You are here

அஞ்சலி: தேனுகா

Thenuga with his chair

நுண்கலை ராகம் இசைத்த கலைஞன்

சமீபத்தில் தமது 63வது வயதில் மறைந்தார் கலை விமரிசகர் தேனுகா.
ஜி. ஸ்ரீநிவாசன் என்ற தனது இயற்பெயரை அரிய ராகமான ‘தேனுகாÕ வில் மறைத்துக் கொண்டு ஓவியம், சிற்பம், கட்டிடம் குறித்த அழகியல் கலை விமரிசனக் கட்டுரைகள், நூல்களை எழுதியவர். பிஎஸ்சி வேதியியல் பட்டதாரியான அவருக்கு நுண்கலைகள் மீதுள்ள ஈர்ப்பு வித்தியாசமானது. கும்பகோணம் ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணிநிறைவு செய்தவர். சுவாமிமலை சொந்த ஊர்.
மிகேல் ஏஞ்சலோ, லியனார்டோ டா வின்சி, வான்கோ உள்ளிட்ட மேலைய ஓவியர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர். நெதர்லாந்த் நவீனஓவியர் பியத் மொன்றியான் ரசிகர். நெதர்லாந்து கட்டிடக்கலைஞர் ரீட்வெல்ட் வடித்த சிவப்பு-நீல வண்ண நாற்காலியைப்போன்று  அவரே வடிவமைத்தார். நுண்கலைகள் பற்றி அழகியல் கண்ணோட்டத்துடன் விமரிசனம் வைத்த முன்னோடி அவர் எனச் சொல்லலாம். அவரது பல நூல்களும் நுண்கலை பற்றிய நுணுக்கங்களை தென்னிந்தியக்கலை – தத்துவமரபோடு இணைத்தன. கட்டிடக்கலையில் ராகத்தை உணரும் வாய்ப்பு இருப்பதாக அவர் கொண்ட கருத்து, புராதனமான கோவில்சிற்பத் தூண்களிலிருந்து எழும் இசையை ஒத்த ரசனையாகவே பாராட்டப்பட்டது.
1984இல் அவர் கணையாழியில் எழுதிய “டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை” என்ற கட்டுரை கலாச்சார அதிர்வு உண்டாக்கிற்று. “இனி,” “இன்று” உள்ளிட்ட சிற்றிதழ்களில் ஏராளமான கட்டுரைகள் எழுதினர். தமுஎகச வின் கலைஇரவு நிகழ்வுகளில், கூட்டங்களில் பங்கேற்றவர். “வண்ணங்கள் வடிவங்கள்” என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு தமிழ்நாடு அரசின் சிறந்த கவின்கலை விருதுபெற்றது. இது ஆங்கிலத்தில் “கர்வ்ஸ் அன் காண்டுர்ஸ்” என்று சென்னை புக்ஸ் மூலம் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
“வித்யாசங்கர் ஸ்தபதியின் சிற்பமொழி” என்ற அவரது அடுத்த நூலும் வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக இருந்து, எளிமையான எழுத்தாளராக வாழ்ந்த தேனுகாவின் மறைவு கவின்கலை ரசிகர்கள், தமிழ் வாசகர்களுக்குப் பெரும் இழப்பு. புத்தகம் பேசுது ஆசிரியர்குழு அவருக்கு ஆழ்ந்த இரங்கலை, தெரிவித்துக் கொள்கிறது.
இரா. குமரகுருபரன்

Related posts