You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம் – 13: “தேவதைகளுக்கும் கூந்தலுக்கும் என்ன சம்மந்தம்”

ச. முருகபூபதி

அருங்காட்சியத்தின் சூழலைப்போல உறைந்த நிலையில் இருக்கும் வகுப்பறைகளைப் குழந்தைகள் ஒரு போதும் விரும்புவதில்லை. ஏய் சத்தம் போடாதே ஏய் பேசாதே ஏய் அடிபட்டுச் சாகாதே போன்ற போலிஸை ஒத்தகுரல்களைக் கேட்டுச் சலித்துவிட்ட குழந்தைகளுக்கு புதிய அனுபவங்களைத்தரக்கூடிய ஆசிரியர்களை எதிர்பார்த்தே எப்போதும் குழந்தைகள் காத்திருக்கிறார்கள். நான் எந்த ஊருக்கும் குழந்தைகள் நாடகம் உருவாக்க கிளம்பினாலும் வகுப்பறை நுழைந்ததும் இருக்கைகளைக் கலைத்து சதுரம் வட்டம் எதிரெதிர் எனப் பல வடிவங்களுக்கு மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பேன். எனது நாடக, கதை வகுப்புகள் என்றால் நான் வரும் முன்னரே உற்சாகக் குரல்களும் இருக்கைகள் களைத்துப் போடும் சப்தங்களும் கேட்கத் துவங்கிவிடும். இப்படி வாரம் ஒரு முறையாவது வகுப்பறைச் சூழல் மாறுவது குழந்தைகளின் கனவு சாத்தியம். ஒரு வகுப்பு முடிந்து மறுவகுப்புத் துவங்கும் வரை சப்தங்களின் இருப்பிடமாகவே தோன்றும் அப்படிப்பட்ட சூழலில் பாடலுடன் நுழைவதும் சில முகமூடிகளுடன் நுழைவதும் பொம்மைகளுடன் நுழைவதுமாக இப்படிச் செய்வதால் வகுப்பறை தியானக் கூடமாகி எதிர்பார்ப்பின் பெருமூச்சில் மனஅமைதி கொள்கிறது. 2,3,4 ஆம் வகுப்புக் குழந்தைகளுடன் இருக்கும் போது பெரும் சப்தங்களுக்குள்ளிருந்து அவர்களை அழைத்து வர நான் செய்யும் யுக்தி “பாய்ஸுக்கும் கேர்ள்ஸுக்கும் அமைதிப்போட்டி ஸ்டார்ட்” என சப்தமாக கத்திச் சொன்னதும் நிசப்தமாகிவிடும். சிலவேலை “பாய்ஸ் பேசினால் அவர்களுக்கு கேர்ள்ஸ் பெயர் வைக்கப்படும் கேர்ள்ஸ் பேசினால் அவர்களுக்கு பாய்ஸ் பெயர் வைக்கப்படும்” எனக் கரும்பலகையில் எழுதிப்போட்டு நான் அமைதியாகி விடுகிற மறு நொடியில் அவர்களும் அமைதியாகிவிடுவார்கள். பேசுகிற குழந்தைகளுக்கு பெயர் மாற்றி வைக்கிற பல நேரங்களில் அவர்கள் கேவிக்கேவி அழுது அமைதியாகிவிடுகிறார்கள். அதுபோல அமைதியாக இருக்கும்போதே அழகு பிறக்கும் என்று கடவுள் சொன்னதாகச் சொல்லி சில கதைகளைச் சொன்னவுடன் அமைதியில் அவர்கள் முகங்களை அழகாக வைத்திருக்கும் பாவங்களைப்  புன்சிரிப்புகளுடன் முயற்சிக்கும் போது நடிப்பின் அதிமொழி அங்கே ஜனனமாகிக் கொண்டிருக்கும். அதுபோல மாணவ மாணவிகளின் வருகைப் பதிவேட்டைத் திறந்து பெயர்களை வாசிக்கும்போது ஒவ்வொருவரின் பெயரையும் விதவிதமான ஓலியாகவும் சில நாட்கள் பறவைகளின் பெயர்களையும் மரம், விலங்குகளின் பெயர்களையும் சொல்லும்போது அவரவர்களின் இனிசியலையும் சேர்த்தே சொல்வேன். அவர்களையும் அந்தந்த ஜீவராசிகளின் சப்தங்களுடன் பதில் பேசச்சொல்வேன். இப்படிப் பல அனுபவங்களுக்குள் எல்லோரும் நுழைந்த பின்னரே கதைகளின் வாசலுக்குச் செல்வோம் முதலில் சில கதைகள் அதற்குப்பின் நாடகம், பாட்டு என்று உருமாற்றம் பெரும். பல தடவைகள் கதைகளே முடிவற்று போய்க் கொண்டிருக்கும். மறு வகுப்பின் அழைப்பு மணி ஒலியே கதைகளின் வாசலைப் பூட்டிச் செல்லும்.
ஒருமுறை மூன்றாம் வகுப்புக் குழந்தைகளைக் கொண்டு பூனைக்கு மணிகட்டிய எலிகளின் கதையினை நாடமாக்கியபோது பூனையாக நடித்த ஜெயஸ்ரீ எனும் மாணவி “அண்ணே விஞ்ஞானிகள் எல்லோரும் எலிகளை வைத்தே கொன்னு சோதனை செய்கிறார்கள். அதெல்லாம் பிள்ளையாருக்குத் தெரியாதா, எனக்கு எங்கப்பா சொல்லிட்டாங்களே! பாவம் எலி. பேசாம.. அவங்கள் விஞ்ஞானியாகி மனிதர்களின் மூளையைச் சோதனை செய்யும் ஒரு நாடகம் நீங்க போடுக்கன்னே” என்றாள். இந்த உரையாடலுக்கு பதில் உரையாடலாக. நான் சில வரலாற்றுக் கதைகளை எடுத்துச் சொன்னேன். அமெரிக்கா வியட்நாம் மீது யுத்தம் செய்தபோது அவர்களின் படைப்பிரிவில் கிம் ஜோன்ஸ் என்பவருக்கு மலைகளில் ஆங்காங்கே முகாமிட்டிருக்கும் படைகளுக்கு கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. இயல்பில் சித்திரம் வரையும் திறமை கொண்ட கலைஞராக கிம் ஜோன்ஸ் இருந்ததால் சகிக்க முடியாத பல காட்சிகளை ஓவியமாக வரைந்து வந்தார். ஓய்வு நேரங்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மலைகளில் அலைந்து திரியும் மலை எலிகளை துப்பாக்கியால் சுட்டு விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்களாம். வீரர்களுக்குப் போர்வெறி குறையக்கூடாது என்பதற்கே இப்படியொரு முட்டாள்தனமான செயல் அவர்களிடம்; ஒரு கட்டத்தில் ராணுவத்தின் செயல்களை சகிக்க முடியாத கிம் ஜோன்ஸ் வெளியேறி தன் நாட்டுக்குத் திரும்பி போரின் கோரங்களை இன்ஸாலேசன் எனும் நவீன ஓவியப்பாணி முறையில் நாடகீயப்பாங்கில் தானும் நடித்தபடி செயல்படத்துவங்கினர். அவரது ” Rate Peace” எனும் படைப்பில் கண்ணாடிக் கூண்டுக்குள் உண்மையான பல எலிகளைக் கொண்டு தானும் அதனுடன் இணைந்து நாடக – இன்ஸாலேசனாக செய்தது பெரும் கவனத்தைப் பெற்றது. நான் எலிகளின் கதறலை அதன் மனக்குமுறல்களை உலகிற்கு சொல்ல வந்த கலைஞன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார். இக்கதையினை சொல்லி முடித்தபோது எலிகளின் ஆதரவுக்குரல்களோடு பெருத்த கரவொலிகளுடன் அன்றைய ஒத்திகை நிகழ்ந்தது. வளையங்குளம், பாரப்பத்தி போன்ற கிராமத்திலிருந்து வந்த குழந்தைகள் பலரும் அறுவடைக்குமுன் வயல்களுக்குள் பதுங்கி உலவும் எலிகளைப் பிடித்து சமைத்துச் சாப்பிடும் அனுபவத்தை சூதுவாதற்று சொன்னபோது எல்லோரும் அதனைக் கதையாகவே எடுத்துக் கொண்டனர். ஒவ்வொன்றின் அர்த்தத்தினைப் பிரித்துப் பார்க்கும் குணம் குழந்தைகளிடம் எப்போதும் உண்டு.
தேவதைக் கதையொன்றினை நாடமாக்கும் நாளொன்றில் நான்காம் வகுப்பு மாணவிகளிடம் நாளை யார் புது ஸ்டைலாக கூந்தலை சடை போட்டுக் கொண்டு வருகிறீர்களோ அதில் சிறப்பாக யார் கூந்தல் தேர்வு செய்யப்படுகிறதோ அந்த மாணவியே தேவதையாக நடிக்கும் வாய்ப்பைப் பெறுவாள் என்று சொல்லிப் போனேன். மறுநாள் வகுப்பறையில் 18 மாணவிகளில் ஏழு மாணவிகளின் கூந்தல் தனித்துவமான வடிவத்தில் இருந்ததால் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு அனைவரின் ஒப்புதலுடன் ஏழு தேவதைகள் எனும் தலைப்பிட்டு அன்றைய தினம் நாடகம் உற்சாகமாகத் துவங்கப்பட்டது. அதில் வனச்செல்வி என்ற மாணவி தேவதைகளுக்கும் கூந்தலுக்கும் என்ன சம்மந்தம் கூந்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? உலகில் கூந்தலுக்கு கதைகளும் வரலாறும் உண்டா இப்படிப் பல தொடர்ச்சியான கேள்விகளால் என்னை நெருக்க சில கதைகளை சொல்லத் துவங்கினேன். மகாத்மா காந்தி ஒருமுறை தாய்லாந்து சென்றபோது அங்கு புத்தமத மரியாதையின் படி பெண்கள் எதிரெதிர் மண்டியில் தம் நெடுங்கூந்தலை விரித்து அக்கூந்தல் கம்பளத்தில் காந்தியை நடந்து வருமாறு வேண்ட காந்தியோ தெய்வத்துக்குச் சமமாக கூந்தலை மதிக்கும் மரபு எங்கள் மரபு. நீங்கள் எதிரெதிர் பெண்களை நிற்கச் சொல்லி கம்பு கட்டி அதன் மேல் கூந்தலைப் போடுங்கள் கூந்தலின் நிழலில் நான் போய்க் கொள்கிறேன்” என்றாராம். இப்படி ஒரு கதை காந்தியைப் பற்றி சொல்லப்படுவதுண்டு என்றும் பைபிளில் திலைலா எனும் பாத்திரம் ஸாம்ஸனின் வீரம் அவனது நெடுங் கூந்தலில்  இருப்பதை திலைலா மூலம் அறிந்து வீரம் மறைந்திருக்கும் அவனது கூந்தல் மழிக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்படுகிறான். மறு படியும் கூந்தல் வளர இழந்த வீரம் திரும்பப் பெறுகிறான். கண்ணகி வஞ்சிக்கப்பட்டு விரித்த கூந்தலுடன் பாண்டியனின் மதுரையை ஒரு முலை திருகி எரிக்கின்றாள். விடுதலைப் போராட்டக் காலத்தில் கூந்தல் வளர்த்த பெண் வேட நடிகர்களின் கூந்தலைக் காண விரும்பிய அன்றைய வெள்ளைக்காரச் சீமாட்டிகளின் கதைகள் அன்றைய நாடக வரலாறு தெரிந்த பலருக்கும் புரியும். மதங்களைக் கடந்த சிறுதெய்வ மரபுகளைக் கொண்ட நாம் கடவுளுக்கு உச்சபட்ச மரியாதையாக கூந்தலை காணிக்கையாகப் படைப்பதும் பெண்கள் தாம் சிக்கெடுத்து உதிர்ந்த கூந்தல் இலைகளை சேமித்து சவுரி முடிக்காரர்களிடம் ஒப்படைப்பதும் வீட்டு எரவானத்தில் சொருகி வைப்பதும் குலசேகரப்பட்டிணம் முத்தாலம்மன் கோயில் வேஷத்திருவிழாவில் உட்சபட்ச வேஷமான காளி வேடத்தில் தரை வரை புரளும் நெடுங் கூந்தலின் கதையும் கோயில் சிற்பங்களில் உள்ள விதம்விதமான கூந்தல் வடிவமைப்புகள் பற்றியும் மெடுசாவின் கிரேக்க பாம்புக் கூந்தலையும் அவர்கள் நிலையில் நின்று கதை கதையாகச் சொன்னதும் கூந்தல் குறித்த கவனமும் மதிப்பும் அவர்களிடம் மென்மேலும் இன்று வரை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு முறை என் அம்மா சொன்ன கதையில் செருப்புகள் மீது அதீத ஆசை கொண்ட ஒரு மாணவன் பள்ளி செல்ல விருப்பமின்றித் தான் சேகரித்த செருப்புக்களைத் தன் புத்ததகப் பையில் வைத்து புத்தங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்துவிட்டுச் செல்வானாம். மலைகிராமமான அவனுடைய ஊரில் விதவிதமான செருப்புக்களைப் போட்டுக்கொண்டு மலையெங்கும் நடந்து திரிவதே அவனுடைய படிப்பாக இருந்தது. வீட்டில் அவனுடைய படுக்கைக்கு கீழே பலவிதமான செருப்புக்களைப் பதுக்கி வைத்திருந்தானாம். ஒவ்வொரு செருப்பிற்கும் தனித்தனியான நடையினையும் பாவங்களையும் கண்டுபிடித்து வைத்திருந்தான். பெரியவனாகியும் செருப்பின் மீதான மோகம் அவனுக்கு குறையவில்லை. அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பி அவனது பெற்றோர்கள் அவனை அணுகியபோது அவன் போட்ட கண்டிஷன் தாலிகட்டிய மறு நிமிடமே பெண்ணை செருப்பால் அடிப்பேன் அப்புறம் செருப்பு சேர்ப்பதை மனைவி தடுக்கக்கூடாது என்று சொல்லி இதற்கு சம்மதிக்கும் பெண்ணைத் தேடிப் பிடியுங்கள் என்று சொன்னவுடன் இதனைச் சொல்லி பெண் தேடிய இடங்களிளெல்லாம் அவமானப்பட்டுத் திரும்பினார்கள். கடைசியில் மலைக்குறத்தி ஒருத்தியின் நீள் கூந்தல் அழகைக் கண்டு அவளிடம் பேச அவளோ நிதமும் இவனது செருப்பு பயணங்களை மறைந்திருந்து பார்த்து அனுபவித்தவள் கண்டிஷன்களுக்கு சம்மதித்து திருமண மேடையேறி இருவரும் நேருக்கும் நேர் சந்தித்தபோது அவளது நீள் கருங்கூந்தலுக்கு ஈடாக சேர்ந்த அதிசய செருப்புக்களை அனைத்தையும் வந்திருந்த விருந்தினர்களுக்கெல்லாம். பரிசாகக் கொடுத்து அவளது கூந்தல் வழியாகப் புதிய வாழ்க்கை முறையினைத் துவங்கி மலைப்பாதைக்குள் மறைந்து விட்டனராம். எங்களது மணல்மகுடி நாடகக் குழுவின் கூந்தல் நகரம் நாடகத்திற்கு நான் உட்பட நடிகர்கள் ஏழு பேர் இடுப்பு வரை கூந்தல் வளர்த்து நடித்தோம். நாடகம் தேரிக்காட்டில் போட்டபின் எழுவரும் கெடா வெட்டி மொட்டையிட்டுப் பார்வையாளர்கள் நடிகர்களை எழுத்தாளர்களை அழைத்து 2002ல் விருந்து படைத்தோம். இந்நாடகத்தின் ஒத்திகையின்போது பல ஊர்களில் எங்களை போலிசார் பிடித்துச் சென்று விசாரணை செய்து விடுவித்தது தனிக்கதை; எங்களது சூர்ப்பணங்கு நாடகத்தில் நல்ல தங்காளாக நடித்த ரஞ்சனும், ரெஜினும் நிலம் வரை நீண்டு புரளும் வைக்கோல் கூந்தலுடன் நாடக நிலம் நுழையும்போது தாங்களே மறுஜென்மம் எடுத்து பஞ்சகாலத்தின் துயரக்காற்றை இழுத்து வந்து நடிப்பது போலவே இருக்கும். இயல்பில் ரஞ்சன் எனும் கலைஞன் தனது கூந்தலைக் கையாளும்போது துயரமும் பிராத்தனையும் கலந்திருப்பதை அவனது நடிப்பில் உணர முடியும்.
ஜவ்வாது மலை நெல்லிவாசலில் ஒருமுறை பழங்குடிக் குழந்தைகளோடு நாடகம் நிகழ்த்தும் போது சிங்கமாக நடித்த ஐந்தாம் வகுப்பு மாணவனொருவன் தம் வீட்டு எரவானத்தில் தம் சகோதரிகளின் அம்மாக்களின் கூந்தலை சேகரித்து வந்து முகமூடியில் ஒட்ட வைக்க கொண்டு வந்து கொடுத்தபோது கூந்தலுக்குள் வனமிருகத்தின் துடி தாவியலைவதை உணர முடிந்தது. நாடகம் நடித்த பல குழந்தைகளும் சிங்கத்தின் கூந்தலுக்காக தம் கூந்தலையும் தர தயாராக இருந்தார்கள்.
சிறுவயதில் எங்கள் தெருவில் ஓர் அண்ணன் தான் விரும்பிய பெண்ணின் நீள்கூந்தலின் அளவிற்கு இணையாக பல வெண் காகிதங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஒட்டி நீள் காதல் கடிதம் எழுதி தன் காதலை வெளிப்படுத்த அலைந்ததையும் அந்த நீள்கூந்தல் பெண் கூந்தலை அப்பெண்ணின் தாயார் குளிக்கச் செய்யும் போது சலவைக் கல்லில் செம்பருத்தி பூவும் செடியும் சேர்ந்ததரைத்த களிம்பு கொண்டு நுரை பொங்க கும்மிக் கும்மி துணிபோல் கழுவி எடுத்ததை ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன். தெருவில் பலரும் கோயிலுக்கு, சினிமாவுக்கு, திருவிழாவுக்கு போகும் பலரது குடும்பமும் நீள்கூந்தல் சகோதரியை பிரியத்தோடு தங்களோடு அழைத்துப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சுடுகாட்டில் இறந்து புதைக்கப்பட்ட பல பெண்களின் கூந்தலை எலும்பு சுற்றப்பட்டுப் பரவிக் கிடந்ததை பால்யம் பலமுறை நினைவூட்டியபடி இருக்கின்றன.
மரக்காணம் பாண்டிச்சேரிப்பக்கம் உள்ள கூனிமேடு எனும் கடலோர கிராமத்தில் எங்கள் நாடகக் குழுவினர் சுனாமிப் பெரும்புயல் 2002ல் 10 நாட்கள் தங்கியிருந்து குழந்தைகளைக் கொண்டு நாடகமொன்றை உருவாக்கினோம். அப்போது சில குழந்தைகள் மீன்களின் வகைகளைக் கூறி அம்மீனைப்போல நடிக்க சவுரி முடிக்கற்றைகளை எடுத்து வந்து மீன்களுக்கான கூந்தலைக் கொண்டு வந்துள்ளோம் எங்களை நடிக்க அழையுங்கள் என்றனர், கடல் அலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் கூந்தலை வலைகளில் மீட்கப் போன என் தாத்தாவை நாடகத்தின் கதையாக்குவீர்களா என்று கேட்ட குழந்தையின் ஈரக்குரல் தனிமையான கடலில் சதா அலைந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.
இப்பவும் நாடக மதுரையில் கூத்து அலைவுறுகிற நிலவெளியில் அள்ளி முடிச்சிட்ட கூந்தலுடன், வாயில் வெற்றிலை எச்சில் ஒழுக சங்கீதம் முணுமுணுக்க ஆர்மோனியப்பெட்டியுடன் ரயில்வே பிளாட்பாரத்தில் பேருந்து நிலையத்தில் சலங்கைக் கால்கள் காத்து நிற்கின்றன. நம் பெண்களின் பாடுகளை விந்தைகளை தம் கூந்தலுக்குள் ஒளித்துக் கொண்டையிட்ட வட்ட முகங்களின் எழுச்சியால் மட்டுமே பண்பாட்டுச்சிந்தையுள்ள சமூகம் உருவாகிட…

Related posts