You are here
நேர்காணல் 

குழந்தைகள் இல்லாமல் என்னுடைய ஒரு படத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை…

இயக்குநர்ராம்

ராமசுப்பிரமணியம் என்கிற முழுப்பெயர் கொண்ட இயக்குநர் ராம் 2007-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலமாக, திரைக்கலாச்சார வெளியில் புதிய சலனங்களை உருவாக்கியவர். இப்படம் பிரபாகர் என்னும் இளைஞனின் வாழ்க்கையை மையமிட்டுச் சுழலும் கதைப் போக்கைக் கொண்டது. எனினும் கல்வி பெறுவதில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசியதாலும், கதை சொல்வதில் ராம் தேர்ந்து கொண்ட புதிய உத்திகளாலும் தமிழின் என்றைக்குமான முக்கியத் திரைப்படமாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கி 2013-ஆம் ஆண்டு  வெளியான ‘தங்க மீன்கள்’ திரைப்படம் உலக மயமாக்கலையும், இன்றைய நம்முடைய கல்வித் திட்டத்தையும், வன்மையாக விமர்சிக்கும் கதை அம்சத்தைக் கொண்டிருந்ததுடன் முக்கிய விருதுகளையும் வென்றது. முற்றிலும் வணிக மயமான தமிழ் சினிமா சூழலில் அடுத்தடுத்த தன்னுடைய இரண்டு படங்களிலும் கல்விமுறை குறித்த விவாதத்தைக் கிளப்பிய முதல் இயக்குனராக இருப்பதாலேயே ராம் தமிழ் இயக்குநர்களில் முக்கியமானவராகிறார். இந்நேர்காணலும் ஓரளவு அதை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.
ராம் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிடம் மட்டுமின்றி ராஜ்குமார் சந்தோஷி போன்ற இந்தி இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியவர். தீவிர இலக்கியப் பரிச்சயமும், வாசிப்பில் நாட்டமும் கொண்ட ராம், சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். உள்ளடக்கத்திலும், மொழிநடையிலும் வித்தியாசம் கொண்ட சில நுட்பமான சிறுகதைகளை எழுதியவர். இவருடைய துணைவி சுமதி ஒரு சிறந்த கவிஞர். குழந்தைகளின் உளவியலை மையப்படுத்திய ‘கோடிட்ட இடங்களை நிரப்புதல்’ என்னும் அவருடை ஒரு தொகுதி வெளியாகியுள்ளது. ராம் தற்போது ‘தரமணி’ எனும் மூன்றாவது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

2008-ஆம்  ஆண்டு என்று ஞாபகம். திருப்பூரில் சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கட்டுரை ஒன்று வாசித்தேன். அன்று அந்த நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். சற்று முன்னதாகத்தான் கற்றது தமிழ் பார்த்திருந்தேன். ஆனாலும் அன்றைக்கு இருவரும் பேசிக் கொள்ள முடியவில்லை…
ஆம், அந்தக் கருத்தரங்கின் காலையமர்வில் என் துணைவி சுமதியும்  ஒரு கட்டுரை வாசித்தார். அப்போது அவர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.  அவருடன் நானும் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தேன். என்னையும்   பேச அழைத்ததால் சிறிது நேரம் ‘கற்றது தமிழ்’ குறித்துப் பேசினேன். ஆனால் என்ன பேசினேன் என்பது நினைவில் இல்லை.

“போதுமான வசதிகள் இல்லாவிட்டாலும் போதுமான ஊதியம் கிடைக்காவிட்டாலும் தன்னார்வத்தினால் பணிபுரியும் எல்லா ஆசிரியருக்கும்…” என்று தங்க மீன்கள் திரைப்படத்தை சமர்ப்பித்திருப்பீர்கள். உங்கள் படங்களில் ஆசிரியர்- மாணவர் உறவுக்கு ஒரு அழுத்தம் கொடுக்கிறீர்கள். கற்றது தமிழில் அந்தத் தமிழாசிரியர், தங்க மீன்களில் எவிட்டா மிஸ்… உங்கள் மாணவப் பிராயத்தில் உங்களுக்கென்று கனவுஆசிரியர் இருந்ததுண்டா?
6-10 வகுப்புகளில் எனக்குத் தமிழ் கற்றுத் தந்த சரோஜா மிஸ், 7-ம் வகுப்பிலேயே சரியோ தவறோ ஆங்கிலத்திலேயே பேசு என்று எனக்கு அந்த மொழியின் மீதான பயத்தை அகற்றிய வரதன் மாஸ்டர் இவர்களை மறக்க முடியாது. வரதன் மாஸ்டரால்தான் ஆர்.கே.நாராயணனை 9-ம் வகுப்பிலேயே ரசிக்க  முடிந்தது. அவர்கள் இருவரும் சராசரித் தமிழ், ஆங்கில ஆசிரியர்களாக இல்லை. எங்களுக்குத் தமிழும், ஆங்கிலமும் கற்றுத் தந்ததன் வழியாக நிறைய விஷயங்களை உள்வாங்க வைத்தார்கள். நான் கதை எழுதலாம், கவிதை எழுதலாம் என்று உந்துதல் தந்தவர்கள் அவர்கள்தான். பிறகு அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா. அவர்தான் தமிழ் படிக்கச் சென்ற எங்களுக்கு, மானுடவியல், சமூகவியல், உளவியல் என எல்லாமும் தமிழ் படிப்பதோடு தொடர்புடையதுதான் என்று உணர்த்தியவர். ஒரு ஆராய்ச்சி மனோபாவத்தை  எங்களுக்குள் உருவாக்கியது அமெரிக்கன் கல்லூரிதான்.  அங்குதான் நான் உலகத் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். பிறகு சென்னை கிறித்தவக் கல்லூரி. இது அமெரிக்கன் கல்லூரிக்கு முற்றிலும் வித்தியாசமானது. சங்க இலக்கியம், தொல்காப்பியம் குறித்த பேராசிரியர் பாரதிபுத்திரனின் உரைகள்,  கு.இராஜேந்திரன் போன்றோரின் வகுப்புகள் ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகப்படுத்தியது.  கல்லூரி வளாகங்கள் அவற்றில் உள்ள மரங்கள், அவற்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர்களின்றி நான் சினிமாவின் பக்கம் வந்திருக்க மாட்டேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு ஆசிரியரின் பாதிப்பிருக்கும். அது நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ. ஒரு மனிதனின் தொடக்கம் அங்கிருந்துதான் என நம்புகிறேன்.

கற்றது தமிழ் காலத்தில் உங்கள் முகம் அவ்வளவுக்குப் பரிச்சயம் இல்லாதிருந்தது. தங்க மீன்களில் கல்யாணசுந்தரமாக உங்களைப் பார்க்கையில் கற்றது தமிழ் ஜீவாவின் முகம் மறந்து போகிறது. கற்றது தமிழிலும் நீங்களே நடித்திருப்பதாக ஒரு பிரம்மை. அந்தப் படம் உங்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டது என்றும்கூட சொல்கிறார்கள்…
அந்தப் படத்தில் என்னைப் போலவே ஜீவா பேசியிருப்பார். எனவே உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். கற்றது தமிழ் ஒரு புனையப்பட்ட கதைதான். அதில் என் வாழ்க்கையில் சந்தித்த நிறையப்பேர்களின் பாதிப்பிருக்கும். என்னுடன் கல்லூரியில் மாடசாமி என்றொருவர் படித்தார். காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். நாடோடிப் பிழைப்பு அவர்களுடையது. ஜாதிச் சான்றிதழ் வாங்க முடியாமல் கடைசிவரை தவித்துக் கொண்டிருந்தவர். அவர் எஸ்.சியா, எஸ்.டியா? கலெக்டர் வந்து கையெழுத்திட வேண்டும். ஒருமுறை செமஸ்டர் விடுமுறையில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் அவர் குறிசொல்லிக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்தபோது, என்னைக் கண்டு கொள்ளாமல் சென்றார். மீண்டும் நான் அவர் முன்னால் நின்றபோது என் மீது அவருக்கு கோபம் வந்தது. “இந்தத் தொழிலையும் கெடுக்க வந்திட்டியா’’ என்கிற கேள்வி அந்தக் கோபத்தில் இருந்தது. அந்த சம்பவம் தான் கற்றது தமிழ் கதை உருவாகக் காரணமாக இருந்தது.
கோயம்புத்தூர் ஒரு காஸ்மாபாலிடன் சிட்டி. அங்கிருந்தவரை நான் ஜாதியை உணர்ந்ததில்லை. முதல் முதலாக மதுரைதான் எனக்கு ஜாதியை அறிமுகப்படுத்தியது. ஜாதியும் அது உருவாக்கிய தாக்கமும் கூட கற்றது தமிழ் உருவாகக் காரணம் எனலாம். நான் எல்லா ஊர்களையும் சுற்றி வந்தவன். எனக்கென்று நிரந்தரமான ஒரு ஊர் இருந்ததில்லை.  எனக்கென்று தனிப்பட்ட வட்டார வழக்கும் கிடையாது. எனவே ஒரு அந்நியனாகவேதான் எல்லா ஊர்களிலும் என்னை உணர்ந்தேன். கற்றது தமிழில் ரோமன் பொலன்ஸ்கியின் ‘டெனன்ட்’ படத்தின் பாதிப்பும், காம்யுவின் அந்நியன் நாவல், சுகிர்தம் என்கிற மம்முட்டி நடித்த மலையாளப் படம், எல்கேஜி அல்லது யுகேஜி பருவத்தில் என்னுடன் படித்த ஒரு சிறுமியின் நினைவுகள், பிராயத்தில் வீட்டை விட்டு பலமுறை ஓடிப்போனது, என்னுடைய ரயில் பயணங்கள் இவ்வாறு பலவிதமான பாதிப்புகள் இருக்கும்.

கல்யாணி – செல்லம்மா உறவு ஒரு தந்தை – மகள் உறவைத் தாண்டிய அதீத புனைவாகச் சொல்லப்படுகிறது. அதில் கவித்துவம், அழகுணர்ச்சி, பாசஇழையோட்டம்   எல்லாமிருக்கிறது. பெரும்பாலும் எதார்த்தத்தில் இது சாத்தியமாக இருப்பதில்லையே ஏன்?
அந்தக் குழந்தை ஒரு sறீஷீஷ் லிமீணீக்ஷீஸீமீக்ஷீ. அவளுக்குச் சில குறைபாடுகள் இருக்கின்றன. அதை நான் படத்தில் எங்குமே சொல்லவில்லை. தாரே ஜமீன்பர் மாதிரி ஒரு டாக்டர் வந்து  அந்தக் குறையை  உறுதிப்படுத்துவதில்லை. வயதுக்கு வந்துவிட்டால் அந்த இம்சைகளை இந்தக் குழந்தையால் எப்படி எதிர் கொள்ளமுடியும் என்கிற ஒரு பயம் அந்தத் தகப்பனுக்கு வந்துவிடுகிறது. சதா அவனுக்கு குழந்தை மீதான பயம். அந்த பயத்தை மறைத்துக் கொண்டு குழந்தையிடம் மகிழ்ச்சியாக இருப்பான். இந்த மாதிரி குழந்தைகளைப் பெற்ற அப்பா, அம்மாக்களைப் பார்த்தால் அது புரியும்.

அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவானதொரு குரல் உங்கள் படங்களில் ஒலிக்கிறது. ஆனால் போதுமான ஆசிரியர்களும், அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் தான் அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. தேவைக்கேற்ற கழிவறைகள் இல்லாதது, மாணவிகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பைத் தருவதாகக் கல்வியாளர்கள் கூறுகிறார்களே…
அரசுப் பள்ளிதான் சிறந்த பள்ளி என்று நான் சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இன்றைக்கு அதிகமான மாணவர்கள் பயில்வது அரசுப் பள்ளிகளில்தான். அங்குதான் மாணவர் எண்ணிக்கை அதிகம். அரசுப் பள்ளிகளில் குறைகள் இருந்தால் அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது பெற்றோரின் கடமை. இதற்காக தனியார் பள்ளிகளுக்குச் செல்வது முட்டாள்தனம். அரசுப் பள்ளியை சீரமைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசாங்கம்.  ஆனால் அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ ஆசிரியர்கள்தான் முக்கியம். எவிட்டா மிஸ் அங்கிருந்ததால்தான் செல்லம்மாவுக்குச் சரியானதே தவிர, அது அரசுப்பள்ளியாக இருந்ததால் அல்ல. ஒரு பள்ளியை நல்ல பள்ளியாக மாற்றுவதும் மாற்றாமல் போவதும் ஆசிரியர்கள் கைகளில்தான் உள்ளது.

சில தனியார் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி, மாற்றுக் கல்வி, கலை இலக்கியப் பயிற்சி என்று மாணவர்களை வெற்றிகரமாக செயல்பட வைக்கின்றனவே?
என்றால் அது மெச்சக்கூடியதுதான்.

 செல்லம்மாவின் கோரிக்கையான Vodafone நாய்க்குட்டிக்காக  கல்யாணசுந்தரம்  கொச்சியில்  படாதபாடுபடுவது இயல்பாக இல்லை என்பது மாதிரி படம் பார்த்த சிலர் அபிப்பிராயப் பட்டனர்…
நானே அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அதற்குள் ஒரு கருத்துருவாக்கம் இருக்கிறது.  டி.வி.யில் பார்த்த நாயை மகள் கேட்க, எங்கோ tribalலில் இருக்கிற Rain maker ஐக்கொண்டுவந்து ஒரு foreignகாரரிடம் விற்று, அந்த Foreign நாயை அவர் வாங்கிக் கொண்டு வந்து தருகிறார். இதுதான் இன்றைக்குப் பழங்குடி கிராமங்கள் மற்றும் சாதாரண கிராமங்கள் வரை ஊடுருவியிருக்கக்கூடிய உலகமயமாக்கல். ஒரு உள்ளொடுங்கிய கிராமத்தைத் தொட்டு எங்கோ இருக்கக்கூடிய ஐரோப்பியக்காரரைத் தொட்டு அங்கிருந்து அந்த வெளிநாட்டு நாய் இங்கே வருகிறது என்பதுதான் நான் முன்வைக்கிற கருத்து. இதையேதான் இந்தப் பள்ளிக் கல்வித்திட்டத்திற்கும் கூட பொருத்திப் பார்க்கிறேன். ஒரு கதையாகப் பார்த்தால் இது மிகை. ஆனால் கல்யாணசுந்தரத்தின் பார்வையிலிருந்து அணுகினால் சரி. அவன் மிக நல்லவனாக இருக்கிறான் அல்லது பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறான். பிழைக்கத் தெரியாதவன் இன்றைக்கு முட்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அப்பா அப்படி நாய் வாங்கி வருவாரா என்று கேட்டால், அப்படியான அப்பாக்கள் இருக்கிறார்கள், இருக்கிறேன்.

உங்களின் இரு படங்களிலும் இளம்பிராயத்தை ஏக்கத்துடன் நினைவு கூறும் Nostolgia தன்மை தீவிரமாக தொனிக்கிறது. மையக் கதாபாத்திரத்திற்குள் பலவிதமான உளவியல் சிக்கல்களையும் பேசுகிறீர்கள்…
கற்றது தமிழில் அந்த Nostolgia தன்மையிருந்தது. தங்கமீன்களில் சொல்லப்படுவது குழந்தைப் பருவம்தான். குழந்தைகளை வைத்து ஒரு விஷயத்தை ரசிகர்களுக்கு எளிதாகக் கடத்திவிட முடிகிறது. குழந்தைகளோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதோ இந்த என் அலுவலகத்திற்குப் பின்னால் இருக்கிற பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகளின் கூச்சலை கேட்டுக் கொண்டே இருக்க முடிகிறது. நான் இங்கிருந்து அண்ணாநகர் செல்வதற்குள் எத்தனையோ விதம் விதமான குழந்தைகளை எதிர்கொள்கிறேன். எனவே குழந்தைகள் இல்லாமல்  என்னுடைய ஒரு படத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. கற்றது தமிழில் குழந்தைகள் இருந்தார்கள். அப்புறமாகத் தங்கமீன்கள். இப்போது தரமணியிலும் குழந்தைக் கதாபாத்திரம் இருக்கிறது.

தங்கமீன்கள் படத்தின் முடிவை இப்படித்தான் யோசித்தீர்களா? “தங்கமீனாக நான் மாறிவிட்டால் அப்பாவை யாரும் திட்டமாட்டார்கள்…” என்று செல்லம்மா அடிக்கடி சொல்கிறாளே. அவளைத் தங்கமீனாக்கிவிட்டால்  என்ன என்று யோசித்தீர்களா?
அப்படி நினைத்ததில்லை. அவள் தங்கமீனாக மாறுவதற்காகக் குளத்து நீரில் இறங்கவில்லை. செத்துவிட வேண்டும் என்பதுதான் அவளுடைய எண்ணமாக இருந்தது. செல்லம்மா குழந்தை நிலையைக் கடந்துவிட்டாள் என்பதுதான் அது. “குழந்தையாக அவளை விட்டுச்சென்றேன். திரும்பி வருவதற்குள் எல்லோரும் சேர்ந்து அவளுக்குள் இருந்த குழந்தையைக் கொன்றுவிட்டீர்களே…” என்பதுதான் கல்யாணசுந்தரத்தின் ஆதங்கம்.

மஜீத் மஜிதியின் Children of heaven படத்தின் கடைசிக் காட்சி… ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு காலில் காயங்களோடு வீடு திரும்பும் சிறுவன் அலி, ஷூவைக் கழற்றிவிட்டு நீர்த் தொட்டியில் கால்களை வைப்பான். தங்கமீன்கள்  அவனுடைய கால்களை நோக்கி வந்து காயங்களை முத்தமிடுவது போல மஜீதி காட்டியிருப்பார்.  தங்கமீன்கள் என்கிற உங்கள் தலைப்புக்கு இது ஏதோ ஒருவிதத்தில் உந்துதலாக இருந்திருக்குமா?
இல்லை… 6-8ம் வகுப்பு வரைக்கும் நான்  Gold fish  வளர்த்தேன். கண்ணாடித் தொட்டியில் வளர்க்கப்படும் மீனுக்கு சொற்ப ஆயுள்தான். அதிக பட்சம் 25 நாட்களுக்குள் செத்துவிடும். இதைத் தெரிந்துகொண்ட பிறகு மீன் வளர்ப்பதையே விட்டுவிட்டேன்.  செல்லம்மா ஒரு தங்கமீன்.  அவளை நீங்கள் இயல்பாக விட்டால் நல்லது. இழுத்துக் கொண்டு வந்து உங்கள் சிலபசுக்குள் விட்டதால் அவள் பிரச்சனைகளை அனுபவித்தாள் என்பதுதான் நான் சொல்ல வந்தது.

நீங்கள் சொல்வதை உணர்ந்து கொள்ள முடிகிறது. எட்டாம் வகுப்புவரை என் பையனும் வீட்டில் மீன்கள் வளர்த்தான். அவற்றில் ஒவ்வொரு மீனாகச் சாகும்போது இரவெல்லாம் அதைப் பார்த்து அழுதுகொண்டே இருப்பான். இதை கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கு மீன் செத்த துக்கமும், என் பையனின் கண்ணீருமாக இரட்டை மன உளைச்சல் தொற்றிக் கொள்ளும். அப்போது இதை ஒரு கதையாகக்கூட எழுத நினைத்ததுண்டு…
ஆம். ஆறாம் வகுப்புப் படிக்கும்போது மீன் வளர்ப்புக்காகத் தொட்டியைத் தயார் செய்வது, பாசி, கற்களைச் சேகரிப்பது எல்லாம் ஆர்வத்தோடு செய்வேன். ஆனால் அந்த மீன்கள் எப்படியும் செத்துவிடும். அவற்றுக்கான வாழ்விடம் வேறு. அவை நம்மிடம் வளர்வன அல்ல. இந்த எதார்த்தம் நமக்குத் தாமதமாகத்தான் புரிகிறது.

தங்கமீன்கள் ஒரு ஈரானியப் படத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்.   Life is beautiful, The way home, The Return, The day i became a women, The 400 blows மாதிரி குழந்தைகளை மையப்படுத்திய படங்களைப் பார்த்த பிறகும் தமிழில் இது போன்ற முயற்சிகளை  மேற்கொள்ள நம்முடைய இயக்குனர்கள் முன்வரவில்லை.  ஒரு வேளை ஈரான் மாதிரி சென்சார் கெடுபிடிகள் அதிகமிருந்தால் இங்கும் வேறுவழியின்றி நல்லது நடக்குமோ?
ஈரான் படத்தைத் தமிழ்ப் படத்தோடு ஒப்பிட முடியாது என்றுதான் நினைக்கிறேன். அவர்களுடைய படம் பிடிக்கிற பாணி, மொழி எல்லாம் வேறு. நீங்கள் என் படத்தை ஈரான் படம் மாதிரி இருக்கிறது என்று சொன்னால் நான் நல்ல படம் எடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை…
எனக்குப் புரிகிறது. நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு அப்படிச் சொன்னீர்கள் என்பது. அவர்களுடைய உலகம் வேறு. நீங்கள் ஈரான் மொழி தெரிந்து அந்தப் படங்களைப் பார்க்கவில்லை அல்லவா? சப்டைட்டில்  பார்த்து நீங்களாகப் புரிந்து கொள்வதுதானே  அந்த சினிமா. அங்கே இயக்குனரைத் தள்ளி வைத்திருக்கிறீர்கள். தமிழ்ப் படம் பார்க்கும்போது ஒரு இயக்குனராகவே மாறிவிடுகிறீர்கள். ஒரு ஈரான் விமர்சகர் தமிழ்ப்படத்தைப் பார்த்தால் ஈரான் படத்தைக் காட்டிலும் தமிழ்ப் படம் சிறந்தது என்ற மனநிலைக்கு வரலாம்.  ஏனெனில் அகிரா குரோஸாவை ஜப்பானில் அங்கீகரித்ததை விட உலகநாடுகள் தான் அதிகம் கொண்டாடி மகிழ்ந்தன. நாம் அதிகமும் விரும்பிய குரோஸாவின் படங்களை நாடகீயத் தன்மையுள்ளன எனக் கூறிய ஜப்பான் விமர்சகர்கள் உண்டு. தமிழ் சினிமாவுக்கென்று ஒரு காட்சி மொழி இருக்கிறது.  அதைப் பிற நாட்டுப் படங்களுடன் ஒப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  எனவே தமிழ் சினிமாவை தமிழ்சினிமாவிற்குள் ஒப்பிட்டுப் பார்ப்பதையே நான் விரும்புகிறேன். ஈரான் இயக்குனர்களின் நிதானம், மௌனம் நமக்கு வராது. வராதென்றால், அந்த மௌனத்தை இங்கு சுலபமாகக் காட்டிவிடலாம். ஆனால் எனக்குள்ளேயே அந்த மௌனம் அந்த நிதானம் இல்லாதபோது அதை எப்படி நான் எடுக்க முடியும். எனவே எனக்கான சினிமா மொழியை நான் கண்டடையவே முயற்சிக்கிறேன். இந்தக் கருத்து எல்லாத் தமிழ் இயக்குனர்களுக்கும் பொருந்தக்கூடியதே. எங்கள் எல்லோருக்குமான பிரச்சனை என்னவென்றால் இது ஒரு மாஸ் மீடியா. பிறகு சென்சாருக்கு உட்பட்டுப் படம் எடுப்பது. சென்சாரில் U, U/A, A, சர்டிபிகேட்கள் தருகிறார்கள். Uக்கு மட்டும்தான் taxfree என்றால்  யாரும் படம் தயாரிக்க முன் வரமாட்டார்கள். தரமணியிலேகூட நான்கைந்து காட்சிகளை நீக்கிவிட்டேன். நான் சொல்ல நினைத்ததை சொல்ல விடாமல்  கட்டுப்படுத்தி வைப்பதென்பது அரசாங்கம் ஒரு படைப்பாளியின் மேல் மறைமுகமாக நிகழ்த்தும் சர்வாதிகாரம்.

அப்பா கஷ்டப்படுகிறார்  என்று  செல்லம்மா சில பொருட்களைக் களவாடுவதாகக் காட்சி வைத்திருப்பது ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடுமென எழுந்த விமர்சனம் குறித்து…
குழந்தைகள்  திருடுவது சகஜமானது. திருப்பூரில் நான் ஒண்ணாம் வகுப்புப் படித்த பள்ளிக்கூடத்தில் தினசரி  என்னிடமிருந்து ஒரு ரப்பர்  திருட்டுப் போய்விடும். ஒரு ஐஸ்காரர் வருவார். எனக்கு ஐஸ் சாப்பிடத் தோன்றும். என்னுடன் படித்த சக மாணவன் ஒருவன் மிகச் சுலபமாக அவரிடம் போய் ஐஸ் வாங்கிச் சாப்பிடுவதைப் பார்ப்பேன். பிறகுதான் தெரிந்தது. அவர் ஐஸ்காரரின் மகன் என்பது. எனக்கு அப்போது ஐஸ் திருடவேண்டுமென்றுதான் தோன்றியது. திருடுவது தேவைகருதியோ விளையாட்டாகவோ குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கிற சுபாவம் என்றுதான் நான் கருதுகிறேன்.

நான் சொல்ல வருவது…
நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. அது அவளாகச் செய்யவில்லை. டி.வி.சீரியல் பார்த்துச் செய்வது. ÔÔடி.வி. சீரியலில் வருது பார்த்தீங்களா தாத்தா” என்றுகூட  அவள் கேட்பாள். நான் படத்தில் டி.வி.பார்க்கிற மாதிரி காட்சி வைக்கவே இல்லை. ஆனால் டி.வி. பார்த்துதான் அவள் அந்த நாயைக் கேட்பாள். டி.வி. பார்த்துதான் சில விஷயங்களைச் செய்வாள். அவளுடைய முக்கியமான பொழுதுபோக்கு டி.வி. பார்ப்பதுதான். அதைப் பார்த்துதான் ஒரு கூட்டுக் குடும்பத்தையே அவள் புரிந்து கொள்கிறாள்.

கதைப் போட்டிக்காக எவிட்டா மிஸ்ஸிற்கும் தனக்குமான உறவை செல்லம்மா கதையாகப் புனைவது குழந்தைகளின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் காட்சி. அதேபோல வாழ்க்கையிலிருந்தே படைப்பை முன் வைக்கிற படைப்பாளியின் அரசியல் செயல்பாடாகவும் அதைப் புரிந்து கொள்ளலாம்…
குழந்தைகளிடம்  புறணி பேசுகிற பழக்கம் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இதோ இந்த ஜன்னலில் நின்று கவனித்தால் தெரியும். குழந்தைகள் கூடி ஒருவருக்கொருவர் அந்த மிஸ் அப்படி… இந்த மிஸ் இப்படி… என்று மாற்றி மாற்றிக் கதை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குப் புறணி பேசுவது பிடிக்கிறது. புறணி பேசுகிற அம்மாக்களுக்குப் பக்கத்தில் உட்காருவதும் பிடிக்கிறது. புறணி பேசுவதுதான் கதை.  செல்லம்மாவின் ஐக்யூ லெவல் எந்தளவிற்கு இருக்கிறது என்பது அந்தக் காட்சியில்தான் புலப்படுகிறது. அவள் புத்திசாலி, அதிபுத்திசாலி என்றெல்லாம் சொல்லாமல் ‘ஆனால் அவள் பிரில்லியண்ட்’ என்று சொல்வதற்கான காட்சி அது. பள்ளிப்பாடத் திட்டத்தில் அவள் தேர்ச்சி பெறாமல்  இருக்கலாம். ஆனால் அவளால் இத்தனை லாஜிக்கலாக இதையும், அதையும் மாற்றி  ஒரு பேண்டசியைக் கூறி எதிரில் இருப்பவரை நம்ப வைக்க முடிகிறது. அதில் அவளுடைய ஆச்சியைப் பற்றி, அத்தையைப் பற்றி அம்மாவைப்பற்றி பேசுகிறாள். எக்னாமிக்ஸ் பேசுகிறாள். எது காஸ்ட்லி என்று அவள் சொல்லுகிற பதில் இருக்கிறது. செல்லம்மா வாழ்க்கையைத் தாத்தாவிடமிருந்தும், அப்பாவிடமிருந்தும் புரிந்து, டீச்சரைப் புரிந்தும் செயல்படுகிற ஒரு கல்விமுறை அதில் இருக்கிறதில்லையா?  இதுதானே செயல் வழிக்கற்றல்? அப்படியானால் ஒரு சரியான ஆசிரியர் இருந்தால் அவளால் படித்துவிட முடியும். மேஜிக் செய்து எவிட்டா மிஸ் அவளை மாற்றிவிடவில்லை. அதற்கான தகுதி அவளிடம் இருந்தது.

அந்த இடத்தில் செல்லம்மாவை நீங்கள் நிறுவி விடுகிறீர்கள்…
ஆம், அவள் யார் என்பதை. பிறகு எனக்கு தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் என்கிற நிர்ப்பந்தம் இருந்தது. அவள் செத்துவிடுவாளோ என்கிற பயத்தை உருவாக்கி ஒரு விளையாட்டு விளையாடி அந்த இரண்டு ரீல்களைக் கடக்க வேண்டும்.

கிளைமாக்ஸ் அந்தக் காட்சியில் இருந்தே ஆரம்பிக்கிறது இல்லையா…
ஆம்.

செல்லம்மாவாக நடித்திருக்கும் சாதனா பிரமாதப்படுத்திவிட்டாள். கண்களை விரித்து பற்களை முழுக்க வெளிக்காட்டி சிரித்து மருண்டு, மிரண்டு அழுது… இப்படி நமக்கொரு பிள்ளை பிறக்கமாட்டாளா என்று எல்லா தகப்பன்களையும் ஏங்க வைத்துவிடுகிறாள். எப்படி வேலை வாங்கினீர்கள்?
எல்லாக் குழந்தைகளிடமும் வேலை வாங்குவது சுலபம்தான். அவளுக்கு இந்தக் கதை புரிந்திருந்தது. இந்தக் காட்சியை எதற்கு எடுக்கிறார்கள். இதில் நாம் இப்படிச் செய்தால் என்ன அர்த்தம் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது.

அப்போது என்ன வயதிருக்கும் அவளுக்கு?
அவளை நடிக்கத் தேர்ந்தெடுத்தபோது ஏழு வயது.  நடிக்கும்போது எட்டு வயது. நடித்து முடிக்கும்போது ஒன்பதே முக்கால் வயது. படம் வெளியாகும்போது 11 வயது.

எதிர்காலத்தில் நல்ல நடிகையாவதற்குரிய தகுதிகள் அவளிடம் இருப்பதாகப் பட்டது…
உண்மைதான்.

நான், என் மனைவி, மகள், மகன் நால்வருமாகத்தான் தங்கமீன்களைப் பார்த்தோம். நால்வருக்குமே வேறு வேறு ரசனைகள். ஆனால் தங்கமீன்களைப் பொறுத்தவரை ஒரே கருத்து. “படம் நன்றாக இருக்கிறது. ஏன் ஓடவில்லை?” இது கடைசியில் பெரிய ஆதங்கமாகவும் மாறிவிட்டது…
படம் ஓடியது ஓடவில்லை என்பது வேறு கருத்து. நீங்கள் 2.5 கோடிக்குப் படம் எடுத்து 75லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்தால் 4.5 கோடிதான் வசூல் ஆகும். 10 கோடி ரூபாய்க்குப் படம் எடுத்து 5 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்தால் அது 25 கோடி ரூபாய்க்கு வசூல் செய்யும். படம் ஓடுகிற நாட்களை அப்படித்தான் கணக்கிட வேண்டும். தங்க மீன்கள் லாபமா, நஷ்டமா என்று கேட்டால் லாபம்தான். ஏ சென்டர்களில் நன்றாக ஓடியது. சேட்டிலைட்டில் நல்ல தொகை கிடைத்தது. 35 சதவிகித லாபம் எல்லோருக்கும் கிடைத்தது. அதனால் தான் எனக்கு தங்கமீன்கள் எடுத்த தயாரிப்பாளரே அடுத்த படத்தையும் தந்திருக்கிறார்.

ஆனால் விமர்சனங்கள் எதிர்மறையாக வந்தனவோ?
அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் ஊடகங்கள் படத்தை முதலில் தவறாகத்தான் புரிந்து கொண்டன. தற்கொலையைத் தூண்டுகிறது… மிகை உணர்ச்சி… எனப் புரிந்து கொண்டவர்கள் உண்டு. ட்ரெய்லர் ஒரு மாதிரி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படம் பார்த்தபிறகு ஒரு சாதாரணக் கதை தானே. ஏன் இத்தனை விளம்பரப்படுத்தினார்கள் என்று கருதியவர்கள் உண்டு. கல்யாணசுந்தரம் கேரக்டர் ஏன் street smart ஆக இல்லை. எப்போதும் குற்ற உணர்ச்சியுடனேயே இருக்கிறான். ஒரு பரோட்டா கடையில் வேலை பார்த்தால்கூட சம்பளம் கிடைக்குமே என்றெல்லாம் கேட்டார்கள். தமிழ்ப் படங்களின் மீது ஒருவர் எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் சுலபமாகக் கேட்டுவிடலாம். கற்றது தமிழுக்கும் இதுதான் நடந்தது. தங்கமீன்களுக்காவது பரவாயில்லை. நான்கே நாட்களில் பேச்சுமாறிவிட்டது. கற்றது தமிழை முதல் சுற்றில்  பார்த்தவர்கள் புரியாத படம்… நிறையக் கதைகள் திணிக்கப்பட்ட படம்… என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை… என்றுதான் விமர்சித்தார்கள். 2014ல் தான்

இல்லை…கற்றது தமிழுக்கான சரியான ரசிகர்கள் உருவானார்கள். இல்லை… கற்றது தமிழ் வெளியானபோது அது ஒரு சில வட்டங்களை அதிர்வு கொள்ள வைத்தது என்று கருதுகிறேன்…
அது குறுகிய வட்டங்களுக்குள்தான். தீவிர இலக்கியப் பத்திரிகைகள் பக்கா main stream படங்களை நல்ல படம் என்று எழுதியிருக்கின்றனர்.  main stream விட்டு விலகி எடுத்த நல்ல படங்களை புறக்கணித்திருக்கின்றனர். காலப்போக்கில் ஒரு படத்தின் மீதான கருத்துகள் மாறுகிறது என்பதற்கு கற்றது தமிழ் ஒரு உதாரணம். உண்மையில் குமுதம் இதழ்தான் கற்றது தமிழ், தங்க மீன்கள் இரண்டு படங்களையும் பாராட்டி எழுதியது.

தங்க மீன்களில் ராமு, கிருஷி போன்ற இடதுசாரிக்  கலைஞர்களைப் பயன்படுத்தி உள்ளீர்கள். அதிலும் ராமு அருமையாக நடித்திருந்தார். கிருஷி கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தியிருக்கலாமோ என்று தோன்றியது…
ராமு நிறையப் படங்களில் நடித்திருக்கிறார். அவரைப் பார்க்க என் தாத்தாவைப் போலவே இருப்பதாகப்படும். ‘பூ’ படத்திலிருந்தே அவருடைய நடிப்பு எனக்குப் பிடிக்கும். எனக்கு அப்பா என்றால் அவர் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தேன்.  நடிக்க வைத்தேன். கிருஷிக்கு நான் கொடுத்த நேரம் குறைவுதான். அவருக்கு அது முதல் படமும்கூட.எனவே தயக்கங்கள் இருந்திருக்கும். படத்தில் கிருஷியும், ராமுவும் சந்திப்பதுபோல எல்லாம் எழுதியிருந்தேன். ஆனால் அவசரத்தில் படம்பிடிக்க முடியவில்லை. கிருஷியின் உடம்புக்கென்று ஒரு கதை இருக்கிறது. அந்த முகம், உடல், குரல் எல்லாமே வித்தியாசமானது. அவரைக் கதாநாயகனாக வைத்தே ஒரு படம் எடுக்கலாம். திருநெல்வேலிக்குப் போகும்போதெல்லாம் அவரை நான் சந்திப்பதுண்டு.

உங்கள் படங்களில்  Land scape  அருமையாகப் பதிவாகிறது. கற்றது தமிழில் மகாராஷ்டிரா, ஆந்திரா நிலக் காட்சிகள், தங்க மீன்களில் அந்த ரயிலோடும் கிராமம் எல்லாமே…
தங்கமீன்கள்  கிராமம்  மாதிரியே சட்டீஸ்கரில் ஒரு கிராமத்தைப் பார்த்திருந்தேன். எனவே அதுபோலவே  ஒரு  கிராமத்தை இங்கு தேர்ந்தெடுத்தேன். என் படப்பிடிப்புத் தளங்களைத் தீர்மானிப்பது என் திரைக்கதை. இடமும், பொழுதும்தான் ஒரு திரைக்கதைக்கு ஜீவனளிக்கின்றன. பெரும்பொழுது, சிறு பொழுது என்று இரண்டு இருக்கிறது. 12மணி மதிய வெயிலில் அவனை அடித்த அப்பா, காலை 6.30 மணிக்கு அடித்திருப்பாரேயானால் அவன் வீட்டை விட்டு ஓடிப்போயிருக்க மாட்டான். அல்லது மாலை 7 மணிக்கு அடித்திருந்தாலும்கூட.  எப்போதுமே கோடை தான் பிரச்சனை. விடுமுறையும் அப்போதுதான். மாற்றங்களும் அப்போதுதான். என்னுடைய வாழ்க்கையில் கோடையில் தான் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனாலேயே தங்கமீன்களில்  நான்  எல்லா இடங்களிலும் தண்ணீரைத் துணைக்கு அழைத்திருப்பேன். சுருக்கமாகச் சொன்னால் தங்கமீன்கள் கதை ஒரு சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகு. அவ்வளவுதான். அதனால்தான் படத்தில் மலை இருக்கிற கிராமத்தைத் தேர்ந்தெடுத்தேன். பிறகு ரயில் தேவைப்பட்டது. அந்த ரயிலுக்கும் வெவ்வேறு பொருளிருக்கிறது. அது ஒரே சமயத்தில் புல்லாங்குழலாகவும் இருக்கிறது. பயங்கரமான பாம்பாகவும் இருக்கிறது. பிறகு அந்தக் குழந்தையின் பேன்டஸிக்காக ஒரு காடு தேவைப்பட்டது. அங்கே ஒரு  குயில்  தேவைப்பட்டது. இப்படியாக…

தரமணி ஒரு பொழுதுபோக்குப் படம் என்கிற மாதிரி ஒரு பத்திரிகையில் சொல்லியிருந்தீர்கள். அதைப் படித்தபோதே பதற்றம் தொடங்கிவிட்டது. ஏனெனில் எத்தனையோ நல்ல கலைஞர்களைத் தமிழ்ச் சினிமா காவு வாங்கியிருக்கிறது. நீங்களும்…
என்னுடைய  எல்லாப் படங்களையும் பொழுதுபோக்குப் படங்களாகத்தான் கருதுகிறேன்.  பொழுதை எப்படிப் போக்குகிறோம் என்பது முக்கியமானதல்லவா.  அந்த அர்த்தத்தில் சொல்கிறேன். என் படங்கள் அங்கங்கு நன்றாக வந்திருக்கிறதென்றால் அது விபத்தால்தான். அன்றைக்குப் பார்த்து நடிகர்கள் அதற்கான நடிப்பைக் கொடுத்து, அன்றைக்கு வந்த சூரியன் அதற்கான ஒளியைக் கொடுத்து, அன்றைக்குப் பார்த்து கேமராமேன் ஒரு ஷாட் கண்டுபிடித்து, அதற்கு இசையமைப்பாளர் பிரத்தியேகமாக வாசித்து… இப்படியெல்லாம் நடந்திருக்கிறதுதான். ஆக இது கொரில்லா பிலிம் மேக்கிங் மாதிரிதான். தரமணியிலும் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன். எந்த அளவு சென்றடைகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னுடைய மூன்று படங்களுமே ஒருவித triology தான். உலகமயமாக்கலை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதுதான்.

இலக்கிய வாசிப்பு உங்கள் ஆக்கங்களுக்கு எந்த அளவு உதவியாக இருக்கிறது?
சமீபத்தில் மராட்டி தன் வரலாற்று நாவல் ஒன்று படித்தேன். அது ஒரு நாடோடி இனக்குழுவைப் பற்றிய கதை. மனைவி தினசரி குளிக்கிறாள் என்று அவளுடைய கணவன் அவளை அடிக்கிறான். “தினசரி குளிக்க நீ என்னடி பாப்பாத்தியா” என்று கேட்கிறான். தினசரி குளிப்பதில் என்ன பிரச்சனை என்றால், அங்கே குளிப்பதற்கான பிரத்தியேக இடமில்லை. பலர் பார்வையில் படுமாறுதான் குளிக்க வேண்டியிருக்கிறது. மற்றொன்று சுத்தமாக இருந்தால் அவளைத் தூக்கிக் கொண்டுபோய் வன்புணர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். இந்தப் பிரதியில், சுத்தமாக  இருப்பது தம் கற்புக்கு ஆபத்து விளைவிக்கிறது என்பதற்காக அம்மக்கள் அசுத்தத்தை அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற கருத்து  எனக்குப் பிடிபட்டது. மற்றபடி ஒரு கதையாக சம்பவமாக எதுவும் உதவுவது இல்லை. இந்த வாசிப்பு எல்லாம்  காட்சி ரூபமாக எனக்குச் சில விஷயங்களைத் தருகின்றன. விவரணைகளுக்காக முன்பு நிறைய வாசித்தேன். ஆதவன், அசோகமித்திரன், வண்ணதாசன் என்று. ஆனால் சம்பவங்களை அடுக்கிக் கதை சொல்வதுதான் சவால் என்று இப்போது படுகிறது. ஒரு கதைக்காக நீங்கள் எனக்குள் ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்துகிறீர்கள். எப்போதாவது அந்த நிலத்தை, ஊரை நான் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அங்கு சென்று என்னால் வாழ்ந்து பார்க்க முடியாது. உங்களுடன் பேசலாம் அல்லது உங்கள் எழுத்துக்களை வாசிப்பதின் மூலமாக அந்த நிலத்தை, மனிதர்களை அவர்களின் குணாதிசயங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

தமிழில் வெளிவருகின்ற குழந்தை இலக்கியங்கள் குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன?
‘ஆயிஷா’ படித்தேன். தொடர்ந்து இரா.நடராசனின் சில நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆர்மேனியன் நாடோடிச் சிறுகதைகள், ஜெயமோகனின் பனி மனிதன், டோட்டோசான், அவன் விதி, பாட்டிசைக்கும் பயன்கள் படித்தேன். நேரடியாகத் தமிழில் குழந்தை இலக்கியங்களைக் குறைவாகத்தான் படிக்கிறேன். ஆனால் மொழிபெயர்ப்புகளை அதிகம் வாசிக்கிறேன்.

உங்கள் படங்கள¤ல் வரும் மையக் கதாபாத்திரங்களை அவற்றுக்குள் இருக்கும் கோபாவேசங்களைக் கவனிக்கும்போது நீங்கள் ஒரு இடதுசாரி மனோபாவம் உள்ளவராக இருக்கக்கூடுமோ என்று தோன்றியது…
இடதுசாரி என்று சொல்லிக் கொள்ளுமளவு எனக்கு சித்தாந்தத் தெளிவு இல்லை. இடதுசாரி வாழ்க்கையில் நான் பயிற்சி பெறவில்லை. நான் மத்தியதர வர்க்க முதலாளித்துவ வாழ்க்கையைத்தான் வாழ்கிறேன். ஒரு அலுவலகம், இரண்டு சிஸ்டங்கள் வைத்துகொண்டு ஒரு சினிமாக்காரனாக…

பொதுவாக சினிமா என்பதே…
Capitalist media. அதற்குள்ளிருந்து நீங்கள் இடதுசாரியாக சினிமா எடுப்பதென்றால் இப்படியெல்லாம் எடுக்கவே கூடாது. எனவே ஒரு இடதுசாரி என்று சொல்லும் அளவு எனக்குத் துணிச்சல் இல்லை. இடதுசாரிகளிடமிருந்து ஒரு நியாயத்தை, அந்த இடதுசாரி மனோபாவத்தைக் காப்பியடித்துக் கொள்கிறோம் அல்லது அது மாதிரி நடிக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கடைசியாக வேடிக்கை கலந்து ஒரு கேள்வி. ‘ஹே ராம்’ என்றதும் சட்டென உங்கள் நினைவில் என்ன தோன்றும்?
(பலமாக சிரிக்கிறார்) நான் ‘அந்த ராம்’ இல்லை என்பதுதான். என்னுடைய பெயர் எனக்குப் பெரிய பிரச்சனை. ராமசுப்பிரமணியம் என்கிற நீளமான பெயரை வைத்துக்கொள்ள முடியாமல் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் இணைத்து ‘ராம்’ ஆகினேன். ஹேராம் என்றால் இரண்டு ராம்கள் இருக்கிறார்கள். ஒன்று கமல் சாருடையது. மற்றொன்று மதவாதிகளுடையது. அந்த இரண்டு ராம்களாகவும் நான் இல்லை என்பதை உறுதிபடச் சொல்லிவிடுகிறேன்.

Related posts