மீண்டெழும் மறுவாசிப்புகள் – 7: மாய மாளிகை

ச.சுப்பாராவ்

எண்ணற்ற கதாபாத்திரங்கள் கொண்ட ஒரு படைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பங்கு முடிந்ததும் விலகிச் சென்றுவிடும். ஒவ்வொரு பாத்திரமும் பிறகு என்ன ஆனது என்று விளக்கம் தருவதும் கதாசிரியனுக்கு இயலாத காரியம். ஆனால் வாசகனுக்கு அப்படி விட்டுவிடுவது அவ்வளவாகப் பிடிக்காது. அதனால்தான் அக்காலத் திரைப்படங்களில் வணக்கம் போடுவதற்கு முன் காமெடியனும், அவனது ஜோடியும் கையில் மாலையோடு ஓடிவந்து எங்களயும் ஆசீர்வாதம் பண்ணுங்க என்பார்கள். அப்படிப்பட்ட காட்சி வைக்காவிட்டால், எத்தனை அற்புதமாக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், ரசிகன் வெளியே வரும்போது, கடசீல வடிவேலு/ விவேக் / சூரி  என்ன ஆனான்னே காட்டல்ல பாரு என்று புலம்பிக் கொண்டு வருவான். வாசகனின் இந்த எதிர்பார்ப்புதான்  மறுவாசிப்பு எழுத்தாளர்களுக்கு புதிய புதிய கருக்களைத் தருகிறது. ஏதேனும் ஒரு சிறுபாத்திரம் என்ன ஆனது என்ற தனது தேடலில் ஒரு படைப்பை உருவாக்கிவிடுகிறார்கள். ஒரு கதாபாத்திரம் பற்றி மட்டுமின்றி, ஒரு இடத்திற்கு என்ன ஆனது என்ற     யோசனையும் ஒரு மறுவாசிப்புப் படைப்பாக உருவாகியுள்ளது. சித்ரா பானர்ஜி திவாகருணியின் தி பாலஸ் ஆஃப் இல்யூஷன்ஸ் (Chitra banarjee Divakaruni –  The Palace of Illusions) அப்படிப்பட்ட ஒரு சமீபத்திய மறுவாசிப்பு நாவல்.

காண்டவ வனத்தை அழித்து, மயனது உதவியுடன் பாண்டவர்கள் கட்டிய அந்த கனவு மாளிகை என்ன ஆனது? என்ற கேள்வியை ஆதாரமாக வைத்துக் கட்டப்பட்ட நாவல். உண்மையில் பெரியவர்கள் பாகப்பிரிவினைக்கு ஒப்புக் கொண்டுவிட்ட பிறகு, இடத்தின் மதிப்பு பற்றியெல்லாம் அத்தனை கவலை கொள்ளாமல், கிடைத்ததை மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொள்கிறார்கள் பாண்டவர்கள். அதில் ஒரு அற்புதமான நகரத்தையும் உருவாக்குகிறார்கள். அதில் அவர்கள் எழுப்பும் ஒரு மாயமாளிகையும், அந்த மாளிகைக்கு வரும்  துரியோதனன் அந்த மாளிகையைப் பார்த்துப் பொறாமை கொள்ளுதலும், அந்த மாளிகையில் வைத்து திரெளபதி அவனை அவமதிப்பதும் தான் மீண்டும் அடுத்த ரவுண்ட் விரோதத்தை ஆரம்பித்து வைக்கின்றன என்பது பாரதத்தை ஊன்றிப்படித்த வாசகர்களுக்கு நன்கு தெரியும். நாவல் அந்த மாளிகையைக் குறிக்கும் தலைப்பைக் கொண்டிருந்தாலும், திரெளபதியின் பிறப்பிலிருந்து இறப்பு வரை சொல்லிச் செல்கிறது. ஒரு பெண் இளவரசியாகப் பிறந்தாலும் கூட அவள்தான் எத்தனை துன்பப்பட வேண்டியதாக இருக்கிறது என்பது நாவலின் அடிநாதமாக இருந்தாலும் அதன்கூடவே கர்மவினை, கிருஷ்ணனின் லீலாவிநோதங்கள் என்று வேறொரு அஜெண்டாவும் சத்தமில்லாமல், மிகத் திறமையாக உள்ளே   நுழைக்கப்பட்டிருக்கிறது.
பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு சூதாட்டம் விளையாட வருகிறார்கள். தோற்கிறார்கள். அப்படியே அங்கிருந்து வனவாசம். திரும்பி வந்ததும் அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தைக் கேட்கவில்லை. ஹஸ்தினாபுரத்தின் அரியணையைத்தான் கேட்கிறார்கள். ஏன்? பாண்டவர்கள் போனபின்       துரியோதனனின் ஆட்சியின் கீழ் வரும் இந்திரப்பிரஸ்தத்தின் மீது துரியோதனனின் ஆட்சி தேவையான அக்கறை செலுத்தாமல் இருந்திருக்கலாம். பாண்டவர்களுக்காக அந்தப் புதிய நகரத்தில்  குடியேறியவர்கள், அவர்கள் இல்லை என்றதும், மீண்டும் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருக்கலாம். பாழடைந்து போன ஊரைத் திருப்பிக் கேட்க விரும்பாமல், பாண்டவர்களும் தமது பூர்வீக அரியணையையே கேட்பது என்று முடிவெடுத்திருக்கலாம். இவை எல்லாம் என் யோசனைகளே தவிர, பாண்டவர்கள் ஏன் இந்திரப்பிரஸ்தத்தைக் கேட்கவில்லை என்பதற்கு நானறிந்த வரை வியாசர் விளக்கங்கள் எதுவும் தரவில்லை. இந்திரப்பிரஸ்தத்தின் அந்த தேவலோக மாளிகை பற்றிய தலைப்புக் கொண்ட இந்த நாவலில்  இதற்கு விடை கிடைக்கும் என்று நினைத்தேன்.           கிடைக்கவில்லை. மாளிகை கட்டப்பட்டது, துரியோதனன் அதைப் பார்த்துப் பொறாமைப்பட்டது, திரெளபதி அவனை அவமதித்தது எல்லாம் விரிவாகக் கூறப்படுவது தவிர மாளிகை பற்றி ஒன்றுமில்லை.
மஹாபாரதத்தின் மறுவாசிப்புகளில், அதுவும் குறிப்பாக திரெளபதியை மையமாகக் கொண்ட நாவல்களில் நிகழும் ஒரு கொடுமை இந்த நாவலிலும் நடக்கிறது. சுயம்வர நாளிலிருந்து சாகும்வரை, ஏன் செத்தபின்பும் கூட திரெளபதி கர்ணனுக்காக ஒவ்வொரு கணமும் ஏங்கித் தவிப்பவளாகக் காட்டப் படுகிறாள். மறுவாசிப்பு தானே, இப்படியும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்று யோசித்து எழுதுவதுதானே என்று சிலர் வாதிடலாம். ஆனால், இது அவ்வாறு அல்ல. ஏற்கனவே ஐந்து பேரை மணந்தவள், ஆறாவதாக ஒருவனைப் பார்த்து ஏங்காமலா இருக்கப் போகிறாள் என்ற ஆணாதிக்க மனப்போக்கால் எழும் மறுவாசிப்பு. இந்த ஆண்மனம் பெண்களுக்கும் இருப்பது, அல்லது பெண்கள் மனதிலும் திணிக்கப்பட்டிருப்பதுதான் கொடுமை. ஐந்து பேரை மணந்தவள் ஆறாவதாக ஒருவனை நினைப்பாள் என்ற வாதம் ஏன் ஒருவனை மணந்தவள் இரண்டாவதாக ஒருவனை நினைப்பாள் என்ற மறுவாசிப்பிற்கு இட்டுச் செல்வதில்லை? அப்படிப்பட்ட வாதம் ஏற்கப்படும் என்றால், சீதைக்கு ஆயிரம் கதைகள் எழுதலாமே. ஆனால் அப்படிப்பட்ட சிந்தனை யாருக்கும் வராது. காரணம் ஒருவனை மணந்து, அவனோடு வாழ்பவள் பத்தினி. அவளுக்கு பிற ஆண்கள் பற்றிய சிந்தனை வராது என்ற எண்ணம் மறுவாசிப்பு எழுத்தாளர்கள் உட்பட அனைவர் மனதிலும் பதிந்திருக்கும் ஒரு ஆணாதிக்கக் கருத்து.
திரெளபதியின் கதை என்றாலும், அவளது திருமணங்களுக்குப் பிறகு, அது தவிர்க்க முடியாத வகையில் கிருஷ்ணனின் கதையாகி விடுகிறது. சிசுபாலன் கொலை, துகிலுரியப்படும் போது துகில் வளர்ந்தது போன்ற இடங்களை விளக்க நேரும்போது, நாவலாசிரியர் விபரமாக திரெளபதி மயங்கி விழுந்துவிடுவதாகவும், என்ன நடந்தது என்றே அவளுக்குத் தெரியவில்லை என்றும் சொல்லித் தப்பிச் செல்வதைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது. எனினும், கதை நெடுக, கிருஷ்ணனை வைத்து சொல்லப்படும் தத்துவங்கள், உபதேசங்கள் வடநாட்டின் இந்து மத வெறியர்களுக்கு மிக உவப்பாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
இரண்டு மூன்று பத்திகளுக்கு முன், சாவதற்குப் பிறகும்கூட அவள் கர்ணன் பற்றி நினைப்பது பற்றி எழுதியிருக்கிறேனல்லவா?  கதை அப்படித்தான் முடிகிறது. எல்லோரும் இறந்து போயாகிவிட்டது. கதையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சுவர்க்கத்தில்தான் இருக்கிறார்கள். திரெளபதியைப் பார்த்ததும், கர்ணன் எழுந்து வந்து தன் கையை நீட்டுகிறான். அத்தனை உயரமாக, உடலெங்கும் தங்க ஆபரணங்கள் ஜொலிக்க, அத்தனை அழகாக இருக்கிறான். அவன் முகத்தில், இவள் இதுநாள் வரை பார்த்திராத ஒரு பாவம். இவள் ஒரு கணம் தன் கணவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தயங்குகிறாள். ஆனால், இங்கு கணவன் மனைவி என்ற பிரச்னைகளெல்லாம் இல்லையே, விரும்பினால் அவனைக் கட்டித் தழுவவும் செய்யலாம் என்று நினைத்துக் கொள்கிறாள். கையை நீட்டி அவன் கையைப் பற்றுகிறாள். அவன் பிடிதான் எத்தனை இறுக்கமாக இருக்கிறது! அவள் அப்படியே பறப்பது போல உணர்கிறாள். அவள் வாழ்க்கையில் ஆசைப்பட்ட ஒன்றே ஒன்று    கிடைத்து விட்டது. சுற்றி உள்ளவர்கள் இவர்களை வரவேற்கிறார்கள். சுபம்.
சுவர்க்கத்தில் இப்படியொரு வசதி இருக்கும் என்றால் நமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், இப்படியான முடிவோடு எழுதப்படும் மறுவாசிப்புகள் திரெளபதிக்கு மட்டுமே எழுதப்படுவது வருத்தமளிக்கிறது. அவள் என்ன விரும்பியா ஐவரை மணந்து பாஞ்சாலியானாள்?

    (தொடரும்)