தின் வழியான மறுவாசிப்பு என்றால் பாஞ்சாலியைத் தவிர வேறு யாரும் படைப்பாளிகளின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆனாலும், அந்த மஹாபாரதத்தில்தான் எத்தனை எத்தனை பெண்கள்! எல்லா வர்ணத்தைச் சேர்ந்த பெண்களும் வருகிறார்கள். எல்லோருக்கும் விதவிதமான துயரங்கள்! ஒருபக்கம் தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டியவளாக கம்பீரமாக உலா வரும் அதே பாத்திரத்தின் மறுபக்கத்தைப் பார்த்தால், அவள் வெளியே சொல்லாத சோகம் அவளது சாதனைக்கு, சந்தோஷத்திற்கு, வெற்றிக்கு,     இணையாக ஓடிக்கொண்டே இருக்கும். வானுலகிலிருந்து பூவுலகிற்கு வந்த கங்கையானாலும் சரி, மீனவ இனப் பெண்ணாகப் பிறந்து குருவம்சத்தின் பட்டத்தரசியான சத்யவதியானாலும் சரி; வெளியில் சொல்ல முடியாத துக்கம்தான் அவர்கள் வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அது இன்று ஒரு படைப்பாளியின் கண்களில் பட்டு ஒரு நாவலாகவும் உருவாகிவிட்டது.
சரத் கொமாரராஜூவின் தி விண்ட்ஸ் ஆஃப் ஹஸ்தினாபூர் என்ற நாவல், மஹாபாரதத்தில் நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத கதையின் துவக்கத்தை நகர்த்திச் செல்லும் மிக முக்கிய பெண் கதாபாத்திரங்களான கங்கை மற்றும் சத்யவதியின் கதைகளைச் சொல்லும் வித்தியாசமான மறுவாசிப்பு. கங்கையின் கதை மூன்றில் ஒரு பங்காகவும், சத்யவதியின் கதை மூன்றில் இரண்டு பங்காகவும் வருகிறது. மறுவாசிப்புக் கதைகளால் விளக்கமுடியாத சாபம் போன்ற விஷயங்கள் வருவதால் நாவலாசிரியர் கங்கையின் கதையைச் சுருக்கிவிட்டார் போலும்! தேவர்கள் அசுரர்கள் ஆகியோரை இமயமலைக்கு அப்பால் வசிக்கும் இனக் குழுக்களாகக் காட்டி, பிரமாதமாக ஆரம்பிக்கும் அவரால், கங்கையும் அஷ்ட வசுக்களும் சாபத்தால் பூமியில் பிறக்க நேர்வதை சரியாக விளக்கமுடியவில்லை என்றாலும் கூட அந்தப் பகுதியை எப்படியோ சமாளித்து சத்யவதியின் கதைக்கு வந்துவிடுகிறார். அங்கிருந்து நாவல் ஒரு மறுவாசிப்பு நாவல் எப்படி எழுதப்பட வேண்டுமோ அந்தவிதத்திலேயே வளர்கிறது.
சத்யவதி மீனவர் தலைவரின் மகள். சமூகக் கெடுபிடிகள் அத்தனை கடுமையாக இல்லாத காலகட்டத்தில், தன் இளமையால் பல இளைஞர்களை மயக்கி, அவர்களோடு இன்பமாக இருக்கும் ஒரு அழகான பெண். சந்தனு அவள் மேல் ஆசைகொள்வதும், தன் வாரிசுதான் அரியணை ஏறவேண்டும் என்ற அவளது கோரிக்கைக்காக கங்கை மைந்தன் பிரும்மச்சரிய விரதம் மேற்கொள்வதும் நாமறிந்த கதை. இது மறுவாசிப்பாளன் புகுந்து விளையாட சரியான இடம் என்று சரத் மிக அற்புதமாகக் கதையை நகர்த்துகிறார்.
‘இதுவரை இப்படியொரு மீனவக்குடியிருப்பு உன் நாட்டில் இருக்கிறது என்பதாவது உனக்குத் தெரியுமா?’ என்று ஆரம்பிக்கிறாள் அவள். இன்றும் தீராத மீனவர்களின் பிரச்னைகளைப் பட்டியல் போட்டு, சந்தனு மஹாராஜாவைத் தலைகுனிய வைக்கிறாள். அரசன் மீனவக் குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும், உடல்நலக்குறைவு என்றால் நகரத்திலுள்ள வைத்தியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், இறந்தவர்களைக் கண்ணியமாகப் புதைக்க இடம் வேண்டும், கங்கையிலும், யமுனையிலும் அவ்வப்போது வரும் வெள்ளங்களின் அபாயத்திலிருந்து தப்பிக்கும் விதமாக கரைகளைப் பலப்படுத்த வேண்டும். அரசவையில் ஒரு மீனவப் பிரதிநிதியை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் அவள் கோருவதாகப் போகிறது நாவல். நாவலின்படி, அவளுக்குப் பிறக்கும் வாரிசுக்கு அரசாட்சியில் உரிமை என்பதெல்லாம் அவள் கேட்பதல்ல. அவள் தந்தை கேட்பது. சந்தனுவால் எல்லாக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்ட பின்னரே திருமணம் நடக்கிறது. திருமணத்தின் போதே புரோகிதர்கள் மீனவப்பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை எப்படி அரசாள முடியும் என்று மன்னனைக் கடிந்து கொள்கிறார்கள். பீஷ்மன் பிறக்கப் போகும் குழந்தைக்கு தான் ஆசிரியனாக இருந்து அனைத்தையும் கற்றுத் தந்து மன்னனாகத் தயார் செய்வதாகச் சொல்கிறான். புரோகிதர்கள் மிகப் பணிவோடு, நீங்கள் நன்றாகக் கற்றுத் தந்துவிடுவீர்கள் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால், மீனவச்சியின் குழந்தைக்கு அவையெல்லாம் புரியுமா? கற்றுக் கொள்ளும் திறன் இருக்குமா? என்பதுதான் பிரச்னை என்கிறார்கள். இன்றளவும் கேட்கப்படும் இந்தக் கேள்வி அன்றுதான் முதன்முதலாக எழுந்தது போலும்! கடைசியில் பீஷ்மனின் பிடிவாதம் ஜெயிக்கிறது.
ஆனால் சத்யவதிக்குப் பிறந்த குழந்தைகள் சித்ராங்கதனும், விசித்திர வீரியனும் புரோகிதர்கள் சொன்னது போலவே பிறந்துவிட்டதுதான் சத்யவதியின் ஆறாத சோகம். ஒழுங்காகக் கணவனோடு குடும்பம் நடத்திப் பெற்ற பிள்ளைகள் கீழ்ஜாதித் தாயின் குழந்தைகள் என்பதால் பலவீனமானவர்களாக, எதற்கும் பீஷ்மனை நம்பி இருக்கும் பிச்சைக் காரர்களாக ஆகிவிட்டார்களோ என்று அந்தத் தாய் குமுறுகிறாள். இரு மகன்களும் அகால மரணமடைகிறார்கள். இளம் மருமகள்கள் மூலம் வம்சத்தை விருத்தி செய்ய தனக்கு முறைதவறிப் பிறந்த மகனைக் கெஞ்ச வேண்டிய நிலை. முறைதவறிப் பிறந்த போதிலும், மீனவச்சியின் மகன் என்றபோதிலும் பிராமணனுக்குப் பிறந்தவன் என்பதால் அவன் அனைவராலும் ஏற்கப்பட்ட ஒரு ஞானியாம்!. தாய் மீனவச்சி என்றாலும், தந்தை முனிவன் என்பதால் அவன் வேதங்களையே தொகுக்கும் தகுதி பெற்று விடுகிறானாம். இந்த முரண்பாடுகளெல்லாம் மனதில் உறுத்தினாலும் வேறுவழியில்லாமல் அவனைத்தான் அழைக்க வேண்டியதாகப் போய்விடுகிறது.
வந்த மகரிஷி வியாசன் தம்பி மனைவிகள், இலவச இணைப்பாக ஒரு வேலைக்காரி என்று சந்தோஷமாக இருந்துவிட்டு, தம்பி மனைவிகள் ஒத்துழைக்கவில்லை(!) என்று கோபம் கொண்டுவிட குழந்தைகள் சத்யவதி எதிர்பார்த்தது போல் ராஜ்ஜிய பாரத்தை சுமக்க வல்ல குழந்தைகளாகப் பிறக்காமல் போய்விடுகின்றன. வேலைக்காரி சற்று அனுசரித்து நடந்து கொள்ள நல்லவிதமாகக் குழந்தை பிறக்கும் என்று மகரிஷி அருள்வாக்கு சொல்லிப் போய்விடுகிறார்.  சத்யவதி, வேலைக்காரிக்குப் பிறக்கப் போகும் குழந்தையையும் தன் சொந்தப் பேரனாகக் கருதுகிறாள். வேலைக்காரியை தன் மருமகள்களுடன் அரண்மனையிலேயே வசிக்கச் சொல்கிறாள். இந்தக் குழந்தைகளின் வாழ்வு எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலை மனதில் எழ, அப்படியே படுக்கையில் சாய, ஹஸ்தினாபுரத்தின் மெல்லிய காற்று அவள் காதருகே வந்து இனிமேல் தான் பிரச்னைகளே ஆரம்பம் என்று சொல்வதுடன் நாவல் முடிகிறது.
இந்த நாவலின் தனிச்சிறப்பு, இதுவரை எந்த மறுவாசிப்பாளனும் தொடாத ஒரு அற்புதமான இடத்தைத் தொட்டதுதான். தன் வாழ்வின் அடுத்தடுத்த துன்பங்களில் சத்யவதி  மனம் குமுறிக்கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் மகன்கள் இறந்து, வாரிசுகள் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் போது, பீஷ்மன் அவளிடம் ஏதோ ஆலோசனை கேட்டுவிட்டு, அவள் பாதம் தொட்டு வணங்கிச் செல்கிறான். அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்துவிட்டு, தோள்தொட்டு அவனைத் தூக்கும் சத்யவதிக்கு உடல் சிலிர்க்கிறது. அவன் சத்யவதியைவிட ஓரிரு வயதுதான் இளையவன். நடுத்தர வயதில் பல போர்களில் பட்ட காயங்கள், அடர்த்தியான தாடி, அரசாட்சியின் பொறுப்பில் எத்தனையோ பிரச்னைகளைச் சந்தித்த அனுபவ முதிர்ச்சியில் அத்தனை அழகாக, கம்பீரமாக இருக்கிறான். அன்று ஹஸ்தினாபுரத்தின் மஹாராணியாக வேண்டும் என்பதற்காக எத்தனையோ நிபந்தனைகளைப் போட்டு, இவன் வாழ்வையும் கெடுத்து, ஒரு கிழ அரசனைக் கல்யாணம் செய்ததற்குப் பதிலாக இவனைத் திருமணம் செய்து கொண்டிருந்தால், தன் வாழ்வில் இத்தனை சிக்கல்கள் வந்தேயிருக்காதே என்று கண் கலங்குகிறாள் சத்யவதி. மனம் அப்படியே சுழன்று சுழன்று நதிக்கரைக்குப் போகிறது. அவள் ஒரு எளிய மீனவச்சி. அவளை இறுக்க அணைத்துக் கொண்டிருப்பவனின் முகம் சந்தனுவின் முகம் போல் முதலில் தெரிகிறது. பிறகு பார்த்தால் மெல்ல மெல்ல அது பீஷ்மனின் முகமாக மாறுகிறது. எல்லை மீறும் அந்தக் கனவையும் ஹஸ்தினாபுரத்தில் வீசும் காற்றுதான்  கலைக்கிறது.
இந்த நாவல், காவிய நாயகிகளுக்கும் கற்பனையில் மட்டுமே சந்தோஷம் என்பதைத் தேவலோகத்தில் பிறந்த கங்கை, மீனவச்சேரியில் பிறந்த சத்யவதி என்ற இரு பாத்திரங்களின் மனவோட்டங்களின் வழியே காட்டும் சிறந்த மறுவாசிப்பு.

Related posts

Leave a Comment