You are here

குழந்தைகளைக் கொண்டாடுவோம்…

பசியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் பெருமளவில் பின்தங்கிய ஒன்றாகவே இந்தியக் குழந்தை உள்ளது… அதன் உலகம் வெறுமைமிக்கது.               – அமர்தியா சென்
இதோ அடுத்த குழந்தைகள் தினம் வந்துவிட்டது. நேரு என்னவெல்லாம் செய்தார்… என்னவெல்லாம் சொன்னார்… என்பதிலிருந்து குழந்தைகள் கார்ட்டூன்… பள்ளி நிகழ்ச்சி, ஏன் எஃப்.எம் வானொலி கருத்து கேட்பது… குழந்தை வளர்ப்பு பற்றி நிபுணர்களின் டி.வி. நேரடி கேள்வி பதில்… அது இது என களமிறங்கப் பலரும் தயார்… ஸ்பான்சர் (அல்லது பவர்டு  பை) செய்ய சாக்லெட், ஐஸ்கிரீம், குளிர்பானம் முதல் பீஸா வரை தயாரிக்கும் கார்ப்பரேட் கம்பெனி எல்லாம் தயார்தான். ஆனால் இதெல்லாம் எந்தக் குழந்தைகளுக்காக? சராசரி பள்ளி நாளில் வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்… அதிலும் 100 பேர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் 43 பேர் எட்டாம் வகுப்பு வராமலேயே இடையில் படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்… NSSO (National Sample Survey Organisation) அறிக்கையை வாசித்தால், ஆராய்ந்தால் மேலும் பல அவலங்கள் தெரிய வருகின்றன. ஐந்து வயதுக்கும் முன் இறந்துபோகும் குழந்தைகள் ஆண்டுக்கு ஏழு லட்சம். நாட்டில் மொத்த மக்கள் தொகையில் குழந்தைகள் (14 வயதுக்கு உட்பட்டோர்) 37 கோடி. இதில் ஏறத்தாழ 30 கோடி பேர் பள்ளிகளில் உள்ளனர். எனவே பள்ளிக்கல்வி எட்டாத இந்திய குழந்தைகளின் எண்ணிக்கை நமது தமிழக மக்கள் தொகையை விட அதிகம்! அதிலும் பெண்குழந்தைகளின் நிலைமை மிகமிக மோசம்! பெண் குழந்தை  யாரோ ஒரு ஆணோடு  பள்ளி செல்லும் வழியில் பேசிவிட்டால் கொத்துக் கொத்தாக பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டுவிடும் கொடுமை. தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களில் தற்போது குழந்தைத் திருமணம் அதிகமாக உள்ளது. குழந்தைகளை பாலியல் தொழிலில் தள்ளிவிடும் ஏஜெண்டுகள் 17 மாவட்டங்கள் உள்ளடக்கிய பெரிய நெட்வொர்க் வைத்திருப்பது புதுவையில் பிடிபட்டுள்ளது. இதற்கிடையே பள்ளிகளில் குழந்தைகள் குறைந்துவிட்டதால் இருந்த சத்துணவுக் கூடங்களை மூடி, மாவட்ட மைய சமையல்கூடம் என அறிவித்துப் பல கிராமங்களில் அரசுப் பள்ளிகள் மூடு விழாக்கள் நடப்பது நம்மைத் திடுக்கிட வைக்கிறது. குழந்தைகள் உரிமையைப் பாதுகாக்க தேவை திறந்த மனப்பான்மையும் மனிதநேயமும் கொண்ட பிடிவாத அணுகுமுறை, சமூக விழிப்புணர்வு, குழந்தைகளைக் கொண்டாடும் கல்வி அமைப்பு. சிந்திப்போம்…. உண்மையான குழந்தைகள் தினத்தை நோக்கி முயற்சிகளை தொடர்வோம்.
– ஆசிரியர் குழு

Related posts

Leave a Comment