You are here

விண்ணைத்தாண்டித் தாண்டி வளரும் மார்க்சியம்-6

ஒரு சரித்திர ஆசானின் பார்வையில்-கிராம்ஷி

மார்க்சியத்தின் பிரம்மாண்டமான பரப்பில் கிராம்ஷிக்கு ஒரு தனி இடம் உண்டு. மறைந்த மார்க்சிய வரலாற்று மேதை எரிக் ஹாப்ஸ்பாம் கிராம்ஷியை “1917-க்குப் பிறகு மேற்குலகின் தனித்தன்மை கொண்ட மார்க்சிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்” எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால், கிராம்ஷி மறைந்து நாற்பது ஆண்டுகள் வரை அவர் அறியப்படாமல் இருந்திருக்கிறார். 1970-ஆம் ஆண்டுகளிலிருந்து அவரது சிந்தனைகளின் பிரவேசம் சூறாவளியாக உருப்பெற்றது. பல்கலைக்கழக ஆராய்ச்சி உலகிலிருந்து, மார்க்சியத்தை மறுக்கும் தன்னார்வக் குழுக்கள் வரை கிராம்ஷியின் தாக்கம் இருந்து வருகிறது.

தமிழக அறிவுத்தளத்தில் கிராம்ஷியின் சிந்தனைகள் குறித்த ஈர்ப்பு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அவ்வப்போது சரியாகவோ, தவறாகவோ அவர் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளார்.

அவரது சிந்தனைகளுக்கு பல பரிமாணங்கள் உண்டு. மார்க்சிய ஆய்வுமுறையில்,வரலாற்றை விளக்குகிற பணிக்காகவே தனது நீண்ட வாழ்க்கையை அர்ப்பணித்த எரிக் ஹாப்ஸ்பாம் “உலகை மாற்றுவது எவ்வாறு?” என்ற  நூலில்,கிராம்ஷியின் ஒரு முக்கிய பரிமாணத்தை விவாதிக்கின்றார்.

மனிதர்களே வரலாற்றை படைக்கிறார்கள் என்று மார்க்சியம் கூறுகிறது. இதற்கான,புதிய சிந்தனைகளையும் மனிதர்கள் உருவாக்குகின்றனர். ஆனால் அந்த படைப்பாக்கம், அவ்வப்போது நிலவுகிற சூழ்நிலைகள் விதிக்கும் வரம்புக்கு உட்பட்டே நிகழ்கிறது. மாபெரும் சிந்தனையாளர்களின் கருத்துக்களும் சூழ்நிலை வரம்புகளுக்குள்தான் உருப்பெறுகின்றன. கிராம்ஷியும் இதற்கு விதிவிலக்கல்ல.

கிராம்ஷியின் மகத்தான சிந்தனை உருப்பெற்ற சூழல் எப்படிப்பட்டது? ஹாப்ஸ்பாம் அந்த சூழ்நிலைகளைப் பட்டியலிடுகிறார். அதில் ஒன்று இந்தியச்சூழலில் செயல்படும் மார்க்சிஸ்ட்டுகளுக்கு முக்கிமானதாகத் தென்படுகிறது.

1917-ல் ரஷியாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு, மற்ற நாடுகளை விட, கிராம்ஷி வாழ்ந்த இத்தாலி புரட்சி வருவதற்கான சூழல் உள்ள நாடாகத் திகழ்ந்தது. மக்களின் அகநிலை, புறச்சூழல் அனைத்தும் சமூகப் புரட்சி வெடித்துக் கிளம்பிட சாதகமாக இருந்தன.

ஆனால் நடந்தது என்ன? புரட்சிகர எழுச்சி எதுவும் ஏற்படவில்லை; மாறாக, முசோலினி தலைமையில் பாசிசம் வந்தது!

 இது  இத்தாலிய மார்க்சியர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இரண்டு கேள்விகளுக்கு விடை தேட வேண்டிஇருந்தது. ஒன்று, ரஷியப் புரட்சி ஏன் இதர நாடுகளுக்கு பரவிடவில்லை? மற்றொன்று, ரஷிய வழிமுறை பொருந்தவில்லை என்றால், இதர நாடுகளுக்கு ஏற்ற வகையில் சோசலிச மாற்றத்தைக் கொண்டு வர, எப்படிப்பட்ட மாற்று உத்திகளைக் கையாள்வது? இந்த தத்துவார்த்தத் தேடலில்தான் கிராம்ஷியின் வருகையும், அவரது புதிய சிந்தனை ஆக்கமும் அற்புதமாக  நிகழ்ந்தது.

ஆளுகிற முதலாளித்துவ வர்க்கங்கள் பொருளாதாரத்தில் தங்களது சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதோடு நின்று விடுவதில்லை; மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த கருத்துக்கள், சிந்தனைமுறை அனைத்திலும் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இடையறாது முயற்சிக்கின்றனர்.இதனையட்டி,கிராம்ஷி, தனது பிரசித்திபெற்ற “கருத்து மேலாண்மை” “(பிமீரீமீனீஷீஸீஹ்)” “குடியுரிமை சமூகம்” “பொதுபுத்தி”போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கினார்.

அரசு செயல்படும் விதம், அதன் கட்டமைப்பு,ஆட்சி நடைபெறும் தன்மை,அரசியல் இயக்கங்களின் தன்மைகளும்,செயல்பாடுகளும் என பல வகையில் ஆராய்ச்சியை மேற்கொண்டு மார்க்சிய அரசியல் தத்துவத்தை கிராம்ஷி உருவாக்கினார். சோசலிச சமூகம் பற்றியும்,  அந்த  சமூகத்தை வென்றடைவதற்கான வழிமுறை உத்திகளையும் ஒருசேர ஆராய்ந்தார், கிராம்ஷி.

 இப்படிப்பட்ட ஆராய்ச்சி அவசியம்தானா? இதற்கு ஹாப்ஸ்பாமின் விளக்கம் இது: “உலகைப் புரிந்துகொள்வதும், அதனை மாற்றுவதும் ஒன்றுதான்”.சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற நடைமுறைத் தேவைக்காகத்தான் கிராம்ஷி அரசியல் தத்துவத்தை உருவாகினார். அரசியல் செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல கிராம்ஷிக்கு தத்துவம் தேவைப்பட்டது.

கிராம்ஷியின் பங்களிப்பு, அவரை ஒரு முக்கியமான  மார்க்சிய அரசியல் தத்துவ ஞானியாக (ஜீஷீறீவீtவீநீணீறீ tலீமீஷீக்ஷீவீst) உயர்த்தியுள்ளது என்கிறார் ஹாப்ஸ்பாம். ஒருங்கிணைந்த ஒரு அரசியல் தத்துவத்தை உருவாக்க மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆங்காங்கே எழுதிய எழுத்துக்கள் அஸ்திவாரமாக அமைந்தன. அதனை அரசும் புரட்சியும் நூலின் தொடர்ச்சியாக எழுத இருந்தார் லெனின்.அது நிகழவில்லை.

கிராம்ஷி அரசு என்பதை எப்படிப் பார்க்கிறார்?வன்முறை வழியில் ஒடுக்கும் அரசு நிறுவனங்களுக்கும்,கருத்து மேலாண்மை செலுத்தும் நிறுவனங்களுக்கும் இடையிலான சமநிலை அல்லது ஒற்றுமைதான் அரசு எனப்படுவது என்பது கிராம்ஷியின் பார்வை.

 ஆளும் வர்க்கங்கள் வன்முறை சார்ந்த அதிகாரத்தை மட்டும் நம்பியிருப்பதில்லை. அடக்கி ஒடுக்கப்படும் மக்களிடையே “கருத்து மேலாண்மை” செலுத்தி அவர்களின் “சம்மதத்தை” செயற்கையாக நிறுவி,தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர்.இதுதான் இத்தாலியில் நிகழ்ந்தது. இதனால்தான் புரட்சிகர சூழலை மாற்றி நீண்ட தூரம் பின்னோக்கிய பாசிசப் பாதையில் இத்தாலியைக் கொண்டு செல்ல ஆளும் வர்க்கங்களால் முடிந்தது.

 தற்போது அதிகாரம் செலுத்தும் முதலாளித்துவம் இந்த அதிகாரத்தை எளிதாகப் பெற்றிடவில்லை.தொடர்ந்த,உணர்வுப்பூர்வமாகத் திட்டமிடப்பட்ட அரசியல் செயல்பாடுகளால்தான் இந்த அதிகார ஆதிக்க  நிலையை அடைந்துள்ளனது. எனவே ஒரு வர்க்கம் தனது பொருளியல் ரீதியான தேவை சார்ந்த எல்லைகளோடு நின்றிடாமல் அரசியல் மேலாண்மைக்கு முயற்சிக்க வேண்டும் என்ற முக்கிய முடிவுக்கு கிராம்ஷி வந்தடைகின்றார். இது புரட்சிகர மாற்றம் நிகழ்த்த முனையும் தொழிலாளி வர்க்கத்திற்கும் பொருந்தும்.

 இந்திய நிலைமைகள் இத்தாலிய சூழலிலிருந்து வேறுபட்டவை. எனினும்,இத்தாலியில் ஏற்பட்ட பாசிச திருப்பம் போன்று இந்தியாவிலும் 1990-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது. இந்துத்துவா வடிவத்தில் ஒரு வலதுசாரி பிற்போக்குத் திருப்பம், சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் எழுந்தது.

இந்திய விடுதலைப் போராட்ட சூழலில் வெகுமக்கள் இயக்கமாக உருவான காங்கிரஸ் முதல் பொதுத்தேர்தல் நடந்த காலத்திலேயே, தனது மேலாதிக்கத்தை சிறிதுசிறிதாக இழக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் சர்வாதிகார நடவடிக்கைகளில் இறங்கி தனது பிடியை தக்க வைத்துக்கொள்ள முயன்றது.தனக்கு ஏற்பட்ட சரிவை நாட்டின் நிலைத்தன்மைக்கும்  ஒருமைப்பாட்டுக்கும் நேர்ந்த ஆபத்தாக சித்தரித்து இந்திராகாந்தி மறைந்த சூழலில் மீண்டும் அதிகாரத்தினைத் தக்க வைத்துகொண்டது.அதற்குப்பின் அதன் சரிவுப் படலம் தொடர்ந்தது.

ஆளும் வர்க்கங்களின் ஒவ்வொரு சரிவின் போதும், புரட்சிகர மாற்றம் வராமல் தடுத்திட மக்களிடையே “கருத்து மேலாண்மை” பெறுவதற்கு ஆளும் வர்க்கங்கள் முயற்சிக்கின்றனர். இந்துத்துவா ஒரு பகுதி மக்களிடம் “கருத்து சம்மதம்”உருவாக்கியே தங்களை அதிகாரத்திற்கான போட்டியாளர்களாக மாற்றிக் கொண்டனர். இந்நிலையைப் புரிந்து கொள்ளவும் செயலாற்றிடவும் கிராம்ஷி தேவைப்படுகிறார்.

(தொடரும்)

 

Related posts

Leave a Comment