You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

ஞாபகக் குகையில் ஊர்ந்து செல்லும் கோலங்கள்

ச. முருகபூபதி

கதைகள் குறித்த பல கதைகளை குழந்தைகளிடம் பகிர்ந்து நாடகமாடி உரையாடி சித்திரம் வரைந்து கொண்டிருந்த நாட்களில் புத்தகங்களும் எழுத்துக்களும் கதைசொல்லிகளும் உலகில் உருவாகி கதைகள் குழந்தைகளின் தாவரநிலை கொண்ட காதுகளை உணர் நரம்புகளை தழுவிக் கொண்டிருந்த நாள் அது. ஆதியில் மனிதன் எழுத முடிந்த வஸ்துக்களிலெல்லாம் எழுதினான். வனவிலங்குத் தோல்களிலும், இலைகளிலும், மரப்பட்டைத் துண்டுகளிலும் மிருக, மனித எலும்புகளிலும் மண்பாண்டங்களிலும் கற்களிலும், கோயில் சுவர்களிலும், தூண்களிலும், பாறைகளிலும் மற்றும் செப்பேடுகளிலும் எழுதினார்கள் என்பதை கதையாக்கிச் சொன்னபோது அவற்றில் ஈர்க்கப்பட்ட குழந்தைகள் இதுபோல தாங்களும் புதுப்பது பொருட்களில் கதைகள் எழுதி வருவதாக ஐந்தாம் வகுப்பு மாணவிகள் சொல்லி மறுவாரம் வெங்காயத்தோடுகள் பனங்கிழங்கின் உள் குருத்து பலவடிவ சருகுகள், பச்சை இலைகள் வெண்டைக்காயின் அறுங்கோண வடிவத்திலும் பச்சை திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், வேப்பம்பழ மஞ்சள் தோலிலும் மஞ்சள் நிறக் கொய்யாப் பழங்களிலும் பச்சை மக்காச் சோளத்தை மூடிய வெண்பச்சை இலைகளிலும் கதைகளை எழுதிக் கொண்டு வந்திருந்தார்கள். ஆச்சரியத்தில் ஏன் எழுத்துக்கள் அதனதன் தோல்களில் இருக்கின்றன என்றதும் பலரும் இது தான் கதைகள் உருவாகி பூமிக்கு வந்த கதை என்றனர்.
கீதா எனும்  அரசகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியோ பழங்கள் முழுக்க கதையாகி நிரம்பிவிட்டதால் மிஞ்சிய கதையின் வரிகளே தோல்களில் வழிந்து இறங்கி நம் நாக்குகளைத் தொட்டுத் தழுவ வருகிறதென்றாள். ஆவியூர் சீதாலெட்சுமியோ மனித உடலையும் மனதையும் ஏன் கடவுளைக் கூட பழங்களும், காய்கறிகளுமே அலங்கரித்துக் காப்பாற்றுவதால்தான் கதைகள் இவைகளைத் தேடிப் போனதாகவும் இதனைச் சாப்பிட்ட முன்னோர்கள் நமக்கு கொடுத்த கதைகளின் மிச்ச சொச்சமே எஞ்சியிருக்கும் கதைகளாகும் என்று சொன்னதோடு இன்று பூமியில வாழ்ற நாம என்னைக்கு நல்ல காய்களும், பழங்களும் சாப்புடுறமோ அன்று மனிதர்களுக்கு கதை உதடுகள் துடிக்க ஆரம்பித்துவிடுவதாகக் கூறினாள். இதில் பலரது சித்திரக் கதைகளும் குறியீட்டு முறைகளும் இருந்தன. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி சொல் கதைகளையும் வைத்திருந்தனர்.
அஸ்டெக்மாயா பற்றிய கதைகளை நடித்துச் சொன்னபோது மூச்சைக் கட்டுக்குள் வைத்து ஓர் பழங்குடிச் சடங்கைப் போலவே மௌனம் காத்தனர். 19ஆம் நூற்றாண்டில் மாயா மரபின் சிதைவுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தபோது கல்வெட்டுக்களில் உள்ள சித்திர எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. டீகோடீ லான்டா எனும் ஸ்பானியப் பாதிரி மாயா நூல்களை எரிக்கும்படி உத்தரவிட்டான். தான் செய்த குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக அவ்வினத்தின் கதைகளை, சரிதையைப் போன்றவற்றை அவ்வினத்தாரிடமே கேட்டறிந்து ஒரு நூலை எழுதினார். எழுதி முந்நூறு வருடங்களுக்குப் பிறகே 1863ல் நூலின் பிரதி கண்டெடுக்கப்பட்டதாம். ஸ்பானிய சிப்பாய்கள் இந்நூலின் மூன்று பிரதிகளை ஐரோப்பா கொண்டு சென்றனர். சித்திரங்களே மாயா வரலாற்றைப் புரிய உதவின. 12ம் நூற்றாண்டு வரை தோலாடை கட்டிய பழங்குடிகளாக வாழ்த்த இவர்கள் மெக்சிகோ நகரை அழகாக உருவாக்கியிருந்தனர். 16ஆம் நூற்றாண்டில் கார்ட்டெஸ் என்ற ஸ்பானிய வீரனே படையெடுத்தானாம்.  இது போலவே நம் காலத்தில் இலங்கையில் நிகழ்ந்த போரில் யாழ் நூலகம் எரித்து சாம்பலாக்கப்பட்ட கதைகளையும் குழந்தைகளிடம் சொல்லி முடித்தபோது, இறந்து போன புஸ்தகங்கள் திரும்ப வருமா, அதிலுள்ள கதைகள் எங்கே போயிருக்கும். அக்கதையைச் சொல்வோர் இப்பூமியில் இருக்கின்றார்களா? மனிதர்களின் சண்டையில் புத்தகங்கள்  ஏன் எரிக்கப்பட வேண்டும்.  இவை போன்ற பல தொடர் கேள்விகள். என் பதிலால் திருப்தியடையாத குழந்தைகள் நாடகமொன்றை நிகழ்த்திக் காட்டியபோது நான்கு குழுவாகப் பிரிந்து தனித்தனி நாடகங்கள் உருவாயின. ஒரு நாடகம் சண்டையிடும் வீரர்களைத் திட்டித் தீர்த்தது. மற்றொன்று பழங்குடியின் வேட்டை முறைக்குள் இலை பார்த்து கிளை பார்த்து பாடுதலும் ஆட்டமுமான நாடகமாக புது வடிவம் எடுத்தது.
மூன்றாவது நாடகம் எரிந்த புத்தகங்களில் உயிரோடிருக்கும் எழுத்துக்கள் சில எழுந்து வந்து எரியாத புத்தகங்களைத் தேடி சில வார்த்தைகளையும் வரிகளையும் கடனாகப் பெற்று புதுக்கதைப் புத்தகம் ஒன்றை உருவாக்கி நடித்தனர். நான்காவது குழுவினரோ தம் பைகளிலுள்ள புத்தகங்கள் நோட்டுகள் எல்லாவற்றையும் கொட்டி அடுக்கி நூலகமாக்கி ஒவ்வொரு புத்தகத்திற்குள்ளிருந்தும் ஒவ்வொரு பாத்திரமும் கிளம்பி வந்து எரிந்த நேரத்தில் தீக்காயங்கள் பெற்று தப்பித்த நாவலின் கதாபாத்திரமென்றும் சிலர் கவிதை ஓவியங்களில் நடமாடித் திரிந்த மாந்தர்கள் என்றும் நாய்க்குட்டியாக நடித்த தமிழ்ச் செல்வி கதைகளில் பொம்மைகள் செய்யும் செம்பா என்னும் பெண்ணின் தோழியென்றும் சொல்லி நடித்தது. சிலர் பைத்தியமாக சிரித்துக் கொண்டே இருந்தார்கள். நீங்களெல்லாம் யார் என்று கேட்டபோது, நாங்களெல்லாம் நூலகத்தில் பணிபுரியும் வேலையாட்கள் என்று சிரித்தபடியே சொல்லிக் கொண்டிருந்தனர். ஒருவன் அழுதுகொண்டிருக்க நீ யாரென்றேன். நூல் எடுக்க வந்த காரியாபட்டிக்காரன் நூல் வாங்கும் முன்னரே நூலகம் எரியத்துவங்கிவிட்டதாகக் கூறி தன் எச்சிலைத் துப்பித் துப்பி… தடவித் தடவி கண்ணீராய் வழியவிட்டான். 1994ஆம் வருடத்தில் நிகழ்ந்த இந்த அனுபவம் என்னை கற்பனைக்கு அதிவலி உண்டென்பதை உணர்த்தியதோடு குழந்தைகளே நாடகக் கலைஞர்களின் கலை வழிகாட்டி என்பதைப் புரிய வைத்தது.
சமீபத்திய நாட்களில் கோலங்கள் பற்றிய கதைகளை குழந்தைகளிடம் சொன்னபோது உடன் அவை புதிதாக புனையப்பட்ட புதுவகை நாடகமாயின. என் குழந்தைப்பருவம் முதல் கல்லூரி நாட்கள் வரை நானும் அம்மாவும் அக்காவும் வாசல் வீடெங்கும் கோலங்களிட்டு விடிகாலையில் பொங்கலிட்டுக் குலவையிடுவதும், தெருவெங்கும்  குலவைச் சத்தமாக இருக்கும். அம்மாவிடமே குலவை கற்றுக் கொண்டேன். அம்மா மறைவிற்குப் பின் தெருக்களின் வீட்டில் பலருக்காக குலவையிட்டு அம்மாவின் ஒலி மொழியைக் காப்பாற்றி வருகிறேன். ஒரு முறை அம்மாவிடம் செம்மண் வரிக் கோலமிடலுக்கான காரணத்தைக் கேட்டபோது அம்மா சொன்ன கதை இது… வீபீடணனின் வேடத்தில் வந்த மயில்ராவணன் அனுமனை ஏமாற்றி ராமலக்குவர்களை காளிக்குப் பலியிடுவதற்காகச் சிறையிலடைத்தான். மயில்ராவணன் மகள் ராமன் மீது காதல் கொள்கிறாள். அவள் மூலமாக ராமலக்குவர்களின் இடமறிந்து அவர்களை விடுதலை செய்கிறான் அனுமான். யுத்தம் மூழ்கிறது. இராவணன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டுக் குருதியும் ஒவ்வொரு அரக்கனாக வந்து சண்டை செய்யவே அனுமன் மீண்டும் இராவணனின் மகள் துணையை நாடி, அவனுடைய உயிரிருக்குமிடத்தை அறிந்து ஏழு மலைகளுக்கு அப்பால்  உள்ள பாம்புகள் சூழ்ந்த மரக்கிளையிலுள்ள வண்டைக் கொல்கிறான். அதிலிருந்து கொட்டிய குருதி பூமியிலே உறைந்தது.  இதனை நினைவூட்டும் குருதிக்களை படிந்த பூமி தேவியைத் தூய்மைப்படுத்தவும் செம்மண் கோலமிடுவதாகவும் புராணக்கதையினை சொன்னார்கள். அதேபோல் துரியோதனன் பஞ்ச பாண்டவர்களின்  நகரினைக் காணச் சென்றபோது அங்கு குளத்தினைச் சுற்றி போடப்பட்ட கோலத்தினை கம்பளம் என நினைத்து அதன் மீது மிதித்து நடக்க கோபத்தில் துரியோதனனை இடறி வீழ்த்துகிறது கோலம். உப்பரிகையில் நின்று இதனைப் பார்த்த திரௌபதி சப்தமாக சிரித்துவிட அவமானப்பட்ட துரியோதனன் மகாபாரத யுத்தத்தை ஏற்பாடு செய்ததான கதையினை அம்மா அம்மாச்சியிடம் கேட்டதாக சொன்னார்கள். இன்னொரு கதையும் அம்மா அண்ணன் விரும்பிக் கேட்க சொன்னார்கள்.  தொழுநோயுடைய முனிவரின் மனைவியான நளாயினி பணிவிடையில் சிறந்தவள். அவரது ஆசை தீர்க்க தாசிவீட்டிற்கு பனங்கூடையில் வைத்து சுமந்து செல்வாராம். இளமையான பரத்தையர் ஒருத்தி மீது ஆசை கொண்ட முனிவர் அவள் அன்பைப் பெறுவதற்கு கோலக் கலையில் தீராத வேட்கைகொண்ட அவளுக்காக விடிகாலையிலேயே தாசி வீட்டைத் தன் கோலக் கலையால் அழகுற செய்வாளாம் என்று சொன்னதோடு பாற்கடலினைக் கடைந்தபோது ஜனனமான லட்சுமி தான் எங்கு போய்த் தங்குவது எனக்கேட்டபோது தேவர்கள் எவரெவர் வீடு ஈரநிலத்தில் கோலமிடப்பட்டு காத்திருக்கிறதோ அங்கெல்லாம் நீ தங்கிக் கொள்ளலாம் எனக் கூறினார்களாம். இப்படி பல கோலம் குறித்த கதைகளை குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டே போனபோது ஒரு கட்டத்தில் அவர்களில் சிலர் போதும்னே இனி நாங்களே கோலம் போடுறோம்னே தலைப்பைச் சொல்லுங்க டிராமா ரெடி.   ஆனா எங்களுக்கு ஒரு நாலு நிமிசம் டைம் கொடுக்கனும் என்றனர். நானோ ‘‘அநியாயம் புடிச்ச ஊருக்கு கோலம் போட்டுத் திரியுற கோமாளிகளோட கதெ’’ என்று தலைப்பைச் சொன்னதும் அனுமதியுடன் பள்ளி மைதான வேம்பு மரத்தடிக்குச் சென்று தங்கள் ஒத்திகையைத் துவங்கினர். பலரும் நான் சொன்ன கதைகளின் தொடர்ச்சியாகவே கதைகளை உருவாக்கி நாடகம் நிகழ்த்தினர். மரத்தடிக்குச் சென்று உடன் திரும்பியவர்கள் புதிய வடிவத்தில் சொன்ன தலைப்பில் நிகழ்த்தினர். ஓர் ஊருக்குள் இருப்பவர்கள் எப்போதும் ஊருக்குள் எவர் நுழைந்தாலும் சண்டை  பிடிக்கும் சுபாவம் உடையவர்களாகவே இருந்தனர். இவ்வூரைக் கேள்விப்பட்ட ஊர் ஊராய் நாடகம் போடும் கோமாளிக் குழுவினர் ஆளுக்கொரு கோலப்பொடி டப்பாக்களுடன் ஊருக்குள் நுழைகிறார்கள். (இங்கு கோலடப்பாவுக்கு பதில் சாமன்ரி பாக்ஸ் எடுத்துக் கொள்ளப்பட்டது) தெருவுக்கு இருவராகப் பிரிந்து கோலப்புள்ளிகள் வைக்கத்துவங்கியதும் ஊரார் பார்த்ததும் புதிய ஆட்கள் எனத் தெரிந்து வெகு சந்தோசத்தில் சண்டையிடத் துவங்கி, கீழே குனிஞ்சு என்னடா பன்றீங்க? என்னடா ஒங்களுக்கு வேணும் என்றதும் ஒண்ணுமில்லைனே நிலமெல்லாம் எப்படியிருக்குனு சோதிச்சுப் பார்த்தோம்னே ஒங்க நிலங்களுக்கு உதவி பண்ணலாம்னு’’ என்று கோமாளிகள் கூற பதிலுக்கு ‘‘அடே ஒங்களப் போல கொள்ளப்பேரு இப்படித்தான்டா  நாட்டுக்குள்ள திரியுறாங்க.. அவெனவே சோலிய பார்த்துட்டு போங்கடான்னா…’’ என்று சண்டை முத்த ஆரம்பிக்கவும் கோமாளிகள் கிளம்பி விடுகிறார்கள்.
மறுநாள் எல்லோரும் மாற்று உடையில் நுழைந்து ‘‘அண்ணே உங்க எல்லாருக்கும் பிடித்த பனைமரத்து கள்ளு கொண்டாந்துருக்கோம் முடிஞ்ச மட்டுக்கும் குடிங்கனே. ரொம்ப அலுப்பா இருப்பீகெ…’’ என்றதும் பாசத்தால் கண் கலங்கி குரல் தழுதழுக்க பேசி கட்டியணைத்து குடித்து மல்லாக்கப்படுத்து தூங்குகிறார்கள். எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உணர்ந்த கோமாளிகள் ஊரெங்கும் பெண்கள் அதிசயிக்கும் வண்ணம் கோலமிட்டு முடிக்கின்றார்கள். இவர்களோடு பெண்கள் கூட்டம் இணைந்து கோலத்தின் பல வடிவங்களையும் சொல்லித் தருவதோடு சொல்லியும் கொடுக்கின்றார்கள். மாலை போதை களைந்து முழித்துப் பார்த்த ஆண்கள் நடக்க இடமில்லாமல் கோலங்கள் போடப்பட்டிருப்பதை உணர்ந்தது கோலத்தை மிதித்தால் கால் கல்லாயிரும் எனப் பேசிக் கொண்டபடி இடத்தில் படுத்திருக்கும் கோமாளிகளைப் பார்த்து கோலக்கலை பாராட்டி கோல டப்பாக்களுடன் வயல்வயலாய் கோலமிடத்துவங்குவதுடன் நாடகம் முடிவடைகிறது.
கடைசியாகக் கோலம் குறித்த மகாபாரதக்கதையொன்றை சொல்லி முடித்தேன். வனவாசத்தின்போது திரௌபதி அட்சய பாத்திரத்தின் உதவியால் வருகின்ற அகதிகளுக்கெல்லாம் உணவளித்து அற வாழ்க்கை நடத்துகிறான். ஒருமுறை பாத்திரத்தை கவிழ்த்திவிட்டால் இனி மறுநாள்தான் சோறு வரும். இதனை அறித்த துரியோதனன் சகுனியுடன் சூழ்ச்சி செய்து பசியுடனிருக்கும்  தூர்வாச முனிவரை அங்கு அனுப்ப அப்போதே பாத்திரம் கழுவி வைக்கப்படுகிறது. துர்வாசன் வரவு கண்டு தவிக்கிறாள். கோபமான அவர் ஆற்றங்கரையிலிருந்து தான் திரும்புவதற்குள் உணவு வந்தாக வேண்டுமென்கிறார். திரௌபதி கண்ணனை வேண்ட அவர் கிழவன் வேடத்தில் வந்து பாத்திரத்தை தருமாறு கேட்கிறார். திரௌபதியிடம் இலைக்கடியில் கோலமிட்டுவிட்டு உணவு பரிமாற அதற்குள் இருந்த ஒரு சோற்றுப் பருக்கை, கிருஷ்ணர் அருளால் ஒரு பானைச் சோறாகும் என்கிறார். கிழவர் சொன்னபடி செய்கிறாள். அட்சய பாத்திரம் கேட்டதெல்லாம் தருகிறது. துர்வாசரும் கோபம் தணிகிறார். நம் மரபில் இலைகளுக்கு அடியில் கோலமிடும் வழக்கத்திற்கு பாரதத்திலேயே குறிப்பிருக்கிறது. பாஸ்கரதாஸின் மனைவி ஒண்டியம்மாள் இறந்தபோது 7ஆம் நாள் விசேஷத்தின்போது அவரது ஆண் பிள்ளைகள் ஐவரும் சாப்பாட்டு  இலை போடப்படும்முன் வரிசையாக கோலமிடப்பட்டு அதன் மேல் இலை விரித்து பின் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. அம்மாச்சி  நினைவாக என் அம்மா எப்போதும் விரதமிருந்து வழிபட்டு சாப்ப¤டுமுன் கோலமிட்டு இலை விரித்தே உணவு உட்கொள்வது வழக்கம். எனது அக்காள் மதியிட்ட கோலங்கள் சிறுவயதிலிருந்தே  அண்டை வீடுகளெங்கும் பரவியிருக்கும். பொங்கலன்று சுண்ணாம்பு நீரில் இடப்படும் கோலம் ஒருவாரம் அழியாமலிருக்கும். அக்காவின் கோல நோட்டுகள் தெருப் பெண்களின் பைகளுக்குள் சதா பயணமிட்டுக் கொண்டிருக்கும். ஒரு முறை அக்காள் இட்ட மார்கழிக் கோலத்தில் பசுஞ்சாணமும், பூசணிப் பூக்களும் இருக்க எங்கள் தெரு குடிகாரக் கருத்தப்பாண்டி விழுந்து கும்பிட்டு கண்கலங்கக் கடந்து போனார். அது நாள் முன் வரை அவரது குடிப்பேச்சால் பலருக்கும் அவரை நெருங்கிட பயம். இப்படிப் பல அனுபவங்களையும் குழந்தைகளிடம் சொல்லிக் கதைக்க அவர்களுக்குள் இருந்த கோல அனுபவங்களும் கதைகளும் அன்றைய நாளில் கோலமெனச் சுழிந்து நீண்டு பரவிக் கொண்டிருந்தது.
நான் செல்லும் பள்ளியின் ஓவிய ஆசிரியரான முகமது ஹனீஃப் எனும் கலைஞனின், குழந்தைகளுக்கான கதைப் படங்களுக்கான பாணி அவருக்கே உரிய தனித்த அடையாளத்தைப் பெற்றது எனலாம். அவர் வைக்கும் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியின் இறுதியில் தேர்வு செய்யப்பட்ட பல படங்களை எனக்கு ஆர்வம் மேலிட காண்பிப்பார். அதில் கிராமச்சூழல் கொண்ட பின்னணியோ உலகுகளோ இருப்பின் அச்சித்திரத்தின் வாசலில் கோலங்கள் இருப்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன். அவற்றில் ஆண், பெண் இருபாலர்களின் ஓவியத்திலும் நான் கண்டிருக்கிறேன். கிடைக்கும் பொருட்களில் கிராம வாழ்க்கையைப் பதிவு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு ஒரு குழந்தையைப் போலவே அவர்களைத் தூண்டிவிடுவதும் யோசனைகளை அவர்களது உலகிலிருந்து உருவாக்குவதிலும் வல்லவர். வெற்று நாட்டுக் கோழி முட்டை, தூக்கணாங்கூடு, களிமண், மஞ்சனத்தி மரப்பட்டை, உடைந்த கண்ணாடி வளையல்கள், கிழிந்த சேலைத் துணிகள், கிராமத்தில் விளையும் விதைகள், பனங்கொட்டை, காய்கறிகளின் விதைகள் இப்படிப் பலவற்றைக் கொண்டு வந்து அவர்கள் செய்த கலை நேர்த்தி கண்டு தானே உருவாக்கியதாய் மகிழ்ச்சி கொள்பவர். அவரது கண்டுபிடிப்பும் பள்ளிக் குழந்தைகளுக்கான கதைகளின் மனிதர்களை, உயிரினங்களை கதைகளுக்கான பின்புலச் சூழலை அவர் உருவாக்கியமை அனைத்துக் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய பொதுவெளிக்கு வரவேண்டும். அவர் வழியேதான் கதை, பாடல், வரலாறு இவைகளில் வாழ்கிற மனிதர்களும், உயிரினங்களும் சுய அடையாளம் கொண்டவர்கள் என்பது பள்ளியைச் சேர்ந்த எட்டு கிராமத்துக் குழந்தைகளுக்கும் தெரியும். அது பல குழந்தைகளை கதாசித்திரங்களோடு புழங்கும் ஓவியங்களாக மாற்றியிருக்கிறது.
பத்து வருடத்திற்கு முன் கோவில்பட்டியில் அரவிந்த் எனும் மூன்றாம் வகுப்பு படித்த மாணவன் சொல்லிய கதையொன்று மனிதர்கள் இல்லாத ஊர் ஒன்றில் வீடுகள் மட்டுமே தனித்திருந்தன. எப்போதாவது திறந்த ஜன்னல் வழி நுழையும் காற்றில், கதவுகளும் ஜன்னல்களும் சடசடத்து ஆடி சப்தத்தில் பேசிக் கொள்ளும். வாசலில் நிழல் உருவங்களால் போடப்பட்ட கோலங்களைப் பார்க்க வரும் பறவைகள் கோலங்களால் உருவான மரங்களில் இரவு தோறும் தூங்குவதும் வ¤டிகாலையில் கிளம்பி விடுவதும் வழக்கம். அவைகளுக்கான ஜன்னல்களும் கதவுகளும் சதா புலம்பி சப்தமெழுப்பாமல் ஆடியாடி ஏங்கிப் பார்ப்பதும் நிழல்கள் பற்றவைத்த சுடர்களின் ஒளியில் மணலில் தூக்கத்தில் தம் சிறகுகளால் கால்களால் புதுக்கோலமிடுவதையும் கதவுகள் ஜன்னலுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தன. ஒரு நாள் ஊருக்குள் மனிதன் ஒருவன் நுழைந்து எல்லா வீட்டுக் கதவுகளையும் பூட்டிவிட்டு அவைகளைத் தனதாக்கிட கற்பனை செய்திட்டபோது, பறவையினங்களும், அவ்வூரைவிட்டு மறைந்துபோனதாகச் சொன்னான். எளிதில் கற்பனையின் விந்தை பூமிக்குள் தன்னோடு பலரையும் கூட்டிச் செல்லும் துணிவு மிக்கவன் இந்த அரவிந்த். மேகவர்ஷா எனும் அரசகுளம் ஊரைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியோ தன் ஊர் முளைப்பாரித்திருவிழாவுக்கு முன் ஒரு வாரம் ஊர்ப் பெண்கள் கூடி முளைச் செடிகளுக்குமுன் கும்மியிடுவதைக் குறித்த சுயகதை இப்படி வரும். முளைக்கட்டுக் குடிசை எனச் சொல்லப்படும் முளைப்பயிர் வளர்க்க கூடி வைக்குமிடம் அங்கு தினந்தோறும் பெண்கள் நாள் மாற்றி ஒவ்வொருவராக அக்குடிசையைச் சுற்றிக் கோலமிடுவது வழக்கம். இரவு ஊரே உறங்கும்போது முளைச் செடிகள் கூட்டமாய் எழுந்து குடிசைக்கு வெளியே தலைநீட்டி பெண்களிட்ட கோலங்களைப் பார்த்துச் சிரித்து ரகசியம் பேசி ஊராரின் கனவுகளுக்குள் மறைந்து கொள்ளுமாம். செம்மண¢ வரிக்கோலங்கள் என்றால் அவைகளுக்கு அன்பு அதிகமாகிவிடுமாம். ஒருநாள் சிறு மழைத் தூறலில் வர்ணக்கோலங்கள் அனைத்தும் அழிந்து ஓவியமாகிவிட அவற்றைப் பார்த்த முளைச்செடிகள் இது மழையிட்ட  கோலவடிவம் என்று கதை பேசிக் கொண்டதாம்.
இன்று கோலங்களை மறந்த நகரங்களும் வாசல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. கிராம நிலங்களின் கோலங்களை அகங்கைகளாய்ப் பெற்ற பெண்களிடமே கோலங்களின் சங்கீதம் பதுங்கியிருக்கிறது. தினம் அடுப்பறை மொழுகி கோலமிட்டு உணவைப் பண்பாடாய் திறக்கும் நாட்களின் கதைகளை குழந்தைகள் மட்டுமே பத்திரமாக சந்ததி மரபிற்கு பகிர்ந்தளிக்கும் கலைஞர்களாக  இருப்பார்கள். உலகின் உன்னதமான சித்திரக்காரர்கள் நம் கிராமப் பெண்ணின் விரல்களுக்குள் மறைந்திருக்கிறார்கள். அதுவே தம்மை ஒப்பனைக் கலையால் புதுப்பிப்பதும் உடைகளை நகைகளைத் தேர்வு செய்வதிலும் உணவு ருசிக்குள் கலையின் வேட்கையினைப் பரப்பி உறவிற்குள் மாயங்களைக் கனவுகளை பலத்தை உண்டுபண்ணும் தைரியத்தைப் பெறுகிறது. பஞ்சகாலத்தில் முன்னோர்கள் பாடிய பாடலில் மழைக்கு மட்டுமே கோலங்களைக் கரைக்க உரிமை கொடுத்திருக்கிறார்கள் போலும்.
‘‘கோலம் அழியவில்லை கொல்ல மழை பெய்யவில்லை வழியுறவேர்வை மாமழையா மாறணும்’’ இந்தப் பாடல் மழைபெய்யாத வலியையும் நமக்கு காட்சியாய் விரிக்கிறது.   நம் பண்பாட்டின் தொன்ம இருளுக்குள் பழக்கங்களை சடங்குகளை கலைவடிவங்களை குழந்தைகளின் குரல்வழி நாடகம் வழி நாம் புதிதாய் கற்கத் துவங்குவோம்.

Related posts