You are here
தலையங்கம் 

ஆசிரியர் தினத்தின் ஆணிவேர்… வாசிப்பு!

எழுத்தறிவிப்பது என்பதை நமது முன்னோர்கள் ஒரு  வேலைக்கான படிநிலையாகக் கருதவில்லை. அதை ஒரு வாழ்க்கையாகக் கருதினார்கள். அதை வகுப்புகள், பாடங்கள், வருட அடிப்படைப் படிநிலைகள் எனப் பிரித்தது ஒரு வசதிக்காகத்தான். ஏதோ ஒரு குறிப்பிட்ட வயதில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட வயதில் பொதுத் தேர்வு அல்லது பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதும் முடிந்துவிடும் இயந்திர சுழற்சியாக  இன்று கல்வி பார்க்கப்படுவதில் நியாயம், தர்க்கம் ஏதுமில்லை. கல்வி, வாழ்க்கை முழுவதும் நடைபெறுவது ஆகும். வெகுஜன மக்களின் பெருந்திரள் இந்தியாவில் கல்வியறிவு பெறாமல் இருப்பதே வறுமைக்கும் பிணிக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் காரணம் என்பது அமர்தியா சென் உட்பட்ட உலக அறிஞர்களின் கருத்து. எனவே சமூகத்தின் உயர்நிலை நோக்கி புதிய சிந்தனை மரபுகளைத் தோற்றுவித்தவர்களுக்கும் ஆசான்கள் என்றே பெயர் வந்தது. ஆசிரியர் பணி அப்படிப்பட்டது. சமீபத்தில் காலமான தோழமையின் சின்னமான நீலமேகம் போன்ற ஒரு ஆளுமையை நாம் அதற்கு உதாரணமாகக் காட்ட முடியும். ஆசிரியர் பணியில் இருந்து ஆசிரியர் இயக்கத்தில் அயராது உழைத்து, ஓய்வு பெற்ற பிறகு மக்களது கல்வியைத் தனது ஒரே குறிக்கோளாக ஏற்று, அதற்கு புத்தகங்களை மக்களிடம் சென்று சேர்ப்பிப்பதே சிறந்த வழி எனக் கண்டு, வாசிப்பை ஒரு சமூகக் கடமையாக விதைத்து தனது முழு குடும்பத்தையும் அந்த மிகக் கடுமையான பணியில் ஈடுபடுத்தி தோளில் சுமந்து ஊர் ஊராக புத்தக வேள்வியே நடத்திய அந்த மாமனிதரின் வாழ்வு தலைசிறந்த ஆசிரியரின் வாழ்வுக்கு ஒரு முன் உதாரணம். அவரது வாழ்வின் புத்தகப் போராட்டங்கள் பக்கம் பக்கமாக எழுதிச் செல்ல வேண்டிய அமர காவியம் என்பதில் சந்தேகமில்லை. கடுமையான உழைப்பில் மக்கள் வாசிப்பை நோக்கி சமூகத்தை எடுத்துச் சென்று தனது இறுதி மூச்சுவரை புத்தகங்களுடனே வாழ்ந்த தோழர் நீலமேகத்தின் வாழ்க்கை நமக்கு விடுத்துச் சென்ற செய்தி என்ன? ஆசிரியர் பணியின் ஆணிவேர் வாசிப்புதான். எத்தனை பேரிடம் வாசிப்பை நாம் எடுத்துச் செல்கிறோம் என்பதில் உள்ளது ஆசிரியப் பணியின் அடிப்படை. வாசிப்பை நேசிப்போம். ஆசிரியர் தினத்தில் அப்பணியை நம் கடமையாய்க் கொள்வோம்.
– ஆசிரியர் குழு

Related posts