You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

நாமக்கல்லில் மேட்டுத்தெரு ஆத்தூரில் மந்தைவெளி சேலத்தில் கிச்சிப்பாளையம்…

– பெருமாள்முருகன்

பெருமாள் முருகன்(1966)  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர்.கொங்கு வட்டார நாவலின் முன்னோடியான எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவரும்  இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, அகராதி என தமிழ் இலக்கியத்தின் பலதளங்களில் தீவிரமாக இயங்கிவருகிறார்.தற்போது காலச்சுவடு ஆசிரியர் குழுவில் பணியாற்றிவரும் பெருமாள் முருகன் இதுவரை ஏழு நாவல்களும் நான்கு சிறுகதை தொகுப்புகளும் நான்கு கவிதைத் தொகுப்புகளும் ஒரு கொங்கு வட்டாரச் சொல்லகராதியும் எட்டு கட்டுரைத் தொகுப்புகளையும் படைத்திருக்கிறார். பதிப்பாசிரியராக நான்கு புத்தகங்களும் தொகுப்பாசிரியராக ஏழு சிறுகதை தொகுப்புகளையும் கொண்டுவந்திருக்கும் இவரின் கூளமாதிரி,நிழல் முற்றம்,மாதொருபாகன் ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.கதா விருது ,கனடா இலக்கியத் தோட்ட விருது உட்பட இதுவரை பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். நூற்றாண்டு காலமாகத் தொன்றுதொட்டு நீண்டு வரும் இந்திய அடிமைமுறைகளில் ஒன்றான வருணாசிரம முறையிலான சாதியக் கட்டுமானத்தைத் தோலுரித்துக் காட்டும் விதமாக எழுத்தாளர் பெருமாள் முருகன் நடத்தி வரும் கூடு வாசகர் வட்டத்தில் இயங்கி வரும் அவரது முனைவர் பட்ட ஆய்வாளர்களும் இன்னபிற வாசகர்களும் சாதி குறித்த தங்களின் பார்வையையும் அனுமானங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் அப்படியே சமூகத்தின் பார்வைக்கு முப்பத்திரண்டு கட்டுரைகளாகக் கொடுத்திருக்கிறார்கள். அதை அப்படியே தொகுத்து எவ்வித திருத்தமும் செய்யாமல் பெருமாள் முருகன் பதிப்பாசிரியராய் தொகுத்து  தமிழ்ச் சமூகத்தின் முன் வைத்திருக்கும் சாதியும் நானும் என்கிற புத்தகம் குறித்த நம்முடைய கேள்விகளுக்கு அவரளித்த பதில்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

1. கிராமப்புறச் சூழல் மெல்ல அழிக்கப்பட்டு நகரமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் சாதியம் தனக்கான நவீன உருவில் மட்டுப்பட்டுக் கிடந்தாலும் நேரம் வரும்போது தன் விஸ்வரூபத்தைக் காட்டிக்கொள்கிறதே?
நகரமயமாக்கத்தால் சாதியம் ஒடுங்கிவிட வில்லை. அது நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது. சிறு ஊதலில் சட்டெனத் தன் முகம் காட்டுகிறது. ஒருவரின் சாதியைக் கண்டறிவதில் நகர மாந்தர்களுக்குக் கிராமத்தினரைவிட ஆர்வம் அதிகம். ஒரே வீதியில் வாழ்ந்தாலும் தம் சாதியினருடன் மட்டும் நெருக்கம் கொள்வதும் பிற சாதியினரை விலக்கியே வைத் திருப்பதும் நிதர்சனம். கிராமத்தில் வெளிப் படையாக இருப்பதாலும் தம் சாதியினருடன் கூடி வாழ்வதாலும் தனிமைப்படும் பிரச்சனை அவ்வளவாக இல்லை. நகரத்தில் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வோரில் பலர் ஒன்றுகூடி உணவருந்தும்போது ஒருவர் மட்டும் தனியாக உண்கிறார் அல்லது அவரது உணவை மட்டும் மற்றவர் பகிர்ந்துகொள்வதில்லை. இந்தப் புறக்கணிப்பையும் அப்போது நேரும் தனிமை உணர்வையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. நுட்பமான சாதிய மனோபாவம் நகரத்தில் வேரோடியிருக்கிறது. அதை வேரறுக்க ஒரு வழி, ‘சாதியும் நானும்’ நூல் கட்டுரைகள் பேசுவதைப் போல நகரத்து அனுபவங் களை வெளிப்படையாகப் பாதிக்கப்பட்டவர்களும் பாதித்தவர்களுமாகிய பலரும் பேச வேண்டும். வசிப்பிடம், பணியிடம், நட்புறவுகள் ஆகியவற்றில் சாதிய ஊடாட்டத்தையும் நகர வாழ்விலும் அகமண முறையே பெரும்பான்மையாக நிலவுவதையும் குறித்த பல்வேறு அனுபவங்கள் வெளிப்பட்டால் அவற்றைப் பற்றி விவாதிக்க ஏதுவாகும்.

2. நகரமயமாக்கல்  கிராம சமூகத்தின் நிலம் சார்ந்த எச்ச சொச்சங்களைத் தன்னகத்தே வைத்துக்கொண்டு தான் பயணப்பட்டு கொண்டிருக்கிறதா?
எச்சசொச்சங்களை அல்ல. அப்படியே பெயர்த் தெடுத்து வைத்துக்கொண்டு பயணப்படுகிறது. எந்தச் சிறு நகரத்திலும் குடியிருப்புகளில் வெளிப்படையான பேதங்களைப் பார்க்கலாம். நாமக்கல்லில் ‘மேட்டுத்தெரு’, ஆத்தூரில்  ‘மந்தைவெளி’, சேலத்தில் ‘கிச்சிப்பாளையம்’ ஆகியவற்றைப் பற்றி அந்த ஊர்க்காரர்களைக் கேட்டுப் பாருங்கள், சொல்வார்கள். ஆதிக்க சாதியினரும் குறிப்பிட்ட பகுதியில் குழுவாக வாழ்வதும் உண்டு. சென்னையில் வடசென்னைக்கும் தென்சென்னைக்கும் உள்ள வேறுபாடு வாழும் மக்கள் சார்ந்ததல்லவா? சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் ஆகியவை மட்டுமல்ல, பின்னர் உருவான நங்கநல்லூர் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளலாம். எங்கள் திருச்செங்கோட்டில் கவுண்டர் ஏரியா, முதலியார் ஏரியா, செட்டியார் ஏரியா என்றெல்லாம் உள்ளூர் மக்கள் தெளிவாகச் சொல்வார்கள்.  அடுக்குமாடி வீடுகளிலும் ஒரே சாதியினர் இணைந்து பல வீடுகளை வாங்கும் செய்திகள் எல்லாம் வருகின்றன. நம் நகரங்கள் பெரிய கிராமங்கள்.

3. கிராமப்புறச் சூழலில் தொழில் சார்ந்தும் கையிருப்பு நிலம் சார்ந்தும் ஒவ்வொரு பகுதிக்கேற்பச் சமூக ஆதிக்கம் வித்தியாசப்பட்டு கொண்டே இருப்பினும் தனக்கு கீழானவர்களைச் சிறுமைபடுத்திப் பார்க்கிற விசயத்தில் எந்தச் சாதியும் சளைத்ததில்லை என்பதையே எல்லாச் சாதியும் உணர்த்துகின்றனவே?
ஒவ்வொருவரும் தமக்குக் கீழே ஆட்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இல்லாவிட்டால் ‘அவர்கள் எங்களுக்குக் கீழேதான்’ என்று உருவாக்குவார்கள். அதிகாரம் என்பது பொருளாதாரம், பதவி ஆகியவை சார்ந்து வருவது உலகமெங்கும் உள்ளதுதான். ஆனால் பிறப்பின் காரணமாக உருவாகும் சாதிய அதிகாரம் நம் நாட்டில் மட்டும்தான் நிலவுகிறது. ஒடுக்கப்படுவோர் தமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒடுக்குவதற்கும் தயாராக இருப்பதைச் சாதிய அதிகாரச் சமூகத்தின் உளவியல் சார்ந்து பார்க்க வேண்டும். ஒருவகையில்  ‘தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டுவது’ போன்ற பழி வாங்கும் உளவியல் இது. சாதிய சமூக உளவியல் யாரையும் சமமாகப் பாவிக்க அனுமதிப்பதில்லை. உயர்வு அல்லது தாழ்வு என்னும் அர்த்தத்திலேயே பார்க்கப் பழக்குகிறது. எல்லாம் சமமாக இருக்கும் நிலையிலும் உயர்வு தாழ்வு கற்பிக்கச் சாதியைச் சட்டெனக் கையிலெடுக்கும் உளவியல் இது.

4. 32 கட்டுரைகளை சமர்ப்பித்திருப்போரில் மிகச்சிலரைத் தவிர்த்து மற்ற அனைவருமே முனைவர் பட்ட   ஆய்வாளர்களாக இருந்தபோதும் சுயசாதி மறுப்பும் சுயசாதி வக்காலத்தும் இணைந்தே காணப்படுகிறதே அது ஏன்?
முனைவர் பட்ட ஆய்வாளர்களாக இருப்பவர்கள் கிட்டத்தட்ட இருபதாண்டுகள் நம் கல்விமுறையில் கற்று முன்னேறி வருகிறார்கள். அவர்களுக்கு நம் கல்விமுறை எந்தச் சந்தர்ப்பத்திலாவது சாதியை உதறக் கற்றுக் கொடுக்கிறதா? ஓர் ஆசிரியர் தம் சாதி மாணவர்களை இணக்கமாக வைத்துக்கொள்கிறார். அவர்களைச் சாதி சார்ந்து சிந்திக்கவும் செயல்படவும் பழக்குகிறார். தம் சாதி சார்ந்த மாணவருக்கு வழங்கும் சலுகைகளைப் பிறருக்கு வழங்குவதில்லை. மாணவர்களிடம் சாதியக் குழுக்கள் இயல்பாகவே உருவாகிவிடுகின்றன. அவர்கள் இந்தச் சமூகத்திலிருந்து அறிந்து வந்த சாதிப் பிடிமானத்தை உதற ஒருபோதும் கற்றுத் தராத கல்விமுறையே இதற்குக் காரணம். ஒருசிலர் தம் சுய அறிவினாலும் புறத்தே கற்றுக் கொண்டவையாலும் சுயசாதி மறுப்புக்கு வந்திருக்கிறார் கள். சுயசாதி மறுப்பை விடவும் சுயசாதி வக்காலத்துக் கருத்துக்களே மிகுதி. அவை வெளிப்பட வேண்டும். அப்போதுதான் பாவனைகளை உதறிவிட்டு நம் சமூகத்தின் நிலையை உணர்ந்து விவாதிக்க வாய்ப்பாகும்.

5. தமிழகத்தின் மேற்கு, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள் சார்ந்த பல்வேறு சாதிகளைப் பற்றிய பதிவுகளாக இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழகச் சூழலுக்கும் பொருந்திப் போகக்கூடும்தானே!
பொருந்தும். எனினும் ஒவ்வொரு பகுதிக்கும் சாதியத் தனித்தன்மைகள் உள்ளன. சில சாதிகள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வசிக்கின்றன. ஒரே சாதி வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான அடையாளத்தைக் கொண்டுள்ளது. தமிழ்க் கருத்துலகில் அருந்ததியர் என்றால் மலம் அள்ளுவோர், தோட்டி வேலை செய்வோர் என்னும் மனப்பதிவு இருக்கிறது. ஆனால் அருந்ததியர்கள் மிகுதியாக வசிக்கும் கொங்குப் பகுதியில் அவர்கள் விவசாயத் தொழிலாளர் கள். மலம் அள்ளுவதற்கும் அவர்களுக்கும் தொடர் பில்லை. இத்தகையவை பகுதி சார்ந்த பதிவுகளின் மூலமாகவே வெளிச்சத்திற்கு வரும். சாதிய அடையாளம் இன்றைய தொழில் வளர்ச்சிக்கேற்ற இயல்புகளையும் கொண்டுள்ளது. அதனால் ஒவ்வொரு பகுதி சார்ந்த பதிவுகள் விரிவாக வர வேண்டிய அவசியம் உள்ளது. ‘சாதியும் நானும்’ நூல் இந்த வகையில் ஒரு முன் கையெடுப்பு. அவ்வளவுதான்.

6. நூலிலுள்ள கட்டுரைகள் சிலவற்றில் ஒடுக்கப்பட்ட சாதிக்கு முதல் மரியாதை செய்யும் உயர்சாதிச் சம்பிரதாயங்களைப் பற்றிய பதிவு குறித்து.
அத்தகைய சம்பிரதாயங்களின் பின்னால் உள்ள வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். போராட்டத்தை அல்லது எழுச்சியை மட்டுப்படுத்தி  உள்வாங்கிக் கொள்ளுதல் நிகழ்ந்திருக்கலாம். பருண்மையான உரிமையைப் பறித்துவிட்டு ‘முதல் மரியாதை’ என்னும் சம்பிரதாயத்தை வழங்கிச் சமன் செய்திருக் கலாம். தொன்மையானதும் உண்மையானதுமான உயர்வும்கூட அதில் பொதிந்திருக்கலாம்.

7. கல்வி உதவித்தொகைக்காகச் சுயசாதி அடையாளம் வெளிப்படும்போது வெட்கப்படும் தன்மை வந்து மறைவதும் தவறு  நடந்துவிட்டதற்கான மன உளவியலையும் எவ்வாறு புரிந்து கொள்வது?
சிலருக்குச் சாதி அடையாளம் பெருமை தருகிறது. சிலருக்கு அது தாழ்வுணர்ச்சியை உண்டாக்குகிறது. சமூகத்தில் நிலவும் சாதிய விழுமியம் உளவியலாக இதில் செயல்படுகிறது. தலித் மாணவர் களுக்கு உதவித்தொகை அதிகம் கிடைக்கிறது என்னும் பொறாமை உணர்வு பிற மாணவர்களுக்கு ஏற்படுவதும் உண்டு. இட ஒதுக்கீடு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதால் தன் சாதிக்குரிய இடத்தை இன்னொரு சாதி பறித்துவிட்ட உணர்வு இருக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும் உரிய ஒதுக்கீடு இருக்கிறது என்னும் புரிதலை மக்கள் இன்னும்கூட முழுமையாகப் பெறவில்லை. எனினும் இன்று சுயசாதி அடையாளம் சார்ந்து வெட்கப்படுதலும் உள்சுருங்குதலும் அவ்வளவாக இல்லை. அதற்குக் காரணம் இருபதாண்டு களாக வீச்சோடு இயங்கி வரும் தலித் அரசியல் என்றால் மிகையல்ல. அது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களுக்குக் குற்றவுணர்ச்சியையும் ஓரளவு ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் முக்கியம்.

8. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூடத் தங்களது பிள்ளைகளுக்குச் சாதி மறுப்புத் திருமணம் எனும் போது மனதுக்குள் எழும் அச்சத்தை தவிர்க்கவே இயலாதா?
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் களுக்குக் கிடைக்கும் புறக்கணிப்புத்தான் இதற்குக் காரணம். உறவுகளில் புறக்கணிப்பு, சடங்குகளில் புறக்கணிப்பு, விழாக்களில் புறக்கணிப்பு, பொது நிகழ்வுகளில் புறக்கணிப்பு – என வாழ்க்கை முழுவதும் புறக்கணிப்பையே அவர்கள் எதிர்கொள்கிறார்கள். சட்ட அங்கீகாரம் இருக்கிறது. சமூக அங்கீகாரம்? அந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கே வாழ்நாள் முழுக்கவும் போராட வேண்டியிருக்கும் அவர்கள் தம் பிள்ளைகளும் அத்தகைய இன்னல்களை அடைய வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அவர்களை அரவணைத்து அங்கீகாரம் கொடுக்க இங்கே என்ன ஏற்பாடு இருக்கிறது? என் மகளின் தோழி ஒருவர் ‘பூக்குழி’ நாவலை வாசித்துவிட்டுச் சொன்னார், ‘என்னுடைய பெற்றோரும் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்தான். என் அம்மா வழிச் சொந்தத்தில் ஒருவரையும் இதுவரை நான் கண்டதில்லை.’ மகளுக்கே இவ்வளவு காயம் என்றால் அந்த அம்மாவின் வடு எத்தகையதாக இருக்கும்? சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பெண் அன்றாடம் தன் கற்பை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்னும் நிலைதான் இங்கு நிலவுகிறது. சாதி மறுப்புத் திருமணம் பற்றி மட்டும் பேசினால் போதாது. அதில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் அதற்குச் சமூக அங்கீகாரம் கொடுக்கும் வழிமுறைகள் பற்றியும் பேச வேண்டும்.

9. அகமண முறையை இன்னும் பொத்திப் பாதுகாக்கும் சாதியக் கட்டமைப்பைத் தகர்த்தெறியும் அம்சமாகக் காதல் திருமணங்களை எடுத்துக்கொள்ளலாமா?
சாதியக் கட்டமைப்பைத் தகர்த்தெறியக் காதல் திருமணங்களைவிட வேறென்ன வழி இருக்கிறது? காதல் திருமணங்கள் சாதியைக் கடந்து நிகழும்போது தொடர்புடையவர்கள் உயிரச்சம் வரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. காதல் திருமணம் செய்து கொண்டோருக்கு உரிய சமூகப் பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடுகள் தேவை. முற்போக்குக் கொள்கை உடையவர்கள் தம் குடும்பத்தில் நிகழும் ஏற்பாட்டுத் திருமணங்களையும் சாதி மறுப்புத் திருமணங்களாகவே நடத்த முயல வேண்டும். அகமண முறையைப் பாதுகாத்துக் கொண்டே சாதி ஒழிப்பு பற்றிப் பேசுவோரை வெகுவாக அம்பலப்படுத்த வேண்டும். அகமண முறை ஒழிப்பே சாதி ஒழிப்புக்கு முன்நிபந்தனை. அதற்குரிய வழிகளை இன்னும் விரிவான தளத்தில் யோசிக்கலாம்.

10. சாதி குறித்து இப்படியான ஒரு பதிவு இதுவரை எவரும் செய்யத் துணியாத சூழலில் இதைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எதன் பாதிப்பிலிருந்து உருவானது?
என்னளவில் தனிப்பட்ட வாழ்விலும் எழுத்திலும் சாதியத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதன் தொடர்ச்சியே இந்நூல். பொதுவெளியில் எத்தனையோ விஷயங்களைப் பேசுகிறோம், விவாதிக்கிறோம். சாதி பற்றியும் பேசுகிறோம். ஆனால் அனுபவ அடிப்படையிலான பதிவுகள் இல்லை என்னும் மனக்குறை எனக்கு வெகுநாட்களாக இருந்தது. என்னுடனான உரையாடலின்போது பலரும் சாதி சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர். எதுவும் எழுத்தாக்கம் பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு இதழ் ஆசிரியர் குழுக் கூட்டத்தில் இத்தலைப்பில் எழுத்தாளர்களிடம் கட்டுரைகள் வாங்கி தொடர்ந்து வெளியிடலாம் என்னும் கருத்தை முன்வைத்தேன். ‘எழுத்து’ இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்’ என்னும் தலைப்பில் பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் வெளியாயின. பின்னர் அவை நூலாக்கம் பெற்றன. சி.சு.செல்லப்பா ‘என்ன படிக்கிறேன்?’ என்னும் தலைப்பிலும் ஒரு தொடரை வெளியிட முயன்றுள்ளார். ஆனால் ஓரிண்டு கட்டுரைகளோடு தொடர் நின்றுவிட்டது. இத்தகைய தொடர் கட்டுரைகளுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. கலைமகளில் வந்த ‘என் ஊர்’, தாமரையில் ‘கதைக்கு ஒரு கரு’, தீபத்தில் ‘நானும் என் எழுத்தும்’ எனப் பல உள்ளன.  ‘சென்னைக்கு வந்தேன்’ எனப் பழ. அதியமான் தொகுத்துள்ள நூலும் இப்படியான தொடராக வந்த கட்டுரைகளைக் கொண்டதுதான். இவையெல்லாம் சிக்கல் இல்லாதவை. ‘சாதியும் நானும்’ என்னும் தலைப்பில் எழுதச் சொன்னால் எத்தனை பேர் எழுதுவார்கள் என்னும் வினா என்னுள் வெகுநாட்களாக இருந்துவந்தது. அம்முயற்சியைத் தொடங்கலாம் என்னும் திட்டமிடல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தபோது எங்கள் ‘கூடு ஆய்வுச் சந்திப்பு’ அமைப்பின் ஐம்பதாம் நிகழ்வு நடைபெற இருந்தது. அதற்காக ஒரு நூல் வெளியிடலாம் என்னும் பேச்சு வந்தபோது எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் பிறகு வாங்கலாம் என எண்ணிக் கூடு நண்பர்களிடம் இத்தலைப்பை முன்வைத்தேன். அது ஏற்கப்பட்டு நான்கைந்து பேரின் உழைப்பில் மூன்று மாதத்தில்  ‘சாதியும் நானும்’ நூல் உருவாயிற்று. இந்த வகையில் இது ஒரு முன்னோடி நூலாகவும் அமைந்தமை நாங்கள் எதிர்பாராத ஒன்று.

Related posts

One thought on “நாமக்கல்லில் மேட்டுத்தெரு ஆத்தூரில் மந்தைவெளி சேலத்தில் கிச்சிப்பாளையம்…

Comments are closed.