You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சினிமாவைப் பயிற்றுவிப்பதில் ஆத்மதிருப்தி கொள்கிறேன்…

எம். சிவகுமார்

கேள்விகள்: கொங்குநாடன்

எம். சிவகுமார்  திரைப்படக் கல்லூரியில் 1981லிருந்து  1984 வரை திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் பயின்றவர்.  ‘சினிமா ஒரு பார்வை’ ‘சினிமா ஓர் அற்புதமொழி’,  ‘சினிமா கோட்பாடு’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களை எழுதியும், மொழிபெயர்த்தும், சினிமா குறித்த புத்தகங்கள் தமிழில் இல்லையே என்ற மனக்குறையைப் போக்கியவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள், குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த படங்களை இயக்கியவர். படங்களை இயக்குவதோடு தற்போது லி.க்ஷி. பிரசாத் ஃபிலிம் & டிவி அகெடமியிலும்  ஷிஸிவி பல்கலைக் கழகத்தின் சிவாஜி கணேசன் திரைப்படக் கல்லூரியிலும் திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை இயக்கம் குறித்து வகுப்புகள் எடுக்கிறார்.  சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு நூலிலிருந்து சில கேள்விகளை இயக்குநர் சிவகுமாரிடம் முன்வைத்தபோது அவரளித்த பதில்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. பேலபெலாஸின் The theory of the Film  நூலை ‘சினிமா கோட்பாடு’ என மொழி பெயர்த்தீர்கள். முன்னதாக மிருணாள்சென்னின்  Views on Cinema  ‘சினிமா ஒரு பார்வை’ என ஆனது. தற்போது ‘சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு’ நூல் வெளிவந்துள்ளது. வெகுஜன ரசனையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கிற தமிழ் சினிமாப் பார்வையாளர்களிடம் இந்நூல்கள் எதுமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன? அல்லது நுட்பமான ரசனை உள்ளவர்களுக்காக மட்டும் இவை எழுதப்படுகின்றனவா?

சினிமா கோட்பாடு, சினிமா ஒரு பார்வை இவ்விரண்டு புத்தகங்களுக்குமிடையில் சினிமா ஒரு அற்புத மொழி என்று ஒரு புத்தகமும் எழுதினேன். அப்போது நடந்த சினிமா நூற்றாண்டையொட்டி அதை எழுத முயற்சித்தேன். பலவித வேலைப்பளு காரணமாக அப்போது எழுத முடியாமல் 1998ல் எழுதி அந்தப் புத்தகம் வெளி வந்தது. சவுத் விஷன் பாலாஜி மிக ஆர்வத்துடன் அதைப் பதிப்பித்தார். இப்போது எழுதியுள்ள சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு நூலுக்கு ஒரு முன்னோடி அந்நூல். அதுவே மீண்டும் மறுபதிப்புக் காண வாய்ப்பிருக்கிறது. என் மாணவர்கள் ‘‘நீங்கள் ஏன் இதை ஆங்கிலத்தில் எழுதவில்லை’’ என்று கேட்கின்றனர். அவர்கள் ஆர்வம் அப்படி. உங்கள் கேள்வியின் இறுதிப்பகுதிக்கு இப்போது வருகிறேன். இம்மாதிரியான நூல்கள் அதிகபட்சம் ஆயிரம் பிரதிகள் வெளிவருகின்றன. ஆயிரம் பிரதிகள் என்றாலே அது ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல்வதுதான்.  நுட்பமான ரசனை உள்ளவர்களுக்காக மட்டுமே நான் இவற்றை எழுதவில்லை. சாதாரணர்களும் என் நூல்களை வாசித்தனர். எல்லோருக்குமான மொழிநடையில் தான்  எல்லோருக்குமாகவும்தான் எழுதினேன். ஆனால் அவை பரவலாகச் சென்று சேரவில்லை.

2. சினிமாவைத் தீவிரமாகக் கற்றுத் தேர்ந்திருக்கும் உங்களைப் போன்றவர்கள் ஆவணப் படங்கள், குறும்படங்கள், திரைப்பட விழாக்கள் என்பனவற்றைக் கடந்து வெகுஜனங்களுக்கு இன்னும்  நெருக்கமாக வருவதற்கு என்ன தடை என்று கருதுகிறீர்கள்?

தமுஎகச தொடர்ந்து நடத்திவரும் திரை இயக்க நிகழ்வுகளில் நான் பங்குபெறும்போது மக்களை நெருங்குவதாகவே உணர்கிறேன். கீஸ்லாவ்ஸ்கியின் DECALOGUE படம் திரையிடப்பட்டபோது, கம்பம் முகாமில் நிறையப் பேர் அதை ரசித்தனர். எதிர்காலத்தில் நான்கைந்து படங்களுக்கு நாமே தமிழில் சப் டைட்டில் போட்டு பொதுமக்களுக்கு காட்டவேண்டும் என்கிற எண்ணம் உண்டு. மற்றபடி நீங்கள் குறிப்பிடும்  வெகுஜனங்களுக்கு  நெருக்கமாக வரவே நான் விரும்புகிறேன். ஏற்கெனவே இரண்டு திரைப்படங்களுக்கு முழுமையாக திரைக்கதை வசனம் எழுதி வைத்திருந்தேன். சமீபத்தில் ‘நீயே’  என்றொரு திரைப்படம் எடுக்க முயற்சி செய்து 50 சதவிகிதம் நிறைவேறிய சூழலில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் நின்று போனது. அந்தப் படத்தின் கதை படிப்பறிவில்லாத ஒரு மலைவாழ் பெண்ணின் காதலைப் பற்றியது. இது மாதிரியான முயற்சிகள் தோல்வியுறும்போது ஒருவிதமான மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதிலிருந்து மீள்வதற்காகவே  என்னை நான் மாணவர்களோடு ஐக்கியப் படுத்திக் கொண்டேன். அவர்களுக்காக சினிமா போதிப்பது, எனக்கு ஆத்ம திருப்தியைத் தருகிறது.
3. சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு  உண்மையில் எப்படி இருக்கிறது? (புத்தகத்தைக் கேட்கவில்லை)

புரியாத புதிராக, குழப்பமான ஒன்றாக, சவால்கள் நிறைந்ததாக உள்ளது. டிஜிட்டல் யுகத்தில் சந்தைப் பொருளாதார வரைமுறைக்குட்பட்டுத் தான் படங்கள் எடுக்க வேண்டியுள்ளது. எனவே நாம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. நல்ல கதை அம்சத்துடன் சமூக பிரக்ஞையுடன் இந்தியில் மூன்று அல்லது நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்து விடலாம். ஆனால் தமிழில் அதற்கு ஆளில்லை. இவ்வகைப் போக்கினால்  மீண்டும் திரைப்படங்களை இயக்கும் சிந்தனை என்னை அடிக்கடி கடந்து செல்கிறது.

4. சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு நூலில் சினிமாவும் கதை சொல்லுதலும், கதையும் திரைக்கதையும், கதை திரைக்கதை தொடக்கம் போன்ற அத்தியாயங்களில் அயல்நாட்டுப் படங்கள் பலவற்றை மேற்கோள் காட்டுகிறீர்கள்? இந்தியப் படங்களெனில் சில வங்காளப் படங்கள், இவை தவிர்த்து தமிழில் உதாரணம் கூறப் படங்களே இல்லையா?

இல்லை என்பதுதான் உண்மை. அதற்காக நாம் வருத்தப்படத்தான் வேண்டும். சமீபத்திய இயக்குனர்களில் எனக்கு சேரன் மீது மிகுந்த மதிப்பு உண்டு. அவருடைய ‘தவமாய் தவமிருந்து’  திரைப்படம் ஒரு மெலோ டிராமாவாக இருந்தாலும் அந்தப் படத்திலிருந்த பொறுப்புணர்வு எனக்குப் பிடித்திருந்தது. சமூகப் பிரக்ஞையுடன் மனிதகுல மேன்மைக்காகவே நாம் படங்கள் தயாரிக்க வேண்டும்.  ‘அஞ்சான்’  போன்ற ஒரு அபத்தமான  படத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். அந்த வகையில் என்னால் ஒரு ஜிகர்தண்டாவைக்கூட ஏற்றுக் கொள்ள முடியும்.  இந்தியில் வெளியான QUEEN மாதிரி படங்கள் தமிழில் வரவேண்டும். கம்பம் முகாமில் QUEEN படத்தைத் திரையிட்டோம். வெகுவாக வரவேற்பு இருந்தது. நம்முடைய இயக்குனர்கள் ஒரு படத்தைத் தொடங்கும்போது, மிகுந்த உத்வேகத்துடன் தொடங்கி அதை வடிவமைக்கும்போது, வியாபாரத்திற்காக வேண்டி சொதப்புவார்கள்.

5.உங்களுடைய ‘கேரளாவின் குறைந்துவரும் பிறப்பு விகிதம்’ ஆவணப்படம், கேரளத்தில் எவ்விதமான தாக்கத்தை உருவாக்கியது? பொதுவாக மலையாளிகள்  இதுபோன்ற முயற்சிகளை அறிவுப்பூர்வமாக அணுகி விமர்சிக்கிறவர்கள் அல்லவா?

‘கேரளாவின் குறைந்துவரும் பிறப்பு விகிதம்’ என்கிற என்னுடைய ஆவணப்படம், நான் திரைப்படக் கல்லூரியில் பயின்று முடித்து வெளிவந்தவுடன் செய்த முதல் முயற்சி. அது அரசின் தேவைக்காக எடுக்கப்பட்ட படம். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் மட்டும் ‘வளரும் நாடுகளின் குறீயீடு’ இருப்பது ஏன் என்கிற ஆய்வுடன், குறைந்த பிறப்பு விகிதத்தை முன்வைத்து அந்தப் படத்தை எடுக்க நேர்ந்தது. ஆழமான ஆராய்ச்சியுடன் நிறையத் தரவுகளைச் சேகரித்து உருவாக்கிய படம் அது. ஒரு காதல் கதையை உருவாக்குவதற்குகூட நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகிறது. அப்படி மெனக்கெடும் போதுதான் ஒரு நல்ல காதல் கதையைக்கூட படம் பிடிக்க முடியும்.

6. அபாஸ் கைரோஸ்தமியின் ‘சர்ட்டிஃபைடு காப்பி’ படத்தை வெகுவாக சிலாகிக்கிறீர்கள். ஆனால் படம் முழுக்க ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிற்கிடையிலான உரையாடலே நீடிப்பதாகவும், ஆனால் அது உரையாடலைத் தாண்டிய ‘மிளிரும் சினிமா’ எனவும் கூறுகிறீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தம் என்பதை இன்னதென்று தீர்க்கமாகச் சொல்ல முடியாதா?

இதை முழுமையாகப் புரிந்துகொள்ள நீங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். ‘சர்ட்டிஃபைடு காப்பி’ படத்தில் ஒரு ஆணும், பெண்ணும் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருப்பார்கள். நமக்கு ஒரு கட்டத்தில் இவர்கள் கணவன் மனைவியோ எனத் தோன்றும். ஆனால் அப்படியில்லை. இன்னொரு கட்டத்தில் நண்பர்களோ எனத் தோன்றும். இவ்வாறு பன்முகப் படிமங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது.  TARKVSKY என்னும் ரஷிய மொழி இயக்குனர் ஒரு நல்ல திரைப்படத்தில்  ABIGUITY என்னும் இரட்டைத் தன்மை வேண்டும் என்கிறார்.  ஒரு விஷயத்தை அறுதியிட்டுச் சொல்லாமல் பல பொருள் தொனிக்கச் சொல்வது ஒரு உத்தி. இது அந்தப் படத்தில் வெகுவாகப் பிரயோகிக்கப்பட்டிருந்தது.

7. HD-SLR கேமராவின் வருகைக்குப் பிறகு தமிழகத்தில் உருவாகியுள்ள சினிமா ஆர்வமுள்ள  ‘இளைஞர்களின் சுதந்திரத்தை’ ஆரோக்கியமாகக் கருத முடிகிறதா?

ஒருவிதத்தில் இதை நான்  ஆரோக்கியமாகவே கருதுகிறேன். ஆனால்  வேறொரு விதத்தில் இது அபாயகரமாகவும் உள்ளது. இவ்வாறான தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்கிறவர்களில் நூற்றுக்கு இருவரே தேறுகின்றனர். மீதிப்பேர் தங்களுடைய ஆக்கங்களில் பெரும்பாலும் தவறு செய்கின்றனர். HD-SLR என்கிற கேமராவை மட்டுமே வைத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் படம் தரலாம். ஆனால் அவை தரமாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆதங்கம். கூடுதல் உழைப்பு, கூடுதல் சிரத்தை நான் ஏற்கெனவே சொன்ன சமூகப் பிரக்ஞை, மனித குல மேன்மைக்காக சிந்தித்தல் இவை  இயல்பாக ஒரு திரைப்பட இயக்குனருக்கான சுபாவங்களாக இருக்க வேண்டும்.

8. நந்திதாதாஸின் ‘ப்ராக்’ பார்த்தீர்களா? குஜராத்தில் மோடி அரசு நிகழ்த்திய அநீதிகளை இங்குள்ள அறிவு ஜீவிகளான நாம் பேசிக்கொண்டே இருந்தோம். ஆனால் இப்படி ஒரு படம் தர முடியவில்லையே?

நந்திதாதாஸ் என்னுடைய தோழிதான், ஆனால் ‘ப்ராக்’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்படி சில நல்ல படங்களைத் தவற விட்டு விடுகிறோம். பார்க்க வேண்டும்.

9.  இயக்குனர் கிம் கி தக் குறித்து நீங்கள் நூலில் விவரித்துள்ளது சுவாரஸ்யமாக உள்ளது. உண்மையில் நவீன இலக்கியத்தில் கிம் கி தக் போன்ற பல படைப்பாளிகள் உள்ளனர். அவர்கள் சிதிலமடைந்த மனித உறவுகளையே தம் படைப்புகளுக்குள் பேசுகின்றனர். ஆனால் கிம் கி தக் போன்ற இயக்குனர்கள் தமிழில் உருவாக இங்குள்ள போலியான பண்பாட்டுச் சூழல் தடையாக இருக்கிறதா?

இது ஒரு நல்ல கேள்வி. நம்முடைய இலக்கியத்தில் அப்போதே நாம் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளோம். மௌனி போன்ற எழுத்தாளர்கள்  கிம் கி தக்கின் திரைக்கதைகளைப் போன்ற கதைகளை அப்போதே எழுதியுள்ளனர். ஆனால் சினிமாவில் அப்படிப்பட்ட தரமான படங்களை நாம் தரத் தவறியிருக்கிறோம். இதுதான் இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான இடைவெளி. இலக்கியம் வாசித்தவர்களுக்கு சினிமா கைகூடவில்லை என்பதுதான் துயரம்.

10.  திரை இயக்கம் என்பது  படங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மட்டும்தானா?  நாமும் இந்த ஊடகங்களை உபயோகித்துப் படங்கள் எடுக்க வேண்டாமா… என்கிற உங்கள் ஆதங்கமே  பலருக்கும் இருக்கிறது. இதை நடைமுறைக்கு கொண்டு வர என்ன செய்யலாம்?

இதுபோன்ற ஆதங்கம் எனக்கு நிறைய இருக்கிறது. கல்லூரிகளில் போதிப்பதும் மற்றுள்ள விஷயங்களும் லௌகீகத்திற்கானது. நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்கிற  எண்ணம் நெஞ்சில் அலைமோதியபடியே இருக்கிறது. வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் உலகத்தரத்திற்கு ஒரு அரைமணி நேர திரைப்படத்தையாவது நானே எழுதி இயக்கித் தர வேண்டும் என தமுஎகச முகாம்களின்போது நினைத்ததுண்டு. அதை விரைவில் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த அரைகுறைகளின் ஆர்ப்பாட்டத்தை அடக்க முடியும்.

வெளியீடு : புதிய கோணம் | பக்.334 | ரூ.250 | போன் : 044-24332924

Related posts