You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

கோமாளிகளும் சங்கீதத்தின் குழந்தைகளே…

ச. முருகபூபதி

“எம் நெடிய பாதைகளில் முள் மலர்கள் காத்து நிற்கின்றன. பகைமையின் நஞ்சினைத் தந்தார்கள். கோழைத்தனத்தினை நாவில் தடவி உயிர்ப்பிக்கும் நடிப்புக் கலையைச் செய்கின்றோம். துன்பப்படுதலெனும் நித்ய சடங்கில்தான் எங்களின் கருணை விதைகள் துளிர்க்கின்றன. உடலால் எழுதுகிறோம். முகத்தால் எழுதுகிறோம். வசைச் சொற்களை வாங்கிக் கொள்கிறோம். அசிங்கங்களைச் சுமந்து அடிவாங்கி அலைகிறோம். கலைகளின் அடிமைகள் நாங்கள்.. நாங்களே உலக உயிர்களின் அன்னை” மேலே சொல்லப்பட்ட வரிகள் எங்கள் மணல் மகுடி நாடகக் குழுவின் மிருக விதூஷகம் நாடகத்தில் உள்ள கோமாளிகளின் வாக்குகள். அந்நாடகம் சமகால அரசியல் நெருக்கடிகளையும், மனித ஜீவராசிகளின் துயரங்களையும் கோமாளிகளின் பார்வையில் நின்று பேசும் நாடகம். மேலும் கோமாளி தன் நிலைப்பாடாக மிருகவிதூஷக நிலையை நாடக நிலத்தில் உடலால் பேசத்துவங்கிய நாடகமாகும். ஐந்து வருடங்களுக்கு முன் நிகழ்த்தப்பட்ட அந்நாடகத்தின் எல்லைதாண்டி இப்போது திரும்பவும் நாங்கள் கோமாளிக்கலை குறித்த விரிந்த பரப்பில் புதிய நாடகம் துவங்கத் தயாராகிவிட்டோம். கடந்த மூன்று வருடங்களாக அதற்கான தேடலில் எங்கள் மணல்மகுடிக்குழு.
கோமாளியை ஏன் நாம் இப்போது நாடக நிலத்திற்கு அழைத்து வரவேண்டும்? கோமாளி உலகை எப்படிப் புரிந்துகொள்வது? கோமாளிக்கலை, அரசியல், வரலாறுகள் என்ன? இப்படிச் சில கேள்விகள் அடுக்கடுக்கான கேள்விகள் என்னைப் பின் தொடர்ந்து நாடக வெளியெங்கும் தேட வைத்தது. என் பால்ய வயதில் ஓம் முத்துமாரி நாட்டுப்புறக் கலைக்கூத்திலுள்ள பஃபூன் மாடசாமி, நிகழ்ச்சி முடிந்து கிணத்தடியில் வைத்து ஒப்பனை களைத்துப் போனபோது அவரது நாட்டியமிடும் கத்தி மீசையைக் கழற்றி வைத்துவிட்டு எடுக்காமல் மறந்துபோனார். அன்று எங்கள் தெருப்பையன்கள் பலரது முகங்களில் இரவு தோறும் மீசை பயணம் செய்து எங்கள் உடலுக்குள் கோமாளி மொழி நடிக்கத் துவங்கியது. வருடந்தோறும் காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவுக்கு சிறுவர்களாகிய நாங்கள் வீடுகளில் உள்ள அம்மா, அக்காமார்களின் பாவாடை, ரவிக்கை அணிந்து முகத்தில் திருநீறை நனைத்துப் பூசி கண்மையிட்டு பலகாரக் கடைகளில் பனையோலைத் தொப்பி வாங்கிச் சூடி இடுப்பில் வேப்பங்கொளை சொருவி வினோதக் கோமாளிகளாய் உருமாறி வீடு வீடாய் யாசகம் செய்தலைவதை ஓர் நிகழ்கலை வடிவமாய்ச் செய்வோம். எங்களால் ஈர்க்கப்பட்ட பக்கத்து தெருக்காரர்களும் எங்களோடு வேடமிடத் தொடங்கி அது ஒரு கலகச் செயல்போல பரவிக் கொண்டிருக்கும். பல வார இறுதி நாட்களில் சட்டைக்குள் தலையணை நுழைத்துக்கட்டிப் பெரும் வயிற்றுக் கோமாளிகளாய் பால்ய நிலமெங்கும் குதித்தலைந்திருந்தோம். யாராவது வீட்டில் ஆளில்லை வெளியூர் போயுள்ளார்கள் என்று தெரிந்தால் நாங்கள் பலரும் அங்கு சென்று வீட்டாரின் உடைகளை அணிந்து அவரவர்போல நடித்துப் பேசி விளையாடுவது அன்றாட நிகழ்வான பொழுதுகளது. எங்கள் எல்லோருக்குள்ளும் கோமாளிகளின் ரேகைகள் பரவி விடாச்சிரிப்பால் தெருவே வழிந்து கொண்டிருக்கும்.
இன்று குழந்தைகளோடு நாடகம், கதை இவற்றோடு அலைவுற்றபோது கோமாளிகள் பற்றிய புரிதல்களை அவர்களிடமிருந்தே உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. கோமாளி என்ற சொல்லை குழந்தைகள் கூட்டமாக விளையாடுமிடத்தில் நின்று உரத்து உச்சரித்தால் ஒவ்வொரு குழந்தைகளின் உடலும், புதுமொழி திறந்து நடித்து ஆடி விளையாடத் துவங்கிவிடும். பலமுறை கதை சொல்வதற்கு கோமாளி முகத்துடன் போய் நடித்துச் சொல்லியிருக்கிறேன். மனித உருவில் சொன்ன அனுபவம், கோமாளியாய் சொன்ன அனுபவம் இரண்டிற்குமான பின் விளைவுகள் அதிசயமானது. கோமாளியாய் சொன்னபோது குழந்தைகள் தங்கள் சுய துன்பங்களைக் கனவுகளைக் கோமாளிபோல மனித எல்லை தாண்டி சொல்லத் துவங்கிவிடுகின்றனர். சமீப நாட்களில் ஒருமுறை ÔÔகோமாளிகள் மட்டுமே வாழ்கின்ற அமைதியான ஊர்” என்று தலைப்பைச் சொன்னதும் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலோர் ஒன்றிணைந்து நாடகமொன்றை சில நிமிடங்களுக்குள் தயாரித்து நிகழ்த்தினர். அந்நாடக நிகழ்வின் கதைச் சுருக்கம் இதுதான். கோமாளிகள் மட்டுமே அமைதியாக வாழ்கின்ற ஊரில் அவ்வப்போது பெண்களாகவும், விலங்குகளாகவும், பறவைகளாகவும் உருமாறும் மாயவித்தைகள் செய்யும் கோமாளிகள். அவர்கள் பேசுவது கூட சாந்தமாக சாதுக்களைப்போல் சப்தமின்றிப் பேசுகிறார்கள். அவர்கள் எப்போதும் அமைதி குறித்துக் கதை போடுவதும்  பாடுவதும் அமைதியாய் ஆடுவதும் எனத் தங்களை அமைதியின் அடையாளமாக மாற்றிக் கொண்டிருக்க  வெளியூரிலிருந்து வந்த எட்டுத் திருடர்கள் கோமாளிகளின் ஊருக்குள் நுழைகின்றனர். எட்டுப்பேரின் கழுத்துகளிலும் கர்சீப் தொங்க அதன் நுனியில் கட்டப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் ஆபரணமாகிறது. வந்த திருடர்களோ ஆலமரத்தடியில் கூடியிருந்த கோமாளிகளிடம் பணம் கேட்டு வாதிடுகின்றனர்
கோமாளிகளோ அமைதியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முயற்சி செய்கின்றனர். பணம் கிடைக்காத திருடர்கள் கோமாளிகளின் தலையில் பாட்டிலால் அடித்து ரத்தக்காயங்கள் ஏற்படுத்துகிறார்கள். கோமாளிகளோ ரத்தம் ஒழுக அமைதி குறித்த குழுப்பாடலொன்றைச் சேர்ந்து பாடுகின்றார்கள். மறுநாள் வருவதாகவும் பணம் சேர்த்து வையுங்கள்  பணம் தர மறுத்தால் அடி உறுதி என்றும் சொல்லிப்போகிறார்கள்.  கோமாளிகள் காயங்களுக்கு மருந்திட்டு திரும்பவும் அமைதிக்குள் ஆழ்ந்து உறங்கிக் கனவுகளில் தனித்தனியான சிற்பமாகி குழல் வாசித்து விழித்துப் பார்த்தால் திரும்பவும் திருடர்கள் பாட்டில்களை ஓங்கியபடி மூச்சிறைக்க நிற்கிறார்கள். “பணம் தரலைன்னா உங்க எல்லாப்பேரோட மண்டைகளை உடச்சிடுவோம்’’ என சேர்ந்து சொல்ல கோமாளிகளோ அமைதி குறித்த விடுகதைகளையும் சித்திரங்களையும் வரைந்து கொடுக்கிறார்கள். கோபமாகிய திருடர்கள் அடிக்கத் துவங்கும் முன் கோமாளிகள் “அண்ணே, கைமுட்டி கால் முட்டிகளெல்லாம் சும்மாதான் கெடக்கு அதுகல்ல அடியுங்கண்ணே’’ என்று சொன்னதும் முட்டிகள் உடைந்து காயமாகி வலிவேதனையில் வெகு அமைதியாய் திருடர்களை அமைதியாய் சேர்த்து வாழ அழைக்கிறார்கள். திருடர்களோ “நாளைதான் கடைசிநாள். பணம் தரவில்லை என்றால் உங்க எல்லாரையும் பொட்டுல தட்டி குழியில அமுக்கிருவோம்’’ எனக் கிளம்புகிறார்கள். மறுநாள் கோமாளிகள் அனைவரும் மாவுக்கட்டுகள் கட்டி புறாபொம்மைகளை, தாள் மலர்களைச் சிறப்பாகச் செய்து திருடர்களுக்குப் பரிசளிக்க காத்திருக்கிறார்கள். வந்த திருடர்களோ வந்ததும் அடிக்கத் துவங்க கோமாளிகளோ “அண்ணே, இடுப்பு, குண்டியெல்லாம் சும்மாதான் கெடக்கு. அதுகல அடிச்சிப்போட்டு பரிசுகளை வாங்கிட்டுப் போங்கனே’’ என்றதும் நையப்புடைத்து அடிக்கிறார்கள். இப்போதும் கோமாளிகள் அழுதபடி அமைதிக்குள் திருடர்களை வாழவருமாறு அழைக்க, திருடர்களோ உணர்ச்சிவயப்பட்டுத் தேம்பி அழுது கோமாளிகளின் காலில் விழுந்து மன்னிப்புக்கோரி “இம்புட்டு அமைதியா கடவுளே இருக்கமாட்டாருனே நாங்க தப்பு பண்ணிட்டோம்னே’’ என்றுகூற கடைசிய¤ல் புறாப் பொம்மைகள், தாள் மலர்களுடன் திருடர்கள் கோமாளி நாடக ஒத்திகை துவங்கி எல்லோரும் கோமாளிகளாக மாறுவதுடன் நாடகம் முடிகிறது.
இதில் நடிப்பின்போது குழந்தைகளின் முகப்பாவனைகளும், உடலும் கோமாளிகளுக்கான அனைத்து அசைவுகளையும் செய்தபடி நடித்து நிகழ்த்தினர். என் சிறு வயதில் எங்களூர்த் தெருக்களில் பாகவதர் ஸ்டைல் முடியுடன் இரும்புக் கூடையில் கோழி முட்டை சுமந்தபடி கூவி விற்கும் 50 வயதுக்காரர் ஒருவர் இருந்தார். அவர் கூவி விற்பதே வெகு சாந்தமாக இருக்கும். அந்த சாந்தமான குரல் பெண்கள் பலருக்கும் மிகத்துல்லியமாகக் கேட்டுவிடும். ஆண்கள் சிலர் பலமுறை அவரை மிரட்டி முட்டைகளை உடைத்துக் குடித்து விடுவார்கள். கோபத்தில் கூட சாந்தமாகப் பதிலளித்து ‘முடிஞ்சா காசு கொடுத்திருங்களேன்’’ என்பார். ஒரு முறை இலங்கைத் தமிழ் அகதிகளோடு சேர்ந்து எல்லோருக்கும் முட்டைகள் கொடுத்துப் பாடி நடித்தாராம். பத்து வருடத்திற்கு முன் ஓம் முத்துமாரி ஏற்பாடு செய்த நாட்டுப்புறக் கலைவிழாவில் ராஜபார்ட்வேடமிட்டு அரிச்சந்திர மயான காண்ட நாடகப் பாடல்களைப் பாடி நடித்தும், பிறகு கிழிந்த பாவாடைகள் பல அணிந்து ஜிகினா சட்டையிட்டு உச்சஸ்தாயியில் கோமாளிப் பாடல் பாடி குட்டிக் கரணமிட்டு நடித்தபோது மேடையிலிருந்து தவறி வீழ்ந்து சில காயங்களுடன் சாந்தமாக “காயமெல்லாம் ஒன்றுமில்ல’’ என்று திரும்பத் திரும்ப சொன்னபடி கிளம்பிக் கொண்டிருந்தார்.
குழந்தைகள் நிகழ்த்திய நாடகத்தின் கதாபாத்திரத்தை நேரில் பார்த்த அனுபவம் என் பால்யத்திற்கு அழைத்துச் சென்றது. இங்கு கோமாளி என்பவன் அசிங்கங்களை காயங்களைச் சுமந்து குதித்து தன் சிந்தனையை, கலையை உறுதிபட நிறுத்துவதில் கடவுளுக்கும் முன்னோடியாக நம்மை வழி நடத்தத் தயாராகிறான். கோமாளியின் நடிப்பு மொழியில் சுயகவனம் கொண்ட மனிதநிலைகளை அடையாளம் காணமுடியாது. பறவைகளின் விலங்குகளின் இருத்தல்களை அவனது உடல்மொழி வழி நாம் உணரக்கூடும். அதனாலேயே குழந்தைகள் முடிவற்று நேசிக்கும் கலை வல்லமைகொண்ட தனித்துவமான கலைஞர்களாக உலகெங்கும் கோமாளிகள் வலம் வருகிறார்கள். குழந்தைகளின் கனவு இரவுகளில் அவர்களது மூச்சு சுமந்து துணையிருக்கும் கோமாளிப் பொம்மைகளே உலகில் அதிகம் எனலாம். இந்திய தமிழ்நாடகப் பண்பாட்டில் கோமாளிகளின் இருப்பை நாம் எப்படிப் புரிந்து கொள்வது.
புராண நாடகம், இதிகாச நாடகம், வரலாற்று நாடகம் எதுவாக இருப்பினும் சமகால வாழ்வின் கதவுகளைத் திறந்து புராண, இதிகாச வாழ்வின் அர்த்தங்களை இணைத்து எளிய சனங்களின் துயர் பிசைந்து நாடகமாக்கிடும் விந்தை கோமாளிகளிடமே உண்டு. கடவுளை, அரசனை சமகால வீதிக்கு அழைத்து, நிகழும் கொடுமைகளுக்கு பதில் சொல்லக் கேட்கும் துணிவு கோமாளிக்கே உரியதாகும். நாடகங்களில் கூத்துக்களில் பிற நாட்டுப்புறக் கலை வடிவங்களில் உலவும் கோமாளிகளுக்கு அம்மா, காதலி, சகோதரி, சகோதரன் என எந்த உறவும் இருக்காது. தனித்து அனாதையாக அசிங்கங்களை அடிகளைச் சுமந்து சூழலை கேள்விக்குள்ளாக்கும் பெரும் அரசியல் குறியீடாக அவனைப் புரிந்து கொண்டு கோமாளிகள் குறித்த உரையாடலை இன்று நாம் துவங்க வேண்டும்.
எங்களூருக்கு அருகில் கூசாலிபட்டி எனும் கிராமத்தில் சுருள் முடி உயர்ந்து அடர்ந்த வீராச்சாமி எனும் கோமாளி  கருப்புக் கண்ணாடியுடன் உலாவுவார். தன் சைக்கிளைப் பல நிறங்களில் வர்ணமடித்து விநோதமான பொருட்கள் பலவற்றை அதில் கட்டிவிட்டிருப்பார். சைக்கிள் சீட்டுக்கு அடியில் சீப்பு கண்ணாடி எப்போதும் இருக்கும். அவர் மூலமாகத்தான் பொருட்களுக்கும் கோமாளித்தனம் உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன். பிறகு சாப்ளின் திரைப்படங்களைப் பார்க்கும் போது அதில் அவர் கையாளும் பொருட்கள் பலவற்றிற்கும் இந்த கோமாளித்தனம் இருப்பதையும் ஒவ்வொரு படத்திற்கும் அவர் தேடிப் பயன்படுத்துவதையும் நாம் உணர முடியும். உதாரணமாக நாம் காணும் சர்க்கஸில் கோமாளிகள் கிழிந்த உடைகளுடன் நெளிந்த தகரடின்கள் உடைந்த நாற்காலி பிய்ந்த மரக்கட்டைகள் நைந்த தொப்பி இப்படி மனிதர்களால் கைவிடப்பட்ட பல பொருட்களுக்கும் தன் கோமாளிக் கலையால் உயிரூட்டி நகைவெளி திறப்பதில் அவர்களே வல்லவர்கள். மதுரகவி பாஸ்கரதாஸ் டைரிக்குறிப்பின் பல பக்கங்களில் கோமாளிகள் வருகிறார்கள்.
ஒரு நாடக நிகழ்வின் முடிவில் பஃபூன் சண்முகம் கலைக்காத ஒப்பனையுடன் தாஸின் வீட்டிற்கு சாமத்தில் நுழைய, தாஸின் தாயார் உடனே பனை ஒலைக்குள் சுருட்டி அவித்த கொலக்கட்டைகள் கொடுத்து மரியாதை செய்கிறார். இது பல இரவுகளில் தொடர்கிறது. கோமாளி ஒத்திகையில் மழையில் நனைவது, முள் பாதைகளில் நடப்பது, நெருப்பில் பயணம் செய்வது போன்றவற்றை பயிற்சி எடுப்பதும் அதில் பதிவாகியுள்ளது. பாஸ்கரதாஸ் கோமாளி ஒத்திகை முடிந்து ஜட்காவில் வீடு திரும்பும்போது வழியில் வயல் ஓரத்தில் பெண்ணொருத்தி தனியே கிடந்த சூழாட்டுக் குட்டிக்கு தன் முலைப்பால் கொடுத்துக் குழந்தையென அணைத்திருந்தது கண்டு தன் சால்வையை வயல்வரப்பில் விட்டுச் சென்றுள்ளதைப் பதிவாக்கியுள்ளார். இதுவும் கோமாளி வழி பிறந்த உன்னதப் பொழுதுகளே.
கரிசல் நிலமெங்கும் கூத்தாடி ஜனங்களை பண்பாட்டு குணமிக்கவர்களாக நிறுத்திய கோமாளிகள் பலரையும் நான் பார்த்து உரையாடியிருக்கிறேன். அவர்களில் பலர் வயதாகி ஆடு மேய்த்துக் கொண்டு விளக்கமாறு, கருவாடு, பழைய துணிகளைக் கூவி விற்கும் பொழுதுகளைப் பாடலாகவே செய்கின்றனர். அவர்கள் தம் வாழ்விற்காக பல்வேறு வேலைகளைச் செய்தாலும் மனநிலங்களில் ஒப்பனையுடன் கோமாளிகளாகவே கூத்தாடி அலைகின்றனர். வனாந்திரக் கரிசல் வெளியில் ஆடுகளோடு பாடிய வயோதிகக் கோமாளியும், பழைய துணிகளுடன் கூவிப் பாடியலையும் கோமாளியும் இன்றைய நாளில் இல்லை. அவர்கள் கோமாளிகளைத் தேடியலையும் கலைஞனைப் பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்திய விடுதலைப் போராட்ட வெளியில் பழனி ரத்தினவேல் எனும் கோமாளியின் மகரக்குரல் வணங்கிய கே.பி.சுந்தராம்பாள் தான் சேகரித்த நெருப்புக்கோழி இறகுகளைப் பரிசாகக் கொடுத்து ராஜாபார்ட்டாக ஆசிர்வதித்துப் போன நொடியை இறகு விசிறியாக்கி காத்திருக்கிறார். அவர் எப்போதும் நாடகத்தைத் தனியே நடித்துக் கொண்டிருந்ததை நாடகக் கலையின் விந்தை என்போம். 1930களில் காந்திஜி கோவை வந்தபோது நவாப் ராஜமாணிக்கம் நந்தனார் நாடகத்திற்கு அவரை அழைத்தார். அப்போது கோமாளியை அழைத்து அவரின் கண்ணாடி பிரேமிற்குள் விரல்களை நுழைத்து ஏமாந்து போனாராம். லண்டன் சென்ற காந்திஜி கோமாளி சாப்ளினை விரும்பிச் சந்தித்ததற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்றே தோன்றுகிறது. உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறப்பு வீட்டின் சடங்கின் ஒரு பகுதியாக ராசாராணியாட்டம், நல்லதங்காள் கதை போன்றவற்றை நிகழ்த்துவது வழக்கம். அதில் வரும் கோமாளி  பிணத்தின் முன்னின்று இறந்தோரின் சரிதத்தை அவர் பண்பாட்டை மண்மொழியில் ஆடிப்பாடி நடிப்பது சூழ்ந்திருக்கும் உறவுக்காரர்கள் உறைந்த துயரத்தைக் கரைப்பதற்கான  சிகிச்சையளிப்பாகக் கருதப்படுகிறது. அதில் குறிப்பாக நல்லுத்தேவன்பட்டி கோமாளிக்குச் சிறந்த இடமுண்டு. “நீயென்னடா நல்லுத்தேவன்பட்டி கோமாளி மாதிரி அறிவா பேசுறதா நெனப்பா’’ என்று அன்றாட வாழ்வின் உரையாடலாகிப் போய் எல்லோரையும் சிந்தனைக்குள் இழுத்துப் போகிறான்.
அன்று எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் கோமாளியாய் நடிக்க, சேவலின் கூவலை அதன் ரெக்கைப்படபடப்பைத் தயங்கிப்பார்க்கும் அதன் கழுத்தசைவுகளை நடிப்பில் பிடித்து மேடையேறி புதிய பஃபூனாக மாறியதாக மறைந்த கரூர் ராஜபார்ட் பழனி ரத்தினவேல் சொல்வார். பிற்காலத்தில் விஸ்வநாததாஸ் பல சேவல்கள் வளர்த்து, சேவல் சண்டையில் ஈடுபாடாகினார். அவருடைய சேவல்களிடம் தோற்ற சேவல்களே அதிகம். சேத்தூர் ஜமீன் சேவல் சண்டைக்கலை வளர்த்ததில் முக்கியமானவர். ஒரு முறை விஸ்வநாததாஸின் சேவலை பல ஆயிரம் கொடுத்து  ஜமீன் விலைக்கு கேட்க நடிகனின் சேவலை வாங்க, உலகில் எவருமில்லை என மறுத்துவிடுகிறார்.
பதினைந்து வருடத்திற்கு முன் முத்துசாமி இயக்கிய தெனாலிராமன் நாடகத்தில் நடித்த ஜார்ஜ், நம் காலத்தின் கோமாளிக்கலை உணர்வுகளை முகத்தில் பிடித்த சிறந்த நடிகன் என்றே சொல்வேன். 90களின் இறுதியில் ஊர் ஊராய்ப் பழைய நடிக நடிகர்களின் புகைப்படங்களை, வரலாறுகளை, குரலிசைகளைத் தேடித் திரிந்தபோது நான் சந்தித்த விளாத்திகுளம் கணபதிப்பாவலர் எனும் கோமாளி தன் பூட்டியிடம் கேட்ட கோமாளிக்கதையொன்றைச் சொன்னார். அக்கதையின் சுருக்கம்; சாதியச் சண்டைகள் பெருகிய ஓர் கிராமத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டுச் சண்டை சதா நிகழ்ந்து கொண்டிருந்தது. கண்பார்வையற்ற அவ்வூர்த் தலைவர் தன்பால்யத்தில் சந்தித்த பஃபூன் மாயக்கருப்பன் மகன் பெருங் கருப்பனை வரவழைத்து பிரச்சனைகளைச் சொல்லி உன் நடிப்பால் உன்னதமாக்கிடுமாறு வேண்டி நிற்க. நெடுங்கூந்தல் வளர்த்த பெருங்கருப்பன் ÔÔசடுகுடு மலையில ரெண்டாலு, அதில ஒருத்தன் குண்டாலு, என் சேக்காளி ஒரு ஏமாளி, நான் வந்தேன் கோமாளி’’ என்ற பாடல்பாட ஊர் நுழைந்ததும் சண்டையிட்ட பலரும் ஒருவரையொருவர் தொட்டுக் கைகோர்த்து தன் மறந்த நிலையில் நாடகத்தினைப்  பார்த்துச் சிரிக்க நாடகம் முடித்து, மறுநாள் காலை திரும்பவும் சாதியச்சண்டை.
திரும்பவும் கோமாளி பெருங்கருப்பன் பெண் வேடமிட்டு ஊர் நுழைந்ததும், பலரும் பெண் என்றே நம்பி அவள் தங்கியிருந்த ஊர்த் தலைவரின் வீட்டைச் சுற்றப் பலரும் அலைந்து காத்திருந்தனர். நிலைமை உணர்ந்த தலைவர் மாலை தன் வீட்டு வாசலில் சிலரை நிற்க வைத்து, புதிதாக வந்திருக்கும் நாடக நடிகையுடன் புகைப்படமெடுக்க 1000 ரூ, கை குலுக்க 1500 ரூ என்றதும் பணம் வசூலாகி இரவு நாடகம் துவங்கியது. சண்டையிட்ட பலரும் ஒருவரையொருவர் சிரித்துக் கைகுலுக்கி வாஞ்சையோடு உறவு கொள்ள நாடக முடிவில் பெண் வேடம் களைந்து கோமாளியானதும் அடக்க முடியாத சிரிப்பில் சாதிப்பகை தீர்ந்து வருடம் முழுவதும் நாடகம் போடுவது சடங்காகிப் போற்றப்பட்டது. நடிகை கமலவேணி தன்னோடு மேடையில் நடித்த கபீர்பாய் எனும் பஃபூன் ஆங்கில அரசிற்கு எதிராகப் பாடல்பாடிய காரணத்திற்காக அவரது வீடு சோதனையிடப்பட்டபோது  முழு நாடகப் பிரதியையும் அரைஞான் கயிற்றால் கோர்த்து வேட்டி கொண்டு மூடிவிட்டாராம். ஏமாந்த காவலாளிகள் மன்னிப்புக்கோரி மறைந்துவிட்டனராம்.
கோமாளி, கட்டியக்காரன், விதூஷகன், பஃபூன், கதைசொல்லி ஆங்கிலத்தில் நீறீஷீஷ்ஸீ இப்படிப் பல பெயர்களில் சொல்லப்படுபவை அனைத்தும் ஒருவரையே குறிக்கும். நீறீஷீஷ்ஸீ கோமாளி என்றதும், மேற்கத்திய முகங்களும், உருவங்களும் நம் முன் தோன்றிவிடுகிறது. ஐரோப்பிய சமூகம் உருவாக்கிய கோமாளிக்கலை உலகப் பிரசித்திபெற்றது. இக்கோமாளிக்கலை உருவாவதற்கு அரசியல் நெருக்கடிகளே காரணமாக இருந்தது. அன்று பிரான்ஸ், கலைகளைப் போற்றும் தாயகமாக விளங்கியதால் இத்தாலி நாட்டு  நாடகக்கலைஞர்கள் பிரான்ஸில் தம் கலை நிகழ்வால் உச்சநிலை அடைந்தனர். மக்கள் அனைவரும் இத்தாலிக் கலைஞர்களை நோக்கி பயணமாகத் துவங்கினர். உள்ளூர்க் கலைஞர்கள் இதனைப் பெரும் நெருக்கடியாக உணர்ந்தபோது பிரான்ஸ் தேசத்தில் நிகழ்த்தப்படும் நாடகங்கள் அனைத்தும் பிரெஞ்சு மொழியிலேயே இருக்க வேண்டுமென அன்றைய அரசை நிர்ப்பந்திக்கின்றனர். இது இத்தாலிக்கலைஞர்களுக்கு பெரும் சவாலாக மாறிவிட அவர்கள் மொழியற்ற மௌன நாடகங்களை (mime)  நிகழ்த்தத்  தயாராகிறார்கள். மொழி உடலுக்கு இடம்மாறி, உடல்பாவனைகளில் நாடகம் நிகழ்த்தத் துவங்கி  விடுகின்றனர். இதன் பின்னரே  white clown, Red clown, ash clown  என கோமாளிக்கலை பல்லுருக்கொண்டு பரவத் தொடங்கின.
நம் பெருங்கோயில்களில் உள்ள சித்திரங்கள், சிற்பங்கள் அனைத்திலும் கோமாளிகள் இருப்பதைக் காணலாம். பல கோயில்களில் பூதகணங்கள் குழுவாய் இருப்பதைக் கோமாளிகளின் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். கோமாளிக் கலை குறித்த நாடகமொன்றை எங்கள் மணல் மகுடிக்குழு நிகழ்த்தத் தயாராகும் முன் பதினைந்து ஓவியர்களை அழைத்து, எங்கள் குழுவின் நடிகர்களின் முகங்களில் சித்திரமிட்டு, வர்ணங்களால் கோமாளி உலகின் கதவு திறந்து,  மூன்று நாள் பயிலரங்கு (அக்.10, 11, 12) மதுரைக் கீழக்குயில்குடி சமணமலையில் வைத்துச் செய்தோம். தமிழின் உன்னத ஓவியர்களான நடேஷ் மைக்கேல், மரியா, மணிவண்ணன், அபராஜிதன், ரஃபீக், பாபு, கிருஷ்ணப்ரியா, ரோகிணிமணி, செல்வம், செந்தில், முத்துராமன், கருப்புசாமி, ஸ்ரீதர் எனப்பலரும் கோமாளி உலகு வணங்கி, மணல்மகுடிக் கலைஞர்களோடு செயல்பட்டமை இந்தியக் கலைவெளியில் முதல்புள்ளி எனலாம். சித்திரக்காரர்களும் நாடகக்கலைஞர்களும் முகம் பார்த்துச் செயல்பட¢ட புது இணைப்பு அது. இப்பூமியிலுள்ள பார்வையாளர் களெல்லாம் தம்முடைய கண்ணீரால் இந்தக் கோமாளிகளை உருவேற்றுவார்கள். கண்ணீர்தான் ரோஷத்தின், கோபத்தின்மொழி. சங்கீதத்தின் ஆழ்ந்த தாதுக்கள் கண்ணீரை வேண்டுவதுபோல், கோமாளிகளும் சங்கீதத்தின் குழந்தைகளே. பல்லுயிர்களின் நிலையில்  நின்று குலவையிடுபவர்கள் நம்பூமியின் கோமாளிகளே.

Related posts