You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

”இயற்கையைப் பொதுவுடமையாகக் காணும் மார்க்ஸின் சிந்தனையை நிலை நிறுத்த வேண்டும்”

– நக்கீரன்    கேள்விகள்: ப.கு. ராஜன்

“அரசியல் சாராத கவிதைகளிலும் அரசியல் உண்டு” என்ற விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்காவின் முகப்பு வரியோடு வந்த ‘என் பெயர் ஜிப்சி’ எனும் கவிதைத் தொகுப்பு மூலம் கவனிப்பும் பாராட்டுகளும் பெற்ற கவிஞராக அறிய வந்தவர் நக்கீரன்.
‘பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய்
பூக்கிறது ஒரு பூ
பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய்
விரிகிறது ஓர் சிறகு’
என்று எளிமையும் தனித்துவமும் கொண்ட அழகியலோடு கவிதைகள் எழுதிவந்த நக்கீரன் எழுதிய அடுத்த நூலோ ‘மழைக்காடுகளின் மரணம்’ எனும் சூழலியல் நூல். நக்கீரன் அடுத்து எழுதியது தமிழில் முன்னுதாரணம் இல்லாத ‘காடோடி’ எனும் நாவல்(அடையாளம் பதிப்பகம் பக்.340 ரூ.270). நாவல் என்பதன் சாதாரணமான எதிர்பார்ப்பிற்கு மாறான விவரணங்களோடும் விளக்கங்களோடும் ஆனால் ஒரு புனைவிற்கு மட்டுமே உரித்தான உணர்வுமயமான இழைகள் நெகிழ்ந்தோடும் பரப்புகளோடு கூடிய நூல் ‘காடோடி. அது அறிமுகம் செய்யும் இருவாச்சிகளின் அகவலும் ஒராங் ஊத்தன் மந்திகளின் சலம்பல்களும் படித்து முடித்துப் பலநாள்களுக்கு காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்; மழைக் காடுகளின் மரங்களின் ஈரம் நம் நெஞ்சில் சொட்டிக் கொண்டேயிருக்கும்; கானகத்தின் காளானும், மூங்கில் குருத்தும் மீனும் சொயா சாறில் கிடந்து வேகும் நறுமணம் வீசிக்கொண்டேயிருக்கும். காடோடி நாவல் குறித்தும், நாவலின் அரசியல் குறித்தும், நக்கீரன் குறித்தும் நாம் கேட்ட சில கேள்விகளுக்கு அவரளித்த பதில்கள் இங்கே…

1. தமிழில் முன்னுதாரணம் இல்லாத நூல் ’காடோடி’. உங்களுக்கு வேறு ஏதேனும் மொழியில் முன்னுதாரணமான நூல் இருந்ததா?
இல்லை என்பதே பதில். காடோடியின் உள்ளடக்கம் குறித்து நண்பர்களிடம் உரையாடும்போதெல்லாம் அவர்கள் இதுவரை சொல்லப்படாத செய்தியாக இருக்கிறது, இதை அவசியம் எழுது என வலியுறுத்தி வந்தனர். முன்னோட்டமாக ‘மழைக்காடுகளின் மரணம்’ என்கிற குறுநூலை எழுதினேன். அந்நூலுக்கு கிடைத்த வரவேற்பு இந்நாவலை எழுதத் தூண்டியது. இருப்பினும் கதைக்களம் முழுக்க அந்நிய மண்ணைச் சார்ந்தது என்கிற சிறு தயக்கம் இருந்தது. ருசிய இலக்கியங்களின் ஸ்டெப்பி, சவான்னா புல்வெளிகளினூடே நடை பழகியவர்கள்தானே நம் வாசகர்கள் என்பது கொஞ்சம் துணிச்சலைத் தந்தது. எதிர்பார்த்ததை விடவும் மேலாக நம் வாசகர்கள் இந்நாவல் களத்தை மேற்குத் தொடர்ச்சி மலையோடு மிக அழகாகப் பொருத்திப் பார்த்து காலனியம் நம் காடுகளை எப்படியெல்லாம் அழித்திருக்கும் என்பதனைப் புரிந்துக்கொண்டு விட்டார்கள். இதுதான் இந்நாவலின் வெற்றி.

2. உங்கள் பின்புலம் என்ன? சூழலியல் ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் வசிக்கிறேன். மனைவி மீனா ஆசிரியர். மகள் ஓவியா முதலாமாண்டு கல்லூரி மாணவி. நான் முழுநேர எழுத்தாளராகவும் சூழல் பணியாளராகவும் இருக்கிறேன். முன்பு வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். அப்படிப் பணிபுரிந்த இடங்களில் ஒன்றுதான் போர்னியோக் காடு. அப்பணிக்கு ஓர் உல்லாசப் பயணியின் மனநிலையோடு சென்ற என்னை, அக்காட்டழிப்பும் அங்கிருக்கும் பழங்குடிகளும்தாம் சூழலியல் சார்ந்த மனநிலைக்கு மாற்றினார்கள். ஆழிப்பேரலையின்போது மாலத்தீவில் வசித்த நாங்கள் குடும்பத்தோடு கடலில் மாட்டி தப்பிப் பிழைத்தது இயற்கையின் ஆற்றலைக் குறித்து நிறைய யோசிக்க வைத்தது. 2007ஆம் ஆண்டு நாடு திரும்பியபோது, முன்பு நான் வசித்த நாடுகளைப் போலவே என் நிலத்தையும் உலகமயமாக்கல் சீரழித்துக் கொண்டிருப்பதைக் கண்டு கவலையுற்றேன். மக்களுக்கும் விழிப்புணர்வு போதவில்லை என்பதையறிந்து வெளிநாட்டுப் பணியைத் துறந்துவிட்டு, முதல் ஆயுதமாக எழுத்தைக் கைக்கொண்டேன். எழுத்து களப்பணிக்கும் இட்டுச் சென்றது. என் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட மனைவி வருமானமேதும் வராது எனத் தெரிந்தும் இம்முழுநேரச் சமூகப்பணிக்கு மனதார அனுப்பி வைத்தார். அவர் ஊக்கமின்றி இன்றைய என் செயல்பாடுகள் இல்லை.

3. முதலாளித்துவ வளர்ச்சிக்குள் வராத போர்னியோ பழங்குடிமக்கள், இங்கே அந்தமானின் ஜாரவாஸ் போன்றோர் காட்சிப்பொருட்களாக அல்லது மற்றவர் -களின் கருணையினால் வாழவேண்டியவர்களாக ஆகிவிடுகின்றனரே?
காட்சிப்பொருள் என்பதே முதலாளித்துவப் பார்வைதானே? அதனால்தானே ‘Slum Tourism’ என்கிற குரூரமே நடைபெறுகிறது. பழங்குடி மக்களின் மீதான மற்றவர்களின் கருணை என்பதும் காலனிய மனப்பான்மையைத்தான் குறிக்கிறது. பழங்குடிகள் அதை விரும்புவதுமில்லை, எதிர்பார்ப்பதுமில்லை. பல பழங்குடிகளுக்கு இந்தக் கருணை உள்ளம் கொண்ட வெள்ளையர்கள் அனைவரும் வெள்ளைப் பிசாசுகள்தாம். இந்நாவலில் குறிப்பிட்டிருப்பது போல ‘காடும் பழங்குடிகளும் மரமும் மரத்தின் பட்டையும் போல’. நாம் இடைப்புகுந்து பட்டையைப் பிரிக்காத வரை எல்லாப் பழங்குடிகளும் தம்மளவில் தன்னிறைவு அடைந்தவர்கள்தாம். .

4. நம்முடைய நெல்வயல்கள், கரும்பு, வாழைத்தோட்டங்கள், கோவில்கள், குடியிருப்புகள் எல்லாமே காடழித்து ஏற்படுத்தப்பட்டவைதானே? நம்மிடையே கையில் கானகத்தின் இரத்தம் இல்லாதவர் யாரும் இருக்கவியலுமா?

    புலி மானை அடித்துச் சாப்பிடுவதால் அதை இரத்த வெறிகொண்ட விலங்கு என்றழைப்பது எப்படிச் சரியாகும்?மான் என்பது புலியின் உணவு. அதுபோல் மானுக்கு புல் உணவு. புல் என்பதும்கூட பச்சைக்குருதி கொண்ட உயிர்தானே? இது இயற்கையின் உணவுச் சமன்பாடு. இப்படித்தான் மனித இனம் பெருகும்போது அதற்கான வாழ்விடத் தேவைக்கேற்ப காடு கொன்று நாடாக்குவது நிகழ்ந்தது. இதில் இயற்கை காயப்படவில்லை. சில பழங்குடிகள் காட்டெரிப்பு வேளாண்மை செய்தபோதும் காடு அழியவில்லை. ஆனால் லேஸ், குர்க்குரே பொறிப்பதற்கும், கெஎஃப்சி கோழியை வறுப்பதற்கும் பாமாயில் தேவைப்படுகிறது என்பதற்காக மழைக்காடுகளை அழித்து அதில் செம்பனைகளை வளர்ப்பதும், காட்பரீஸ் நிறுவனத்துக்காகவும் கோக் நிறுவனத்துக்காகவும் கொக்கோவை வளர்ப்பதும் என்ன நியாயம்? இத்தகைய கார்ப்பரேட்டின் கைகள்தான் குருதிக்கறை படிந்தவை. .

5. மரங்களுக்குப் பதிலாக ஞெகிழி, விறகிற்குப் பதிலாக நிலக்கரி, காட்டில் மரம் வெட்டுவதற்குப் பதிலாக பாலைநிலங்களில் எண்ணெய், எரிவாயுஇறைப்பு எந்தப்பக்கம் போனாலும் பூமிப்பந்தை வாழத்தகுதியற்றதாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லையா?
புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் துறை போன்ற மாற்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இத்துறையை வளரவிடாது செய்வதில் புதைப்படிவ எரிபொருள் நிறுவனங்களின் சதி பற்றி நாம் கேள்விப்படுகிறோம். இதைத்தவிர முதலாளித்துவத்தின் முதன்மைக் கருவியான ’நுகர்வு’தான் இயற்கை வளத்தைப் படுவேகமாகச் சுரண்டிச் சீரழிக்கிறது. இன்றைய உலகமயமாக்கல் கொள்கை பணக்கார நாடுகளின் வளங்களை இருப்பில் வைத்துக்கொள்ள அனுமதித்து ஏழை நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கத்தானே முனைகிறது? இறுதியில் சுரண்டப்படும் நாடுகளின் வளங்கள் சுரண்டும் நாடுகளுடைய மக்களின் ஊளைச்சதையாக தொங்கிக்கொண்டிருக்க, தம் வளங்களைப் பறிகொடுத்த ஓர் ஆப்பிரிக்கர் எலும்பும் தோலுமாக ஒடுங்கிச் சாகிறார். போர்னியோ போன்ற மழைக்காடுகளின் வளங்களும் இப்படித்தான் பறிபோகின்றன. எனவே நுகர்வு என வரும்போது ஓர் ஐக்கிய அமெரிக்கரின் நுகர்வையும் அந்தமானின் ஜாரவாக்களின் நுகர்வையும் சமத்தட்டில் வைக்க முடியாது. அசல் பழங்குடிகளின் நுகர்வு தனிநபர் சார்ந்ததல்ல.

6. தொழில் வளர்ச்சி, மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரு நிலைப்புறு வகையில் சமநிலையில் கொண்டு செலுத்தல் இயலாதா?
இயலும் என்றே நம்புகிறேன். இதற்கு முதலாளித்துவத்தின் கையிலுள்ள உலக வங்கியின் பைபிள் என்றழைக்கப்படும் ‘டிராஜடி ஆஃப் காமன்ஸ்’ என்கிற புத்தகத்தைப் பிடுங்கிக் கிழித்தெறிய வேண்டும். மால்தஸ் பாதிரி போலவே இதனை எழுதிய கேரட் ஹார்டினும் ஆபத்தானவர்தான். இயற்கையைத் தனியார்மயமாக்கும் இவரது கருத்தியலே இத்தனை நாசத்துக்கும் காரணம். இவர்தான் கார்ப்பரேட்டுக்களின் கதாநாயகன். இதற்கெதிராக இயற்கையைப் பொதுவுடைமையாகக் காணும் மார்க்ஸ் முதலியவர்களின் சிந்தனையை நிலைநிறுத்த வேண்டியது அவசியம்.
ஒருவேளை யாருக்காவது மார்க்ஸ் மீது ஒவ்வாமை நோய் இருந்தால், இன்னமும் இயற்கையைத் தம் பொதுச்சொத்தாகவும், தம்மை இயற்கையின் ஓர் அங்கமாகவும் கருதி வாழும் அசல் பழங்குடிகளைப் பின்பற்றலாம். வாழ்முறையில் அவர்கள்தாம் சிறந்த முன்மாதிரி. ஏனெனில் நிலப்பட்டா உள்ள உடைமையாளர்கள் எல்லாம் தம் நிலங்களைக் கார்ப்பரேட்டுக்களுக்கு விற்கும் நிலையில், அப்படியென்றால் என்னவென்றே அறியாத பழங்குடிகள்தாம் இன்றளவும் போர்க்குணத்துடன் கார்ப்பரேட்டுக்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

7. நூலில் மிகவும் கவித்துவமான நீதியாக காடழித்த நிறுவனம் அழிந்து போகின்றது. எதார்த்தம் அப்படியா உள்ளது? உலகெங்கும் பேரழிவைக் கொண்டு வந்த ஆங்கிலோ சாக்ஸன் வம்சாவழியினர் நிறைவாழ்வு வாழ்ந்துகொண்டுதானே இருக்கின்றார்கள்?
நாவலில் எம் நிறுவனத்துக்கு நேர்ந்த கதியைச் சொல்லியிருந்தேன். அது விதிவிலக்குதான். இதே நாவலில் லியோங் பணியாற்றும் நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்கள் இன்னும் அங்கேயே இருப்பதையும் சொல்லியிருப்பேனே? பிலியவ்வும் அடுத்த முகாம் தேடிப் போகப் போவதாகத்தானே சொல்வார்?

8. முதலாளித்துவம் தொடர்ந்து மூலதனத்தைக் குவித்தாக வேண்டியுள்ளது என்பதுதான் அடிப்படையான பிரச்சனை என்பது உங்களுக்கு ஏற்புடைய கருத்தா? ஆம் என்றால் அது எந்த அளவு உங்கள் நூலில் வெளிவந்துள்ளது? இல்லை என்றால் உங்கள் நோக்கில் அடிப்படையான பிரச்சனை என்ன?
கண்டிப்பாக ஏற்புடையது. புலி வாலைப் பிடித்த கதை என்று சொல்வார்களே அதுபோன்ற சிக்கலைக் கொண்டதுதான் முதலீட்டியம். மூலதனம் இல்லையென்றால் தாம் வீழ்ந்துவிடுவோம் என்பது அதற்கு நன்றாகத் தெரியும். எனவே மூலதனம் அழிந்துவிடாமல் காப்பதற்கே அது தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறது. இந்நாவலில் குவானிடமிருந்து பார்க்குக்கும், பார்க்கிடமிருந்து லியோங் நிறுவனத்துக்கும் மூலதனம் கைமாறுவதைச் சுட்டியிருப்பேன். அதுமட்டுமல்ல காட்டழிப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற மூலதனம் அடுத்து செம்பனைத் தோட்ட மூலதனமாக மாறுவதையும் இந்நாவலில் காணலாம். இதுபோன்று பல இடங்களைப் பரப்புரையாகச் செய்யாமல் நுட்பமாகப் பின்னியிருப்பேன். அதிலும் குறிப்பாக  ஜெர்மனி முதலாளியின் ஆசனவாயில் ஒமர் ஆணி அடிக்கச் சொல்லும் இடத்தை மிகவும் இரசித்ததாக பல தோழர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

9. நூலின் ஓரிடத்தில் அன்னா ‘உங்களுக்கு காடு தெரியும்; பறவை தெரியும்; விலங்கு தெரியும் ஆனால் மக்களைத் தெரியாது என்கிறார். இது நீங்கள் சுயவிமர்சனமாக ஏற்றுக்கொண்டு எழுதியதா?
அது அன்னாவின் கூற்று. அவ்வளவுதான். தவிர கதைசொல்லியின் அப்போதைய மனநிலையும் அதுதானே? பிறகுதானே அவன் மற்ற பழங்குடிகளுடனும் பழகிப் புரிந்து கொள்கிறான். நாவலின் ஆசிரியனாக என்னுடைய நிலை என்னவெனில் முதலாளித்துவத்தின் கொள்கையான ‘மனிதர்களற்ற காடு’ என்கிற கருத்தாக்கத்துக்கு எதிரான நிலைதான். ஏனெனில் இக்கொள்கையின் நோக்கம் காட்டிலிருந்து பழங்குடிகளின் பாதங்களை வெளியேற்றிவிட்டு அவ்விடத்தில் அடிடாஸ் காலணிகளை நுழைய வைப்பதுதான்.

10.இது ஒரு அருமையான அனுபவப் பதிவுநூல். இதை இப்போதும் ‘நாவல்’ என்றுதான்அழைக்க விரும்புகின்றீர்களா?
இது சற்று விளக்கமாக பதில் சொல்ல வேண்டிய கேள்வி. இந்நூலில் எந்தளவுக்குப் புனைவு கலந்திருக்கிறது என்பதை நான் மட்டுமே அறிவேன். ஆனாலும் இந்நூல் முழுவதுமே அனுபவப் பதிவு என நம்பும் வகையில் இருக்கிறதென்றால் அது அப்புனைவின் வெற்றிதான். இந்நிலைக்கு நான் தேர்ந்தெடுத்த எழுத்துமுறைதான் காரணம். இந்நாவலைத் தொடங்கும் போதே வழக்கமான நாவல் குணாம்சத்தை மீற முடிவு செய்தேன்.
இத்தகைய மீறலுக்கு முன்னுதாரண நாவல்கள் இருந்தன. சுயசரிதைப் பாணியில் அமைந்த சார்லட் ப்ராண்ட்டியின் ‘Jean Eyre’, கடித வடிவில் வந்த சாமுவேல் ரிச்சர்ட்சனின் ‘பேமிலா’, கிட்டத்தட்ட வேதாகம பாணியில் அமைந்த மிலோரட் பாவிச்சின் ‘டிக்சனரி ஆஃப் ஹசார்ஸ்’ ஆகியவை அவை. ஆனால் எனக்கு வேறொரு நோக்கம் இருந்தது.
சங்க இலக்கியத்துக்குப் பிறகு தமிழில் நிலவியல் பெருமளவுக்குத் துல்லியமாகப் பதிவாகவில்லை என்கிற ஏக்கம் எனக்குண்டு. இதைச் செய்வதற்குரிய சரியான மாற்று வடிவம் எதுவெனத் தேடியபோது கிடைத்ததுதான் விவரணைக் காட்சிப்பாட்டுப் பிரதிகள் (narrative display texts) என்கிற எழுதுமுறை. புனைவின் அணி இலக்கணமான ‘உருவகம்’ அல் புனைவுக்கு இடம் பெயர்ந்து நிலைப் பெற்றுவிட்டதைப் போல அல்-புனைவுக்குரிய எழுதுமுறைமை புனைவுக்குள் செயல்படுமா என்கிற கேள்விக்கு பதில்தான் இந்த விவரணைக் காட்சிப்பாட்டுப் பிரதிமுறை.
நானறிந்தவரை தமிழ் நாவலில் இது செய்யப்படவில்லை. கொஞ்சம் பிசகினாலும் சறுக்கிவிடக்கூடிய வடிவமாக இருப்பினும் துணிந்து செய்தேன். இந்நாவலுக்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பு இப்படி எழுதியது சரிதான் என மெய்ப்பித்திருக்கிறது. இதனால் கிடைத்த மற்றொருபலன் என்னவெனில் புனைவின் வாசகர்களையும் அல்புனைவின் வாசகர்களையும் காடோடி நாவல் ஒன்றிணைத்திருப்பதுதான்.

Related posts

Leave a Comment