You are here

அந்தர நிலத்தின் தேவதைகள்

– ச. முருகபூபதி

என் பால்ய நிலத்தில் சர்க்கஸ் கூடாரம் தேவதைகளும் கோமாளிகளும் கரம் கோர்த்து மிதந்த அந்தர நிலமாக இயக்கம் கொண்டிருந்தது. பல கோமாளிகளும் தம் சிவந்து படைத்த மூக்குகளோடு பார் விளையாட்டின் தொங்கு ஏணிகளில் தம் உடைகளை உறித்து எறிந்து வீசி பறக்க விடும்போது குழந்தைகளும் பெரியவர்களும் சமநிலை கொண்ட பார்வையாளர்களாகி கரவொலிகளுக்குள் தாளத்தை இறக்குவர். அன்று எங்களூர் கோவில்பட்டிக்கு வருடத்திற்கு மூன்று முறை சர்க்கஸ் கம்பெனி கூடாரமிட்டு ஒன்றரை மாதம் கழைக்கூத்துக் கலையை நிகழ்த்திவிட்டுப் போவது வழக்கம். இரவு தோறும் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியே ஆகாயத்திற்குள் நுழைந்து திசையெங்கும் மிதக்கும் சர்க்கஸ் ஒளியின் பிரகாசத்தை  நடமாடும் நீள்குகையாகவே நாங்கள் கற்பனை செய்துகொள்வோம். எப்போதாவது தெருவிற்குள் குதித்து மறையும் அவ்வொளியின் ரேகையை சிறுவர்களாகிய நாங்கள் தளிர் விரல்களில் தொட்டு முகங்களில் பூசிக்கொண்டு கூக்குரலிடுவோம். குதிரைவண்டிகளில் ஒலிப்பெருக்கியால் கூவிப் பேசும் சர்க்கஸ்காரர்களைச் சுற்றி பல வர்ண நோட்டீஸ் பறந்து கொண்டிருக்கும். அவற்றை சோத்துப்பருக்கை தடவி எங்கள் வீட்டு வாசல் கதவுகளில் ஒட்டிக்கொள்வோம். குதிரை வண்டிக்குள்ளிருந்து தலைநீட்டிச் சிரிக்கும் கோமாளியின் முகத்தில் எங்கள் கைகள் பதிந்துகொள்ள எப்போதும் ஏங்கிக்கிடக்கும். சர்க்கஸ் எனும் கழைக்கூத்துக் கலையில் அலைவுறும் உருமாறும் உடல்களே எங்கள் பால்யத்தில் கதைபோடும் தாதுக்களாக முளைவிடத் தொடங்கிய நொடியது. உடல்களுக்கு ஸ்தூலத்தன்மை தாண்டிய இயங்குவெளி உண்டென்பதை உணர்ந்த தருணம் அது. சர்க்கஸ் கலை ஒருபோதும் தினசரி சம்பவ உடல்மொழியினை வேண்டியதில்லை. உடலுக்குள் இருக்கும் புதுப்புது உடல்களை கல்லுக்குள் இருக்கும் சிற்பங்களைப் கண்டுபிடிப்பது போல சாத்தியமாக்கிப் பிறக்கவைக்கும் அதிநிலை கனவாய் சூழ்கொண்டிருக்கிறது.

அன்று கோவில்பட்டி காந்திநகரில் இருந்த சுப்பையாபிள்ளை பொட்டலே சர்க்கஸ் கூடாரமிடும் இடமாக இருந்தது. சர்க்கஸ் இல்லாத காலங்களில் புதர்மண்டி செடிகளால் மறைக்கப்பட்ட நீள்குகைபோலவே தோற்றமளிக்கும். நாங்களெல்லாம் அதற்குள் ஒளிந்து மறைந்து விளையாடுவோம். அதுதான் பெண்களின் வலிபரவிய தீட்டுத்துணிகள் ஒளித்து வைக்கும் இடமாகவும் இருக்கும். குறவர்களின் பன்றிகள் கூட்டமாய் பிரிந்து உலவும் காடாகவும் இருந்தது. சில இரவுவேளைகளில் எங்கிருந்தோ அரிக்கேன் விளக்குகளுடன் வேசிப்பெயர் சுமந்த பெண்கள் சிலர் இச்சைமொழிக்கு ஏங்கித் திரிந்த ஆண்கள் பலருக்கு சிகிச்சையளித்து மறைந்து தோன்றுவர். பகல்வேளைகளில் சிதறிக்கிடக்கும் உறைகளை பலூன்களாய் சிறுவர்களாகிய நாங்கள் பறக்கவிட்டபோது அப்பெண்கள் எங்களைத் திட்டி கருப்பட்டி பிசுபிசுத்த கரங்களால் நாவில் தடவி செல்லமாக விரட்டுவர். தீட்டுத் துணிகளைப் புதரெங்குமிருந்து பிறக்கிவந்து அவற்றை ஒன்றாக்கி குவித்து மண் குழைத்து கூம்புவடிவத்தில் சிற்பமாக்கி வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உலர்ந்த பூச்சரங்களை அதற்கு மாட்டி அரிசி வெல்லம் சட்டியிலிட்டு பொங்கலிட்டு சாமிகும்பிட்டு விளையாடும் புதுவிளையாட்டினை சர்க்கஸ் இல்லாத காலங்களில் வழக்கமாக செய்வோம். அன்றைய பால்ய வயதில் விநோத பொருட்களுக்குள் இருந்த கலையினை செய்து பார்த்திடும் துணிவு எங்களுக்கு இருந்ததில் வியப்பொன்றுமில்லை. பலமுறை குலவையிடும்போது எங்களில் பலருக்கு சாமிவந்து ஆடத்துவங்கிடுவோம். எங்களைப் பொறுத்தவரையில் அவை புனிதத் துணியாகவே கருதப்பட்டது. அந்த நெடும் பொட்டல் புனித நிலமாகவே கருதப்பட்டது. என் பள்ளிக்காலம் முடியும் முன்னரே பொட்டல் பிளாட் போடப்பட்டு கட்டிடங்கள் பெருகியது. பின்னர் பூங்கா இருந்து வறண்டு காய்ந்து புதர்மண்டிய இதே மனநிலை கொண்ட இடம் நோக்கி சர்க்கஸ் பயணமிட்டது. ஒருவருடத்தில் மூன்று மாதம் நிகழ்த்து கூடாரம் பிரிக்கப்பட்டபோது செடிகள் பலவும் முளைவிட்டிருந்தன. அதன்பின்னர் அவை பூங்காவாகி இன்றும் வயோதிகர்களும் ஆண்கள் பெண்கள் பலருக்கும் நடைபயிற்சிக்கான இடமாகிவிட்டது. காலைவேளையில் பார்க்கும் போது அவை திறந்தவெளி சர்க்கஸ் கூடாரம் போலவே தோற்றமளிக்கும்.

நாங்கள் லைன் வீட்டில் குடியிருந்தோம். எதிரெதிர் எட்டு வீடுகளைக் கொண்ட வீடுகள் தெருவின் வடக்கு கடைசியில் இருக்கும். பொட்டலில் சர்க்கஸ் நடக்கும் போது சர்க்கஸ் தேவதைகள் தங்குவதற்கு எங்கள் லைன் வீட்டின் கடைசி வீட்டை வாடகைக்கு எடுப்பது இருமுறை நிகழ்ந்தது. அவ்வீட்டின் முன் நீண்ட முற்றமுடன் கூடிய கிணத்துமேடு அவற்றைச் சுற்றி குளியலறைகள். பகல் வேளைகளில் எங்களது பொழுதுகள் அந்த சர்க்கஸ் அக்காமார்களின் மலையாளம், தெலுங்கு கலந்த புதுமொழிக்குள் வசீகரிக்கப்பட்டுக்கிடந்தோம். வீட்டில் வைக்கும் சமையல் வகைகள் திண்பண்டங்கள் சிலவற்றை அவ்வப்போது திருடிவந்து கொடுக்கும் எங்கள் அன்பிற்காக அவர்கள் எப்போதும் திறந்தவெளிகளுடன் உறங்கி கனவின் விந்தைபோல எங்கள் நெற்றியில் ஈரம் பதித்து அணைத்துக்கொள்வர். பல இரவுகளில் நிலா பார்த்து கதை கேட்டபடி வீட்டிலிருந்து எழுந்து அம்மாவின் சேலைகளுக்குள் அவர்களது மடுக்களில் உடல்சுருட்டி அணில்குஞ்சுகளைப்போல நாங்கள் தூங்கிப்போவோம். சூரியக்கதிர் எழும் முன் அவர்கள் பயிற்சிக்கு கிளம்பிவிடுவார்கள். சில நாட்கள் அவர்களது பயிற்சியைக் காணச் சென்ற அவர்களது எங்களுக்கு உடலின் புனைவு மொழி கண்டு இமைக்காத எங்கள் விழிகளுடன் வாயில் எச்சில் ஒழுக சிலபொழுது திரும்பவும் அங்கேயே உறங்கிவிடுவோம். எங்களை எழுப்பாமலே முதுகுகளில் பொம்மையைப் போல தூக்கிப்போவார்கள். பலமுறை கிணற்றைச் சுற்றிய முற்றத்தில் கதை கேட்டு தூங்கும்போது தெலுங்கு பேசும் அக்காமார்கள் கிணற்றில்குதித்து மீன்களாகிப்போன அவர்களது ஊர்ப்பெண்களின் கதைகளை கிளைகிளையாய் பலமுறை பாடிச் சொல்லியிருக்கின்றார்கள். விழிப்புற்ற நடுஇரவில் சொப்பனங்களின் பிதற்று வார்த்தைகளில் கிணற்றுக்குள் தலைநீட்டிப் பார்ப்போம்.

பயந்து விநோதமடையும் எங்களை அக்காமார்கள் பக்கத்தில் தன் செல்லப் பொம்மை என அணைத்து உறங்கிக்கொள்வார்கள். பலஞாயிறு விடிகாலையில் பயிற்சி இருக்காது. தெலுங்கு மொழி பேசும் கருத்து உயர்ந்த ஒல்லிக்கோமாளி அண்ணன் லச்சம்மா என்ற அக்காவின் நெடுங்கூந்தலுக்காக பூக்காரப் பண்டாரத்தின் வீட்டிலிருந்து நெடுஞ்சரம் தூக்கிவருவது வழக்கம். முகம் கொடுத்துப் பேசாத லச்சம்மாக்காவின் கோபத்தினை நேசித்தபடி எங்களைக் கூட்டி வைத்து வித்தை காண்பித்து சிரிக்க வைப்பார். நாங்கள் ஒருமுறை அவரது இறகுகள் குத்தப்பட்ட தொப்பியைத் திருடிவிட்டோம். இதனை தாமதமாக உணர்ந்த கோமாளியண்ணன் கண்டுகொள்ளவில்லை. தினம் ஒவ்வொருவருக்கும் கைமாறியபடி எங்களையும் கோமாளியாக உருவேற்றிக்கொண்டிருந்தது அந்த இறகுத்தொப்பி. ஒருமுறை தொப்பியணிந்து எங்கள் கிணற்று முற்றத்தில் கதைகேட்டு லச்சம்மாக்கா தலைமாட்டில் சுருண்டு உறங்கிய சாமத்தில் இறகுத் தொப்பியை முத்தமிட்டு புரண்டுபடுத்து தொப்பியை நான் தொட்டபோது நனைந்த இறகுகளாகியிருந்தன. ஒருமுறை சியாமளா என்னும் கேரளத்து சகோதரி பல உடைகளை அணிந்து கிணற்று முற்றத்தைச் சுற்றிச்சுற்றி ஓடியபடி ஒவ்வொரு ஆடையாய் உரித்துப்போட்டபடி தனக்குள்ளிருந்த பெண்மையை ஆண்மையை விந்தைகலந்து நிகழ்த்திக் காண்பித்தது எங்களுக்கெல்லாம் பெரும் அகத்தூண்டுதலாகவே இருந்தது. மறுஇரவு எங்கள் அம்மா அப்பாவின் பல உடைகளை அணிந்து கொண்டு வட்டமிட்டு ஓடியபடி நடித்துக் காண்பித்ததை சிரித்த உதடுகளால் சகோதரிகள் பலரும் முத்தமிட்டு எங்களைத் தூங்க வைப்பர்.

சர்க்கஸ் முடித்து இரவு 11 மணிக்கு தூங்க முற்றத்துக்கு வரும் அவர்களுக்காக இடம் விட்டு தூங்கா விழிகளுடன் காத்திருப்பதை அன்று எங்கள் எல்லோரது பெற்றோர்களும் கடிந்து கொண்டதில்லை. எங்கள் சந்தோசங்களை, சர்க்கஸை விடாது போற்றும் பெற்றோர்கள் தெருவெங்கும் நிறைந்திருந்தார்கள். சர்க்கஸ் தேவதைகளின் பாதங்களில் படிந்திருந்த துறவின் வேர்வை எங்கள் தெரு பெற்றோர்களுக்குள்ளும்  ஊடாடி வாழ்ந்திருக்கும் போல. கோமாளியிடமிருந்து பரிசாகப்பெற்ற மவுத்தார்கான் எனும் இசைக்கருவி எங்கள் பால்யத்தின் ஈரஉதடுகள் பதியாத இடமில்லை. நாங்கள் அப்போது முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு படித்தவர்களாய் சேர்ந்தலைந்தோம். வீட்டில் சுட்டுஅடுக்கி வைக்கப்பட்ட தோசைகளை சிலதடவைகள் எடுத்துப்போய் புலிக்கும் சிங்கத்திற்கும் கரடிக்கும் அதன் கூண்டில் வைத்து வருவதை அதிசய நிகழ்வென நம்பியிருந்தோம். எங்கள் பால்யத்தில் சர்க்கஸ் தேவதைகளின் கூந்தலுக்குள் கதைகேட்டு சுருண்டு கிடப்பதும் கனவுநிலங்களில் புலியின் கருப்பு மஞ்சள் கோடுகளும் புள்ளிகளும் பரவியிருந்தன. சர்க்கஸ் கூடாரம் பிரிக்கப்பட்டு கிளம்பும் முன்னரே தேவதைகள் கிளம்பிவிடுவார்கள். அவர்களுக்கு எங்கள் தெருஅம்மாக்கள் பலரும் திலகமிட்டு பூச்சொருகி ஆசிர்வதித்து முந்தியில் மடித்துவைத்திருந்த ஒருரூபாயோ இரண்டு ரூபாயோ கொடுத்து அனுப்புவதை விரும்பிச் செய்தனர். கலங்கிய விழிகளுடன் அடுப்புவீட்டு அங்கணக்குழிக்குள் ஒளிந்த எங்களை மார்பில் இறுக அணைத்து அவர்கள் பயணமாகக் கிளம்பும் நீண்ட ஜீப்வரை தூக்கிப்போய் எங்களுக்கு காசுகொடுத்து அனுப்புவர்.

சிலர் அழுகையை அடக்காது வீட்டுக்கு ஓடிவிடுவர். ஜீப் மறையும் வரை மூச்சிறைக்க கையசைத்தபடி ஒடித்திரும்பும் மனமின்றி ஊர்எல்லையில் இருந்துவிடுவோம். எங்களைத் தேடி தெருக்காரர்கள் வந்து சைக்கிளில் அழைத்துச்செல்வார்கள். கூடாரம் பிரிப்பது ஒருவாரம் பெரிய வேலையாய் நடக்கும். அந்தப் பத்துநாளும் அவர்களுக்கு உதவிசெய்ய கிளம்பிடுவோம். எங்கள் தொல்லைதாங்காது பச்சைத்தண்ணி ஊற்றி விரட்டுவார்கள். எல்லாமும் கிளம்பிப் போனபின் தேவதைகளின் சர்க்கஸ் உடைகளிலிருந்து உதிர்ந்த ஜிகினாப் பொட்டுகளை பிறக்கி வந்து புத்தகத்தின் பக்கம்பக்கமாய் செருகி அதனோடு மயில்சிறகுகளையும் சேர்த்துவைப்போம். உதிர்ந்த குட்டி இறகுகள் வழி தேவதைகள் பிறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது எங்கள் முழுநம்பிக்கை. எப்போதாவது வரும் தேவதைகளின் நீலநிறக் கடிதம் எங்களுக்கு விந்தையான நாட்களைத் தந்து கடிதம் யாரிடம் இருக்க வேண்டுமென்ற சர்ச்சையில் பலரும் பேசாது நல்லவி ரோதிகளைப் போல முகம் திருப்பி கோபத்துடன் அலைவோம். மறு சர்க்கஸ் கம்பெனி வரும்வரை எங்கள் பால்யமே காத்திருப்பில் மூழ்கி தினமும் கிணற்று முற்றத்தில் மூழ்கி சர்க்கஸை நாடகமாக நடித்துப் பார்ப்போம். வீட்டில் கிடைத்த பொருட்களை நடிப்புப் பொருட்களாய் மாற்றிக்கொள்வது எங்கள் இயல்பில் இருந்தது.

காலப்போக்கில் ஒவ்வொரு சனியன்றும்  தெருவில் நடக்கும் குடும்பச் சண்டைகளை  தெருவோர வியாபாரிகளின் நீள் சங்கீதக் குரலினை சர்க்கஸின் கோமாளிகளை நாடகமாக மாற்றி நடிப்பது எங்கள் தெருவாசிகளின் திறமையாகி விட்டது. இதனைப் பார்க்க பல தெருக்களிலிருந்தும் சிலர் வந்து போவது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் தெரு காளியம்மன் கோவில் பங்குனிப் பொங்கலுக்கு கருத்து ஒல்லியான சர்க்கஸ் கோமாளி தன் குடும்பத்துடன் சைக்கிள் சுற்ற வந்திருந்தார். சிறுவர்களாகிய நாங்கள் லச்சம்மாக்காவை விசாரித்த போது மௌனமாகி விட்டார். ஒருவாரம் வரை இரவு பகல் பாராது சைக்கிள் சுற்றும்போது அவரது கைக்குழந்தை இரண்டும் புழுதி வெயிலில் தவழ்ந்து கொண்டிருக்கும். அவர்களுக்குள்ளாறே சைக்கிள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள். இரவானதும் சைக்கிள் ஓட்டியபடி தன் மனைவி கொடுத்த ஒப்பனைப்பெட்டி திறந்து கோமாளி முகத்தை பிறக்க வைப்பார்.

தெரு இளைஞர்கள் சிலர் தினமும் கோமாளிப் பாடலுக்கு ஆடுவர். இவரோ சைக்கிளில் புதியபுதிய வித்தைகளை இரண்டு மணிநேரம் செய்துகாண்பிப்பார். எங்கள் தெருப் பெரியவர்கள் சிலர் சாமத்தில் எழுந்துபோய் சைக்கிளிலில் சுற்றுகிறாரா இல்லை இது பொய்யா? என சந்தேகத்துடன் எட்டிப்பார்க்கும் போது அவர் தன் குழந்தைகளில் ஒருவரை தன்தோளில் போட்டு சைக்கிள் ஆன்பார் பிடிக்காமலேயே ஓட்டிக் கொண்டிருப்பதை வியந்து பேசினர். மறுநாள் கோமாளி முகத்திற்கு முறுக்குமாலையும், பன்மாலையும்    பழமாலைகள் குவிந்து கொண்டிருக்கும். அவர் கிளம்பும் போது தெருக்காரர்கள் கொடுத்த தானியவகைகளுடன் சைக்கிளில் மூட்டை முடிச்சுகளோடு குடும்பத்துடன் கண்மாய்ப் பாதையில் வேறு ஊருக்குப் பயணமானார்கள். பின்நாளில் காளியம்மன் கோயில் திடலில் கழைக்கூத்தாடிகள் சிலர் சின்னமனூரிலிருந்த சந்திராவின் தலைமையில் வந்திருந்து சிறுகூடாரமிட்டனர்.

அவர்களோடு சில ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், நாய்களும், சில சேவல் வகைகளும் வந்திருந்தன. அவற்றைக் கொண்டும் புதுப்புது வித்தைகளை நிகழ்த்திக் காண்பித்தனர். சந்திராவின் புதுவகை உடல்வித்தைக்காக எங்கள் தெருக்காரர்கள் கல்உரலை கொண்டுவந்து சேர்த்தனர். சந்திரா எனும் கடுகுநிற ஸ்திரீயோ தன்நீள் கூந்தலோடு கருப்புக்கயிறு ஒன்றினையும் சேர்த்துக்கட்டி அவள் பின்னே நிலத்தில் ஊர்ந்துவர உரல் மீதேறி தன்உடலுக்குள் மறைந்திருந்த அரூபமொழியினை சாத்தியப்படுத்தி அவ்வப்போது தன் நீள்சடைக் கூந்தலால் உடலைக்கட்டி அவிழ்த்துக் கொண்டதும் உடலின் புதுவெளி திறக்க சுடராய் துணையிருந்தது. இரவின் இறுதியில் தன் கூந்தலால் உரலை இறுக்கிக்கட்டி நிலத்தில் பாதங்களை ஆழ இருத்தி அச்சிறு உரலை தலையால் தூக்கி புறங்கை மடக்கி மூன்று முறை வட்டமிட்டுச்சுற்றி கீழே வைத்தாள். நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் பலரும் முடிவில் சந்திராவின் கூந்தலில் ரத்தம் கசிகிறதா என தொட்டுதொட்டுப் பார்த்துப் போயினர்.

பள்ளிப் பருவத்தில் நான் பார்த்த அன்றைய நிகழ்வு இன்றும் எங்கள் நாடக நிலத்தில்  அதிர்ந்தபடி சுடரைப்போல் படபடத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் நிலத்தின் கழைக்கூத்துக் கலைக்கு சந்திராவே முன்னோடியாக இருக்கக்கூடும். சந்திராவின் கூந்தல் தழுவிய உரல்கள் அன்று ஊர்தோறும் இருந்தன. சமீபத்தில் சங்க இலக்கியங்களில் சிலவற்றை வாசிக்க நேர்ந்தபோது சந்திராவின் கழைக்கூத்து சங்கநிலத்திலிருந்தே கொடிவழி உறவு இருப்பதனை என்னளவில் உற்சாகமாய் உணர்ந்து எங்கள் குழுக் கலைஞர்களோடு பகிர்ந்து கொண்டு விவாதித்தேன். சங்க இலக்கியத்தில் பெரும்பாணாற்றுப்படையில் காணப்படும் உரல்கூத்து உரலைக் கட்டி தொங்கவிட்டு ஆடும் ஆட்டம் என்பதை “துளை அறை சீர்உரல் தூங்கத் தாக்கி நாடக மகளிர் ஆடுஉ” என்ற பாடலடி சொல்கிறது. இதனையும் மகளிரே நிகழ்த்தினர்.

பெண்கள் தூக்குவதற்கு வாய்ப்பாக உரல் சிறியதாக இருந்ததையும் இவ்வரி சொல்கிறது. உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குத்தும்போது பெண்கள் தலைவனைப் புகழ்ந்து பாடுவதாக சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை கூறுகிறது. இக்கூத்து வேளாண்மைத் திருவிழாவின் போது விவசாய சமூகமாக இருந்த நாம் நிகழ்த்தியது எனலாம். அன்று எங்களூருக்கு வந்த சந்திராவும் கூடவந்த கலைஞர்களும் அசல் விவசாயிகள்.
கழைக்கூத்துக் கலையின் நவீனப் பெயர் சர்க்கஸ் எனலாம். ஹோமரின் ஓடிசியில் சர்சி என்ற பாத்திரத்தின் குணாம்சத்தைக் கொண்டு சர்சி, சர்க்கஸ் என உருவாயிற்று. சர்சி எனும் தேவதையைக் காண மன்னர்களும் தளபதிகளும் அவள் கோட்டைக்குள் நுழைய தன் மீது ஆசை கொண்டவர்களுக்கு அமிர்தம் கொடுத்து அது உடலுக்குள் போனபிறகு விலங்காகி விடுகிறார்கள். இப்படி விலங்காகியவர்கள் சூழ்ந்த தனிராஜ்யத்தின் ராணியாகத் திகழ்பவளே இந்த சர்சி. பல்லுருக் கொள்ளும் கலையின் விதியினை அறிந்த சர்சி எனும் தேவதையிடமிருந்து ஜனனமானது சர்க்கஸ்.

அந்தரத்தில் உடல்கள் புனைவெழுச்சி பெற்று புதுமொழி படைத்ததில் அது அந்தரநிலம் எனும் புதுநிலம் பிரசவித்தது என்போம். நாடகம் நாட்டியம் கூத்து போன்ற அனைத்து நிகழ்கலைகளையும் நேர்பார்வையில் நின்று நாம் பார்க்குமிடத்தில் சர்க்கஸ் தன் பார்வையாளர்களை அந்தரவெளிநோக்கி அழைத்தது. பார்வையாளர்களின் பார்வையினை குறுக்காக வெட்டி பார்வைப் பண்பாட்டை உயர்த்தியதில் சர்க்கஸ் கலை தவிர்த்து வேறு கலைகள் செய்யவில்லையெனலாம். அந்தரநிலத்திலிருந்து முளைத்துத் தொங்கும் துணியாலான நீரிலைகளில் பல உடல்கள் இறங்கிவருவதும் மலரின் மொட்டுப்போல சுருண்டுகொள்வதும் தலைகீழாய்த் தொங்கும் தேவதையின் நாக்கிலிருந்து பம்பரமென மூவர் வட்டமிடுவதும் தன் உடல்மேஜையிலிருந்து தலைகீழாய் நின்று பலநிறபந்துகளை அந்தரத்திற்கு அனுப்புவது என சர்க்கஸ்கலை அந்தரம்நோக்கி அழைப்பை சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது.

அசேதனங்களுக்குள் இருக்கும் கலைமொழியினை வெளிக்கொண்டு வருவதில் மற்ற நிகழ்த்துகலைக் கூறிலிருந்து சர்க்கஸ் முதன்மை இடத்தைப் பெறுவதில் முக்கியத் திறப்புகளைக் கொண்டிருக்கிறது. உடல்கள் இங்கு அதிபுனைவை சாத்தியப்படுத்துவதற்கு புதிய பொருட்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. அவை மனிதர்கள் பயன்படுத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டு இரும்புக்கடைகளில் கிடக்கும் சாமான்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் இடமாற்றி இணைத்து அந்தரத்தில் அவை தொங்கவிடப்பட்டு அதனுடன் சர்க்கஸ் தேவதைகள் உடல்கள் உறவு கொண்டு நிகழ்த்துவடிவம் பெறும்போது அசேதனப் பொருட்களின் பல்வழி அர்த்தம் கிடைக்கப்பெறுகிறது.

சர்க்கஸ் தேவதைகள் பயணமாகும் சைக்கிள் ஒருபோதும் தனிமனிதர்களுக்கு கிடையாது. அங்கு உடல்கள் கூட்டிணைந்து புதிய புதிய சிற்ப நிலைகளை எடுப்பதோடு அவர்கள் வலிவாழ்வினை புன்னகை இமைத்து நிகழ்த்திப் போவர். வட்டத்தில் சைக்கிள் சுற்றச்சுற்ற பூமியின் வட்டத்தில் காத்திருக்கும் பலரையும் ஏற்றிக் கொண்டு பயணமாகிறது. அன்றாட குடும்ப வாழ்வில் மனிதர்களின் வீடுகளைப் போலவே அவர்களது சைக்கிளுக்கும் கதவு, பூட்டு லைட்டு என மனித குணாம்சம் இருப்பதை கோமாளியின் சைக்கிள் கலைத்துப் போடுகிறது. தனியே சைக்கிளில் நுழையும் கோமாளி பெல், லைட், கேரியர், பிரேக், ஸ்டான்டு என்றும் எதுவுமற்று தன்னைப் போல சுய அழிவு செய்துகொண்ட சைக்கிளைத் தனித்தனியாக கழற்றி அதனதன் இருப்பிடத்தை இடமாற்றி அடுக்கி நிச்சயிக்கப்பட்ட உருவத்திற்கு கலைத்துப்போடும் தன்மையினை கோமாளியின் சைக்கிளே செய்கிறது. பொம்மையாக சூட்கேஸிற்குள் மடித்து தூக்கிவரப்பட்ட யுவதி தன் உடலுக்குள் நூறுவகையான நெகிழும் சிற்பக்குணத்தை இறக்கி நிகழ்த்திக் காண்பித்து இறுதியில் தேவதையாய் விசிறிவீசி மறைவது சர்க்கஸின் புனைவு எதார்த்தம். இவ்வளவு உடல் வித்தைகளை வலியை முன்னிறுத்தாமல் உடலின் சொர்ண நிலையைக் கசியும் வியர்வையில் மா அமைதியாய் அடக்கமாய் நிகழ்த்தும் வல்லமை கழைக்கூத்தெனும் சர்க்கஸிற்கு மட்டுமே உண்டு. சர்க்கஸின் நிலத்தில் கிடக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் புதிய அர்த்தங்களும் புதுப்பிறப்பும் என்றும் சூழ்கொண்டிருக்கும்.

சர்க்கஸ் கோமாளி வட்டத்துள் நுழைந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் அவனையொத்த முகபாவங்களுடன் புதியபுதிய கோமாளிகளாகி கூடாரமே கோமாளிகளின் சிரிப்பலைகள் மிதக்கும் நிகழ்த்துக்கலையாகிறது. சர்க்கஸில் உலவும் அசேதனப் பொருட்களை விந்தையடுக்குகளை தேவதையின் உடல் புனைவை வட்டமிடும் சைக்கிளை நாடக நிலத்தில் நின்று நாம் புதிதாகப் பார்க்கத் துவங்கவேண்டும். நிகழ்த்துக்கலையின் உலகம் அந்தர நிலமானதை சர்க்கஸிலிருந்து புதிதாகத் துவங்க வேண்டும். வித்தைகள் தாண்டிய விழிகள் கொண்டு சர்க்கஸை நாம் பார்க்கத் துவங்குகிறபோது சர்க்கஸ் நிகழ்த்துக்கலை வடிவங்கள் வழியும் புதிதாக ஜனனமடையத் துவங்கும். சர்க்கஸில் உழைக்கும் உடல்வழி உழைப்பாளிகளின் ஒவ்வொரு செயல்களுக்குள்ளும் நிகழ்கலையின் குணாம்சங்கள் மறைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சி முடிவிலும் பெரும் பொருட்களை அப்புறப்படுத்தும் தன்மையில்  அவை பல ஒத்திகைகள் கடந்த நிலையை நாம் உணரமுடியும். அப்படியொரு  Art of Workmanship இதற்குள் புலியின் வரிக்கோடுகளைப்போல சதா பாய்ந்தலைந்து கொண்டிருக்கிறது.

Related posts