You are here

எழுத்தால் எழுவோம்! கலையால் ஒன்று கூடுவோம்!

‘நம் எதிரிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்று மக்கள் சோர்வும் சலிப்பும் அடைந்திருக்கும் நேரத்தில் அவர்களை சிந்திக்க வைக்கவும் செயலில் இறங்குமளவு உத்வேகம் அளிக்கவும் தேவைப்படுவது எழுத்தும் மக்கள் கலையும் சார்ந்த உழைப்பாளர் அமைப்பு’     
   அஸ்திரா டோனி குளோவர் (மன்த்லி ரிவ்யூ)

 கார்ல்மார்க்ஸ் தனது வாழ்நாளின் பெரும்பகுதியில் ஒரு பத்திரிகையாளராகவே இருந்தார். எழுத்தை தனது வாழ்வின் பிரதான அம்சமாக்கிக் கொண்டவர்களே மக்களின் போராட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்திருக்கிறது. ‘ஒரு பத்திரிகை கூட்டுப் பிரச்சாரகன்… கூட்டுப் போராளி மட்டுமல்ல.. அது ஒரு கூட்டு அமைப்பாளனும்கூட’ என்று லெனின் அறிவித்தார். 1848ல் தொடங்கி மார்க்சும் எங்கெல்சும் ட்ரிப்யூன் இதழில் எழுதிக் குவித்த கட்டுரைகளே அந்த இதழை லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் மக்கள் இதழாக்கியது. தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி தனது அனைத்துப் போராட்டங்களின் அடித்தளஅம்சமாக மகாத்மா காந்தி எழுத்தையே ஆயுதமாக்கினார். இந்தியா, நவஜீவன், அரிஜன் என இதழ்களின் அணிவகுப்பை பார்க்கிறோம். அண்ணல் அம்பேத்கரின் எழுத்துப் புரட்சியும் அயோத்திதாசரின் தமிழ¢ மக்களின் சமூகப்புரட்சியைப் பேசிய ‘ஒரு பைசா தமிழன்’ எழுத்து இயக்கமும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. தந்தை பெரியார் காங்கிரசின் பிற்போக்குப் பாதையைக் கண்டித்து நடத்திய இயக்கம் ‘குடி அரசு’. குடி அரசுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழில் தோழர் சிங்காரவேலர் மூலம் முதன் முதலில் அச்சிட்டது என்பதை நாம் மறக்கலாகாது. எழுத்து ஒரு மக்கள் எழுச்சியாகப் போர் ஆயுதமாக செயல்பட்ட வரலாறு பாரதியாரின் பாடல்கள் வழியே கலை வடிவம் பெற்று எழுச்சி கீதமாகிப் பொது உடைமை மேடைகளில் மக்களை ஒன்றிணைத்தது. முதலில் எழுத்தாளராக மகாகவியாக, பிறகு மொழிபெயர்ப்பாளராக கார்டூனிஸ்ட்டாக மக்கள் போராளியாக பாரதியை அடையாளப்படுத்தி அவரை ஒரு இயக்கமாகக் கட்டமைத்தது எழுத்தும் கலையும்தான். ஜீவாவும், பாரதிதாசனும் இன்னும் எத்தனையோ எழுத்துச் சிற்பிகளும் மக்கள் வாழ்வை செங்கீதமாய் இசைத்த வரலாறு நமக்குண்டு.
இன்று ஊடகங்கள் லட்சியத்தை அடையும் இயக்கமாக இல்லாமல் லாபத்தை அடையும் முதலாளித்துவ ‘பண்ட’மாக்கப்பட்டுள்ள ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோம். விளம்பரயுகம், தாராளமயத்தை உலகளாவிய சந்தைப் பொருளாதார அங்கமாக்கி விஷத்தைக் கக்கும் ஊடகங்களின் இடையே உழைக்கும் மக்களின் கலைகளை மீட்டெடுக்கவும் நமது விடுதலைக்கான எழுச்சி கீதத்தை எழுத்தில் வடிக்கவும் ஒரு இயக்கமாக ஒன்றுபடும் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
கட்டற்ற சந்தைப் பொருளாதார ஆதரவு சக்திகள் மதவாத வெறி அரசியலுடன் கைகுலுக்கி, பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டுக்கு எதிர்ப்பு, தனியார்த்துறை ஆதரவு, பொதுத்துறை எதிர்ப்பு, தொழிலாளர் போராட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு சமூக கலாச்சார தளங்களில் ஆதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்பு என ஒரு அசாதாரண சூழலில் அமைப்புக்கு எதிராக செயல்படும் எழுத்திற்கும் கலை வடிவங்களுக்கும் ஆதரவு மாற்று சிந்தனை, மாற்று ஊடகம் என சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தால்  ஒன்று கூடுவோம்.    அரசியல் பொருளாதாரத்தின் ஆணிவேராக இருக்கும் உழைக்கும் மக்களின் இன்றைய ஒரே ஆதரவு சக்தியாக முன்னிற்கும் நமது அமைப்பை பலப்படுத்த திருப்பூரில் திருப்புமுனை காண்போம். ‘தத்துவம் நடைமுறை அரசியல் குறித்து விவாதிக்க ஒரு இயக்கம் நம்மை ஒரு பொதுத்திட்டத்தில், பொதுவான போர்த்தந்திரத்தில் ஒன்றுபடுத்த ஒரு அமைப்பு என்று சோஷலிசத்தைக் கட்டமைக்கும் வழிகாட்டிய லெனின் கூற்றாய் வென்றெழுவோம். நமக்குத் தேவை மதவெறி மற்றும் ஆதிக்க அரசியலுக்கு பொருளாதார சுரண்டலுக்கு எதிரான  சமூக எழுச்சி.. கருத்துச் சுதந்திர பாதுகாப்புக்கான உரிமைப்போர்.. கலாச்சார மறுமலர்ச்சி, அதை திருப்பூரில் வென்றெடுப்போம்.

Related posts