You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 1 மனதில் தோன்றிய முதல் தீப்பொறி

எஸ். மோகனா

‘நம் சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்றவேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’ –   பெரியார்

நான் என்னை, நான் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். கொஞ்ச நஞ்ச ஆண்டுகளா? 67ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது…? வாழ்க்கையில் நடந்ததெல்லாம் நிஜம்தானா? அதற்கும் மேல்தான் தாக்குப்பிடித்து நிற்கிறேனா? ம். ..ம்… ஒரு பெருமூச்சுதான் பதில். ஆனால் அனைத்தும் உண்மை. பூமி சுற்றுவது எப்படி உண்மையோ.. சூரியன் இந்த பால்வழியை சுற்றுவது எப்படி உண்மையோ… அதுபோல்தான் இதுவும் நிஜம்தான்.. ஆனால் இப்போது அனைத்தையும் நினைத்துப் பார்த்தால் ஒரு பக்கம் அச்சம் சார்ந்த பெருமையாகவும், இன்னொரு பக்கம் எப்படி இந்த சின்னப் பெண்ணால், அந்தக் காலத்தில் எவ்வாறு தைரியமாய் இத்தனை விஷயங்களையும் சந்திக்க முடிந்திருக்கிறது என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இது நிஜமா? இந்த மோகனா நிஜமாகவே கிராமத்து மோகனாதானா ..அவள்தான் இந்த சிக்கல்களைஎல்லாம் தாண்டி, இன்று சமூகத்தின் ஓர் அங்கமாக நிற்கிறாளா? எப்படி? எப்படி? நம்பவே முடியவில்லை..!

பச்சை பசேல் என்று எப்போதும் மரகதப் பட்டை போர்த்திக் கொண்டு கிடக்கும் சின்னஞ்சிறு கிராமம்தான் சோழம்பேட்டை. பக்கத்திலேயே எந்த நேரமும் சலசலவென்று சிலுசிலுத்துகொண்டு   கொண்டு ஓடும் காவிரியின் கரையில் அமைந்துள்ள சாதுவான, அமைதியான கிராமம். பெரிதாக படித்தவர்கள் நிறைய இல்லாத, எல்லா இனத்தவரும் சேர்ந்து வாழும் கிராமம். மாயவரத்தின் காவிரி சின்ன ஆறுதான்.. திருச்சியின் அகண்டகாவிரி போல் அல்ல. இதனை மக்கள் “ஆடு தாண்டா காவிரி”என்று அழைப்பார்கள். சோழம்பேட்டை. அன்றைய கீழத்தஞ்சை மாவட்டத்தில், (இன்றைய மயிலாடுதுறை) மாயவரத்தின் கடைக்கோடி குட்டி கிராமம்.

1944 ம் ஆண்டு..வெள்ளையன் நம்மை விட்டுப் பிரியாத நாம் சுதந்திரக் காற்றை அனுபவிக்காத காலகட்டம் அது. சோழம்பேட்டை ஊரின் மெயின் ரோட்டில் தென்னங்கூரை வேய்ந்த சுத்துக் கட்டு வீடு. சுத்துக்கட்டு வீடு என்றாலே பொதுவா ஓட்டு வீடுதான். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது. அதுதான் தென்னை மரம் ஏறி கள் இறக்கும் பெரியசாமியின் பெரியவீடு. ஆஜானுபாகுவான கன்னங்கரேல் என்ற தோற்றம். எப்போதும் பளிச்சென்ற, இடுப்பில் இறுகக் கட்டிய வெள்ளை வேட்டியும், மேலே சட்டை இல்லாமல், மல் துணியில் தைத்த காலர் இல்லாத பனியனும்,அதற்கும் மேல் ஒற்றைத் தோளில் கிடக்கும் துண்டும்தான் இவரின் நிரந்தர உடை. சட்டை கிடையாது. ஒருக்கால் கீழ் சாதியினர் என்பதால் சட்டை அணியக் கூடாதோ? .கள் இறக்கும் வேலைக்குப் போகும்போது, இடுப்பில் லங்கோடு போல இழுத்துக் கட்டிய வெறும் வேட்டியும், துண்டும் மட்டும்தான். அதன் மேல் கள் இறக்க பளிச்சென்ற அரிவாள்பெட்டியும்,அதற்குள் பளபளவென்று தீட்டிய அரிவாள், கள்ளுக்கான தென்னம்பாளையை நசித்து அடிக்க பாளை கட்டை,மற்றும் கயிறு எல்லாம் இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து கள்ளு மரம் கட்ட புறப்பட்டுவிடுவார் பெரிய சாமி. வீடு திரும்ப பத்து மணிக்கு மேலாகி விடும். தினமும் காலையில் பழைய சோறுதான். மற்றபடி மதியம் காய்கறி உண்டு. வாரம் மூன்று நாட்கள் இரவு மீன் குழம்புதான். அம்மாவாசை, கார்த்திகை மற்றும் விரத நாட்களில் தான் இட்லி.

பெரியசாமியின் குடும்பம் 7 பெண்களும், 2 ஆண்களும் உள்ள ஒரு கூட்டுக் குடும்பம். அவரின் அழகான மனைவி லட்சுமி, மருமகள் அலமேலு, மகள் ஆச்சி என்ற அலமேலு, பெரியசாமியின் இரண்டு சிறுவயது விதவைத் தங்கைகள், விதவைத் தங்கையின் மகள் சின்னப்பொண்ணு, மற்றும் இரண்டு சொந்தக்காரப் பெண்கள் எனப் பெரிய பட்டாளமே அவரின் வருமானத்தை நம்பி. புதிதாய் திருமணமான அலமேலு,   சின்னப்பொண்ணு, மற்றும் குட்டி அலமேலு தவிர வீட்டில் உள்ள மற்ற பெண்கள் சட்டை அணிய மாட்டார்கள். அதுதான் அன்றைய சாதிய மரபு. பெண் ஒரு குழந்தை பெற்றுவிட்டால் அவள் சட்டையை மற்றும் பூவைத் துறந்துவிட வேண்டும். கணவன் இருந்தாலும் கூட.. இதெல்லாம் மேல் சாதி வர்க்கத்தின் கட்டுப்பாடுதான். பெரியசாமிக்கு பெரிதாக சொத்து பத்து ஏதும் இல்லை. ஏதோ கொஞ்சம் நெல் விளையும் நிலம் உண்டு. அவரின் மனைவி லட்சுமி நெல்லை அவித்து இடித்து அரிசியாக்கி விற்பனை செய்வது, குடும்பத்தின் துணை வருமானம். ஆனால் அவரும், அவர் மகன் சோமசுந்தரமும்தான் வீட்டில் நிரந்தர வருமானம் ஈட்டும் நபர்கள். பெரியசாமி பேருக்குத் தகுந்தாற்போல இரண்டாள் வேலை பார்த்து சம்பாதிப்பார். ஆனாலும் கூட, குடும்ப வண்டி வீட்டில் உள்ள பெண்களின் சிக்கனத்தால் பிரச்சினையின்றி ஓடியது.

பெரியசாமி மகன் சோமசுந்தரத்துக்கும், அலமேலுவுக்கும் 1944, வைகாசித் திங்கள் 22 ஆம் நாள் இனிதே திருமணம் நடந்தேறியது.அப்போது சோமசுந்தரம் பத்து வகுப்பு முடித்து, தன் தந்தை கள் இறக்கும் முதலாளியிடமே, ஒரு கணக்குப் பிள்ளை வேலை பார்த்தார். சோமசுந்தரம் கொள்ளை அழகு. சோமசுந்தரம், அலமேலுவின் முதல் ஆண் குழந்தை பெரியம்மை நோயால் கருச்சிதைவு ஏற்பட்டு இறந்தது. அதன் பின் 5 ஆண்டுகள் குழந்தை இன்றி குடும்பம் கோவில் கோவிலாய் ஏறி இறங்கியது. எல்லா சோசியர்களையும் நம்பி கூப்பிட்டு குறி பார்த்தது. சோசியர் நாக தோஷம் இருப்பதாகக் கூறி, 48 நாட்கள், பிள்ளையார் பிடித்து விரதம் இருக்கச் சொன்னார். இவர்களும் அனைத்தையும் நம்பி எல்லா சடங்குகளும் செய்தனர். திருவிடைமருதூர் கோவில் சென்று ஆணாகப் பிறந்தால் மகாலிங்கம் என்றும், பெண்ணாகப் பிறந்தால் மோகனாம்பிகை என்றும் பேர் வைப்பதாக வேண்டிக்கொண்டனர். ஆனால் சாமி பிள்ளையைக் கொடுக்கவில்லை. மனிதன்தான் பிள்ளையை உருவாக்கினார். அதன்பின் 1949, மே மாதம் கொளுத்தும் கோடை வெயிலில், சித்திரை 29, காலை 6.30 மணிக்கு, புதனன்று பிறந்தவள்தான் இந்த மோகனா..

மோகனா பிறந்த பின்னர், சோமசுந்தரத்துக்கு அரசுப் பணி, அதான் போஸ்ட் மேன் வேலை கிடைத்தது. வீட்டுக்கு ஒருபெல்ஜியம் கண்ணாடி பரிசாக கிடைத்தது. பிள்ளை பிறந்ததும் ராசி என்று ஒரு மளிகைக் கடையும் வைக்கின்றனர். அதில் லட்சுமி பாட்டிதான் முதலாளி.மோகனா யோகக்காரி என்று பேசப்பட்டாள் .. குடும்பத்துக்கே கொள்ளைப் பிரியம் மோகனா மேல். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை போல, குழந்தை இல்லாத வீட்டில் காலில் சல்சல் என கொலுசுடன் தத்தி நடந்து விளையாண்டு திரிந்தாள் மோகனா. தாத்தா பெரியசாமிக்கு பேத்தி என்றால் உயிர்தான். தினமும் பேத்திக்கு, அவளுக்குப் பிடித்தமான ஏதாவது இனிப்பு தீனி வாங்கி வருவார். பேத்தியுடன் பேசி மகிழ்வார்.

மோகனா பள்ளிக்கூடம் செல்லும் முன்பு சிறுவயதில் ஒரு நிகழ்வு. அப்போதுதான் சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரம். ஆண்டு 1952.. (ஆண்டு பின்னரே தெரியும்) எப்படி அந்த குழந்தைக்கு தேர்தல் பற்றிய நினைவு இன்னும் நினைவில் நிற்கிறது என்பது ஆச்சரியமே. மூன்று வயதுக் குழந்தையின் நினைவில் இந்த செய்தி இவ்வளவு ஆழமாகப் பதிந்து இருக்குமா? இருக்கிறதே மோகனாவின் பாட்டி லட்சுமியும், அம்மாவும்   குழந்தை மோகனாவையும் அழைத்துக்கொண்டு ஓட்டு போட செல்கின்றனர். வழியில் ஏர் உழவனும், கதிர் அரிவாள் சின்னமும் ஒட்டிய போஸ்டர்கள். போகும் வழியில் கொஞ்ச பேர் வந்து அம்மாவிடமும், பாட்டியிடமும் கதிர் அரிவாளுக்கு ஓட்டு போட சொல்கின்றனர். ஆனால் வீட்டில் ஆம்பிள ஆள் சொல்லி அனுப்பியபடியே இந்த பெண்களும் ஓட்டுபோட்டனர். யார் தேர்தலில் ஜெயித்தார்கள் என்ற விஷயமெல்லாம் குழந்தைக்கு தெரியாது. ஓட்டளித்தவர்களுக்கும் தெரியாது.

மோகனாவின் 4வது வயது.. அவளின் சேட்டையும் அதிகமான பேச்சும் தாங்க மாட்டாமல் பள்ளியில் சீக்கிரம் சேர்க்க முடிவு செய்தனர். அவளின் பிறந்த நாளை மாற்றி முன்பே பிறந்ததாகப் போட எண்ணினர். ஒரு நாள் விஜயதசமி அன்று தாத்தா பெரியசாமி பேத்தி மோகனாவின் கையைப் பிடித்துக் கொண்டு, பள்ளிக்கூடம் அழைத்துப் போகிறார். வழி எங்கும் அன்று இருண்ட மழை மேகம் கப்பிக் கிடக்கிறது. லேசான தூறல் வேறு. தாத்தாவும் பேத்தியும் இராமாபுரம் துவக்கப் பள்ளிக்கு போகின்றனர்.

இராமாபுரம் பள்ளியில் மூன்று அறைகள். வாசலில் இரண்டு திண்ணைகள். நடுவில் ஒரு திறந்த குட்டை பெஞ்சுகள் போட்ட அறை .பின் பக்கம் ஒரு நீண்ட அறை. 5 வகுப்புகள் உள்ள,3 ஆசிரியர்கள் உள்ள சாதுவான பள்ளி. இதன் தலைமை ஆசிரியர், பெரிய வாத்தியார் என்று அழைக்கப்படும் பூணூல் போட்டு, உச்சிக் குடுமி வைத்து, சட்டை போடாத, வெங்கட் ராமையர். கூட இரண்டு சக ஆசிரியர்கள். இருவரும் மேல் சாதி வர்க்கம்தான். ஒருவர் மோகனாவின் அடுத்த தெருவில் குடியிருக்கும் நாகலிங்க சார். இன்னொருவர் சின்ன வாத்தியார் என அழைக்கப்படும் மூவலூர் வாத்தியார் ..அவரின் பெயர் இன்னும் தெரியாது மோகனாவுக்கு.

பள்ளியின் நடு அறை .. கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கிறது. பெரியசாமி தன் பேத்தியைச் சேர்ப்பதற்காக நெல் கொண்டுவந்திருக்கிறார். அது அந்தக் கால வழக்கம்.பெரிய வாத்தியார், நாகலிங்க சாரைக் கூப்பிட்டு, “சார், இவா கிட்ட நெல்லை வாங்கி தரையில் கொட்டி, கொழந்தையை ஹரி நமோத்து சிந்தம் எழுதச் சொல்லுங்கோ..” என்கிறார். நெல் தரையில் கொட்டப்படுகிறது. குழந்தை மோகனாம்பிகையின் கையை நாகலிங்க சார் பிடித்துக் கொண்டு, ஹரி நமோத்து சிந்தம் எழுதச் சொல்லி, “எங்கே சொல்லு, ஹரி நமோத்து சிந்தம் சொல்லு” என்கிறார்.(பின்னர்தான் அது ஹரி ஓம் நமோத்து சிந்தம் என்பது தெரிந்தது.) மோகனாவும் மிரளாமல், அழாமல், ரொம்ப சமத்தாக சொல்வதை திருப்பி சொல்கிறாள்.. எல்லோருக்கும் சந்தோஷம் பொங்குகிறது. உடனே தாத்தா பெரியசாமி ஆரஞ்சு மிட்டாய், அதுதான் ஆரஞ்சுப் பழ உருவில் உள்ள புளிப்பும், இனிப்பும் கலந்த மிட்டாயை எல்லோருக்கும் கொடுக்கிறார். அன்றிலிருந்து மோகனாவின் பள்ளிப்பருவம் துவங்கியாச்சே..

மோகனாவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பெண் சிநேகிதிகளே பொதுவாக இல்லை. மேலும் அவளோட வீட்டுக்கு அருகில் வேறு வீடுகளும் இல்லை. பள்ளிக்கு வந்த பின், பள்ளிக்கூடத்துக்கு அடுத்த வீட்டில் உள்ள நைனார் வீட்டுப் பெண்கள்தான் நண்பர்கள். பெரிய பெண் தமிழரசியும் அப்போது 5வது படித்தார். இரண்டாவது பெண் அறிவுக்கொடியும், மோகனாவும் வகுப்புத் தோழிகள். அறிவுக்கொடியின் வீட்டுக்கு தண்ணீர் குடிக்க மட்டும் போவாள் மோகனா. வகுப்பிலும் மூன்று பெண்கள்தான். மற்றவர்கள் எல்லாம் பையன்கள்தான். மோகனா நன்றாகப் படித்தாலும், வாத்தியார் இல்லாத நேரம் பேசிவிட்டு, சட்டாம்பிள்ளை சொன்னதைக் கேட்டு பெரிய வாத்தியார் கை நீட்டச் சொல்லி, ஸ்கேலால் அடி வாங்கிய அனுபவம் ஏராளம் உண்டு. அது மட்டுமா? பெரிய வாத்தியார் நாற்காலியில் பசங்க முள்ளை வைத்ததைப் பார்த்தும்,மோகனவோ, அறிவுக்கொடியோ, சாரிடம் சொல்ல மாட்டார்கள். அதுக்கும் சேத்து பெரிய வாத்தியார் பிரம்பு அடிக்கடி மோகனாவை முத்தமிடும். நாகலிங்க சார் ரொம்ப சாது. அதிர்ந்து கூட பசங்களிடம் பேசமாட்டார். சின்ன வாத்தியார்தான் மூணாம் கிளாஸ் சார்.

வீட்டுக்குப் போனால், கடைக்கு   எதிர் வீட்டு சின்னப் பிள்ளை பிரண்டுதான். ஆனா அவங்க வீட்டுக்குப் போனா செமத்தியா உதை விழும் மோகனாவின் அப்பாவிடம்.. சின்னப்பிள்ளை பள்ளிக்கூடம் போகல. குடும்பமே, தென்னங்கீத்து முடையறது.. அதுதான் அவங்க தொழில். யாரும் படிக்கல. ஆனாலும் கூட சின்னப்பிள்ளை வீட்டுக்கு யாருக்கும் தெரியாம மோகனா போவா. உதையும் ஏராளமா..! வீட்டுக்கு வந்தால், சாயங்கால நேரத்துல அப்பா, மோகனாவை, தம்பி, அம்மா, அத்தை எல்லாரையும் படம் எடுப்பாங்க. அவங்க ஸ்டூடியோ பிரண்டு கிட்ட காமிரா வாங்கி வந்து படம் எடுப்பாங்க.

அன்று காலையில் வீட்டுக்கு மொச்சை கொட்டை வருகிறார். மோகனாவுக்கு அப்போது ஒரு 5-6 வயது இருக்கலாம். மொச்சைக்கொட்டையின் வயது ஒரு 50 இருக்கும். மொச்சைக்கொட்டை என்றால் அவரும் மனிதர்தான். ஆனால் அந்த ஊரின் வெட்டியான். (தாழ்த்தப்பட்ட மனிதர்களின் பெயர் கூட தாழ்த்தப்பட்டதாகவே இருக்கும். மண்ணாங்கட்டி, அம்மாசி , மொச்சைக்கொட்டை, பரதேசி என்றுதான் பெயர்கள் இருக்கும்). வாசலில் வந்து நிற்கிறார். ஒல்லியான உயரமான கெச்சலான உடம்பு. ஒட்டி உலர்ந்த வயிறு..இடுப்பில் ஒரு அரணாக் கயிறு மட்டுமே. அதில் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் கையகலமுள்ள கோவணம். இதுதான் மொச்சைக் கொட்டையின் நிரந்தர உடை. சோழம்பேட்டையில் எல்லோருக்குமே வெட்டியான் மொச்சைக்கொட்டையை ரொம்பவும் பரிச்சயம். ஆனால் இடுப்பில் துணி இல்லாத 3 வயசு குழந்தை கூட அவரை மொச்சைக்கொட்டை என்று பேர் சொல்லித்தான் அழைக்கும். அவரின் நிலைமையும், அவர் பிறந்த குலமும்தான் அவரை இந்த மேல்தட்டு வர்க்கத்தின் மத்தியில் இப்படி ஒரு மோசமான நிலையில் வைத்துள்ளது. இது இவருக்கு மட்டுமல்ல. தஞ்சையின் அனைத்துப் பகுதி தாழ்த்தப்பட்டோரின் நிலையும் இதுதான்.

மொச்சைக்கொட்டை வாசலில் வந்து நின்று   “தாயி கொஞ்சம் தண்ணி குடு தாயி..” என்று குரல் கொடுக்கிறார். வீட்டுக்குள் இருக்கும் மோகனாவுக்கு, இது கேட்டு வெளியில் வருகிறாள் குழந்தை. அப்போ வீட்டுக்குள்ளிருந்து லட்சுமி பாட்டி, “ஏ..பாப்பாத்தி ( மோகனாவின் செல்லப்பெயர்..வீட்டில்), வாசல்லே மொச்சைக்கொட்டை வந்து தண்ணி கேக்குறான். சின்ன லோட்டாவிலே தண்ணி கொண்டு போயி, அவனைத் தொடாமல், தூக்கி கையிலே தண்ணி ஊத்துடி.”. மோகனா சின்ன லோட்டாவிலே தண்ணி கொண்டு போயி மூங்கில் கேட்டைத் திறந்து, இந்தாங்க தண்ணி என்று மொச்சைக்கொட்டையில் கையில்   லோட்டாவைக் கொடுக்கிறாள். மொச்சைக்கொட்டை பதறியடித்து “அம்மா தாயி என்னைத் தொடாதீக, நான் தீட்டு தாயி. தள்ளி நின்னு ஊத்துங்க ஆச்சி” என்கிறார் அந்த சின்னப் பொண்ணைப் பார்த்து. குட்டிப்பொண்ணு மோகனா மனதில் ஒரே குழப்பம். எப்பவும் வீட்டுலே பெரியவுங்க கிட்ட மரியாதையாய் பேசணும், மரியாதையாய் நடந்துக்கணும்னு சொல்றாங்க. ஏன் வயசிலே பெரியவரான மொச்சைக் கொட்டையை எல்லாரும் பேர் சொல்லி கூப்பிடுராங்க.எதுக்கு அவரை தொட வேண்டாம், தொடாம தண்ணி ஊத்துங்கிறாங்க ..இது சரியில்லையே என்று அந்தக் குழந்தை மனது கோபப்படுகிறது காரணம் தெரியாமல்..இதுதான் அந்த சிறு வயதிலேயே தீண்டாமைக்கு எதிராக மோகனா குழந்தையின் மனதில் தோன்றிய முதல் தீப்பொறி. .

அப்போதுதான் கணவனே கண் கண்ட தெய்வம் படம் (1955ல்) வந்தது. அதனைப் பார்த்திட்டு வந்த அனைவரும், படத்தில் வரும் அந்த குழந்தை தந்தையைக் காப்பாற்றுவதை பெருமையாக பேசிக்கொண்டு இருந்தார்கள் டீக்கடை பெஞ்சில் . அங்கு கடைக்கு சின்ன லோட்டாவில் பால் கொண்டுபோன மோகனாவும்,காலை வானொலி செய்தி கேட்டுக் கொண்டே, இந்த கதையெல்லாம் கேட்கிறாள். அவளும் படம் பார்க்க எண்ணுகிறாள். உன்னைக் கண்தேடுதே..என் உளம் நாடவே..பாட்டைப் பாடுகிறாள். கடைசியில் பாட்டியிடம் தகராறு பண்ணி அந்தப் படத்தைப் பார்த்ததெல்லாம் தனிக்கதை. மோகனாபாட்டி மற்றும் அப்பா செல்லம்.

மோகனா மூணாம்ப்பு படிக்கும்போது, பள்ளிகூடத்துக்கு பக்கத்தில் இருக்கும் நைனார் வீட்டுக்கு தந்தை பெரியார் வருகிறார். நைனாரும் பெரியாரும் சிநேகிதர்கள்னு எல்லாரும் பேசிக்கிறாங்க. பள்ளிக்கூடத்திலே பெரிய சாரும் இதையேதான் சொல்றாரு. மோகனாவையும் அறிவுக்கொடியையும் பெரிய சார் கூப்பிட்டு, “நாம இப்ப நம்ம பள்ளிக்கூடத்துக்கு பெரியாரைக் கூப்பிடப்போறோம். அவரு நம்ம பள்ளிக்கூடத்துக்கு வந்து கொடி ஏத்தப் போறாரு. அவரு ரொம்ப பெரிய மனுஷரு. அவரு கொடி ஏத்துனதுக்கு அப்புறமா நீயும் அறிவுக்கொடியும், தாயின் மணிக்கொடி பாரீர், பாட்டை நல்லா உரக்க, தப்பில்லாம பாடணும். என்ன புரியுதா?” என்றார்.

அப்புறமா மோகனா நைனார் வீட்டுக்குப் போகிறாள். அங்கு போகும்போது தமிழகத்தின் புரட்சி நாயகன் தந்தை பெரியார் ஒரு தட்டில் இட்லி சாப்பிடுவதை அருகிலிருந்து வேடிக்கை பார்க்கிறாள். எப்படி ஒருத்தர் வெள்ளை தாடியும், கருப்பு சட்டையுமாய்.. பெரிய மனுஷர்னா என்ன? இப்படித்தான் பெரிய மனுஷங்க இருப்பாங்களோ.. என்னமோ நாம் பெரிய சார் சொன்னபடி தாயின் மணிக்கொடி பாட்டை கணீர்னு பாடிடுவோம் என்ற எண்ண ஓட்டங்கள் அந்த சின்னப் பிஞ்சின் மனசுக்குள்.

குழந்தை மோகனாவுக்கோ, அறிவுக்கொடிக்கோ பெரியாரின் பெருமை, மகத்துவம் பற்றி பெரிசா எதுவும் தெரியாது. நைனார் வீட்டிலிருந்து பெரியார் நடந்தே வந்தார். வந்து கிழக்கு நோக்கி நின்று கொடி ஏற்றினார். மோகனா, அறிவுக்கொடி என்ற இரண்டு வாண்டுகளும் தாயின் மணிக்கொடி பாட்டைப் பாடினர். எதிரில் பள்ளிக்குழந்தைகள் எல்லோரும் (என்ன ஒரு 50 பேர் கூட இல்லை) நின்று கொண்டிருந்தனர். மோகனாவுக்கும், அறிவுக்கொடிக்கும் பெரியார் எதிரில் ஒரு பாட்டுப்பாடியதில் பயங்கர குஷிதான். அதைத் தாண்டி அந்த வயதில் அந்தக் குழந்தைகளுக்கு ஏதும் தெரியாது. அப்போது அந்தக் குழந்தைக்கு தெரியுமா பின்னாளில் இந்த பெரியாரைப் பற்றிப் பேசப் போகிறோம், அவரின் கருத்துகளை உள்வாங்கப்போகிறோம் என்று..?

 தொடரும்…

Related posts