You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம் – 4

 கதைபோடும்  சித்திரக்காரக் குழந்தைகள்

ச. முருகபூபதி       சித்திரங்கள்: கே. பிரபாகரன் (வயது 4)

உருவமற்ற அரூபக்கோடுகளால் சித்திரமிட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிகலைஞர்களெனும் குழந்தைகளே. வாடகை வீட்டின் மதில்களிலோ சொந்தவீட்டின் மதில்களிலோ தெருக்கள் தோறும் எவருமற்று சிதிலமடைந்த வீடுகளின் காரை உதிர்ந்த மதில்களிலோ பேசிக் கொண்டிருப்பவை குழந்தைகளால் உருவாக்கப்பட்ட சித்திரக் கோடுகளே. அவை கதைகளும் இசைமைகொண்ட மழலை மொழியும் குழைத்துக் கீறப்பட்ட கோடுகள். பெரியவர்கள் தம்மிடம் உரையாடி விளையாடிட விலகிய தருணங்களில் தன்னெழுச்சியாய் வந்த கதை சொல்லும் கலை சுமந்த கோடுகள். ஒவ்வொரு நாளும் பல்லுயிர்களைச் சுமந்த அக்கோடுகளுக்கு குழந்தைகள் தினம் தினம் புதுப்புதுக் கதைகளும் அர்த்தங்களும் தனியே பாடிக்கொண்டிருப்பார்கள். எல்லாக் குழந்தைகளும் சித்திரமிடும்போது கதையின் மந்திரங்களை  முனகிக் கொண்டிருப்பதாலேயே இப்பிரபஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
ஒருமுறை நண்பரின் வீட்டிற்கு போயிருந்தேன். புது வீடு கட்டிய அரசு அலுவலர் அவர். புத்தம் புதிய வெண்சுவற்றில் கனவுகளை சித்திரமாக்கிய அவர் குழந்தையின் கோடுகள். சுவற்றை சோப்பு நுரை கொண்டு அவர் அழித்ததால் சித்திரமழித்த அம்மதிலில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தது குழந்தை. அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது பொங்கிய கோபத்தோடு என்னிடம் ஓடிவந்து  ‘‘மாமா இவன் நான் வரைஞ்ச படத்தையெல்லாம்  அழிச்சுட்டான். இவன் ஆய்க்காரன் இவங்கூட பேசாதீங்க மாமா’’ என்றது. நானும் உடனே அக்குழந்தையைப் போலவே கோபம் கொண்டவனாகப் பொய்யாக நண்பரின் முதுகில் சப்தம் வருமாறு பொய் அடி அடித்ததும் திரும்பவும் அதே சுவற்றில் படம் வரையத்துவங்கியது. பெரிய ஓவியனின் அசாதாரணமான கோடுகளை நிறங்களை எளிதில் கைவரப்பெற்றவர்கள் குழந்தைகள் என்பதை அன்றிலிருந்தே நான் உணரத் தொடங்கி அன்றிலிருந்து குழந்தைகள் இருக்கும் எவர் வீட்டிற்குச் சென்றாலும் அங்கு மதில்கள் காத்திருக்கும் சித்திரங்களைப் பார்த்து அக்குழந்தைகளை அழைத்து கதைபோடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். சமீப நாட்களில் என் நண்பனின் மகன் பிரபாகரனை (4 வயது) பல வருடங்கள் கழித்து பார்க்கச் சென்றிருந்தேன். நண்பனோ மதுரை சென்றால் மார்க்கெட்டில¢ கூலித் தொழிலாளி. எங்கள் மணல்மகுடி நாடகக்குழுவின் கலைஞன். தன்னிடம் பணம் இருக்கும்போதெல்லாம் பழைய பேப்பர்கடைகளில் ஒரு பக்கம் வெற்றிடமாக இருக்கும் தாள்களை கிலோ கணக்கில்  வாங்கிப்போய் மகனுக்குக் கொடுப்பதை சில மாதங்களாக வழக்கமாக்கியிருந்தான்.  தன் மகனின் ஓவியங்கள் தன்னைத் தூய கலைஞனாக்குவதாய்ச் சொன்ன அவன் இரண்டு வருடத்தில் ஐந்து கிலோ பேப்பர்களும் கற்பனை தாண்டிய விந்தை உலகின் கதவுகளை மகன் பிரபாகரன் திறக்க சித்திரங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அக்குழந்தையின் உயரத்திற்கு சுவர், கதவுகள், ஜன்னல்கள், பாத்ரூம், அடுப்பறை, தரையெங்கும் சித்திரங்கள்தான். அவன் சேகரித்த பொம்மைகளின் உடல்களெங்கும் சித்திரங்களாக இருந்தன. அச்சித்திரங்களுக்குள் ஓவியத்தின் அனைத்துப் பாணிகளின்  ரேகைகள் பதிந்து எல்லைகள் தாண்டிப் பயணம் செய்து கொண்டிருக்கிறது.
நண்பனோ தனது சக கூலித்தொழிலாளிகள் பலருக்கும் தன் குழந்தையின் சித்திரங்களைப் பரிசாகக் கொடுப்பதோடு அவர்களது குழந்தைகளுக்கும் கலர் பென்சில்கள், வர்ண வகையறாக்கள் வாங்கித் தருவதை இப்பவும் தன் எதார்த்தமாகக் கொண்டுள்ளான். குழந்தைமையின் விந்தை போற்றும் தகப்பனவன்.
என் பால்ய வயதில் எங்களூர் கோவில்பட்டி காந்திநகரில் இரவு தோறும் குடித்துத் தள்ளாடிவரும் மனைவியைப் பிரிந்த முத்துப்பாண்டி என்பவர் நகராட்சிப் படிப்பகச் சுவற்றில் தான் குடிக்கும்  பீடிப் புகைக்கரியால் வண்ணத்துப் பூச்சிகளை தினம் இரவு வரைவது வழக்கம். காலப்போக்கில் ஆயிரக்கணக்¢கான கறுப்பு நிற வண்ணத்துப்பூச்சிகள். கோடை மழைகண்ட ஒரு பின்னிரவில்  நிலைகொள்ளாத போதையில் சித்திரம் அழிந்த அச்சுவர்களில் முத்தமிட்டு அழுதழுது தன் மனைவியின் பெயரை ஆறுமுகத்தாயீ … ஆறுமுகத்தாயீ எனக் கூவியபடி காணாமல் போய் விட்டாராம்.  இயல்பில் போதையற்ற பகல் பொழுதுகளில் குழந்தைகளோடு ஓடி விளையாடுவது அவருக்குப் பிடித்த விளையாட்டு. கோடை விடுமுறைகளில் வரும் சர்க்கஸ் வீரர்கள், தேவதைகளுக்கு புளி, கருப்பட்டி கலந்த பானக்கரம் கலந்து பித்தளைக் குடத்தில் தூக்கிப்போவதும் அவர்களோடு உறவுக்காரனைப்போல் அலைவதும் பணம் இல்லாதபோதுகூட தெருப்பெண்களிடம் புளியும் கருப்பட்டியும் வாங்கிச் சேகரித்து தயாராகி விடுவார். சர்க்கஸ் ஊரைவிட்டுக் கிளம்பிய நாளில் எல்லோருக்கும், கோழி இறகுகளால் செய்த வண்ணத்துப்பூச்சிகளைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். பல நேரம் மிஞ்சிய போதையில் தெருவின் அலாதியான மௌனத்தை இரவு நாய்களின்  ஈர அன்பினை வணங்கி அழுதுகொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு ஓவிய நண்பர்களுடன் தர்மபுரிப் பக்கம் ஜவ்வாது மலைக்கிராமத்திற்கு குழந்தைகளுக்கான கலைப்பட்டறைக்குச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஏற்பாடு குக்கூ குழந்தைகளுக்கான கலைவெளி அமைப்பு. அதுவரை கலர் பென்சில்களை மட்டுமே பார்த்த அக்குழந்தைகளுக்கு வர்ணங்களின் அனைத்து வடிவ, வகைகளைக் கொடுத்தபோது இயற்கையை சித்தரித்த அக்குழந்தைகளிடம் அப்படியொரு நிறத்தேர்வு, நிறக்கலவை கொண்டு உருவாக்கிய புதிது புதிதான நிறங்கள். அக்குழந்தைகளைக் கொண்டு சிறு நாடகமொன்றை உருவாக்கிய  எனக்குக் கிடைத்த அனுபவங¢களில்  எல்லாக் குழந்தைகளின் கால்களின் உள் பாதங்களில் வெடிப்பு வெடிப்பான கோடுகள். அப்பாதக் கோடுகள் பல குழந்தைகளின் சித்திரங்களில் பதிவாகியிருந்தன. பல மைல் தூரம் வெற்றுக் கால்களோடு பயணம் செய்வது அவர்களது இயல்பு. விலங்குகளின் உலகு பற்றிய பழங்குடிக் கதையொன்றை நாடகமாக்கி முடித்த நாள். அந்தந்த விலங்குகளுக்குரிய உடைகளுக்காக  வீட்டிலிருந்த பழைய உடைகளை சேகரித்துக் கொண்டு வரத் துவங்கினர். அதிலும் அபூர்வமான நாடகத்தை ஒத்த நிறத் தேர்வு தங்கள் வனங்களில் தம்மோடு உரையாடித்திரிந்த பட்சிகளின் நிறங்களை முகங்களில் ஒப்பனையிட்டிருந்தனர். தினமும் பல மைல் தொலைவு நடந்தே தம் பள்ளிக்குப் போகும் அவர்கள் தம் வழிப்பயணத்தை கதைகளாக்கிய விதத்தை வனத்தின் ரகசியமாக உணர்ந்து கொண்டோம்.
நான் போகும் பள்ளியின்  ஐந்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ சதா தன்னைச் சுற்றி உலவிக் கொண்டிருக¢கும் கதையின் ரேகைகளை விரும்பிய போதெல்லாம் பிடித்தெடுத்து சொல்லிவிடுபவள். மூன்று வருடமாக என்னிடம் வேட்கை தீராது கதை கேட்கும் அவளிடமிருந்து சொல்லுதலுக்கான நுண் உணர்வுகளைப் பெற்றவன் நான் என்பதை இப்போதும் சொல்வேன். ஒருமுறை அவள் மழையில் நனைந்தபடி போன் செய்து  ‘அண¢ணா நான் மழையிடம் கதை கேட்டேன். நான் நனைய நனைய சொல்லிக் கொண்டிருக்கிறது. உங்களுக்காகவும்  கதை கேட்டேன். இப்போ நீங்க ஒரு தலைப்புச் சொல்லுங்க கதை ரெடி, சொல்றேன்’ என்றாள். ‘ஓவியங்களின் குகை’  என்றேன். போனை கட் செய்து இரண்டு நிமிடத்தில் திரும்பவும் என்னை அழைத்துச் சொன்ன கதையின் சுருக்கம் இப்படியாக ‘‘ஆண்டிச்சாமி என்றொரு மாடு மேய்க்கும் பையனொருவன் தன் ஊர் எல்லையிலுள்ள மலைக்குகைக்கு மாடு மேய்த்தபடி குகைக்குள் போய்விட்டான். குகையெங்கும் முடிவற்ற சித்திரங்கள். புற்களான சித்திரத்தை தன் மாடுகடிக்க அங்கு நிஜப்புல் தோன்றி பசியாற்றியது. பொம்மைகளின் சித்திரங்களைத் தொட்ட ஆண்டிச்சாமிக்கு நிஜப் பொம்மைகள் கிடைத்து அவற்றை மாட்டின் மீது அமரச் செய்து உள்ளே போய்கொண்டே இருக்கிறான். பல நாட்களாகியும் திரும்பிடும் மனதில்லை. உணவுப் பொருட்களின் ஓவியங்களைத் தொட்டால் உயிர் பெற்றுக் கைவசமாகிவிடுகிறது. அவனைத் தேடிய கூட்டாளிகள் பலரும் பனை நொங்கு வண்டி உருட்டியபடி குகை நுழைந்து ஆண்டிச்சாமியைக் கூவியபடி சித்திரங்களில் தம்மைத் தொலைத்துக் கொண்டனர். விடாத மழையின் குரலால் குகையின் சித்திரங்களாகிவிட்டனர். அமாவாசை நாளில் மட்டும் ஊருக்குள் நுழைந்து உறங்குபவர்களிடம் கனவுகளைத் திருடிச் சென்று  புதிதாய் சித்திரமிடத் தொடங்கினர். அன்றைய இரவிலிருந்து மலையைச் சுற்றி சித்திரக் கற்கள் விழுந்து  பரவத் தொடங்கின’’  ஜெயஸ்ரீ சொன்ன பல கதைகள் எனது ‘மந்திரமரம்Õ எனும் புத்தகம் உருவாகக்காரணமாக இருந்தன. கதையின் நிலத்திலிருந்து நாடகம் நுழைந்த அவள் நடிப்பிலும் தன்னை முழுதாய் உருவேற்றிக் கொண்டாள். தன் கிராமத்திற்கு வெகுதூரத்திலிருந்து வந்து போகும் வியாபாரிகளான ஐஸ், துணி, பழம், பச்சை குத்துபவர்கள், ரிப்பன் வியாபாரி  இப்படிப் பலரையும் தன் கதையின் விந்தைக்காரர்களாகக் கூறும் அவள் ரிப்பன், பலூன் வியாபாரிகளின் நிறங்களின் மிதத்தலை ‘பகலில் உலவும் ஊரின் கனவுÕ என்றும் சொல்வாள். என் முடிவற்ற பயணத்தின் இடையிடையே செல்ஃபோனில் குறுஞ்செய்தி அனுப்பித் தன்னை எனது நாடக மகள் என்றும்  மறு ஜென்மத்தில் நாடக நிலத்தில் உனது மகளாகப் பிறப்பேன் என்றும் அதிசய வாக்குத்தருவாள். நான் அவளைக் கரிசல் நிலத்தின் Black Angel என்றே சொல்வேன். அவள் சொன்ன மந்திர வயலில் சொற்கள் முளைத்த தாவரங்களைப் பெற விவசாயிகளின் கனவு சுமந்து காத்திருக்கின்றேன்.
ஒருமுறை வகுப்புக் குழந்தைகள் பலரோடு அமர்ந்து கடவுளைக் குறித்து கதை பேசிக் கொண்டிருந்தபோது ‘கடவுள் நல்லவரா?’ என்ற கேள்விக்கு சிலரைத் தவிர பலரும் ‘லைட்டா கெட்டவரு’  என்றனர். அவர் குளிக்கும்போதும் தூங்கும் போதும் நகைகளைக் கழட்டுவதில்லை எனவும் கூற, வேறு சிலரோ அவர் குளிப்பதே கிடையாது,  தூங்குவதும் இல்லை எனவும் எந்நேரமும் அசையாது உட்கார்ந்து கொண்டிருப்பார் என்றனர். ஒரு குழந்தையிடம் உன் ஊரிலிருந்து வயக்காட்டுப்பாதை வழி பள்ளிக்கு வரும்போது எதிரே கடவுள் உன்னைப் பார்த்தா என்ன கேட்பாய் என்க அவளோ ‘‘என்ன  ஒத்தையா நீங்க மட்டும் வந்திருக்கீக கூடச் சேர்ந்தவுங்களா எங்க’’ என்பேன் என்றும் ‘‘எங்க போனீக இத்தன நாளா? எங்கூரு கம்மாய பார்த்தீகளா? அதை பார்த்தீங்கனா நீங்க இப்படி நகை நட்டுகளெ போட்டுக்கிட்டுத் திரிய மாட்டீக. எங்க ஊரைச் சுற்றியிருக்கிற பதினெட்டுப் பட்டி கிராமமும் இப்படித்தான் இருக்கு. போயி பார்த்துட்டு வந்து மறு சோலியப் பாருங்க’’ என்றது அக்குழந்தை.
குழந்தையின்  குரல் கிராம மொழியில் இருந்தது. மற்றொரு மாணவி ‘‘அவரு வெறும் பழம், பால், லட்டு, கொளக்கட்டை, தேங்காய், பொரி இதுகல மட்டுந்தான் சாப்பிடுவாரு, வேறு எதுவும் பிடிக்காது’’ என்று  கூறவும் இன்னொரு மாணவன் மறுத்து ‘‘அவருக்கு கெடாக்கறியும் சேவக்கறியும் தான் பிடிக்கும். அதுவுமில்லாம சுருட்டு, சாராயம் இதுகளத்தான் கேட்டு சாப்பிடுவாரு, எங்க ஆத்தா கூட இதுகள வாங்கிக்கிட்டு போயி எங்க பெரிய கருப்புவைக் கும்பிடப்போவோம்ÕÕ என்றும் கூறியது. ‘‘கடவுளுக்கு மேக்கப் போட்ட தாத்தாவை முளைப்பாரித் திருவிழா நாடகக் கொட்டகையின் உள்ளே பார்த்தேன்’’ என்றது மற்றொரு குழந்தை. நாடகக்காரங்க கடவுளோட டிரஸ், நகைகளை பனங்கூடையில் கொண்டு வந்ததைப் பார்த்தேன். ‘‘எங்க ஊருக்கு நாடகம் வராட்டி நாங்க ஒரு போதும் கடவுள்களைப் பார்க்கவே முடியாது’’ ‘‘கடவுள் மேல ஆசை கொண்ட எங்க அப்பாமாருக பகப்பூராம் தண்ணியப் போட்டுட்டு எல்லார்க்கிட்டையும் செல்லங் கொஞ்சிக்கிட்டு அலைவாங்க’’ இப்படிப் பலவித விநோத உரையாடல்களுக்குப் பிறகு கடவுளைக் குறித்து ஒரு நாடகம் போடுவதென முடிவெடுத்தோம். சில மாதங்களுக்கு முன் அரசு போட்ட ரிங் ரோடால் மரங்களில் குடியிருந்த பல தெய்வங்களும் மரத்தோடு சேர்ந்தே பிடுங்கி எறியப்பட்டதை உணர்ந்த குழந்தைகள் இவர்கள். ஆறு குழுக்களாகப் பிரிந்து நாடகம் தயாரித்து பத்து நிமிடங்களில் நிகழ்த்தத் தொடங்கினர். ரிங்ரோட்டில் அப்புறப்படுத்தப்பட்ட சின்னக்கருப்பு, கோட்டைமுனி, செல்லாண்டி, மூவரும்  வீடு இல்லாமல் கிடைக்கிற இடத்தில் படுத்துறங்கி ஆவியூர் முளைப்பாரிக்குப் பெரியசாமி ராமனும் சீதையும் வருவாகனு கேள்விப்பட்டுக் கிழிந்த வேட்டி, துண்டு சகிதமாய் நிற்கிறார்கள். மூன்று பேரும் இருக்கிற காசைப் போட்டு டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து குடிக்க ஆரம்பித்து ‘‘ராமன் வரட்டும் ரெண்டுல ஒன்னு கேட்கணும். மரங்களைக் கும்பிட்டுத் திரியும் எங்க மக்க கெதி என்னானு உனக்குத் தெரியுமா? உனக்கு ஊரு பூரா செங்கல் தூக்கிட்டுப் போறாங்க’’  மற்றொரு சாமியாக நடிப்பவன் செல்லாண்டி ‘போத பத்தல கூட  இம்புட்டுக் குடிச்சாத்தான் தெம்பா சண்டை போட முடியும்டி… இல்லெ ராமன் சட்டையப்பிடிச்சு கேக்கணும்டி’  இப்படி சச்சரவுகள் இவர்களுக்குள் கூடிக்கொண்டிருக்க பக்கத்தில் குடிக்கும் ஊர்த்தலைவரிடம் செல்ஃபோன் வாங்கி ராமனுக்குப் பேசுகிறார்கள்.
ராமனோ, ‘‘தேவலோகத்துல மீட்டிங் அப்புறம் பேசுங்க’’ என்கிறார். மறுபடியும் கால் பண்ணிக் கொண்டிருக்க ‘‘தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்’’ என்று மறு குரல் கேட்க இவர்களோ ‘‘பேட்ரி’’ கட்டைய மாத்திப்போட்டாப்ள’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளூர் கிராமப் பெண் தெய்வங்கள்  டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து இவர்களைத் தேடுகிறார்கள்.  டேபிளுக்கு கீழ் ஒளிந்து கொண்ட மூவரும்  ‘‘அடே அங்க பாருடா செல்லாயி, ராக்காளி முத்துராக்கு வந்திட்டாக நாம மாட்டிக்கிட்டோம்’’ என்று கூச்சப்பட்டுக் கொண்டிருக்க  மூவர் காதுகளைப் பிடித்திழுத்து டாஸ்மாக்  கடைக்கு வெளியே இழுத்துப் போகிறார்கள்.  ‘‘இப்படியா பண்றது உங்களுக்கு கூறு இருக்கா?  வாங்க திருவிழா பாக்கப் போவோம்’’ எனச் சொல்லிய மறுகணமே தூக்கிவந்த பித்தளைக்குடத்து நீரை மூவர் மீதும் கொட்டி  குளிப்பாட்டி கூட்டத்தோடு மறைந்து நாடகம் முடிகிறது.
அன்று நடந்த நாடகத்திலேயே இவை மிக முக்கியமானது. நாம் கிராமத்துக் குழந்தைகளை மீடியாவின் பொதுப்புத்திக் கண்களோடு பார்க்கக்கூடாது. பண்பாட்டு நிலத்தில் கால் வைத்துப் பார்க்கத் துவங்குகிற நாளிலே பிரக்ஞைமிக்க வெளியில் உலவுபவர்கள் என்பதை நாம் அன்று உணர முடியும். என் தளிர் வயது நிலத்தில் ஆரம்பப்பள்ளிக்கு வெளியே கிளிராசு என்பவர் கட்டையாலான தள்ளு வண்டியில் ஐஸ் விற்று அலைபவர், அவர் போகாத தெருக்களில்லை. பள்ளி நாட்களில் எங்கள் பள்ளிக்குள் கூவி விற்றுக்கொண்டிருப்பார் ‘‘டொட்டொ டொய்ங் ஐஸ், டும்கடிக்கு டும்கா ஐஸ்’’ என்று குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ற தாள ஒலி மொழியில் கூவி விற்றுக் கொண்டிருப்பார். எண்ணெய் தேய்த்து வழித்துச் சீவிய ஏர் நெற்றியும் சாப்ளினைப் போன்று பட்டை மீசையும் காக்கி டவுசரும் ஜிப்பாவும் அவரது வசீகரத்தோற்றமாகவே இருக்கும். பள்ளி இடைவேளைகளில் அவரைச் சுற்றிச் சுற்றி நாங்கள் பட்டாம் பூச்சிகளைப் போல மொய்த்தலைவோம். நாங்கள் எவரும் வெறும் ஐஸ் சாப்பிட்டதில்லை. அவர் எங்களுக்கெல்லாம் ‘‘டொட்டொ டொய்ங்ஐஸ், டும்கடிக்கு டும்காஐஸ்’’ என்று நடித்துக் கொடுப்பார். இந்த ஐஸ்களில் வீரமும், சிரிப்பானியும் இருக்கிறதென்றும், சாப்பிட்டு முடித்தவர்களுக்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் கதைகளும் உண்டென்றும் உலகிலுள்ள அனைவரையும் வீரர்களாக மாற்றிவிடும் கதைகளை  உடனே போடத் தொடங்கி விடும் என்றும் அவர் கூறுவார். விடுமுறை நாட்களில் எங்கள் தெருவுக்கு ஐஸ்விற்க வரும்போது அவருக்கு நாங்கள் கூடப் படிக்கும் வகுப்புத் தோழன் போலவே வீட்டிலிருந்து தின்பண்டங்கள் எடுத்து வந்துதருவோம். அவர் ஒருபோதும் பணத்திற்காக வியாபாரம் செய்தவரல்ல. குழந்தைகளின் கனவு மூச்சினைச் சுமந்து அலைந்தவர். அவரை அதிசயங்கள் தரவந்த விந்தைக் கலைஞன் என்றே சொல்லலாம். அவரிடம் ஈர்க்கப்பட்ட நாங்கள் பலரும் கோடை விடுமுறை நாட்களில் ஐஸ் பெட்டி எடுத்து அவர் போன பாதைகளுக்கெல்லாம் ஐஸ் கூவி விற்றலைந்தோம். பதினைந்து வருடத்திற்கு முன் நான் பேருந்தில் பயணமான வேளை கிளிராசு அதே தோற்றத்தில் நரைவிழாத வயோதிகத்தில் கடைகடையாக யாசகம் செய்து தள்ளாடி கம்பின் துணையின்றி பஸ்ஸின் வேகத்தில் மறைந்து கொண்டிருந்தார். மறுநாள் அதே ஊரில் இறங்கி அவரைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசியபோது சிரித்த முகத்தில் ஞாபகமற்று நான் கொடுத்த பணத்தை எதிரே நின்றவரிடம் கொடுத்துவிட்டு கூட்ட நெரிசலுக்குள் நுழைந்தபோது அவரைச் சுற்றிய கூட்டம் குழந்தைகளாய் கணநேரம் தோன்றி மறைந்து, ஞாபகத்தின் அத்துவானத்தில் ‘‘டொட்டொ டொய்ங்ஐஸ், டும்கடிக்கு டும்காஐஸ்’’என்ற ஒலிமொழி தானே எழுந்து கொண்டிருக்கிறது.  நான் ஆறாம் வகுப்பு இரண்டு வருடம் படித்தவன். அந்த இரண்டு வருடத்திலும் தெருக்களில் கூவி விற்கும் மனிதர்களின் குரல்களால் வசீகரிக்கப்பட்டுக்கிடந்தேன். அவையாவும் நாடகப் பாத்திரமென்று நம்பியிருந்தேன். வீட்டில் கிடைக்கும் நேரங்களில் அவர்களைப் போன்று உடையுடுத்தி அலைவது விருப்பமானதாய் இருந்தது. எப்பவும் பஸ் ஸ்டாண்டில் கூவி விற்போரைப் பார்ப்பதற்கென்றே மாலை நேரங்களில் பள்ளித் தோழர்களோடு நிற்பது வழக்கம். அவர்களுக்குள் இருக்கும் குரலிசை எங்களை வெகுவாய் ஈர்த்ததே அதற்குக் காரணம். ஒருநாள் எங்கள் தெருப்பக்கம் இருந்த பெரிய அரளிப் பூந்தோட்டத்திலிருந்து நான் கண்ட வியாபாரிகளில் சிலரைப் பார்த்தேன். மறுநாள் சிலரோடு அரளித்தோட்டம் நுழைந்தபோது என் வயதுச் சிறுமி ஒருத்தி கதை பாடியபடி இளம் முருங்கை மரத்தில் தன் விரல்நகத்தால் தன் பெயரெழுதி வரைந்து கொண்டிருந்தாள். தூரத்தில் புதருக்குள்ளிருந்து சில பெண்களும், ஆண்களும் எங்களைத் திட்டி விரட்டினர். சில நிமிடமே நிகழ்ந்த அந்த சந்திப்பு இருட்டிய வேளையில் அச்சிறுமி அவள் அம்மாவின் முதுகில் என்னைப் பார்த்து கையசைத்துப் போனாள். பின்னாளிலேயே  அரளிவனத்திற்குள் வேசித்தொழில் நடப்பதாகப் புரிய வந்தது. அரளிவனத்தில் உள்ள பல முருங்கை மரத்தில் அவளது கதைபாடும் சித்திரங்கள் இருந்தன. தினமும் அவள் வந்து போவது மௌனமாய் நிகழ, சில நாட்கள் அவர்கள் வராததை உணர்ந்து அரளிவனம் போய்ப்பார்த்தபோது  அரளியெங்கும் செவ்வரளிபூத்து வளர்ந்து முருங்கைமரம் அதனுள் மூழ்கியிருந்தது.  போலீஸாரின் நடமாட்டத்திற்குப் பின் அங்கு எவரும் வருவதில்லை. பால்யவெளியின் சித்திரங்களுக்கு அன்று கதைதேடித் திரிந்தவர்கள் குழந்தைகளாகவே இருந்தனர். பால்யம் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளாது, தீமைகளில் உலவும்  வசீகரங்களையும் ஏமாற்றங்களையும் கபடமறியாது கதை தேடிக் கொண்டிருக்கும்.

Related posts