You are here

புரட்சிப் பருந்து ரோசா லக்சம்பர்க்

என்.குணசேகரன்

மார்க்சிற்குப் பிந்தைய தலைமுறை மார்க்சியர்களில் தலைசிறந்த பங்களிப்பைச் செய்தவர் ரோசா லக்சம்பர்க். மார்க்சிய தத்துவம், நடைமுறையை மேலும் வளர்த்திட்ட பெருமைமிகு வரலாறு  கொண்டவர் அவர். ஜெர்மனிக்கு மட்டுமல்ல, உலகப் புரட்சிக்கான போராளியாகத் திகழ்ந்தவர்,ரோசா.
முதல் உலகப்போர்ச் சூழலில், போருக்கு எதிராகவும், மனித இனத்தின் மீது அழிவுப் போரைத் திணிக்கும் ஏகாதிபத்தியம் குறித்தும் அவர் பதிவு செய்துள்ள கருத்துக்கள் இன்றளவும் பொருந்துகின்றன.
ஏகாதிபத்திய முறையையும், போரையும் எதிர்த்து  சோசலிசம் காணும்போது, இயக்கத்தில் எழும் சீர்திருத்தவாதம் எனும் நழுவல் போக்கை கடுமையாக எதிர்த்தவர் ரோசா.அதனையொட்டிய அவரது கருத்துக்கள் இன்றும் ஜீவனுள்ளதாகத் திகழ்கின்றன.
இந்தியாவில் தேசிய சுயாட்சி ஏற்படுவதற்காக விடுதலைப் போராட்டம்  நடந்தது.  ஆனால், இன்றளவும் தேசிய இறையாண்மைக்கு வெளியிலிருந்தும், உள்ளுக்குள்ளிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. தங்களது  மூலதன  நலன்களுக்காக உள்நாட்டு முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துடன் கூடாநட்புக் கொள்கிறது. காங்கிரஸ், பாஜக என எந்த ஆட்சி இருந்தாலும் இது தொடர்கிறது. இதனால் தேசிய இறையாண்மைக்கான ஆபத்தும் நீடிக்கிறது. ஆனால், இடதுசாரிகளைத் தவிர வேறு யாரும் இதைப் பொருட்படுத்துவதில்லை.
இந்நிலையில் சோசலிஸ்ட்கள்  புரிந்த கொள்ள வேண்டிய ஒரு உண்மையை  ரோசா  விளக்குகிறார்:
முதலாளித்துவ அரசுகள் நீடிக்கும் வரை
உலகில் தேசங்களின் உள்நாட்டு,வெளிநாட்டு வாழ்க்கையை ஏகாதிபத்திய கொள்கைகள் தீர்மானிக்கக் கூடியதாகவும்,கட்டுபடுத்துவதாகவும் இருக்கும் வரை.
‘தேசிய சுயாட்சி’ என்பது இருக்காது…’
எனவே, இன்று, இறையாண்மைக்கு அச்சுறுத்தல் எனும் பிரச்சனை, இடதுசாரிகள் ஓங்கிக் குரல் எழுப்பினால் மட்டும்  தீர்ந்து விடாது.முதலாளித்துவ அரசு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களின் புரட்சிகர எழுச்சியை உருவாக்கிட வேண்டும். இது ரோசாவின் அழுத்தமான கருத்து.
தேசியவாதம் குறித்து……..
ரோசா லக்சம்பர்கின் தேசியம் பற்றிய பார்வையும் இன்றைய சூழலுக்கு முக்கிய வழிகாட்டி. தமிழகத்தில் தமிழ்த் தேசியவாதம் புதிது அல்ல.மாநிலங் களுக்கிடையேயான பிரச்சனையாக இருந்தாலும்,இலங்கைத்தமிழர் பிரச்சனையாக இருந்தாலும் தமிழ்த்தேசியவாதக் கண்ணாடி அணிந்து கொண்டு சிந்திப்பது பலருக்கு பழக்கமாகவே மாறிவிட்டது. பல ஊடகங்கள்  இந்தக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இதில் பல முற்போக்கு சிந்தனை கொண்டோரும் கூட, இன, மொழி, பண்பாட்டு  உரிமைகள் பறிப்பு நிகழ்வதைக் காரணம் காட்டி தேசியவாத சிந்தனைக்கு ஆட்பட்டு விடுகின்றனர்.
மார்க்சியம் இன,மொழி,பண்பாட்டு உரிமைகள் பறிப்புக்கு எதிரானது. ஏனெனில், சம அந்தஸ்து,சம உரிமைகளை நிலைநாட்டும் கடமை சோசலிச வேலைத்திட்டத்தில் பிரிக்க முடியாத பகுதி. ஆனால், இன, மொழி, பண்பாட்டுத் துறைகளில் சம அந்தஸ்து, சம உரிமைகள் எவ்வாறு சாத்தியப்படும்?
ரோசா முதலில் ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார்:
“தேசங்கள்,இனங்கள்,இனக்குழுக்கள் அனைத்துக்கும்,சுயநிர்ணய உரிமைகளை முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் தீர்த்துவிடலாம் என்பது,ஒரு சிறந்த கற்பனைக் கனவு….”என்கிறார்.
1896-ஆம் ஆண்டிலேயே போலந்தில் தேசியவாதம் தலைதூக்கிய போது, அவர் அது இட்டுச்செல்லவிருக்கும் ஆபத்தினை விளக்கி எச்சரித்தார். ஆனால் அந்தக் கருத்துக்கள் அன்று எடுபடவில்லை.அவை எடுபடாததால்,  எது Ôஎடுபடுமோ’ அந்தப் பாதையில்-தேசியவாதத்துடன் சமரசம் செய்திடும் பாதையில் அவர் செல்லவில்லை. தேசியவாதத்தை எதிர்த்து உறுதியுடன் போராடினார்.
ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசியவாதத்தின் பெயரால், ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கோடிக்கணக்கில் மாண்டுபோன கொடூரம் நிகழ்ந்து இரத்தவாடை கொண்டசரித்திரம் இன்னமும் சாட்சியாக இருந்தாலும்  தேசியவாதம் மாண்டுபோகவில்லை. அவ்வப்போது தமிழகம் உள்ளிட்டு உலகின் பல பகுதிகளில் கம்பீரமாக உயிர்பெற்று உலா வருகிறது.
அது ஏன் நீடிக்கிறது? முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் பலமிக்க கோட்டையாக அது இருப்பதால் முதலாளித்துவம் எப்போதும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
“ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்தின் ஒருங்கிணைந்த அரசியல் போராட்டம் அவசியமானது.அது இல்லாமல், தேசிய சுயநிர்ணயத்தை முன்வைத்து, பலனற்ற, தொடர்ச்சியான தேசியப் போராட்டங்கள் நடத்துவது பாட்டாளி வர்க்கத்தை சிதறிப் போகுமாறு செய்துவிடும்” என்கிறார் ரோசா.
இன்று உலகம் முழுவதும் மார்க்சியர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட தேசியவாதத்திற்கு இரையாகும் நிலையில் ரோசாவின் தேசியம் பற்றிய நுண்ணிய பார்வையும் கருத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  இந்தியாவில் மத அடிப்படையில் “இந்து தேசியவாதம்”  என்ற பிற்போக்கு கருத்தியல், புரட்சிக்கு எதிரான சவாலாக உள்ளது.
சீர்திருத்தவாதம் குறித்து……
சோசலிச இயக்கத்தில் அவ்வப்போது, சில எண்ணவோட்டங்கள் தலைதூக்குவதுண்டு.  ‘சமுகத்தில் சில சீர்திருத்தங்கள், சில மக்கள் நல நடவடிக்கைகள், அவற்றுக்கான சில கோரிக்கைகள், முயற்சிகள், இயக்கங்கள் ஆகியன போதுமானது;  முதலாளித்துவத்தை அகற்றுவது அவசியமில்லை.’ வெளிப்படையாகவோ, திரைமறைவிலோ இந்தக் கருத்துக்கள் அரங்கேறுகின்றன. இந்தப் பார்வை 1890-1900-ஆம் ஆண்டுகளில், ஜெர்மனியில் அன்றைய சோசலிச இயக்கத்தில் தோன்றியது.  Ôசமுக ஜனநாயக சீர்திருத்தவாதம்’ என்று  அழைக்கப்படும் இந்தக் கருத்துக்களை சோசலிச  இயக்கத்தில்  வேரூன்றச் செய்தவர் எட்வர்ட் பெர்ன்ஸ்டீன்.
அன்று ஜெர்மானிய அரசை ஜனநாயகப்படுத்துவதிலும்,சட்டரீதியாகவே பல உரிமைகள்,பல நன்மைகளை அடைவதிலும் தொழிலாளர் இயக்கம் பெரும் சாதனைகளை சாதித்தது. இதிலிருந்து பெர்ன்ஸ்டீன் தனது தத்துவ வாதங்களை முன்வைத்தார். அவரது கருத்தின் சாரம் இதுதான்:  ‘தொழிலாளர் நலனுக்கான நிறைய சீர்திருத்தக் கோரிக்கைகளை மலைபோல் குவித்து, மெல்லமெல்ல அவற்றை சாதிக்க வேண்டும்.  இதன்  மூலமாக, சோசலிச அமைப்பில் ஏற்படும் முன்னேற்றங்கள் அனைத்தையும் முதலாளித்துவக் கட்டத்திலேயே பெற்றுவிடலாம்’ இந்தக் கருத்தின் அடிப்படையில் சோசலிச இயக்கத்தை வழிநடத்த முனைந்தார் பெர்ன்ஸ்டீன். “பொருளாதார,ஜனநாயக சீர்திருத்தங்களை அடைவதன் மூலமாகவே சமுக மாற்றத்தை உருவாக்க ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி பாடுபடும் “என்று பிரகடனம் செய்தார்.
அதாவது, சோசலிசத்தைக் கொண்டு வர, பாட்டாளி வர்க்கப் புரட்சி அவசியமில்லை என்கிற நிலையைத் தானும் எடுத்து இயக்கத்தையும் அந்த நிலைபாட்டுக்கு தள்ளிவிட முயற்சித்தார் அவர்.
ரோசா லக்சம்பர்க் தனது தத்துவார்த்த அறிவின் வல்லமை முழுவதையும் திரட்டி பெர்ன்ஸ்டீனது  கருத்துக்கு எதிராகப் போராடினார். “சீர்திருத்தங்களுக்கான  போராட்டங்கள், நாம் கடக்க வேண்டிய  பாதைகள்; சோசலிசமே இலக்கு” என்ற பார்வையை முன்வைத்துப் போராடினார். “சீர்திருத்தமா? சோசலிசமா?” என்ற அவரது நூல் பெர்ன்ஸ்டீனீய வாதங்களுக்கு எதிரான ஒரு யுத்தமாகவே அமைந்துள்ளது. இன்றளவும் பல வடிவங்களில்  உலா வரும் நவீன  பெர்ன்ஸ்டீன்களை கருத்து ரீதியில்  எதிர்நோக்கி சோசலிச  இலட்சியத்தைப் பாதுகாக்க உதவிடும் புகழ்பெற்ற நூலாக அது திகழ்கிறது.
(தொடரும்)

Related posts