உடல் திறக்கும் நாடக நிலம்-1 இசைக்குள் இறங்கிய மூதாதையர்கள்

ச. முருகபூபதி

இன்று கூட்டுழைப்பு கூட்டுச் செயல்பாடுகள், கூட்டுச் சிந்தனை, அரிதாகிக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் அலைவுறுகின்றோம். இவையனைத்தையும் தனக்குள் சுமந்து கொண்டிருக்கும் அதிகலை நிலை நாடகத்துள் சூழ் கொண்டிருப்பதோடு, மனித  சிந்தனைகளின் புதிய வடிவங்களையும் உடல்நிலம் ஆன்மா இணைந்து வேட்கையோடு திறக்கும் வல்லமையின் சிறகுகளை மனிதர்களுக்கு முடிவற்றுத்தருவது அனைத்துக் கலை வடிவங்களையும் உள்ளடக்கிய நாடகமே. பல்லுயிர் சார்ந்த நம் நிலத்தின் பண்பாட்டு பூர்வமான பாடுகளைப் பேசுகிற தருணம் நாடகக் கலை மீது நிலங்கொள்வதாகவே நம்புகிறேன்.

சம்பவங்களையும் வாழ்வின் தினசரி உரையாடல்களையும் திரும்பத்திரும்பக் கண்டு சலிப்புற்ற பார்வையாளர் எனும் பண்பாட்டு மனிதர்களுக்கு எல்லைக்குட்பட்ட உடல்மொழியிலிருந்து எல்லைகள் தாண்டியே உடலின் கலையையும், அரசியலையும், வரலாற்றினையும் அதன் விடுதலையையும், கொண்டாட்டங்களையும் கலையின் வழியாக கடத்திட வேண்டிய கடமை. உடல், மொழி, குரல் போன்ற தாதுக்களை மூலதனமாகக் கொண்ட நாடகநிலத்தின் இன்றைய தேவைகளையும், நெருக்கடிகளையும் நாடக வரலாற்றினை நுண்மையாகப் படிக்க வேண்டிய அவசியத்தினையும் உலகெங்கும் இயங்குகிற  நாடகபூர்வமான தொல் சடங்குகளுக்குள் உலவும் பண்பாட்டு ரேகைகளை நவீனவாழ்வோடு பொருத்தி செயல்பட வேண்டிய அவசியத்தினையும் நாம் உரையாடிட வேண்டும். இனவரைவியலின் எல்லைகள் தாண்டிய வெளியில் நின்று இங்கு உடல்களை நிலத்தின்  அதன் அசேதனங்களை இருள் பூசிய அதன் சுடரொளியின் துணைகொண்டு நாம் பேசிட முன்வர வேண்டும்.

இரண்டாம் உலகப்போரின் மோதல்கள் சைபீரியக் காடுகளில் உச்சமடைந்து கொண்டிருந்த காலத்தில் எதிர்ப்படைளோடு உள்நாட்டு வீரர்கள் வீழ்ச்சியடைந்து விடுவார்களோ என்ற மனப்பீதி தளபதிகளுக்கு. சைபீரியக் காடுகளில் பறவைகளாய் அலைவுற்ற பழங்குடிகளின் மூதாதைகளை தம் உடலுக்குள் இறக்கிப்பாடும் குறிசொல்லிக் கோடாங்கிகளை (shaman) போரின் வெற்றி தோல்வி கூடிய எதார்த்தத்தினை சடங்கு நிலத்தில் வைத்து முன்னுணர்ந்து சொன்னார்களாம். இவர்களைக் கண்டுகொள்ளாத ராணுவவீரர்களுக்கு வீழ்ச்சியும், அதிர்ச்சியும் கூடிக்கொண்டிருக்க திரும்பவும் சடங்கின் தோலிசை இசைத்து தம்கூட்டு உடலுக்குள் மூதாதைகளை இறக்கி அவர்களோடு உரையாடிடுவர். இவை நடனத்துடன் கூடிய நாடகமாக நிகழும். இசைக்குள் இறங்கிய மூதாதையர்கள் கானகம் நுழைந்து பறவைகளும், விலங்குகளும், பூச்சியினங்களும், தாவரங்களும் துயரம் கொள்வதையும், போர் என்னென்ன விதங்களில் நடக்குமென்பதையும் இசைவாசிப்பின் உக்கிரத்தில் சொல்வார்களாம்.  இதைக்கேட்டு திரும்பவும் போரின் தளபதியிடம் பழங்குடிகள் எடுத்துச்சொல்ல அவர்கள் சொன்ன பலவும் நிகழ்ந்தன. குழம்பிய ராணுவத் தளபதிகள் காடுகளுக்குள் தாவரங்களில் பதுங்கிவாழ்ந்த குறிசொல்லிக் கோடாங்கிகளை விரட்டி, விரட்டி சுட்டுக்கொன்றார்களாம். சைபீரிய வனநிலத்தில் படிந்த உதிரக்கரைகளில் நின்று மறுபடியும் தோலிசை இசைத்து ஆடிப்பாடி மூதாதையின் வாக்கு வாங்கி கானகமெங்கும் குலவையிட்டு ஓடியோடி வாழ்ந்தார்களாம். இவைபோன்ற உலகின் பல்வேறு பூர்வக்குடி சடங்குகளையும் அதன் எதார்த்தத்தினையும் எல்லைக்குள் குறுக்காத வெளியில் வைத்து நம் உரையாடலைத் தொடங்கி அதன் கலைநிலத்தை நாம் கண்டடைய வேண்டும்.

அதுபோல ஸ்பானிய வரலாற்றிலும் ஒரு போரில் ஸ்பானிய வீரர்கள் அனைவரும் தோல்வியில் வீழ்ந்து மடிந்தனர். எஞ்சிய ஒரு வீரன் உடைந்த வாள் ரத்தக்கறை படிந்த உடைகளோடு சில தங்க நாணயங்களை எடுத்துக்கொண்டு போரினால் நிர்மூலமான தெருக்களில் அலைந்து திரிந்து தன் பால்யத்தில், கதைசொல்லி நடித்துத்திரிந்தாள் பெண்ணொருத்தி. அவள் வயோதிக வயதிலும் தன்வாழ்வை கதைசொல்லுதலுக்குள்ளேயே ஒளித்து வைத்திருந்தாள். அவளைத் தேடிய வீரன் எங்கும் அவளைக்காணாத நிலையில் மரக்கிளைகளில் பறவையாகச் சுருண்டிருந்த அவளைக் கண்டுபிடித்து தன்னிடமிருந்த தங்க நாணயங்களைக் கொடுத்து தனக்கு எதிர்காலம் குறித்த அதி கதையினைச் சொல்லுமாறு கேட்க காயம்படிந்த போர்வீரனைத் தம்மடியில் கிடத்தி எதிர்காலத்தின் பரவசத்தினை தம் நடிப்பில் இறுத்தி கதைப்போடத் துவங்கினாள். கதையால் நடிப்பால் உயிர்ப்புற்று நம்பிக்கை படைத்து புதுநிலம் நோக்கி புறப்பட்டுப் போனான். தோல்வியில் கதைசொல்லியை மட்டுமே தேடிப்போன வீரனின் கதைகளை கதைசொல்லிகளின் கதையினை நாடகவெளியில் நின்று நாம் எப்போது பேசப் போகிறோம்.

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யப் படைவீரர்களும் மக்களும் பதுங்கு குழிக்குள் வாழ்வின் பொழுதுகளை பதைபதைப்போடு சுமந்து கொண்டிருந்த காலத்தில் ரஷ்யக்கவியும் நாடகாசிரியனும் நடிகனுமான மாயகோவ்ஸ்கி தன்னோடு பணிபுரிந்த ராணுவவீரர்களோடு மிஸ்டரிபஃப் எனும் நாடகம் நிகழ்த்தி மக்களது மனங்களில் எதிர்கால வாழ்வின் சிறகுகளை மிதக்கச்செய்து உத்வேகமளித்ததையும் இன்றைய சமகால நெருக்கடிக்குள் பேசியாக வேண்டும். மாயகோவ்ஸ்கியின் மிஸ்டரிபஃப் எனும் நாடகமே உலகின் முதல் வீதிநாடகமாக வரலாறு பேசிக்கொண்டிருக்கிறது. இதுபோல பிரெஞ்சுப் புரட்சியின் போது சிதிலங்களுக்குள் தனித்து விடப்பட்ட நாடகக்கோமாளி ஒருவன் போரில் எவருமற்ற சிதைவுற்ற நாடக அரங்கிற்குள் ஒப்பனையிட்டு நடித்தபடி வாழ்வின் வீரத்தை மக்களுக்கு கடத்த முயன்ற செயல்களைப் புதிதாக நாம் பார்க்கத் துவங்க வேண்டும்.

இந்நிலையில் விடுதலைப் போராட்ட காலத்தில் நாடகமே மக்களின் உணர்வு நிலமாகவும், அரசியல்வெளியாகவும், பண்பாட்டு பூர்வமாக தம்மை உருவேற்றிக்கொண்ட சிந்தனை உலகாகவும் நம்பிக்கையோடு பரவிக்கொண்டிருந்த காலம். நாட்டின் போராட்டச் சூழலும் அதன் எழுச்சியும் தமிழ்நாடக மேடையில் நடிகர்களின் குரல் உடல்வழி பரவிக்கொண்டிருந்தன. காதர்பாட்ஷா எனும் நாடகநடிகனின் குரல்வலிமையால் ஈர்க்கப்பட்ட பார்வையாளர்கள் பலரும் தேசவிடுதலைப் போராட்டப் பாதையில் தம்மை இணைத்துக் கொண்டனர். பிரிட்டிஷார் கலவரமுற்று காதர்பாட்ஷாவிற்கு தூக்குத்தண்டனை விதித்தபோது மரணத்தின் இறுதிநாள் ஆசையாக போலீசார் காதர் கேட்ட ஆர்மோனியத்தைக் கொடுத்தனர்.நாடகப்பாட்டை பாடத்துவங்கி ஒரு பாடல், பல பாடலாகி, பாடல்களைக் கேட்ட போலீசார் பலரும் இசையால் கேவிஅழுது தூக்கு நேரம் கடந்து கொண்டிருக்க நேரம் தவறியதால் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இறுதியில் மரணத்தை வீழ்த்தத் துணிந்தது நாடகப் பாடலே.

மாரியப்பசாமிகள் என்ற ராஜபார்ட் நடிகனின் நடிப்பால், குரலால் ஈர்க்கப்பட்ட மக்கள் பலரும் அன்று அரசியல் வெளிக்குள் பிரவேசிக்கத் தொடங்கியதை உணர்ந்த வெள்ளை ஏகாதிபத்தியக் காவலர்கள் கண்காணிப்பு நெருக்கடியாலும் நாடக ஏஜெண்டுகளின் ஏமாற்றங்களாலும் மனம் நொந்த அவர் தன் நாவை அறுத்துக்கொண்டு எதிர்ப்புணர்வைத் துடிப்பால் பதிவு செய்ததை நாம் திரும்பத்திரும்ப கதைத்தாக வேண்டும். நடிகை கமலவேணியின் வீடு சோதனையிடப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டபோது சிறைநாட்களில் சக பெண்கைதிகளுக்கு நாடகப் பாடல்கள் சொல்லிக்கொடுத்து வெள்ளை எதிர்ப்புணர்வின் சுடரினை மக்களது மனவெளியில் கடத்தத் தொடங்கினார். அச்சுடரினை இன்று நாம் கைப்பெற வேண்டிய சூழல்.

சமகால வாழ்வின் நெருக்கடி மனக்கொந்தளிப்பாகி வீசிய மனப்புயலுக்குள் திசையற்று ஓடிய கால்களோடு வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம், வறுமையின் துடிப்பாதங்களோடு எல்லை கடந்து உழலும் உள்நாட்டு அகதிகள் பெருகிக்கொண்டிருக்கும் காலமிது. ஒருமுறை கேரளத்திலிருந்து சென்னைக்கு பாட்னா ரயிலில் பயணமான வேலை திருப்பூர், ஈரோடு கடக்கும்போது படைபடையாக வாழ்க்கை தேடிவந்த பீகாரிகள், ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் உடல்கள் குவித்து மின்விசிறி, கழிப்பறை, இருக்கைக்குகீழ் சாமான் வைக்குமிடம் எங்கும் உடல்கள் கிளைகிளையாய்த் தொங்குகிறது. வியர்வையும் காற்றுமற்றுப்போன அன்றைய இரவில் பீகாரி இளைஞர்களிடமிருந்து நாட்டுப்புறப் பாடல் அந்த இரவின் வலியை குணமாக்கிட நுழைந்தது. நாம் அவர்களை எப்படி எதிர்கொண்டோம்? சென்னை ஏடிஎம் கொள்ளையால் சந்தேகத்தின் பேரில் பீகாரிகள் அறுவர் என்கவுண்டரில் கொலைசெய்யப்பட்ட மறுவாரத்தில் தமிழகத்திலிருந்து இருப்பின் பயம் துரத்த பத்தாயிரம் பீகாரிகள் ஊர்திரும்பி ஓடிவிட்டனர். அரசாங்கமும், மீடியாவும் பார்த்த விழிகொண்டே மக்களும் அச்சூழலைப் பார்த்த அவலம். மெட்ரோ சுரங்க ரயில் வேலையின் போது கூட்டாக சமாதியான வடஇந்திய இளைஞர்கள், நீதிமன்ற வளாகத்துக்குள் தற்கொலை செய்த பீகாரி தன் சாவினால் சொன்ன செய்தி நீதிமன்றங்களும் கோப்புகளும் எளியோரின் பக்கம் இல்லை என்பதைச் சொல்லவே. இவை எல்லாவற்றையும் செய்தியில் கூட படிக்க மறுக்கும் நம் கண்களுக்கு மீடியாவின் வாசலில் கிடையாய்க் கிடப்பதிலேயே நேரத்தைச் செலவிடுகிறோம்.

பண்பாட்டுத் தளத்தில் உலவிய பலரும் இங்கு முன்னிலையில் நிற்க புதியதலைமுறையினருக்கு அவர்கள் போன பாதை மட்டும் போதுமா?

அணுஉலைக்கு எதிராக கடலோர கிராமமக்கள் போராடியபோது போராட்ட வடிவங்களுக்குள் புதுமுறை புறப்பட்டது. அகிம்சைப்போர் இங்கு தான் பல்வடிவம் கண்டது. அவர்கள் தங்கள் உடல்களை கடலுக்குள் முக்கியும் குழிதோண்டியும், தம்மைத் தலைதவிர்த்து புதைத்துக் கொண்டும் தம் உடல்களை நிலத்தில் பரப்பி மயானமாக்கியும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இங்கு கூட்டுஉடல், கூட்டு ச்சிந்தனை, கூட்டுச்செயல் உக்கிரமடைவதை உணர்ந்த அதிகார வர்க்கத்தினர் அவர்களை தனிமைப்படுத்தி மீடியாவால் சமூகவிரோதிகளாக்கி எல்லோராலும் நம்பவைக்கவும் செய்தது. இவை எல்லாவற்றையும் நாம் நம் பண்பாட்டு சூழலில் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

வடக்கே அணைக்கட்டுமானத்திற்கு எதிராக கழுத்தளவு ஆற்று நீருக்குள் பல நாட்கள் போராடிய பழங்குடிகள் ஆப்பிரிக்க நாட்டில் தம் கால்நடைகளை நகருக்குள் நுழைத்து விவசாய உரிமைகேட்டுப் போராடிய பழங்குடிகளும் தம் கானகத்தின் கனிமங்கள் பறிபோவதைக் கூட்டமாய் இணைந்து போராடும் வடகிழக்கு இந்தியப் பழங்குடிகள் இப்படிப் பழங்குடிகளின் எழுச்சி உலகெங்கும் துடியாய் பரவிக் கொண்டிருக்கிறது. இனி உலகை வழிநடத்திச்செல்லும் வலிமை பழங்குடிகளிடம் மட்டுமே எஞ்சியுள்ள உணர்விலிருந்தும் அதனை நம் சுரனையாக்கும் செயல்பாடுகளை இனிநாம் துவங்குவோம்.

கடந்த பத்துவருடமாக பள்ளிக்குழந்தைகளுக்கு கதைச்சொல்லியாக இருந்த அனுபத்திலிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம். குழந்தைகளோடு கதைரீதியாக உழைப்பவர்களிடமே அவர்களுக்கான பாடத்திட்டத்தினை உருவாக்கும் சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்த நிலையில் சொல்கிறேன். அகமரணங்களை உருவாக்கும் கம்ப்யூட்டர், பேஸ்புக், யூடியூப், டிவிட்டர், இண்டர்நெட் போன்றவற்றின் நெருக்கத்தை அவர்கள் விரும்பவில்லை. அனுபவரீதியான படிப்பினை அவர்கள் நேசிக்கிறார்கள். அவர்களோடு சமமாக உட்கார்ந்து உலகின் பலவிஷயங்களைப் பேசிடும் மனிதனை நோக்கி எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தாவரங்களைப் போன்று திறந்த நுண்காதுகள் அவர்களுக்கு.

அதிகார மையத்தில் காவிக்கரை கொட்டி பரவிக்கொண்டிருக்கிறது. ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம். மீடியாவின் திட்டமிட்ட சதியால் வெற்றிபெற்ற மோடியின் கரங்கள் கல்விவளாகத்திற்குள் நுழைந்து பாடத்திட்டத்தின் வரிகளில் காவிநிறம் பூசப்படுமுன் நாம் பாடத்திட்டத்தைத் தாண்டிய செயல்பாடுகளை, சிந்தனையை நாடக நிலத்திலிருந்து துவங்குவோம்.
அடுத்த இதழில் …