You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

அறிவியல் சர்வாதிகாரி அமெரிக்கா

லுக் மாண்டேக்னர்

நேர்காணல்: மார்டின் என் சரிஸ்க்

www.sciencemag.org

தமிழில்: இரா. நடராசன்

கொடிய எய்ட்ஸ் நோய் கிருமி, ஹியூமன் இம்யூனோ வைரஸ்(HIV) எனும் வைரஸ்ஸை கண்டு பிடித்து படம் பிடித்து 2008இல் நோபல் பரிசு பெற்றவர் லுக்  மாண்டேக்னர்
(Luc Montagnier). பிரான்ஸ் நாட்டின் கிருமியியல் விஞ்ஞானி லுயிஸ் பாஸ்ச்சர் ஆய்வகத்தின் அயராத உழைப்பாளி. சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து வெளியேறி சீனாவின் சாங்காய் ஜிய்யோ டோங் பல்கலைக் கழகத்தின் கிருமியியல் நவீன ஆய்வகத்தின் தலைமை பதவியேற்று உலகை அதிர்ச்சி அடைய வைத்தார் மாண்டேக்னர். அமெரிக்கர்கள் நம்புவதை புரிந்து கொள்வதை மட்டுமே தன்னால் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது  என்று பகிரங்கமாக அறிவித்த மாண்டேக்னர், சர்ச்சைக்குரிய இரண்டு அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை 2009ல் சீனாவின் தனது தலைமையில் வெளிவரும் அறிவியல் ஏட்டில் வெளியிட்டார். சர்வதேச எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தை தலைமையேற்று இன்றுவரை நடத்தி லட்சக்கணக்கான நோயாளிகளின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்கின்றார்.
லுக் ஆண்டோனின் மாண்டேக்னர், 1932ல் ஆகஸ்ட் 18 அன்று பிரான்ஸ் நாட்டில் சாபிரிஸ் பிராந்தியத்தில் பிறந்தவர். அடிப்படை பட்டப்படிப்பை முடித்த கையோடு பாரீசின் லுயிஸ் பாஸ்ச்சர் கிருமியியல் ஆய்வகத்தில் இணைந்தார். ஹபட்டால் பிச்சாட் மருத்துவமனை (பாரீஸ்) தலைமை மருத்துவர் வில்லி ரோசம்பம் கேட்டுக்கொண்டதன் பெயரில் தனது முழு நேரத்தையும் எய்ட்ஸ் கிருமி எது என்பதன் ஆய்வில் அர்பணிக்கத் தொடங்கினார். வருடம் 1982. ரெட்ரோ வைரஸ் எனும் வகைப்பாடு வைரஸ் குறித்த கல்வியில் தனித்துவம் வாய்ந்தது. நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களைத் தாக்கி அழிக்கும் இவ்வகை வைரஸ் அதிவேகமாக இனப் பெருக்கம் அடையும் அதே சமயம்  ஆய்வுகளுக்கு  உட்படும் அளவிற்கு வெளிக் கொணர முடியாமல் பன்மடங்கு சாதாரண வைரஸ்களை விட சிறியனவாக இருக்கும் ஆபத்துக் கொண்டவை. 1983ல் எய்ட்ஸ் வெகுவேகமாக ஒரு உயிர்க் கொல்லியாகப் பரவிய ஆண்டுகளில் வைரஸ்ஸைக் கண்டுபிடித்து சைன்ஸ் ஜெர்னல் இதழில் வெளியிட்டார் மாண்டேக்னர். ஆனால்  அதை முதலில் கண்டுபிடித்தது ராபர்ட் கல்லோ எனும் விஞ்ஞானிதான் என்பது அமெரிக்கர்களின் வாதமாக இருந்தது. பத்தாண்டுகள் நீடித்த சர்ச்சை செய் யங்சாங் எனும் விஞ்ஞானி தலைமையிலான குழுவால் 1993ல் முடித்து வைக்கப்பட்து. ராபர்ட் கல்லோ தனது ஆய்வகத்தில் பயன்படுத்திய ரத்த மாதிரியே மாண்டேக்னரின் ஆய்வகத்திலிருந்துதான் வந்தது என்பது வெளிவந்த பின் உலகெங்கும் எய்ட்ஸ் நோய் பரவலைத் தடுக்க மாபெரும் மருத்துவ மக்கள் இயக்கத்தை தொடங்கினார் மாண்டேக்னர்.
மரபணுக்களின் ஆய்வில் 2000ல் நுழைந்த மாண்டேக்னர். 2010ல் சயின்ஸ் ஜர்னலின், திசம்பர் 24 நேர்காணலில் தனது சீன பல்கலைக்கழக இடம் பெயர்வு பற்றியும் அமெரிக்க அய்ரோப்பிய ஆக்கிரமிப்பு அறிவியலின் அதிர்ச்சிதரும் உண்மைகளையும் மனம் திறந்து பேசினார். அதன் சுருக்கமே  இங்கு தரப்பட்டுள்ளது.

கே: லுக் மாண்டேக்னர், நீங்கள் சீனாவிற்கு சாங்காய்க்கு செல்வது ஏன்?
ப: புதிய கல்வியகம் ஒன்றில் என் பெயரில் தொடங்கப்படும் தனி கிருமியியல் துறையில் பேராசிரியராகத் தலைமை ஏற்குமாறு வந்த அழைப்பை ஏற்றிருக்கிறேன். இந்தத் துறை இயற்பியல், உயிரியல் மற்றும்  மருத்துவ இயலின் கலவை முழுமையை உள்ளடக்கிய புதிய அறிவியல் இயக்கமாக இருக்கும். பிரதான கவனம் நீரில் கரையும் மரபணு (டி.என்,ஏ) வெளியிடும் மின்காந்த அலைகள் மீதானதாக இருக்கும். கோட்பாட்டு இயல் பார்வை மற்றும் இதன் மீதான மருத்துவப் பயன்பாடு  குறித்த அணுகுமுறை இரண்டுமே பிரதானமாக இடம் பெறும்.

என்ன மாதிரி அலைகள் இவை?
நாங்கள் என்ன கண்டுபிடித்துள்ளோம் என்றால் டி.என்.ஏ. (மரபணுக்கள்) தண்ணீரில் வெகு நீர்ம நிலைக்கு கலந்து கரையும் போதும் சிதையாது, ஆனால் அதே சமயம் மின் காந்த அலைகளை உற்பத்தி செய்து சமிக்ஞைகள் போல வெளியிடுகிறது. நமது கருவிகளால் அவற்றைப் பதிவு செய்து கண்காணிக்க முடியும். குறிப்பாக மிகு இருக்க நிலை கொண்ட பாக்டீரியா மற்றும் வைரஸ் டி.என்.ஏக்கள்தான் அப்படி நடந்து கொள்கின்றன.

இது மருத்துவத்துறையில் முக்கிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?
ஆட்டிஸ மனநோய், அல்ஸமிர் நினைவிலி நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட ரத்த பிளாஸ்மாக்களில் உள்ள பாக்டீரியாவின் மரபணுக்கள் இவ்வகை அலை சமிக்ஞைகள் வெளியிடுவதை நான் கண்டு பிடித்திருக்கிறேன். இவ்வகை பாக்டீரியாக்கள் குடல் நாளத்திலிருந்து வந்ததாகப்படுகிறது. எனவே குடல் நாளத்திலிருந்து வெளிவந்து ரத்தத்தோடு கலந்து இவை மூளையை பாதிப்படையவைக்க வாய்ப்புகள் உண்டு. நினைவிலி நோய்கள் அனைத்திற்குமான காரணியாக இது இருக்கலாம்.

இந்த ஆய்வை பாரீசில் அல்லது அய்ரோப்பாவில் எங்காவது செய்யக்கூடாதா, சீனாவுக்கு செல்ல வேண்டுமா?
இங்கே அதற்கு ஆதரவும் இல்லை. நிதி ஆதாரமும் இல்லை. அமெரிக்கர்களுக்குப் புரிகிற ஒன்றையே திரும்பத் திரும்ப நாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது. பிறர் ஆய்வகங்களை எப்போதும் வேவு பார்த்து இவர்கள் பழகி விட்டார்கள்.

ஆனால் முன்பு எச்.ஐ.வி. வைரஸ் அமைப்பு கண்டுபிடிப்பின் போதும் இதே வகை சர்ச்சைதானே கிளம்பியது. அதன் பின்னணி பற்றி சொல்லுங்கள்.
லுயிஸ் பாஸ்ச்சர் ஆய்வகத்தில் 1982 நவம்பரிலேயே நாங்கள் எய்ட்ஸ் நோய் வைரஸைக் கண்டடைந்து விட்டோம். அதற்கு லிம்போடைனோ பதி அசோஸியேட்டட் வைரஸ் (எல்ஏவி) என்று நான் பெயரிட்டிருந்தேன். சயின்ஸ் ஜர்னல் இதழில் 1983ல் என் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. ஆனால் அதே இடத்தில் வேறொரு பக்கத்தில் அமெரிக்கரான ராபர்ட் கல்லோ என்பவரின் ஏறத்தாழ இதே வைரஸ் பற்றிய கட்டுரையைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். கல்லோ அதே வைரஸிற்கு ஹியூன் டி.லிம்ப்போ ட்ராபிக் வைரஸ்டைப் III
(எச்டிஎல்வி III) எனப் பெயரிட்டிருந்தார். எங்கள் இரு குழுக்களில் யார் எச்.ஐ.வி. வைரஸ்ஸை முதலில் அடைந்தது என்பதைப் பற்றி பெரிய சர்ச்சையை அமெரிக்க இதழ்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தின. 1990 வரைகூட அது எல்ஏவி வைரஸ் என்றுதான் அழைக்கப்பட்டது. செங்-யங் சாங் 1993ல் நேச்சர் இதழில் தனது ஆறு வருட ஆய்விற்குப் பிறகு கல்லோ ஆய்வகம் பயன்படுத்திய சேம்ப்பிள் எனது ஆய்வகத்திலிருந்து தான் என நிரூபித்த பிறகும் அமெரிக்கர்கள் என்ன செய்தார்கள்? சர்வதேச உரிமத்தை 50-50 என அறிவித்து அந்த வைரஸ்தான் எய்ட்ஸ் வரக்காரணியாக  அமைந்த வைரஸ் என கல்லோதான் முதலில் அறிவித்தார் என்று திசை திருப்பினார்கள்.

பிரெஞ்சு அதிபர்  பிராஸ்காலிஸ் மிட்டராண்டும் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனும் சந்தித்தபோது பிரச்சனை பேசப்பட்டது அல்லவா.?
மாண்டேக்னர் முக்கியமே அல்ல. லுயிஸ் பாஸ்ச்சர் ஆய்வகம் முக்கியம், அயராத 42 ஆய்வர்களின் கடும் உழைப்பு முக்கியம். எங்களுக்கு கண்டிப்பாக இது கவுரவ பிரச்சனை அல்ல. ஆனால் உண்மையை உலகம் அறிய வேண்டும்.  பிரான்ஸ் நாடு பாஸ்ச்சர் ஆய்வகத்தின் உண்மைத் தன்மையை நம்பியது. அவ்வளவுதான். ஆனால் அவர்களது சந்திப்பு இரு விஷயங்களை சாதித்தது. வைரஸ்ஸிற்கு அது (எச்.ஐ.வி.) பொதுப் பெயர் வைத்தது. கல்லோவும் நானும் சந்திக்க வழி வகுத்தது. 2002 சயின்ஸ் ஜர்னல் இதழில் (நவம்பர்) இருவரும் இணைந்து ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவு. நான் அவரது பங்களிப்பை மறுக்கவில்லை.

ஆனால் எச்.ஐ.வி. குறித்த நோபல் பரிசு உங்களுக்கும் உங்களது சகவிஞ்ஞானி பிராஸ்காயிஸ் சினவ்ஸிக்கும் பகிர்ந்து தரப்பட்டது. அதில் ராபர்ட் கல்லோவின் பெயர் இடம் பெற வில்லையே?
இது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. இன்று வரை நம்பமுடியவில்லை. அமெரிக்க இதழ்கள் மீண்டும் என் பெயரில் அவதூறுக் கட்டுரைகள் செய்திகள் எழுதத் தொடங்கினார்கள் என்றாலும் விரைவில் அது அடங்கிப் போனது. எய்ட்ஸ் நோய் அறிகுறியைக் கண்டறியும் எல்ஸா பரிசோதனையை என் நோபல் பரிசு பணத்தில் உரிமமாகப் பெற்று அதை கூடுமானவரை விலை குறைப்பு செய்து, சர்வதேச எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை அமைப்பையும் நான் நிறுவியபோது அவர்களது சர்ச்சைகள் பின்னுக்குப் போய்விட்டன.

உங்களது 2009 கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்லுங்கள். வேதியியலின் இன்று வரையிலான அடிப்படைகள் மீதே அது கேள்வி  எழுப்புகிறதே?
கடந்த 90 வருடங்களில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளிலேயே மிகவும் முக்கியமானது என்று நாம் அதைச் சொல்லலாம். அது சரிதான் என்று நிரூபணமானால் நவீன வேதியியலை நாம் மறு சோதனைக்கு உட்படுத்த வேண்டி இருக்கலாம். நான்  ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல எனது புதிய ஆய்வு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என மூன்று அம்சங்களையும் இணைக்கின்ற ஒன்று. எம். பிரம் மற்றும் இ.கேலி வகை பாக்டீரிய மரபணுக்களை அதி நீர்ம வேதி வினைக்கு முற்றிலும் உட்படுத்தியபோது அவை மின்காந்த அலைகளின் வழியே நம்மால் பதிவு செய்ய முடிந்த சமிக்ஞைகளை வெளியிடுகின்றன.

ஜெர்மனியில், லிண்டாவு நோபலாளர் சந்திப்பில் 2010ல் நீங்கள் உங்களது புதிய இந்த ஆய்வுகளை முன்வைத்து உரை நிகழ்த்தியபோது பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லையே.
ஒரு அறுபது நோபல் அறிஞர்கள் அங்கே வந்திருந்தார்கள். நான் உட்பட… ஆனால் இது வேடிக்கையாக உள்ளது. எல்லாரும்  ஏற்றுக்கொள்ளும் ஒன்றைத்தான் நாம் முன்மொழிய வேண்டும் என்பதுபோல இருப்பது. அய்ரோப்பியர்களின் கற்பிதம் இது.

இப்படி நோய்க் கிருமிகளை நீர்ம நிலைப்படுத்தி ஆராய்வதன் மூலம் நீங்கள் ஹோமியோபதி முறைக்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது. உலகெங்கும் பழமைவாதம் என ஏற்கப்பட்ட ஹோமியோபதி முறையை நீங்கள் ஏற்கிறீர்களா?
ஆரம்பத்தில் நானும் கூட நம்ப முடியாமல் மிகுந்த சந்தேகத்தோடு தான் பிரச்சனையை அணுகினேன். ஆனால் ஆய்வுமுடிவுகள், எத்தனை முறை ஆய்வைத் திரும்ப நிகழ்த்தினாலும் எங்களுக்கு அதே முடிவுகளே கிடைத்தன. மற்ற ஆய்வகங்களின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். ஆனால் ஹோமியோபதி மருந்துகள் ஏனைய சந்தைப் பொருட்கள் எல்லாமே சரி என்பது என் நிலைப்பாடு அல்ல. அது அனைவரும் அறிந்ததுதான்.

அதற்காக நீங்கள் ‘தண்ணீர் நினைவாற்றல்’ முன்மொழிந்த ஜோகுஸ் பென்வென்சைட்டை நவீன கலீலியோ என்று அழைத்திருக்க வேண்டுமா?
அதில் என்ன தவறு? பென் வென்சைட் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டார். 1988ல் நேச்சர் இதழில் அவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை மூலம் ஐ.ஜி.இ.வகை நோய் எதிர்ப்புக் கிருமிகள் 10-18 மடங்கு நீர்ம நிலைக்கு குறைந்தாலும் நோய் ஏற்படுத்தும் தீவிரத்தை இழப்பதில்லை என்பதை நிறுவி இருந்தார். அதிர்ச்சி ஏற்படுத்தும் முக்கிய முடிவு அது. ஆனால் அப்படி நீர்ம மயமானவற்றால் உயிரியல் ரீதியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது அறிவியலாளர்களின் பொது நம்பிக்கை. அவர் எல்லாருக்கும் எதிராக சிந்தித்தார். கலீலியோ மாதிரிதான். ஆனால் நீங்கள் நினைத்துப் பாருங்கள். பென்வென்சைட் அனைத்தையும் இழந்தார். ஆய்வகம், அன்றாட வாழ்வுக்கே கஷ்டம் வரும் அளவுக்குப் பணம் எல்லாம் இழந்தார்.. எங்கே போனாலும் அவமானம், ஆனால் ஏறக்குறைய எங்களது புதிய ஆய்வு அவர் இறந்து இத்தனை வருடம் கழித்து அவரது கண்டுபிடிப்புகளுக்கு மறு வாய்ப்பு தர முயல்கிறது. அவரது எல்லா முடிவுகளும் 100
சதவிகிதம் மறு ஆய்வு செய்ய முடிந்தவை அல்ல… என்பது மட்டும்தான் பலவீனம்.

ஹோமியோபதி முறையிலும் ஏதோ இருக்கிறது. என்று நினைக்கிறீர்களா?
ஆனால் நம்மால் 10-18 மடங்கு அதி நீர்ம நிலைக்கு மேல் போக முடியவில்லை. அவர்கள் அதற்கு மேலும் போகிறார்கள் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. டி.என்.ஏ.வை நம்மால் அதற்கு மேல் கொண்டுபோக முடியாது என்பதும் எனது ஆய்வு முடிவுகளில் ஒன்று. அல்லது அந்த நிலையோடு நமக்கு சமிக்ஞைகள் கிடைக்கவில்லை என்றும் கூறலாம். 10-18ல் கூட டிஎன்ஏ.வின் ஒற்றை மூலக்கூறு கூட இல்லை என நிரூபித்த பின்னும் எங்களுக்கு சமிக்ஞைகள் வருவது அடுத்த கட்டத்தை நோக்கி ஆய்வை இட்டுச் சென்றுள்ளது.  ஆஸ்டிக் மனநோய்க் கிருமிகளின் டிஎன்ஏக்களை அந்த நிலையில் பலவீனப்படுத்தி மாற்றம் செய்ய முடியும். இது நோய்த் தடுப்பு குறித்த அடுத்த படி நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

இங்கே பிரான்ஸில் இந்த ஆய்வுகளை மேற்கொள்வது பற்றி மறுபரிசீலனை செய்ய முயல்வீர்களா?
பல மருத்துவ விஞ்ஞானிகள் பென் வென்சைட்டின் ஆய்வு முடிவுகளைப் பரிசோதித்து சரிதான் என அறிந்தும் அமெரிக்க அறிவியல் சர்வாதிகாரத்திற்கு அஞ்சி முடிவுகளை வெளியிடாமல் இருக்கிறார்கள். ஒருவகை அறிவுநிலை பயங்கரவாதம் இது. தவ¤ர பிரான்ஸ் நாட்டின் பணி ஓய்வு விதிகள் என் வயதுக் காரனை வேலை செய்யவும் விடுவதில்லை.

கற்பனாவாத, பழமைவாத அறிவியலுக்குள் நீங்கள் நுழைந்துவிட்டதாகக் கூறுகிறார்களே.
இல்லை. ஏனெனில் இது பழமைவாதமல்ல. ஏமாற்றும் அல்ல. உலக மருத்துவத்துறையில் அமெரிக்க ஆக்ரமிப்பிற்கு பதிலாக ஒரு சரியான எதிர்காலத்தை நோக்கிய கடினமான பயணம். அனைத்து அறிவியல் துறைகளையும் ஒன்றிணைத்து நாங்கள் நுழைந்திருக்கும் புது உலகம் இது.

Related posts