You are here
கட்டுரை 

இல்லந்தோறும் நூலகம்

பேரா.என்.மணி

  • இன்று முதல் நான், 20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன்.
  • எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள்.
  • எமது பேரக்குழந்தைகள் குடும்ப நூலகத்தை 2000 புத்தகங்களாக்குவார்கள்.
  • நான் எங்களுடைய நூலகத்தை வாழ்க்கைக்கான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும்  கருதுவேன்.
  • நாங்கள் எங்களுடையகுடும்ப  உறுப்பினர்களுடன் படிப்பதற்கு குடும்ப நூலகத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் செலவழிப்போம்.
    டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

அது ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. நகரத்தில் இருக்கும் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் கல்லூரி. ‘ தாண்டிய பொது வாசிப்பு எத்தனை பேருக்கு உண்டு?” என்பதுதான் கேள்வி. கேள்விக்கு இருவர் மட்டுமே கையை உயர்த்தினர். அதில் ஒருவர் வேதாகமம் உள்ளிட்ட நூல்களைப் படிப்பவர், மற்றொருவர் சற்றே பொதுவாசிப்புப் பழக்கம் உள்ளவர் என்று தெரிந்தது. மூன்றாம் ஆண்டு பட்ட வகுப்புப் பயிலும் 35 மாணவர்களின் நிலை இது. பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பணிபுரியும் ஆசிரியர்களிடையே மலிந்துகிடக்கும் வாசிப்புவறட்சியா? பொது வாசிப்புப் பழக்கம் மேம்படத் திட்டமிட்ட ஏற்பாடு (பாடத்திட்டம் போல்) இல்லாமல் இருப்பதா? நூலக இயக்கம், புத்தகக் கண்காட்சிகள், வாசகர் வட்டங்கள், இலக்கியசந்திப்புகள் வாசிப்பை வளப்படுத்தும் பொதுநல இயக்கங்களின் போதுமான செயல்பாடுகள் இன்மையா? இவையெல்லாம் இரண்டறக் கலந்ததா? எது காரணம்? எந்த அளவுக்கு காரணம் என்பதை அறுதியிட்டுக் கூற இயலவில்லை.
தற்போது அதிகரித்து வரும் புத்தகக் கண்காட்சிகள், அதற்கான முயற்சிகள், சிறிய அளவில் என்றாலும் ஆசிரியர்கள் மத்தியில் வாசிப்பை மேம்படுத்த “மாற்றுக் கல்விக்கான வாசிப்புஇயக்கம்” சிறு குறு வாசகர் வட்டங்கள், நூலகம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற புத்தகப் பிரியர்களின் பிரச்சார யுக்திகள் ஆகியவை வாசிப்புப் பழக்கம் கைகூட ஆங்காங்கே எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளே.
குமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கிளையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள ஒரு செயல்பாடு மேற்கூறப்பட்ட எல்லாச் செயல்பாடுகளில் / முயற்சிகளில் இருந்து தனித்துவம்மிக்கதாகக் காட்சி அளிக்கிறது. இவர்களது இந்த முயற்சிக்கு “இல்லந்தோறும் நூலகம்” என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். செப்டம்பர் மாத இறுதிக்குள் 1000 வீடுகளில் இந்த நூலகத்தை நிறுவப்போகிறார்கள். அறிவியல் இயக்கத்தின் இம்மாவட்ட அங்கத்தினர்கள், “மலர்” சுய உதவிக் குழுப் பெண்கள் இப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை வாங்கிக் கொள்ள சம்மதிக்கும் இல்லங்களுக்கு குழுவாகச் செல்கின்றனர். அந்த வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்களோடு அருகில் உள்ள குழந்தைகளையும் அழைத்துக் கொள்கின்றனர். நூலகத் திறப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாராகிறது. ஒருவர் வந்திருப்பவர்களை சுருக்கமாக அறிமுகம் செய்கிறார்.மற்றொருவர் சுருக்கமான வரவேற்புரையும் செய்கிறார். அந்த வீட்டின் அங்கத்தினர்கள் பெயர் தாங்கிய புத்தகக் கட்டு, அவ்வீட்டின் பெரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. புத்தகக் கட்டுப்பிரிக்கப்பட்டு, மற்றொருவர் சுருக்கமான நூல் அறிமுகத்தையும் செய்கிறார். நூல் அறிமுகப்படலம் முடிந்தவுடன், அவ்வீட்டில் குழுமியிருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு புத்தகத்தைக்கொடுத்து, வந்திருப்பவர்களும் இணைந்து சிரித்த முகமாகப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் அந்த வீட்டுக்காரர் நூலகத்திற்கு ஒதுக்கியுள்ள இடத்தில் எல்லோருமாக இணைந்துபுத்தகங்களை அடுக்கிவைக்கின்றனர். நூலக இயக்கத்தினரும், அந்த வீட்டுப் பிரதிநிதி ஒருவரும் நன்றி கூற “ இல்லந்தோறும் நூலகம்” துவக்க நிகழ்வு நிறைவு பெறுகிறது. இருபது நிமிடநிகழ்வில் முதலில் “புத்தகம் பேசுது” என்ற பாடல் பாடப்பட்டு இறுதியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இருக்கிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு, ஜூலை 11, 12ல் குமரியில் நடக்கையில் எங்களைப் போன்றவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. நான் முதல்முதலில் கலந்துகொண்ட நிகழ்வு ஒரு மருத்துவமனையில் நடைபெற்றது. மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆலோசனை பெறவந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.மருத்துவரைக் காண வரும் மக்கள் இந்நூல்களை வாசிப்பார்களானால், ஒவ்வொரு நூலும் அதன் பங்குக்கான சிகிச்சையை வழங்கும். மருத்துவருக்கு உதவி செய்வதாகவும், மாற்றுமருத்துவமாகவும், சில நேரங்களில் அதற்கு மேலும் பணியாற்றும் என்று தோன்றியது. மருத்துவர், தன் சார்பாக ‘பொன்னியின் செல்வன்’ நூல் தொகுதியைக் கொண்டுவந்து சேர்த்து அன்றே அந்நூலகத்துக்கு பொலிவூட்டும் முயற்சியைத் தொடங்கினார். இந்நூல்களை முதலில் நாங்கள் படித்து முடிக்கிறோம் என்று செவிலியர்கள் குறிப்பிட்டது, இல்லந்தோறும் நூலகத்தின் முதல்வெற்றி என்று கூறலாம். இன்னுமிரண்டு இடங்களில் நூலகம் அமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டோம். அன்றைய தினம் மட்டும் 50 இல்லங்களில் நூலகம் அமைத்தனர். மாநிலத்தின்பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அந்த வீட்டுக்காரர்களுக்கு பெருத்த உற்சாகமளிக்கும் நிகழ்வாக அமைந்தது. எங்கள் வீட்டில் ஒரு நூலகம்அமைக்க எவ்வளவு தூரத்தில் இருந்தெல்லாம் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர். பக்கத்து வீட்டு சிறார்களை ஓடி, ஓடி அழைத்து வந்தனர்.
வீட்டில் ஒரு நூலகம் அமையவிருக்கிறது என்பதை உணர்ந்ததும், தங்கள் வீட்டில் இதுவரை படித்துவிட்டு மூலைமுடுக்குகளில் முடங்கிக்கிடந்த புத்தகங்கள் சாக்குப்பைகளில், ஜவ்வுக் காகிதங்களில் கட்டிப்போடப்பட்டிருந்த புத்தகங்கள் தூசி தட்டப்பட்டு, நூலகத்திற்கு வந்தன. ஒரு வீட்டில் 1000 புத்தகங்கள் வரை மூட்டை முடிச்சுகளில் இருந்து விடுதலை பெற்று நூலகம் என்னும் தனக்குரிய இடத்திற்கு வந்துசேர்ந்திருக்கிறது. இல்லந்தோறும் நூலக இயக்கத்தில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன” என்ற எங்கள் கேள்விக்கு, “டிவி, கம்ப்யூட்டர், அலைபேசி என எல்லாம் சேர்ந்து வாசிப்பையும் புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தையும் முடக்கிப் போட்டுவிட்டது” என்று எங்களிடம் இருந்துவந்த எண்ணம் இன்று பறந்துவிட்டது என்றபதிலுரைத்தனர். தங்கள் வீட்டின் அழகைக் கூட்டவும், பெருமை சேர்க்கவும் இந்த நூலகம் அமைந்துவிட்டது என்றனர். மிகப் பெரிய வீடு ஒன்றிற்கு சென்றோம். 20X20 அளவில் அமைந்திருக்கும் வீட்டின்கூடத்தில் மருந்துக்குகூட புத்தகம் இல்லை. தற்போது அமையவிருக்கும் நூலகம் அந்த வீட்டில் நுழைந்துள்ள முதல் புத்தகங்கள் என்பதில் அக்குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
எங்கள் குழுவினர் சென்ற பல வீடுகளில் பெருவாரியாகப் பெண்களும் சிறுவர்களும் அதிகமாக இருந்தனர். அவர்களுக்கு ஏற்றதாக நம் புத்தகங்கள் இல்லையே என்ற ஏக்கமும் எங்களிடம்இருந்தது. தீவிர புத்தக வாசிப்பாளர் ஒருவரின் இல்லத்திலும் இந்த நிகழ்வு நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற மக்கள் போராட்ட வரலாறு நூல் ஒன்றைப்படித்துக் கொண்டிருந்தார். நமது நூல்களைப் பார்த்துவிட்டு இன்னும் தீவிரமான நூல்கள் வேண்டும் எனக் கோரினார். “நாங்கள் தற்போது உருவாக்கி வரும் நூலகங்களுக்கு ஒரு எண் கொடுப்போம். அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் மாதாந்திர மடலை உங்களுக்கும் அனுப்பிவைப்போம். உங்களுக்குத் தேவைப்படும் நூல்களைக் கூறுங்கள். எந்தப்பதிப்பகமாக இருந்தாலும் வாங்கி வருகிறோம்” என்றனர்.
அறிவொளிக்கால நண்பர்களையும் இந்த முயற்சிக்கு இணைசேர்த்து இருந்தனர். “அறிவொளிக்குப் பிறகு எத்தனையோ சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டேன். ஆனால் அறிவொளிக்குப் பிறகு இன்றுதான் அந்தத் துடிப்பும் வேகமும் என்னுள் அதிகரிக்கக் கண்டேன் என்றார் ஒரு பேராசிரியர். பல்வேறு வகைப்பட்ட இல்லங்களில் இந்நூலகம் அமைக்கப்படுகிறது. ஒருவீட்டில் ஆயிரம்ரூபாயைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பொருத்தமான நூல்களை அவர்களுக்கு வழங்கியிருந்தால் அந்த வீட்டில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டிருக்குமா என்பதும், இவ்வளவு உயிரோட்டமாக இருந்திருக்குமா என்பதும் சந்தேகமே. புத்தகங்களை வாங்குவதோடு மட்டுமல்லாமல் வாசிக்கத் தூண்டியிருக்குமா? பழைய நூல்களைத் தேடிச் சேர்க்க வித்திட்டிருக்குமா என்பது பெரும்  கேள்விக்குறியே.
இல்லந்தோறும் நூலகம் அமைக்கச் செல்லும் இடங்களில், இரண்டு நிகழ்வுகள்; பெரும் வரவேற்பையும், வாசிப்பை நேசிக்கவும், சுவாசிக்கவும் தூண்டும் முக்கிய நிகழ்வுகள்; ஒன்று, நூலகம்அமையவுள்ள வீட்டில் கூடியதும் பாடப்படும் பாடல். “புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது” எனத் துவங்கும் அப்பாடல், பலவித ராகங்களில் புத்தகத்தின் பல்வேறு பரிமாணங்களைக் கூறிச்செல்கிறது.
“கடந்த காலத்தை நிகழ் காலத்தை….. எதிர்காலத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதை” புத்தகம் பேசுகிறது என்று இசைக்கும் போதும் சரி,
“உலகை மனிதரை இன்பத்தை துன்பத்தை                               அழகிய மலரை அணுகுண்டை                                                 வெற்றியை தோல்வியை நேசத்தை நாசத்தை-                   புத்தகம் பேசுது”
எனக் குரலெடுத்துக் கூட்டாய்ப் பாடும்போதும் சரி,
“புத்தகம் பேசும் பேச்சுக்கள் யாவும்                                                                                                                         காதினில் கேட்கலையா- உன் காதினில் கேட்கலையா”
புத்தகம் ஏதோ சொல்லத் துடிக்குது
உன்னிடம் வந்து இருக்கத் துடிக்குது” என்ற பாடல் வரிகள் தெறித்து விழும்போது, உண்மையிலேயே புத்தகங்களின் பேச்சையும், துடிப்பையும் உணர முடிகிறது. நமக்குள்ளும் புத்தங்களின் ஈர்ப்பும் துடிப்பும் அதிகரிக்கச் செய்கிறது. உற்றுக் கேட்பவர் மனதில் ஒருவித உணர்வு குடிகொண்டுவிடுகிறது,
”புத்தகம் உன்னை மடியில் கிடத்தி
ராஜா ராணி கதைகள் சொல்லும்
புத்தகங்களில் அறிவியலின் குரல்
ஓங்கி ஒலிக்கும் ஞானம் சுரக்கும்” என்று அடுத்த வரிகளும்
“புத்தங்களில் அடடா எத்தனை பேருலகம்” என்ற வரிகளைக் கேட்கும்போது உண்மையிலேயே புத்தகங்களின் மீதான சிலிர்ப்பு உடல் முழுவதும் பரவுகிறது. இறுதியாக மீண்டும் புத்தகம் ஏதோ சொல்லத் தவிக்குது; உன்னிடம் வந்து இருக்கத் துடிக்குது; புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது” என்று பாடலை நிறைவு செய்யும் போது இல்லந்தோறும் நூலகம் எதற்கு என்ற மொத்தப்பொருளையும் உணர்ந்து கொண்டுவிடுகின்றனர். நன்கு பயிற்சி பெற்றவர்கள் இப்பாடலைப் பாடுவதும் மேலும் சிறப்பு. இப்பாடலுக்கு இசை அமைத்து தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்றால் ‘புத்தகம் வாசிப்பு நூலகம்’ என்னும் வளர்ச்சி மிகுந்த பலனைத் தரும் என்று தோன்றுகிறது. இரண்டாவது அவர்கள் அழகுற வடிவமைத்திருக்கும் சான்றிதழை ஒப்படைக்கும் முறை. தமிழ்நாடுஅறிவியல் இயக்கத்தின் 18வது மாநில மாநாட்டை முன்னிட்டு, மக்களிடையே புத்தகங்களைச் சேகரித்தல், வாசித்தல், பகிர்ந்து கொள்ளல் என்னும் கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கில்  துவங்கப்பட்டுள்ள ”இல்லந்தோறும் நூலகம்” என்னும் திட்டத்தில் பங்கேற்று, தங்களது வீட்டில் நூலகத்தை அமைத்து அறிவைப் பரவலாக்கச் செய்யும் உங்களுக்கு (அந்த வீட்டின்  சிறியவர்கள் பெரியவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது) பாராட்டுக்கள் “ என்று சான்றிதழின் வாசகங்களைப் படித்துக் காட்டி பெரும் கரவொலிக்கிடையே ஒப்படைக்கின்றனர்.
இல்லந்தோறும் நூலகம் சான்றிதழிலேயே குறிப்பிட்டுள்ளது போல, “புத்தகங்களைச் சேகரித்தல், வாசித்தல், பகிர்ந்து கொள்ளல்” என்ற நெடும் தொடர் பயணத்தின் ஆகச் சிறந்த அறிவியல்பூர்வமான முயற்சி, யாரும் முன்னெடுக்காத முயற்சி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்திய அளவிலும் இத்தகைய முயற்சி முதல் முயற்சியாகவும் இருக்கலாம்.

Related posts

Leave a Comment