You are here

நிரந்தரமில்லை இலையுதிர்தல்…

ம. மணிமாறன்

எதிர்பார்ப்புகள் நம்முடைய விருப்பத்தைப் போல பூர்த்தியாகி விடுவதில்லை. சிலபல நாட்களில் நாம் தவித்துப்போகிறோம். நம்பிக்கையும், உறுதியும் குலையும்போது பேதலித்துப் போகிறது மனம். ஏதொன்றையாவது பற்றிப் பிடித்து துயரக்குளத்தினின்று மேலேறிட எல்லோரும் தான் முயல்கிறோம். பற்றுக்கோல் எதுவென்பதை அவரவரின் மனநிலைகளும், செயல்பாடுகளுமே கண்டறிகின்றன. பெருவெளியெங்கும் காலம் உருவாக்கி வைத்திருக்கும் பிடிகயிறுகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. சிலருக்கு கடவுள் சிலைகளாகவும், கணிணித் திரையாகவும், ஏன் சூதாட்டமேஜைகளாகவும் கூட அவைகள் இருக்கின்றன. காலமெல்லாம் அரசியல், இலக்கியம், சமூகம், வளர்ச்சி (தப்பு, தப்பு, இனி மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டிய சொல் இது) என இயங்கிக் கொண்டிருப்போருக்கு புத்தகத்தைத் தவிர வேறெந்தப் பற்றுக்கோலும் இருப்பதாகத் தெரியவில்லை. அவையே நம்மைக் கடைத்தேற்றுகின்ற நம்பிக்கைகளாக இருந்து வருகின்றன.

புத்தகங்கள் தனிமனிதரின் மனநிலைகளில் எப்படியான மாற்றங்களை உருவாக்கும் என்பதற்கான இலக்கிய சாட்சியமாகவே நான்  “The song of youth” என்கிற சீன நாவலைப் பார்க்கிறேன். இசைக்கருவிகளுடன் ரயிலேறி கடலோர கிராமத்திற்கு நாளையை எதிர்கொள்வதற்காக வந்திறங்கிய இளம்பெண் புத்தகங்களுடன் ஊடாடித் திரிகிறாள். ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், கார்க்கிக்கு மட்டும் இடம் தரவில்லையவள். அவளின் தேர்வு மாறிக்கொண்டேயிருக்கிறது. மார்க்ஸிய மூலவர்கள் அவளுக்கு அறிமுகமாகிறார்கள் சமூகமும், விஞ்ஞானமும் அவளுக்கு புத்தகங்கள் மூலமாக கூடுதல் புரிதலுக்கு உள்ளாகின்றன. எனவே தான் முதல் பக்கத்தில் வாத்தியக்கருவிகளுடன் வந்திறங்கிய “டாவோ-சிங்” நாவல் நிறைவு பெறுகிற 740வது பக்கத்தில் மகத்தான மக்கள் சீனத்தின்  உருவாக்கத்திற்கான வரலாற்றுப் புள்ளியில் மாணவர்களுடன் இணைந்து கரம்உயர்த்தி முழக்கிடுகிறவளாக காட்சி தருகிறாள்.

வெண்ணிற இரவுகளும், ஸ்டெப்பி புல்வெளிகளும், பனிபடர்ந்த மலைகளும் தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு மன நெருக்கமானவையே. அவற்றைச் சாத்தியமாக்கியது சோவியத் முன்னேற்ற பதிப்பகமும், அக்கறையான மொழிபெயர்ப்பாளர்களும் தான். பெருமலையைக் கடந்தால் போதும் எட்டிவிடும் தூரம் தான் என்று அறியப்படுகிற மக்கள் சீனத்தின் மகத்தான இலக்கிய நூல்கள் பொதுவான வாசகர்களிடம் கவனம் பெறாமல் போனது ஆச்சர்யமானதில்லை. இடதுசாரி கருத்தியல் தளத்திற்குள் இயங்குகிற படைப்பாளிகளின், வாசகர்களின் கைகளுக்குள்ளும் கூட அவை வந்து சேரவில்லையே ஏன் என்கிற கேள்வியை அடிக்கடி நாம் கேட்டுக் கொண்டேதான் இருந்திருப்போம். நம் முகத்தில் அறைந்து செல்லும் பதிலாகவே நான் “யாங் மோ” -வின் “இளமையின் கீதம்” என்கிற அரசியல் வரலாற்று நாவலைப் பார்க்கிறேன். சின்ன கல்லெடுத்தாலும் விசை கொண்டு எறிகிறவர்களின் கூட்டு உழைப்பால் உருவாகியிருக்கிறது இந்த நூல். அலைகள் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த மகத்தான மக்கள் சீனத்தின் வரலாற்று நாவலை தோழர் மயிலை பாலு மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய தேர்ந்த மொழிபெயர்ப்பினால் தான் பாவோ-சிங் வாசகர்களின் பிரியத்திற்குரியவளாகிறாள். லூசிபா-சுவான் எனும் புரட்சிக்காரனின் நினைவு நம்மை விட்டு அகலாமல் நீடித்திருக்கிறது.

ஏழுநூற்று நாற்பது பக்கங்களுக்குள் இரண்டு பெரும் பாகங்களாக விரிவது மக்கள் சீனத்தின் ஒரு காலத்தின் வரலாறுதான். வரலாறு மக்களை விடுதலை செய்யும் என்பதற்கான காட்சிகளால் கட்டப்பட்டிருக்கிறது “The Song of Youth”.. காலமும், நிலமும், சூழலும் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன. நாம் கற்றுக்கொள்கிறோமா? என்பது விவாதிக்க வேண்டியே கேள்விதான். ஆனால் “டாவோசிங்” கற்றுத் தெளிகிறாள். மக்கள் செயல்பாட்டாளர்கள் அனைவரும் எதிர்கொள்கிற யாவற்றையும் எதிர்கொள்கிறாள். நட்பு, அன்பு, காதல் என மெல்லிய உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுகிற போதும் அவளின் நடவடிக்கை மிகுந்த கவனத்துடனே நிகழ்கிறது. ஆற்றில் மிதந்து செல்லும் தக்கையைப் போன்று இலக்கற்றுப் பயணிக்கிறவர்களாக எப்போதும் சுயநலமிகள் தோற்றம் தருகிறார்கள். ஆனால் நிஜத்தில் அவர்களும் தான் திட்டமிடுகிறார்கள். தான், தனது, தன் முனைப்பு என்று இயங்குகிறவர்களின் உலகமாகத்தான் 1930களின் மக்கள் சீனமும், அதன் பெருவாரியான மக்களும் இருந்திருக்கிறார்கள். அதற்கான சாட்சியங்களாக “யூங்-சே”, “தய்யூ” என நிறைய பேர் நாவலுக்குள் முகிழ்த்து வருகிறார்கள். நிறைய படிக்கிறவன், பழைய சீன மரபுகளைத் தெரிந்து ஆய்வு செய்வதில் நிபுணன். மரணத்தின் விளிம்பில் நின்ற நொடியில் டாவோ-சிங்கை நிதானப்படுத்தியவன், ஆனால் அவளே மனைவி என்றான பிறகு அவனுடைய நடவடிக்கை வேறு ஒன்றாக வெளிப்படுகிறது. பார்க்கும் நொடியில் எல்லாம் கார்ல் மார்க்ஸின் மாணவி இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறார்? எனக் கிண்டல் செய்கிறான். “டாவோ-சிங்” – அவனை தயக்கமின்றி எதிர்கொள்கிறாள். அதற்கான ஆற்றலை அவள் கற்றுக் கொண்டிருக்கின்ற நூல்கள் அவளுக்குத் தருகின்றன. “அரசும், புரட்சியும்”, “தத்துவத்தின் வறுமை”- என அவள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களின் பெயர்கள் நாம் அறிந்தவையாக இருக்கிற போதும், நாவலுக்குள் அவற்றின் இடம் மகத்தானதாக வெளிப்படுகிறது.

பெண்களின் இறுதிப்புகலிடம் குடும்பமும், காதலும் மட்டும்தான் என இறுகிப்போயிருக்கிற பழைய மரபான சமூகத்தின் மீது தன்னுடைய வலிமையான செயல்பாட்டால் கேள்வி மலைகளைக் குவிக்கிறாள். அக்கேள்விகளுக்குள் உறைந்திருக்கும் அரசியலையும், சூழ்ச்சியையும் தன்னுடைய தினசரி நடவடிக்கைகளால் கலைத்துப் போடுகிறாள்.

“டாவே-சிங்”. ஆண்கள் விளையாடிடக் கிடைத்த மெழுகு பொம்மைகள் அல்ல பெண்கள் என்பதை இந்த நாவலின் பலஇடங்கில் “யாங்மோ” – எழுதிச் செல்கிறார். அதிலும் மிகவும் அழுத்தமாக “டாவோ-சிங்கும்”, “ஷி-சியூ” “மூத்த அக்கா” என மூவரும் உரையாடுகிற சிறைக்கூடக் காட்சிகள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. மகத்தானவர்கள் மனுஷிகள் என ஒவ்வொரு சொல்லிலும் அவர்கள் உணர்த்துகிறார்கள். மிகச் சாதாரணமான சொற்களில் எழுதப்படுகிற வரிகளாக இருக்கிற போதும் அவை எப்படி துடிப்பும், எழுச்சியும் மிக்கதாகி விடுகிறது என்பதனையே நாவலின் பலவரிகள் நமக்குச் சொல்கின்றன. “தங்களின் குழந்தைகளைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க முடியாது. அது தேவையுமில்லை..” என டாவோ-சிங் சொல்கிறபோது அந்த சொற்களின் வலிமை நம்மை வதைக்கிறது.

வரலாற்று அரசியல் நாவல்கள் தமிழிலும் கூட எழுதப்பட்டதுண்டு. காலத்தின் காட்சிகளை நாள்காட்டி தன்னுடைய சட்டையை உரித்து அடுக்கி வைப்பதைப் போல வரிசைவரிசையாக அடுக்கித் தொடர்வதால் மட்டும் வரலாற்றுப் பிரதியாகிட முடியாது. காலத்தின் காட்சிகளோடு அதன் ஆன்மாவையும் தரிசிக்கத் தருகிறவனே படைப்பாளி.  ஆன்மா, தரிசனம் போன்ற சொற்களை பயன்படுத்துகிற போதே நான் அறியாது என் மனம் அச்சம் கொள்கிறது. நாமறியாது எதிரிகளின் கைகளுக்குள் பகடையாகிட எத்தனையோ ஆற்றல்மிகு சொற்களை பலி தந்திருக்கிறோம். நம்முடைய சொற்களே கூட அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படாதபோது துயருகிறது, கணக்கிறது மனது. “புரட்சி” – எனும் ஆற்றல் மிகு சொல் வெளிறிக்கிடக்கிறது நம் நிலத்தில். ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் சீன நிலத்தில் கோமிண்டாங்- சர்வாதிகார அரசின் நரித்தந்திரத்தை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட மாணவ-மாணவியர் எழுச்சியின் புரட்சிகரமான செயல்பாட்டையே “இளமையின் கீதம்” தன்னுடைய வெளிப்பாட்டிற்கான வரலாற்றுப் பின்புலமாகக் கொண்டிருக்கிறது.

மாணவர்களின் மனநிலை குறித்த தர்க்கம், அவர்களின் வர்க்கச்சார்பு, தேசத்தின் மீது அவர்களுக்கு இருக்கிற அக்கறை என யாவற்றையும் பதிவுறுத்துகிறது நாவல். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக மாணவர்களைத் திரட்டுகிற செயலை கம்யூனிஸ்ட்கள் செய்கிறார்கள். வெளிச்சத்தையும், நற்குணங்களையும் அழகுற வடிவமைப்பதொன்றும் கடினமான பணியில்லை. இருட்டையும், மனித மனங்களின் துர்குணங்களையும் எழுதிச் செல்வதுதான் படைப்பாளி எதிர்கொள்கிற மிக முக்கியமான சவால். அந்தச் சவாலை மிகலாவகமாக எழுதிக் கடக்கிறார் யாங்மோ. பீகிங் பல்கலைக்கழக மாணவர்கள் ஆக்கிரமிப் பாளர்களுக்கு எதிராகவும், ஆட்சியதிகாரத்தை கேள்வி கேட்டிடவும் பல்கலைக்கழக வளாகங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிற போது பெரும்பான்மையான மாணவர்கள் தங்களுடைய படிப்பைத் தொடர்கிறார்கள் சலனமேயின்றி அவர்களின் கைகள் பாடநூல்களைப் புரட்டுகின்றன. நூலகக் கண்ணாடி சன்னலின் இருபுறங்களிலும் இருவேறு திசைகளில் பயணிக்க விரும்புகிறவர்களை காட்சிப்படுத்தியிருப்பார் “யாங்மோ” – இப்படியான கலைத்தன்மையிலான காட்சிப் பதிவுகளால் தான் வாசகமனம் நாவலை நெருங்கித் தொடர முடிகிறது. 740 பக்க நாவல் என்பது வாசித்துமுடித்த பிறகுதான் வாசகனுக்குப் புரிபடும். பக்கமிகுதி வாசிப்பிற்கு பெரும் மனத்தடையாக இருக்கிறது என்கிற சமாளிப்பையெல்லாம் எளிதில் வெற்றி கொள்கிறது நாவல்.

நாவலுக்குள் எழுதப்பட்டுள்ள கவிதைகள் அர்த்தப்பூர்வமாகவும், கவித்துவத்துடனும் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக டாவோ-சிங் தன்னுடைய வழிகாட்டியும், குருவுமான லியூ-சுவானின் மீது காதல் கொண்டு எழுதியிருக்கும மிக நீண்ட கவிதை வரிகள் அமரத்துவமானவை.

“தீரமிக்க போராளியே
நீ இறக்கவில்லை
உனது தெளிவான ஈர்க்கும் குரல்
மிதித்து துவைக்கப்பட்ட இந்த நிலத்தினூடே ஒலிக்கிறது.
மழை மலர் மலையில் கூடப்பட்ட தோட்டா
உன்னை அழிக்கவில்லை
மாறாகத் தங்களின் சவக்குழிகளை தாங்களே தோண்டினர்!
கோடையிரவு, தெளிவான, நறுமண இரவு
உனது ஜன்னலுக்கு வெளியே
பெயரற்ற காட்டுப்பூக்கள் பூத்திருக்கும்
உனது ஜன்னலின் முன் நைட்டிங்கேல் பாடும்
நீ ஏந்திய ஆயுதங்களை நின் காதலி ஏந்தியிருக்கிறாள்
அவளின் இதயத்தில் பழிதீர்க்கும் நெருப்பை நீ பற்றவைத்தாய்”

இப்படியான எண்ணற்ற கவிதைகளாலும், ஒருபோதும் எவருக்கும் அனுப்பவேபடாத கடிதங்களாலும் நிறைந்திருக்கிறது நாவல். ஒருவன் தன்னை “கம்யூனிஸ்ட்” என உணர்கிற நிமிடத்தின் மகத்துவத்தை  “The Song of Youth”   போல் வேறு எந்த நாவலும் பதிவுசெய்ததில்லை. டாவோ-சிங்குடன் சேர்ந்து வாசகனும் கூட அந்த நிமிடத்தில் கட்சியில் தான் சேர்க்கப்பட்ட நிலைக்கு வந்தடையப் போவது நிஜம்.

எந்த புத்தகத்தை வாசிக்கிற நொடியிலும் அது ஏற்படுத்தும் மனநிலை வாசகனுக்கு  மிகவும் முக்கியம். அரசியல் நாவல்கள் தமிழில் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தையே “The Song of youth”நமக்குத் தோற்றுவிக்கிறது. “ஓநாய் குலச்சின்னம்” போன்று சீனத்தின் சிக்கல்களையும் சிறிய தவறுகளையும் கூட பூதாகரமாக்கிடும் செயல்பாடுகள் தமிழில் துவங்கியிருக்கிற இந்தச் சூழல் அலைகளுக்கும், மயிலை பாலுவுக்குமான மிகக் கூடுதலான பொறுப்பை ஏற்படுத்தியுள்ளதால் மக்கள் சீனத்தின் மகத்தான புரட்சிகர இலக்கியங்களை மொழிபெயர்த்துத் தாருங்கள் தோழர்களே!

Related posts